எங்களை மன்னித்துவிடு மகளே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்துவா கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்த கவிதை.

கோடாரியால் வெட்டப்பட்ட
பிஞ்சுமலரே...

ஆயுதமுனையில்
இழந்தோயோ கற்பை?

Poem on Kathua murder

முளைக்கும்முன்னே
ஒடிக்கப்பட்டதோ சிறகு?

மலரும் முன்னே
உதிர்ந்தாயோ சருகாய்?

உதிக்கும் முன்னே
அஸ்தமனமானாயோ?

செழிக்கும்முன்னே
எரிந்து கருகினாயோ?

செந்நாய்களின் கோர பசிக்கு
பரிசளிப்பு உன் உயிரா ?

மரித்த மனிதமே
பால் மனத்திடமா சாதிவெறி?

என்ன உன் கோலம் மகளே?
பார்த்தாலே பதறுகிறதே?

தேகம் முழுவதும்
ரண குவியல்களோ?

வலியின் முடிச்சுக்கள்
சதைவெறியர்களின் பரிசோ?

மௌன கதறல்கள்
நரிகளின் நகக்கீறலோ?

பால்பற்கள் கூட விழாத
உனக்கேன் நீண்ட நெடிய கொடூரம்?

ஈரம் காயாத குருதி நெடி
மூக்கை துளைக்கிறதே?

செந்நீரின் வெந்நீர்கள்
வழிந்ததோ விழிகளில்?

வெகுண்டு தகித்தாயோ?
சுருண்டு விழுந்தாயோ?

சுருங்கிபோன இதயங்களிடம்
எப்படியெல்லாம் துடித்தாயோ?

துருபிடித்த மனங்களிடம்
என்னவெல்லாம் கதறினாயோ?

இவ்வளவும் கோயிலிலா?இது
தெய்வங்களுக்கே அடுக்குமா?

பாவத்தின் சம்பளம்
பாவிகளை நெருங்காதோ?

நூறு நூறுமுறை
தூக்கிலிட முடியாதோ?

ஊனமுற்ற தேசம்
வக்கற்றே நிற்கிறதே?

கவலைக்கிடமான நாடு
கடமையை செய்யாதோ?

மனித இனமும் பூமிபந்தில்
இன்னும் இருக்கிறதே?

நாட்டின் பொத்தல் வழியே
பெண் பாதுகாப்பு பல்லிளிக்கிறதே?

எங்களை
மன்னித்துவிடு மகளே....

உலகின் நாய்வாலை
ஒருபோதும் நிமிர்த்த முடியாது....

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Poem on Kathua murder and brutal rape case, in which 8 year old girl brutally eliminated by a gang.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற