துபாயில் வானலை வளர் தமிழ் அமைப்பின் கவியரங்கம்
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய மாதாந்திர கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
துபாய், வானலை வளர் தமிழ் அமைப்பின் சார்பில் மாதந்தோறும் கராமா பகுதியில் அமையப் பெற்றுள்ள சிவ் ஸ்டார் உணவகத்தில் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
மே மாத கவியரங்கம் இயற்கை எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கவியரங்கிற்கு கவிஞர்கள் நாகராஜன், நர்கிஸ் பானு மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்தனர். கவிஞர்கள் பலர் தங்களது கவித்திறன்களை வெளிப்படுத்தினர்.
பாத்திமா எனும் கவிஞர் தனது கவியரங்கேற்றத்தைக் காண தனது தகப்பனாரையும் அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தில் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி மற்றும் கல்விக்குழு செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது கவியரங்க நிகழ்விற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்திருந்தது.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி அமீரகத்தில் தமிழ்ப் பணியாற்றிவரும் வானலை வளர்தமிழ் அமைப்பின் பணிகளையும், அவ்வமைப்பு மாதந்தோறும் வெளியிட்டு வரும் தமிழ்த்தேர் இதழின் பணிகளையும் பாராட்டினார். இளைய சமுதாயத்தின் திறமைகளை வெளிக்கொணரக் காரணமாக இருந்து வரும் வானலை வளர்தமிழின் பணி பெருமைக்குரியது என்றார். ஈமான் அமைப்பின் சமூகப்பணிகள் குறித்த விவரங்களை கல்விக்குழு செயலாளர் ஏ முஹம்மது தாஹா விவரித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஜியாவுத்தீன், சிம்மபாரதி, சந்திரசேகர், இளையசாகுல், கீழைராசா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலதிக தொடர்புக்கு:
அலைபேசி : 050 251 9693