For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 25... "செல்லக்குட்டி"

Google Oneindia Tamil News

- விஜயா கிப்ட்சன்

ஒரு ஈஸ்டர் பண்டிகைக்கு ரினி எங்களை வீட்டிற்கு அழைத்திருந்தாள் . அவளும் அவள் தங்கையான உஷாவும் இந்தியாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகி விட்டன . பூர்வீகம் இலங்கை !

அத்தையும்,மாமாவும், சித்தப்பனும் , சித்தியும், அம்மம்மாவும் , அப்பப்பாவும் இன்னும் நிறைய சொந்த பந்தங்களும் அங்கேதான் இருக்கின்றார்கள் .ஏன் அவர்களுடைய கணவன்மார்கள் கூட அங்கு தான் !
மட்டக்களப்பிலும் , கொழும்புவிலும் அரிசி மற்றும் தானிய மண்டி வைத்து தொழில் செய்கின்றார்கள். .பிள்ளைகள் படிப்பிற்காகவும் , திருமணத்திற்காகவும் இங்கு வந்ததாக சொல்லுவார்கள். ரமலான் போன்றே --ஒரு மாத காலம் கிறிஸ்தவர்களுக்கு அது நோன்பு காலம் என்பதால் லெந்து நாட்களில் கறி , மீன் சாப்பிடுதலை விட்டிருப்பார்கள் ! அந்நாட்களில் பொதுவாக தங்களுடைய விருப்பு , வெறுப்புகளையும் , மற்ற வீணான செலவுகளையும் குறைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் , முடிந்தவரை தர்மம் செய்வதும் ஒரு முக்கியமான கோட்பாடு .

Sillunnu Oru Anubavam Chellakutty written by Vijaya Giftson

அதுனால கர்த்தர் உயிர்த்தெழுந்த நாள் அன்றைக்கு தடால் புடாலாக அனைத்து வீடுகளிலுமே பயங்கர விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் . ரினி சமைப்பதில் சற்றும் சளைத்தவள் அல்ல ...சொல்லவா வேணும் ! மதிய உணவிற்கு மட்டன் பிரியாணி , நெய் சோறு , தால்சா , பெப்பர் சிக்கன் கிரேவி , பிரான் வறுவல் , தயிர் சாதம் , னு மெனு கலக்கல் . எங்கள் தோழிகள் வட்டம் சிறிதானாலும் எப்படியும் ஒவ்வொரு காரணத்தினால் ஒவ்வொருத்தர் வர முடியாமல் போய் விடும் ..ஆனால் அந்த ஈஸ்டருக்கு எப்படியோ நாங்கள் அனைவருமே ஆஜர் . நான் வெங்காயம் நறுக்குறேன் , மசாலா அரைக்கிறேன், ப்ரைக்கு ரெடி பண்றேன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையையும் பிரித்துக் கொண்டோம் ..இதுக்கு நடுவுல சிக்கன் விருப்பமாய் சாப்பிடாதவர்களுக்கு கோபி மன்ச்சூரியன் வேற ....வீடே கமகமக்குது !

அதெல்லாம் மீறிய சத்தம் எங்கள் அரட்டை சத்தம் ..நடு நடுவுல குழந்தைகளின் சேட்டைகள் ...வீடு நல்ல விஸ்தாரமான அறைகளைக் கொண்டதாலும் , முதலில் குழந்தைகளுக்குத் தேவையான உருளைக்கிழங்கு வறுவல் , சாஸ் , ஜூஸ் , செஞ்சு குடுத்துவிட்டதாலும் அதுக எங்களை தொந்தரவு பண்ணவில்லை ..அவுங்க உலகத்துல என்னென்னமோ விளையாட்டுகள் ..தொடர்ந்து ஓடி ஓடி விளையாடிக்கொண்டே இருக்கின்றார்கள் ! இடை இடையில் வந்து "அத்தை என்ன செய்றீங்க ? நா வேணும்னா ஹெல்ப் பண்ணவா ?! னு பெரிய மனுஷிங்க மாதிரி டயலாக் விட்டுட்டு ஒரு நிமிடம் கூட நிக்காம ஓடீரும் ..இதுக்கு எதுக்கு கேக்கணும் ! அதான் குழந்தைகள் !

அப்புறம் மிக முக்கியமான நபர்கள் ..ஆமா நம்ம ஊட்டுக்காரங்க ..அவுங்களாம் என்றைக்கோ தான் சந்தித்துக்கொள்கிறார்கள் ..இல்லைனாலும் ---அவுங்களுக்குள்ள பேசீட்டாலும் ! வந்து உக்காந்த ஒரு சில மணித் துளிகள் நேர்முகத்தேர்வுக்கு ஆள் எடுக்குறது கணக்கா வரிசையா கைய கட்டிக்கிட்டு ஒன்னும் பேசாம மாத்தி மாத்தி பாத்துட்டே இருப்பாய்ங்க! ...அதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் தட் "ஹாய் , ஹௌ ஆர் யூ ...எங்க வேல செய்றீங்க சார் !? லாம் நடக்கும் . அப்புறம் மிக்ஸ் ஆகி மிங்கில் ஆவது தனி கதை ..ஆண்களுக்கு பேசுவதில் எப்பவும் ஸ்டாட்டிங் ப்ராப்ளம் இருக்குமோ என்னமோ !

குட்டிஸ் குறுக்கா மறுக்கா ஓட அவுங்களுக்கும் பஞ்சாயத்தை பண்ணிக்கிட்டு இங்க சமையல் ஓடுது ! ஏம்ப்பா கைய கட்டிக்கிட்டு உக்காந்திருக்கிறவங்களே-- செத்த நேரம் இந்த புள்ளைங்கள கவனிக்க கூடாதா ?! அங்கயும் எல்லாத்துக்கும் "அம்மா " தான் போல ! திடீர்னு ஏஞ்சலின் சொல்றா ...."இது கூட ஒரே ஒரு பாயசமும் வச்சிரலாம் " "ரவையா , சேமியாவா , ஜவ்வரிசியா , இல்ல அட பிரதமனா ?! அடுத்த சந்தேகம் ..."ஏதோ ஒன்னு வையு ஆத்தா --இது சாலட் செய்து கொண்டிருக்கும் ப்ரியாவின் குரல்!

கிண்டலும் கேலியும் களேபரமாக போகின்றது நேரங்கள் .. இந்த அடுப்படிக்கு ஒரு ஏ .சி. போடப்படாதா ? நிக்க முடியல சாமி ..வேர்த்து ஊத்துது ..இதுல பாதியில தேங்காய் அரைக்க முடியாம ..தொடர் மின் வெட்டுகள் வேற ! ஆளாளுக்கு ஒரு கையில துண்டு சகிதமா முகத்தை தொடச்ச வண்ணமா இருக்கோம் ! இத்தனை வகைகள் செய்யுறதுனால சமையல் நேரம் அதிகமாகுமா இல்லையா ?! "ஏய் அவுரெல்லாம் ஒன்றை மணிக்கு சாப்ட்ருவாருடி !" னு மாலதி சொல்ல "இங்கிட்டு முடியவே மூணு மணி ஆயிரும் போவியா !" னு பதிலு . அப்போ நடூல எல்லா தலைவர்களுக்கும் சூடா ஒரு டீ போட்ருவோம் !

"அதை இப்ப குடிச்சா எப்டி சாப்பிடுவாய்ங்க ? அதெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு ...சாப்புட்றலாம் !னு யோசனை பண்ணி டீ தூளைத் தேடுகிறோம் . நம்மூருல வழக்கமா த்ரீ ரோசெஸ் , தாஜ் , சக்ரா கோல்ட் , போன்ற பிராண்ட்கள் தெரியும் கிறதால பாத்தா அப்டி ஒன்னு இல்லவே இல்லை .."ரி.....னி ......ய் தேயிலை தூளைக் காணூம்போய் ..எங்க வச்சிருக்க ? பிரிட்ஜ்கு பின்னாடி இருக்குற அலமாரியில , மேல இருந்து ரெண்டாவது கட்டு , இடது பக்கம் "னு சத்தம் குடுக்கிறா ..அப்புறம் தான் புரிஞ்சுது அது இலங்கை தேயிலை ..நமக்கு மண்டையில உரைக்கல .."தில்மா " னு போட்டிருக்கு ...தண்ணிய கொதிக்க வச்சு தூளைப் போட்டால் அப்படியொரு நறுமணத்தோடு , மிகவும் லேசான ப்ரவுன் கலர் மட்டுமே அதிலே வந்தது ...பில்டர் பண்ணி , சர்க்கரை சேர்த்து ஆளாளுக்கு ஒரு கப் எடுத்து, அதோடு சிலோன் பிஸ்கட்ஸ்சும் ..குட்டீஸ் கிட்ட குடுத்து விட்டாச்சு. என்னவொரு காம்பினேஷன் !ஆல் டாடிஸ் ஹாப்பி !

அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டு கதைப்பதை பார்ப்பதற்கும் அழகாகத்தான் இருந்தது. கொஞ்ச நேரம் வண்டி இங்க வராது ...அப்பாடா ..தொடர்ந்து "மட்டன் வெந்தது போதும் , தம் வச்சுட்டியா ?, இப்பவே வெங்காயத்தை தயிரில் சேர்த்து வச்சிருங்கள் .அப்போ தான் சரியாக இருக்கும் ..என்ன ?! என்கிறாள் உஷா . ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்து , பிரியாணியையும் தம்மில் வச்சாச்சு .."வாங்களேன் ..வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம் " என்று அழைத்துச் சென்றாள் ரினி. வந்தவுடன் சமைக்க ஆரம்பித்து விட்டதால் , நேரம் போனதே தெரியவில்லை . முற்றத்தில் மிக அழகிய தோட்டம் ..ரோஜா , மல்லி , தென்னை ,மாமரம் , குரோட்டன்ஸ் , என்று வகை வகையாக நிறைய செடி கொடிகளுடன் கிட்டத்தட்ட இலங்கையில் இருக்கும் உணர்வு வந்துவிட்டது ..நல்ல காற்று ...சிறிது நேரம் அனைவருமே வெளியில் இருந்த திண்ணைகளில் அமர்ந்து பழங்கதைகள் பேசிக்கொண்டு இருந்தோம் ..."எங்கள் வீட்ட்டு மாடியும் நன்றாக இருக்கும் ... வாருங்கள் " என்று சொல்லி அழைத்து செல்கிறாள் ரினி.

சிறிய அளவில் ஒரு ஊஞ்சல் ..அருகில் மர மேசைகளில் தினசரி நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன . மாடியில் மூன்று அறைகள் . ரெண்டு அறைகளை மட்டும் திறந்து காண்பித்து விட்டு அமைதியாக கீழே இறங்குகிறாள் ரினி .."ரினி , அந்த ரூம் என்ன ஸ்டோர் ரூமா ?" கேட்டது ஏஞ்சலின் ! அதற்குப்பிறகு சுதாரித்தவளாய் "ஓ அதுவா ...அங்கு எனது மகன் இருக்கின்றான் ..." "உம் பையனா ...சொல்லவே இல்லை ...என்ன ரினி? .."என்று அனைவருமே ஆச்சர்யமாக அவளைப் பார்த்தோம் ..."இல்லை , மிகுந்த சல்லியம் செய்வான் ,யாரும் வீட்டிற்கு வந்தால் , அவனை வெளியில் கூப்பிட இயலாது !" என்கிறாள் .

"சின்ன பையனா , வயது என்ன , ஏன் அவனை அறையில் பூட்டி வைத்திருக்கிறாள், இவ்வளவு நேரம் நம்முடன் உரையாடியும் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை , ஏன் ?என்று எங்கள் மனத்துக்குள் என்னென்னவோ தோன்றுகிறது ! எப்படிக் கேட்பது? ... எங்களது முக பாவனைகளைத் தெரிந்தவளாய் ..."இருங்கள் , நான் கதவைத் திறக்கின்றேன் " னு சொல்லிவிட்டு கதவைத் திறக்க "பல நாட்கள் அவளைப் பார்க்காதவன் போல் ஓடோடி வந்து மேல தாவி முத்தமிடுகின்றான் --ப்ரவுனி !".

"என்னடா அம்மா மீது கோபமா ? இவ்வளவு நேரம் உன்னை அடைத்து போட்டு விட்டேன் என்று ?" னு கேக்க அதுவும் "அவ்வ் ...அவ்வ் " என்று பதில் சொல்கிறது .."நாங்க எல்லாரும் சாப்பிட போறோம் ..நீயும் வாரியா ..உனக்கு அம்மா சிக்கன் வச்சிருக்கேன் னு சொல்ல அது வாலை ஆட்டி ஆட்டி ரினியின் கண்களை மட்டுமே பார்க்கிறது ..."அப்படி ஒன்னும் சேட்டை பண்ணவில்லை அவன் . எங்களோடும் , குழந்தைகளோடும் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்து சிக்கனை சாப்பிட்டு முடித்தான் ப்ரவுனி . ...அனைவரும் கிளம்பும்போது சோகமாகிவிட்டான். எங்களை விடவே இல்லை ...சுத்தி சுத்தி வந்து குலைக்கின்றான் . ."போக வேண்டாம் .."னு சொல்றன் என்கிறாள் உஷா ! அந்த நாளையும் , அன்பின் பகிர்தலையும் --ரினியின் செல்லக்குட்டியையும் மறக்க முடியாது !

இத்துடன் இந்த அனுபவத்தொடர் நிறைவு பெறுகிறது . ஒன் இந்தியா வலை தளத்தில் என்னோடு கடந்த இருபத்து ஐந்து வாரங்களாக பயணித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் !

#வாழ்தல் இனிது
#விஜயாகிப்ட்சன்

( [email protected] )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Chellakutty written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X