For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை தாக்குதல் - லஷ்கர் கைவரிசை: பாக். ஒப்புதல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என்பதை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து லஷ்கரின் தொடர்பை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அது கருத்து தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் அலுவலக தகவல்கள் இதைத் தெரிவித்துள்ளன.

லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டு, நிகழ்த்தியது என பாகிஸ்தான் பிரதமர் அலுவலக தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானின் இந்த தடலாடி பணிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்கா அளித்த உறுதியான ஆதாரங்களே காரணம் எனத் தெரிகிறது.

மும்பைத் தாக்குலதைத் திட்டமிட்டது லஷ்கர் அமைப்புதான் என அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ஜகியூர் ரஹ்மான் லக்வியும், சரார் ஷாவும் ஒப்புக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலக தகவல்கள் கூறியுள்ளன.

இந்த இருவரையும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில், முஸாபரபாத்தில் உள்ள லஷ்கர் முகாமிலிருந்து பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தது நினைவிருக்கலாம். இருவரும் கைது செய்யப்பட்டதை முதலில் பிரதமர் கிலானி ஒத்துக் கொண்டார். பின்னர் அதை மறுத்தார் என்பதும் நினைவிருக்கலாம்.

இந்த நிலையில்தான், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மும்பைத் தாக்குதலை லஷ்கர் அமைப்பு திட்டமிட்டு செயல்படுத்தியதை ஜரார் ஷா ஒத்துக் கொண்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஜரார் ஷா, லஷ்கர் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவன் ஆவான்.

மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த தீவிரவாதிகளை வழிநடத்தியதும் தான்தான் என்றும் ஷா ஒப்புக் கொண்டுள்ளானாம்.

ஷாவுக்கும், தாஜ் ஹோட்டலில் இருந்த தீவிரவாதிகளில் ஒருவனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கண்டுபிடித்து அதை பாகிஸ்தானிடமும் கூறியதைத் தொடர்ந்தே வேறு வழியின்றி பாகிஸ்தான் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஷாவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவன் கஸாப் கூறியவை உண்மைதான் என்று ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. மேலும், இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதையும் ஷா புட்டுப் புட்டு வைத்து விட்டான் என்றும் தெரிகிறது.

மேலும் இந்த தீவிரவாதக் குழுவுக்கு எங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. என்னென்ன பயிற்சி தரப்பட்டது உள்ளிட்ட விவரங்களையும் ஷா கூறியுள்ளான்.

நேற்று முன்தினம்தான் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மஹமூத் அலி துரானி, மும்பையில் சிக்கிய கஸாப், பாகிஸ்தானியாக இருக்கலாம். ஆனால் அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் இல்லையே என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்க தரப்பில் ஆணித்தரமான ஆதாரங்களை பாகிஸ்தான் முன் வைத்துள்ளனர். லக்வி மற்றும் ஷாவின் தொடர்புகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அமெரிக்கா, பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. இருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறும் அது பாகிஸ்தானை கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்தே பாகிஸ்தான், லஷ்கர் தொடர்புகளை ஏற்றுக் கொள்ள முன்வந்திருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மீதான தனது இறுக்கத்தை இந்தியா அதிகப்படுத்தத் தொடங்கும் எனத் தெரிகிறது.

விரைவில் லக்வி, ஷா தொடர்புகள் குறித்து பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கும் என இந்தியா கருதுகிறது. அதன் பின்னர் இருவரையும் நாடு கடத்துமாறு இந்தியா மீண்டும் கோரிக்கை வைக்கவுள்ளது. லஷ்கரின் தொடர்புகளை ஒப்புக் கொண்ட பின்னர் பாகிஸ்தானால் இந்தியாவின் கோரிக்கையை மறுக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கஸாப் பாகிஸ்தானிதான் என்பதையும் அது ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதியுடன் சர்தாரி ஆலோசனை:

மும்பை தீவிராதத் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் நிர்ப்பந்தம் அதிகரித்து வரும் பின்னணியில், ராணுவ தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானியுடன், அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் பாகிஸ்தானின் டான் டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பதட்டத்தைத் தணிக்க இந்தியா சில திட்டங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்திருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் சம்மதிக்க வேண்டும் எனவும் அந்த செய்தி கூறுகிறது.

இதுகுறித்து கயானியுடன் சர்தாரி முக்கியமாக ஆலோசித்ததாக தெரிகிறது.

நேற்றுதான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், அந்த அமைப்பின் லக்வியும், ஜரார் ஷாவும், இதை ஒத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான வலுவான ஆதாரத்தை அமெரிக்காவும் பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.

இதையடுத்து லஷ்கரின் தொடர்பை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவுள்ளது. இந்தப் பின்னணியில்தான் சர்தாரி, கயானி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

நேற்றைய சந்திப்பின்போது தீவிரவாதிளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கயானி விளக்கியதாக தெரிகிறது. மேலும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் அவர் விளக்கியதாக தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X