For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 23... "சம்மர் ஹாலிடேஸ்"

Google Oneindia Tamil News

- விஜயா கிப்ட்சன்

அப்பெல்லாம் எல்லாருக்குமே ஒரே வகையான பாடத்திட்டம் தான். மெட்ரிக் என்பது லேசாக அறிமுகப்படுத்தப்பட்ட காலங்கள் ..தமிழ் கேள்வி பதில் படிக்கணும்னா எல்லாருக்கும் ஒரே கோனார் நோட்ஸ்தான்!

ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் ..அதுனால முழுஆண்டு தேர்வு முடிஞ்சதும் ஒன்னு போலதான் லீவு விடுவாங்க .லீவுக்கு ஊருக்கு போவதென்றால் நம்மில் பலருக்கு அது ஆச்சி வீடாகத்தான் இருக்கும். குறைஞ்ச பட்சம் ஒரு வளவில் ஏழு அல்லது எட்டு வீடுகள் இருக்கும் ! குழந்தைகளின் கணக்கை எடுத்துகிட்டோம்னா பத்தில் இருந்து பதினைந்து வரை இருப்போம் . அப்புறம் என்ன ஒரே ஆட்டம் தான் ..தொலைக்காட்சியிலும் ஒளியும் ஒலியும் மட்டுமே பாத்த காலம் ..இன்னிக்கு இருக்கற மாதிரி எந்தவொரு குழந்தையின் கையிலேயும் கைபேசி என்பது அறவே அற்ற ஒரு பொற்காலம் !

Sillunnu Oru Anubavam Summer Holidays written by Vijaya Giftson

அதைவிட அனைவரும் சேர்ந்து எங்களுக்கு தோணுன விளையாட்டுகளை கால நேரம் பாக்காமல் விளையாண்டது தான் ஞாபகம். காலைல எழுந்திருச்சு நம்ம பல்ல விளக்குதோமோ இல்லையோ பக்கத்துக்கு வீட்டு நண்பர்கள் எழுந்திரிச்சாச்சானு பாக்கறதே பெரிய சந்தோசம் ..அப்புடியே எழுந்தரிசிச்சாச்சுன்னா --ப்ரஷ் ல பேஸ்ட்டை வச்சுக்கிட்டு , ஒரு கப் தண்ணியோட தோட்டத்துக்கு போயிற வேண்டியது ! அப்பதான கதை பேசி கதை பேசி , டிசைன் -டிஸைனா வாய கொப்புளிச்சு , அந்த தண்ணி தீந்து போயி திரும்ப தண்ணி கோதிட்டு வந்து பல் விளக்குதல் கன்டினியூ பண்ண முடியும் .... ..ஹி ... ஹி ...

கிராமத்துக்கு நடுவுல பெரியவர்கள் நிழலுக்காக உக்காந்து பேச ஒரு மரம் இருக்குமே --அது மாதிரி வீட்டிற்கு ஒரு திண்ணை கணக்கா நாலு கல்திண்ணை . அங்க உக்காந்துதான் என்னென்ன விளையாடலாம்னு முடிவு பண்ணுவோம் ..முக்கியமா அந்த "சா ....பூ...த்ரி ...."போட்டு யாரு கேட்சர் என்பதை வாண்டு குழு முடிவு செய்யும் ..பகல் நேரத்தில் வளவில் எல்லார் வீட்டு வாசற்கதவும் திறந்தேதான் இருக்கும் ..எல்லாரும் எல்லார் வீட்டுக்குள்ளும் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடி இருக்கோம் ..சில நேரத்துல பட்டாசல் வழியா போகாம பொறாசல் வழியா தட ....தட னு ஓடிப்போகும் போது ..."ஏளா ...ஏம்ளா கால்மாடு தலமாடா ஓடுதியோ ..பெரியவங்க மேல மோதாம விளையாடுங்களா !" உளுந்துக்கு தொலி பாத்துக்கொண்டிருந்த ஆச்சியிடம் இருந்து நிச்சயம் ஒரு சத்தம் வரும் ..விறகு அடுப்பு வேற ...போற போக்குல அந்த அடுப்பு குழல எடுத்து "ஊஊஒ ....ஊஊஒ...னு" ஊதி விட்டுட்டு வீசிட்டு போயிருவோம் !

சம்மர் கேம்ஸ்னு எடுத்துக்கிட்டா , மொதல்ல இடம் பிடிக்கிறது கல்லா --மண்ணா ! , தாயம் , சீட்டு கட்டு --அதில் கழுதை , ரம்மி ,ட்ரெயின், மெம்மரி , மற்றும் பேங்க் . சில நேரம் கார்ட்ஸ் மேஜிக் ! அஞ்சு கல்லு , தொட்டு பிடிக்கிறது , கண்ணாமூச்சி , லாக் அண்ட் கீ , கள்ளன் --போலீஸ் , டக்..டக்..யாரது ?! ..என்ன வேணும் ....சாப்பாடு வேணும் , என்ன சாப்பாடு --அரிசி சாப்பாடு , என்ன அரிசி --பச்சை அரிசி , என்ன பச்சை --கிளி பச்சை ...ஹூய் னு ஓடிப்போய் யாரு கிளி பச்சைய தொடலியோ அவுங்க அவுட்டு ! அங்கனக்குள்ள இல்லாத கலரா பாத்து சொல்லி ஓடவிட்டு புடிச்சு அவுட் ஆக்குறதுதான் சுவாரசியம் . இப்டி காலங்காத்தால இருந்தே விளையாடிட்டே இருப்போம்!

வெயிலுக்கு ஒடம்பு நச நசன்னு ஆயிருமா -இல்லையா ?!...எல்லாரும் பின்னாடி இருக்கற அடிபம்பிற்கு போயி , "ஏட்டி சக்கி ...மொத நீ அடி ..னு வரிசையா பம்புக்கு கீழ உக்காந்து அப்புடியே அருவியா வர்ற தண்ணியில குளிக்கிறது தான் ..." "எனக்கு கை வலிக்குப்பா !...தொரை நீ அடிக்கியால ? னு மாத்தி மாத்தி எல்லாரும் ஆல மர நிழலில் குளிச்சும் முடிச்சிருவோம் .அதுக்குள்ள சாப்பாடு ரெடியா இருக்கும் ..சாப்டுட்டு வெளிய போக விட மாட்டாங்க .."எம்புட்டு வெயில் கொளுத்துது , செத்த நேரம் படுங்களா !" பெரியவங்க கிட்டேந்து அட்வைஸ் வரும் ..அப்புறம் சாயந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் பால் குடிச்சுட்டு வெளிய விளையாட போவோம் ..அப்போவும் காலைல விட்டுப்போன விளையாட்டில் இருந்து தொடங்கும் அடுத்த ஸெஸ்ஸன் .பால் மட்டும்தான குடிச்சிருக்கோம் ...அதுக்குள்ள எல்லார் வீட்டிலும் என்னென்ன தின்பண்டங்கள் இருக்கோ அத்தனையும் ஒரு சேரக் கொண்டு வந்து விடுவார்கள் ...தட் மீன்ஸ் --நடு வளவில் திண்ணையில் உக்காந்து எங்களுடைய ஸ்நாக்ஸ் டைம் .!

மிச்சர் , முறுக்கு , லட்டு, துக்கடா , தட்டை னு பெரும்பாலும் வீட்டுலேயே செய்து விடுவார்கள் ..எங்க எல்லாருக்குமே ரொம்ம்ம்ப புடிச்சது மாடியில் ஆச்சி வீட்டு மரஊஞ்சல் தான் . ஆறடி நீளம் இருக்கும் ..நல்ல திடமான பெரிய இரும்புக் கம்பிகளால் கொக்கிகளைக் கொண்டு இணைக்க பட்டதாய் இருக்கும் ...மொத்தத்துல செம்ம ஸ்ட்ராங்கான ஊஞ்சல் . மாடி ரூம் சாவி லேசுல கையில கிடைக்காது ...எங்க நாங்க கூட்டமா போயி, சேட்டை பண்ணி கீழ ஏதும் விழுந்திருவோமோனு குடுக்கவே மாட்டா ஆச்சி! ...ஆனாலும் கெஞ்சி கூத்தாடி , "இருட்டுறதுக்குள்ள நாங்க கீழஇறங்கி வந்திருவோம் !" னு உத்தரவாதம் குடுத்தாதான் ஆச்சி மாடி சாவிய குடுப்பா..எல்லாம் அந்த மர ஊஞ்சலுக்காக மட்டும் தான் !

சக்கி, வாணி ,தொரை, மஞ்சு, லட்சுமி , சிவா, திவ்யா ,சின்ன லீலா , பெரிய லீலா , பவானி ,குட்டி விக்னேசு , பெரிய விக்னேசு ,கோமு அக்கா ,பார்வதி ,என்று சித்தி ,சித்தப்பா வீட்டு பிள்ளைகள் , நண்பர்கள் வட்டம் என மொத்தம் எட்டு பத்து பேருக்கு மேலயே இருப்போம் . ரொம்ப குட்டிஸ்லாம் சைடுல இருக்கற இரும்பு கம்பியை நல்லா புடிச்சுகிட்டு உக்காந்துக்கணும் . பெரியவங்க நாங்க நின்னுட்டே ஒரு தள்ளு தள்ளுவோம் ...அது அலாவுதீனின் மந்திர கம்பளம் மாதிரி காத்துல வெகு வேகமாய் பறக்க ...குட்டிஸ் லாம் ஓ ......ஓ... னு கத்த , ஒரே ஜாலி !

கிட்டத்தட்ட கம்பு குத்தியிருக்கும் மேல்கூரைக்கு பக்கத்துல இருக்கும் ஆளுயர கண்ணாடியை தொட்டு விட்டு வருவதெல்லாம் அதிவீர செயல் ..."ஏய் இன்னும் மேல என்ன செய்தீங்க எல்லாரும் ?" னு சத்தம் கேட்டுச்சோ இல்லையோ ...உடனே மாடியைப் பூட்டி விட்டு கீழே படிக்கட்டில் வருவதற்குள் அடுத்த விளையாட்டு ரெடியாயிரும்

"ஏய் பல்லாங்குழி விளாடுவோமா ...?" " போ....ல இதுவே லேட் ஆயிட்டு .. அம்மா தேடுவா ...நாங்க கிளம்பனும்னு சொல்ற ஆட்களை லேசுல விடுறதில்ல .."இங்காரு ஆச்சி நேத்து வச்ச சாம்பாரையும் , அவியலையும் சேத்து கிளறி சுண்டக்கறி போட்டு வச்சிருக்கா ...நீ உங்க வீட்டுலேந்து சோறு மட்டும் கொண்டா , என்ன ..." னு சொல்லி ஒரே சட்டி நிறைய பால் சாதம் பிசஞ்சு , பளிச்சுன்னு தெரியுற பவுர்ணமி நிலவொளியில எல்லாரும் வட்டமா உக்காந்து நிலாச்சோறு சாப்பிடுவோம் ..பெரிய குத்து போணியில தண்ணி மட்டும் வச்சுக்கிடுவோம் ...அவுங்க அவுங்க வீட்டுலேந்து டம்ளர் மட்டும் வந்திரும் ... அப்புறம் என்ன அரை வயிறு , கால் வயிறா இருக்கறத சாப்டுட்டு , வீட்டுல போயி திரும்ப தோசை விடச்சொல்லி சாப்புட்றது தனி கதை ..இப்படியாக ஒரு கோடை கால விடுமுறையின் ஒரு நாள் கடக்கும்னு தான நினைக்கிறீங்க ..அப்போது அமையப்பெற்ற எல்லா நாட்களுமே இப்படித்தான் !

ஒவ்வொரு சித்திரை , வைகாசியிலும் பள்ளிக்கூட விடுமுறை நாட்களை நினைத்துக்கொள்ளுகிறேன் ! தெய்வாச்சியையும் தான்!!

எவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறது வாழ்க்கை !

இந்த கோடை காலமும் நம்ம சிட்டுகளுக்கு ஆனந்தமாக அமைய வாழ்த்துகிறேன் .

#வாழ்தல் அழகு

#விஜயா கிப்ட்சன்

( [email protected] )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Summer Holidays written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X