• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையான பௌத்தனை தலைகுனியச் செய்யும் செயல்களே இலங்கையில் நடக்கிறது

|

- புன்னியாமீன்

கொழும்பு : ''.... நான் ஒரு தூயபௌத்தன். பௌத்த மதக்கோட்பாடுகளையும், புத்த பெருமானுடைய போதனைகளையும் முழுமையாக கடைப்பிடித்து வருபவன். பௌத்த மதக்கோட்பாடுகளுக்கமைய சகல இனமக்களையும் ஒன்றாகவே மதிக்கின்றேன். சகல மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மதத்தை நிந்திப்பதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார்கள். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு காட்டுவது தான் ஹராம்...'' என ஹலாலுக்கு சார்பாக குரல் கொடுத்தமைக்காக பொது பலசேனாவினால் தாக்குதலுக்கு உட்பட்டவரும், மஹியங்கனை ரொட்டலிவள விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா விமுக்தி பலவேகய அமைப்பின் பிரதம காரியதரிசியுமான வட்டரக விஜித ஹிமி அவர்கள் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு வடக்குக் கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத மதவாதப் பிரசாரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வணக்கத்தலங்களை மூடிவிடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்ல முஸ்லிம்கள் காலாகாலமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளும் நடந்த வண்ணமேயுள்ளன.

ஒரு பௌத்த மதத் துறவியைத் தலைவராகக் கொண்ட பொதுபல சேனாவினால் ஹலால் எதிர்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான செயல்பாடுகள் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் - நிகாப் உடை, மற்றும் மத கலாசார விடயங்கள், முஸ்லிம்களின் வர்த்தகத்தைப் புறக்கணித்தல், முஸ்லிம் மதஸ்தானங்களை தாக்குதல் காலாகாலமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகள் என வியாபித்து வருகின்றன. இவை தொடர்பாக வட்டரக விஜித ஹிமி அவர்கள் 'விடிவெள்ளிக்கு' வழங்கிய பிரத்தியேக நேர் காணலைக் கீழே தொகுத்துத் தருகின்றேன்.

கேள்வி:- வடக்கு கிழக்கு யுத்தம் முடிந்த பிறகு இலங்கையில் மற்றுமொரு சிறுபான்மை இனத்தவர்களாக வாழக்கூடிய முஸ்லிம்களின் மத, கலாசார, பொருளாதார உரிமைகளைப் பறித்து பௌத்த முஸ்லிம் மக்களிடையே காணப்படும் நல்லுறவைச் சீர்குலைக்க பௌத்த மக்களிடம் புதிதாகத் தோன்றிய சில அமைப்புக்கள் முனைந்து வருகின்றன. ஒரு விகாரையின் தலைமைபிக்குவும்; நீண்டகாலமாக முஸ்லிம் மக்களுடன் நல்லுறவைப் பேணிவருபவருமான நீங்கள் இதனை எத்தகைய கோணத்தில் அவதானிக்கின்றீர்கள்?

பதில்: ஒவ்வொரு உண்மையான பௌத்தனையும் தலை குனியச் செய்யும் ஒரு விடயமாகவே இதனை நான் காண்கின்றேன். பௌத்த முஸ்லிம் மக்களிடையே காணப்படும் நல்லுறவை சீர்குலைக்க 2009ம் ஆண்டின் பின்னர் தோன்றிய சில அமைப்புக்களின் இச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது பௌத்த மதக்கோட்பாடுகளுக்கு முரணானது. புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது என்றே போதித்தார்.

நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் சரியே, நின்று கொண்டிருக்கும் போதும் சரியே, படுத்திருக்கும் போதும் சரியே, நடமாடும் போதும் சரியே சகலருக்கும்; அனைத்து விடயங்களும் நலமாகவே அமையவேண்டுமென்றே நினைத்துக் கொள்ளுங்கள் அனைவரினதும் வறுமை ஒழியவேண்டும், பொருளாதாரம் செழிக்க வேண்டும் இதனூடாக அமைதியும், சாந்தியும், சமாதானமும் நிலைக்க வேண்டும் என்று தான் பௌத்தம் போதிக்கின்றது.

இன்னொரு மதத்தாரின் மதக்கலாசாரங்களையும் மதக்கிரியைகளையும் தடைசெய்ய வேண்டுமெனவோ மதஸ்தானங்களை மூடவேண்டும் தாக்க வேண்டும் எனவோ எந்தவொரு இடத்திலும் பிரஸ்தாபித்தில்லை. இவ்வாறாக அந்த அமைப்புகள் மேற்கொள்வது பௌத்த மதத்தையே இழிவுபடுத்தும் ஒரு செயற்பாடாகும். ஒரு தூய பௌத்தன் இதுபோன்ற செயல்களுக்கு என்றும் துணைபோகமாட்டான்.

கேள்வி:- இருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் பெரிதும் அதிகரித்து வருகின்றனவே. ஒரு விகாரையின் தலைமை பிக்கு, மற்றும் ஆளும் கட்சியான பொதுசன ஜக்கிய முன்னணியின் மஹியங்கனை உள்ளுராட்சி சபை உறுப்பினர் என்ற வகையில் இந்தப்பிரச்சினையின் உண்மை நிலையை மக்கள் முன் தெளிவுபடுத்த ஏதும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்களா?

பதில்: கடந்த ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி மஹியங்கனை நகரில் பொதுபலசேனா ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தினைத் தூண்டக்கூடிய அவர்களின் பிரச்சாரத்தை செவியுற்று நான் மிகவும் வேதனையடைந்தேன்.

Lankan Buddist monk slams fascists

முஸ்லிம் பெண்களின் நிகாப் ஹிஜாப் ஆடையை கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் 'கோனிபில்லா எந்தும கலவமு' என்ற பேனர்கள் அடிக்கப்பட்டிருந்தன. மிகவும் மனம் நொந்து போயிருந்த நேரத்தில் ஆகஸ்ட் மாதம் 08ம் தேதி பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மலையக முஸ்லிம் கவுன்ஸிலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'இப்தார் நிகழ்ச்சிக்'கு என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தனர். பொதுபல சேனாவின் இந்த இனவாதப்பிரச்சாரங்களுக்கு அந்த இப்தார் நிகழ்ச்சியே தக்க பதிலை வழங்கத் தருணம் எனத் தீர்மானித்தேன்.

அந்த இப்தார் நிகழ்ச்சிக்கு பிரதேச செயலர் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்விலே பொதுபலசேனாவின் இனவாத நடவடிக்கைக்களுக்காக முதலில் குரல் கொடுத்தேன். இதன் விளைவாகத்தான் பொதுபலசேனாவினால் நான் தாக்குதலுக்கு உட்பட்டேன். சுமார் பத்து ஆண்டுகாலமாக வகித்த பௌத்தமத கலாசார அதிகாரி பதவியையும் இழந்தேன். இன்று இருக்க இடமில்லாமல் என் சிஸ்யர்களை பார்க்கமுடியாமல் ஒவ்வொரு பன்சலவிலும் உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.

கேள்வி: பொதுபலசேனாவின் நோக்கம் என்னவாக இருக்கலாம்?

பதில்: இனவாதத்தைத் தூண்டி மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவது இவர்களின் நோக்கமாக இருக்கலாம். ஹலால் பிரச்சினையை முன்வைக்கின்றார்கள். ஹலால் என்பதன் சரியான விளக்கத்தை அவர்கள் அறிந்து கொள்ளாமல் கதைக்கின்றார்கள். இனவாதத்தைத் தூண்டி ஓர் இனத்தை பாதிப்புறச் செய்வது, பௌத்த போதனைகளின் அடிப்படையிலும் ஹராம் என்பதை நான் ஆணித்தரமாக அவர்களுக்கு கூற விரும்புகின்றேன்.

முஸ்லிம்களின் அடையாள உடையாக நிகாப் அணியக்கூடாது என அவர்கள் கூறுகின்றார்கள். நிகாப் அணிந்து கொண்டு அரச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பிரச்சாரம் செய்கின்றார்கள். நான் அறிந்த வரை நிகாப் அணிந்து கொண்டு இலங்கையில் வன்முறைகள் நடந்தமைக்காக எந்தவித ஆதாரங்களுமில்லை. சில நேரங்களில் வேண்டுமென்றே சில சக்திகள் செயற்பட்டாலும் கூட இலங்கை முஸ்லிம் பெண்கள் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களுமில்லை.

இன்று எமது சில பௌத்த இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றார்கள். புனித தளதா மளிகைக்குள்ளே செல்லும் போது சில பெண்களுக்கு வெள்ளை ஆடை அணிவித்தே பாதுகாப்புத் துறையினர் உள்ளே அனுப்புகின்றனர். சில பெண் பிள்ளைகள் அமரும் போது தனது மானத்தை மறைத்துக்கொள்ள ஒரு பத்திரிகையை தொடையின் மீது வைத்துக்கொள்கின்றனர்.

ஆனால் முஸ்லிம் பெண்களின் ஆடை அணிகள் மிகவும் கௌரவமாகவே இருக்கின்றன. இதை உணராத நிலையிலேயே பொதுபலசேனா அமைப்புகள் நிகாபுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கின்றனர். ஒன்றைப்பற்றி சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது இனங்களுக்கடையே முரண்பாடு ஒன்றைத் தோற்றுவிப்பதற்கேயன்றி வேறு ஒன்றுக்குமில்லை.

கேள்வி:- பௌத்த மதத்தின் போதனைகளின் படி பன்சில்பத பஹ (பஞ்சசீலக் கோட்பாடு) எனும் மூலாதாரக் கோட்பாடுகளுக்கமைய பொதுபலசேனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: இல்லவே இல்லை. பன்சில்பத பஹ (பஞ்சசீலக் கோட்பாடு) என்பது பௌத்தமதப் போதனைகளில் மூலவேர். ஒவ்வொரு தூயபௌத்தனும் இந்த கோட்பாடுகளுக்கமையவே வாழவேண்டுமென புத்தபெருமான் போதித்துள்ளார். பௌத்த மதத்தின் எதிர்பார்ப்பும் அதுதான். சகல மதங்களும், மனிதனுக்கு நல்லதையே உபதேசிக்கின்றன.

பஞ்சீலக் கோட்பாடு பற்றி சுருக்கமாக குறிப்பிடுவதாயின் ''பானதிபாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - அதின்னாதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - காமே சுமிச்சாஸாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - முஸாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - சுராமேரயா வஜ்ஜா பமா தட்டானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி'' -இதன் உட்கருத்தைச் சுருக்கமாக குறிப்பிடுவதாயின் 'ஒரு தூய பௌத்தன் ஏனைய உயிரினங்கள் மீது கருணை கொள்ளுதல் வேண்டும். அடுத்தவருக்கு சொந்தமானதை அபகரித்துக் கொள்ளாமலும், ஆசைப்படாமலும் இருக்க வேண்டும். காமத்தைப் பிழையாக அணுகாதிருத்தலுடன் சூது வாதுகளை விட்டும் விலகியிருத்தல் வேண்டும். ஒருவரைப்பற்றி புறம் சொல்லாதிருப்பதுடன் ஒருவரை ஏமாற்றாதிருத்தல் வேண்டும். மது போதையில் இருந்தும் விலகிக் கொள்ளவேண்டும்.'

இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதத்தால் விலக்கப்பட்டவைகளைச் செய்வதே ஹராம். இதனை பொதுபலசேனா உணர்ந்து கொள்ளவேண்டும்.

கேள்வி: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாதத் தூண்டல் நடவடிக்கையின் பின்னணியில் ஏதாவது சக்திகள் செயற்படுகின்றன என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: பொதுபலசேனாவின் பிரதான நிர்வாகிகளின் வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றியும், அங்கு அவர்கள் நடந்து கொள்கின்ற முறைகள் பற்றியும் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் நாம் பார்க்கின்றோம். இதிலிருந்து வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் இருக்குமென்பதை அனுமானிக்கக் கூடியதாக இருக்கின்றதே.

கேள்வி: உண்மை நிலைகள் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் பிரஸ்தாபிப்பதைப் போல, பௌத்த மக்கள் மத்தியிலும் நீங்கள் இப்பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றீர்களா?

பதில்: உண்மையை அனைவரிடமும் கூறவேண்டும். கூறிவருகின்றேன். இதனால் தான் எனக்கு கொலை அச்சுறுத்தல் கூட விடுக்கப்பட்டவண்ணமுள்ளது. பொதுத்தொலைக்காட்சியொன்றில் பொது பலசேனாவின் தலைவரை விவாதமொன்றுக்கு வரும்படி நான் பொது அழைப்பினைக்கொடுத்துள்ளேன்.

அதற்கு அசூசிகள் நிறைந்த பன்றிகளுடன் நான் விவாதத்துக்கு வரத்தயாராயில்லை என தெரிவித்திருந்தனர். அவர்களுக்குப் பயம். உண்மையான பௌத்தவிளக்கங்களைக் கூறினால் யார் அசூசியால் குளித்துக் கொள்ளப் போவதென அவர்களுக்குத் தெரியும்.

இப்போதும் நான் பகிரங்கமாக அழைப்புவிடுக்கின்றேன். தொலைக்காட்சியொன்றில் பொதுபலசேனா பகிரங்க விவாதமொன்றுக்கு என்னுடன் வாருங்கள். ஹலாலையும், ஹராத்தையும் நான் கூறித்தருகின்றேன். பொது பலசேனா நினைப்பதைப் போல சோயா மீட் பெக்கட்டிலும், கோழி இறைச்சியிலும் மாத்திரம் தான் ஹலால் உள்ளதென்பதல்ல. குடித்து விட்டு அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவது பன்சில்பதபஹவிலும் ஹராம். இஸ்லாத்திலும் ஹராம்.

கேள்வி: தற்போதைய பிரச்சினைகளின் போது முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நீங்கள் இப்பிரச்சினைக்கு முன்பும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளீர்களா?

பதில்: நியாயத்துக்காக நான் என்றும் குரல் கொடுத்தே வந்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான நான் நேசிக்கும் தலைவர்களில் ஒருவரான காலம் சென்ற எம் எச் எம் அஸ்ரப் அவர்கள் என் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளைச் சந்தித்த நேரங்களில் அவருடன் இணைந்து நான் குரல் கொடுத்துள்ளேன். தீகவாவி பிரச்சினை உட்பட. உண்மைக்காக என்றும் நான் உயிருடன் உள்ள வரை குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.

கேள்வி:- பொதுபலசேனாவினால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் பாரிய உடனடித் தாக்கங்கள் ஏற்படாவிடினும் கூட படிப்படியாக தாக்கங்கள் உருவாகி வரக்கூடிய நிகழ்தகவு உண்டு. 'அண்மையில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த சில்லறைக்கடையொன்றில் ஒரு சிறுவன் ஹலால் இலச்சினை இல்லாத சோயாமீட் பெக்கட் ஒன்றைத் தரும்படி கேட்டான். அந்த சிறுவனுக்கு ஹராம், ஹலால் என்பதற்கு விளக்கம் தெரியாமல் இருக்கும். அவனிடம் கேட்டபோது தான் செல்லும் 'தஹம் பாடசாலை'யில் பொருட்களை வாங்கும் போது ஹலால் சான்றிதழ் போடப்பட்ட பொருட்களை வாங்கவேண்டாம் என போதித்ததாக கூறினான். இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பிஞ்சு வயதிலேயே இனவாதம் விதைக்கப்படுகின்றது. இதைப்பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.

பதில்:- சிந்திக்கவேண்டிய விடயம்தான். பிஞ்சு உள்ளங்களில் இத்தகைய விச எண்ணங்களை விதைப்பதை அனுமதிக்க முடியாது. பொதுபலசேனாவின் பிரச்சார நடவடிக்கைகள் அனேக சந்தர்ப்பங்களில் புஸ்வானம் ஆகிவிட்டாலும் கூட, அவர்களால் விதைக்கப்பட்ட நச்சு உணர்வுகள் பாமரமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி பரவி வருவதை மறுக்கமுடியாது. தஹம் பாடசாலைகள் நல்லதையே போதிக்க வேண்டும். பஞ்சசீலக் கோட்பாடுகளுக்கு முரணானவற்றைப் போதிக்கக்கூடாது. ஒரு இனத்தின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர்கள் மீதோ குரோதத்தை வளர்க்கக் கூடாது. அப்படி மேற்கொள்ளப்படுமாயின் அது பஞ்சசீலக் கோட்பாடுகளுக்கு முரணானது. இதனை அனுமதிக்க முடியாது.

கேள்வி: இந்நிலையில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: உண்மை விளக்கங்களை பௌத்தகுருமார் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும், தஹம் பாடசாலை போதனைகளிலும் முன்னெடுக்கவேண்டும். இதற்காகவே நாம் 'ஸ்ரீலங்கா விமுக்தி பலவேகய' எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். இதன் பிரதம காரியதரிசியாக நான் செயல்படுகின்றேன். இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணுதல், பஞ்சீலக் கோட்பாடுகளுக்கமைய பௌத்த மக்களின் வாழ்வியலை ஒழுங்குபடுத்தல், மாற்று மதத்தாரையும் அவர்களது உரிமைகளையும் மதிக்கும் ஒரு சமுக அமைப்பினை ஏற்படுத்துதல் போன்றன தொடர்பான திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

(இந்த நேர்காணல் ஜனவரி 02, 2014 'விடிவெள்ளியில்' இடம்பெற்றது)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Here is an interview of a Lankan Buddhist monk to Dr Punniyamin, a Tamil writer in Sri Lanka.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more