துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய துணை கன்சல் ஜெனரல் பங்கேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு 09.07.2014 அன்று மாலை தனது குடும்பத்தினருடன் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
ஈமான் அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஃப்தார் நிகழ்ச்சியை மிகச் சிறப்புற நடத்தி வருகிறது. தினமும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் கூடிய உணவு வகைகளை வழங்கி வருகிறது.

விரைவில் துபாயில் இருந்து மாற்றலாகி செல்ல இருக்கும் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்து ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆண்டுதோறும் இஃப்தார் நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் பங்கேற்று வருவதாக தெரிவித்தார். ஈமான் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாட்டவர் உள்ளிட்ட பலரும் இனம், மதம், மொழி, நிறம் வேறுபாடில்லாது பங்கேற்று வருவது சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகத்தின் நோன்புக் கஞ்சியினை அனைத்து நாட்டவரும் ஆர்வமுடன் பருகி நோன்பினை நிறைவு செய்து வருவது ஈமான் அமைப்புக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருந்து வருகிறது.

ஈமான் அமைப்பிற்கு வந்திருந்த அசோக் பாபுவினை ஈமான் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.