விலைவாசி, பண வீக்கம் உயர்வு-முடிவெடுக்காமல் முடிந்தது பிரதமரின் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
PM's Discussion over Price Rise
டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உணவுத்துறை அமைச்சர் சரத் பவார், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அலுவாலியாவுடன் விலைவாசிக் குறைப்பு, பணவீக்க உயர்வுத் தடுப்பு ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

இருப்பினும் இக்கூட்டத்தில் எந்த உருப்படியான முடிவும் எடுக்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை மீண்டும் கூட்டம் நடைபெறும் என்றார்.

அமைச்சரவை செயலாளர் சந்திரசேகர், பிரதமருக்கான முதன்மை பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாட்டின் உணவுப் பணவீக்கம் தற்போது 18.32 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெங்காய விலை கண்ணில் ரத்தத்தை வரவைப்பதாக உள்ளது. காய்கறிகளின் விலையும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

அதேசமயம், கோதுமை, தானிய வகைகளின் விலைகள் சற்று கட்டுக்குள் உள்ளன. ஆனால் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி விலை மிகக் கடுமையாக இருப்பதால் மக்கள் விழி பிதுங்கிப் போயுள்ளனர்.

பவாரின் 'உப்புமா'ப் பேச்சு!

இதற்கிடையே, விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை என்று வழக்கம் போல 'உப்புமா'த்தனமாக பேசியுள்ளார் சரத் பவார்.

நாடு முழுவதும் வெங்காய விலை சற்றும் தணிந்தபாடில்லை. சென்னையில் கிலோ வெங்காயம் 60 முதல் 70 வரை விற்கிறது. டெல்லியில் 60 வரை விற்கிறது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்தபடியே உள்ளது. மொத்த மார்க்கெட்டில் வாங்கினால் மட்டுமே சற்று விலை குறைந்து காணப்படுகிறது. ஆனால் சில்லறைக் கடைகளில் காய்கறிகள் பக்கம் நெருங்கவே முடியவில்லை.

இதுகுறித்து பவார் கூறுகையில்,

காய்கறிகளின் விலை உயர்ந்தபடிதான் உள்ளது. ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லையே. விலைவாசி படிப்படியாக குறையும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.

குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவின் சில பகுதிகள் ஆகியவற்றிலிருந்து புதிய காய்கறிகள் உள்ளிட்டவை வர ஆரம்பித்துள்ளன. எனவே நிலைமை சரியாகி விடும் என்று கூறியுள்ளார் பவார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Manmohan Singh has convened a meeting today on high food prices. The meeting called by the Prime Minister is expected to be attended by Finance Minister Pranab Mukherjee, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia, besides Pawar. Meanwhile, Agriculture Minister Sharad Pawar said the government has no control over high vegetable prices. "vegetable prices are high and on that we do not have any control," Pawar said, adding that prices will come down "eventually".
Please Wait while comments are loading...