For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்தேவின் கொரோனா சிகிச்சை மையம்.. ஒன்னுமே இல்லாம எதுக்கு இந்த விளம்பரம்

Google Oneindia Tamil News

ஹரித்வார்: யோகா குரு என்று அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி இருப்பதாக அறிவித்திருந்தார்.

ராம்தேவின் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் என்னதான் நடக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவல்களை Newslaundry செய்தி இணைய தளம் நேரில் சென்று ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

Newslaundry வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

 What happened in Baba Ramdev’s Haridwar Covid centre?

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனைத்து 150 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன என்று பெருமிதம் பொங்க மே 4-ந் தேதி பேட்டி கொடுத்தார் யோகா குரு என்றழைத்து கொள்ளும் பாபா ராம்தேவ். இது உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மருத்துவமனை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாயகரமான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது; வென்டிலேட்டர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

Newslaundry செய்தி நிறுவனம் இந்த ஹரித்வார் கொரோனா சிகிச்சை மையத்துக்கு மே 10-ல் நேரில் சென்று பார்வையிட்டது. ஹரித்வார் கும்பமேளாவுக்கான மருத்துவமனையாக இது முன்னர் செயல்பட்டது. இந்த சிகிச்சை மையத்தை நேரில் சென்று பார்த்த போது பாபா ராம்தேவ் ஊடகங்களில் சொன்னது பொய்யானது என்பது தெளிவாகத் தெரிந்தது.

 What happened in Baba Ramdev’s Haridwar Covid centre?

இந்த சிகிச்சை மையத்தில் உள்ள 150 படுக்கைகளில் 50 மட்டும்தான் பயன்பாட்டுக்குரியது. பாபா ராம்தேவ் சொன்னது போல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் எல்லாம் எதுவும் இல்லை. வென்டிலேட்டர் வசதியும் அங்கு இயங்கவில்லை. மேலும் மருத்துவர்கள், வார்டு பாய்ஸ், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதும் தெரிந்தது. ராம்தேவின் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் மிக குறைவான வசதிகள்தான் உள்ளன. இங்கே வரும் கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்குதான் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அத்துடன், சரியான குடிநீர் வசதி கூட இந்த சிகிச்சை மையத்தில் இல்லை; கொரோனா வார்டுகளில் மேற்கூரை கூட இல்லை; கொரோனா வைரஸ் மிக எளிதாக பரவக் கூடிய சாத்தியம் உள்ள இடமாகவே பாபா ராம்தேவின் ஹரித்வார் சிகிச்சை மையம் இருக்கிறது. டிவி ஊடகங்களைப் பொறுத்தவரை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் மிகப் பெருமளவு வருவாயைத் தருவதால் செய்தி சேனல்கள் ராம்தேவ் நடத்துவதாக சொல்கிற சிகிச்சை மையத்தின் உண்மையை நிலையை வெளிப்படுத்தவில்லை.

பாபா ராம்தேவின் இந்த ஹரித்வார் கொரோனா சிகிச்சை மையமானது மே 3-ந் தேதி உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத்தால் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பேசிய பாபா ராம்தேவ், அலோபதி மற்றும் ஆயுர்வேதா மற்றும் யோகா முறைகள் கலந்து கொரோனாவுக்கு சிகிச்சை தரப்படும் மையம் இது என கூறியிருந்தார். ஆயுர்வேத மருந்து அலோபதி மருந்துகளை எப்படி ஒன்றாக கலந்து கொடுக்க முடியும் என்பது தெரியவில்லை.

ஹரித்வாரில் பக்தர்கள் கங்கையில் புனித நீராடுகிற ஹர்கிபாரி என்ற இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் ராம்தேவின் கொரோனா சிகிச்சை மையம் இருக்கிறது. இந்த சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளராக இருப்பவர் டாக்டர் எஸ்.கே. சோனி. இந்த மருத்துவமனையில் உள்ள 150 படுக்கைகளில் 50 படுக்கைகள்தான் பயன்பாட்டுக்குரியவை அதாவது ஆக்சிஜன் சப்ளை வசதி கொன்டவை என்கிறார். போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் வென்டிலேட்டர் வசதிகள் செய்யப்படவில்லை என்கிறார்.

 What happened in Baba Ramdev’s Haridwar Covid centre?

மேலும், 24 மணிநேரமும் இந்த சிகிச்சை மையம் இயங்க பணியாளர்கள் தேவை. பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. குறிப்பாக அலோபதி துறையில் பயிற்சி பெற்றவர்கள் குறைவு. எங்களிடம் ஆயுர்வேத கல்லூரிகளில் படித்த மருத்துவர்கள்தான் உள்ளனர். அவர்களை அலோபதி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது என்கிறார் டாக்டர் சோனி. தற்போதைய சூழ்நிலையில் ராம்தேவின் ஹரித்வார் கொரோனா சிகிச்சை மையத்துக்கு குறைந்தது 10 அலோபதி மருத்துவர்கள் ஒரு ஷிப்ட்க்கு தேவை; 130 வார்டு பாய்ஸ் தேவை என்ற நிலையில் வெறும் 90 பேர் உள்ளனர் என்பதும் Newslaundry செய்தி நிறுவனம் நேரில் கண்ட உண்மை.

ராம்தேவ் கூறியதைப் போல தீவிர சிகிச்சை பிரிவு, இந்த சிகிச்சை மையத்தில் இயங்கவில்லை. டாக்டர் சோனி கடந்த மே 7-ந் தேதி ஹரித்வார் வட்டார அரசு அதிகாரிகளுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் தேவை குறித்தும் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட வேண்டிய சூழல் குறித்தும் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதையும் Newslaundry அறிந்தது. அந்த கடிதத்தில் கழிவறைகளை தூய்மைப்படுத்தக் கூட பணியாளர்கள் இல்லை; குடிநீர் விநியோகம் படுமோசம், கொரோனா வார்டுகளில் மேற்கூரைகள் இல்லை; எக்ஸ்ரே மெஷினை இயக்கக் கூடிய டெக்னீஷியன்கள் இல்லை என்கிற விவரங்களும் டாக்டர் சோனியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் ஆக்சிஜன் அளவு 70-க்கு கீழே உள்ள கொரோனா நோயாளிகளை இந்த சிகிச்சை மையத்தில் அனுமதிப்பதில்லையாம்.. இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது முதல் மே 7-ந் தேதி வரை மொத்தமே 30 முதல் 40 நோயாளிகளுக்குதான் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறார் டாக்டர் சோனி.

ரிஷிகேஷ் புனித நகரில் இருந்து நரேந்திர பாயல் என்பவர் தாயார் சரிதாவுடன் ஹரித்வார் கொரோனா சிகிச்சை மையத்துக்கு மே 4-ந் தேதி சென்றிருக்கிறார். நரேந்திர பாயலின் தாயாருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தது. அத்துடன் அவருக்கு ஆக்சிஜன் அளவு 35 ஆகவும் குறைந்தது. ஆனால் ஹரித்வார் ராம்தேவ் மையத்தில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாத சூழலில் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நரேந்திர பாயல் கூறுகையில் நண்பர்களும் உறவினர்களும்தான் ஹரித்வார் கொரோனா சிகிச்சை மையம் பற்றி தெரிவித்தனர். ஊடகங்களிலும் கூட விளம்பரம் செய்தனர். ஆனால் ராம்தேவின் மருத்துவமனைக்கு சென்ற போது அட்மிஷன் கூட போட மறுத்தனர்; அங்கே தஈவிர சிகிச்சை பிரிவும் இல்லை- வென்டிலேட்டர் வசதியும் இல்லை என கூறிவிட்டனர் என்கிறார்.

மேலும், உங்கள் சிகிச்சை மையத்தில் போதுமான வசதி இல்லை என்றால் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள்... கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்; அவர்களது சிகிச்சை அளிக்க ஒன்று அல்லது 2 நிமிடங்கள் தாமதம் ஆனாலே மரணம் அடைய நேரிடும் என்பதை ராம்தேவ் மருத்துவமனை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குமுறினார். இதனால் நரேந்திர பாயலின் தாயார் சரிதா உடனடியாக டேராடூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமாகத்தான் உள்ளது.

ஹரித்வாரை சேர்ந்த கவிதா குப்தா தமது 32 வயது மகன் சுனிலை ராம்தேவ் கொரோனா சிகிச்சை மையத்தில் மே 7-ந் தேதியன்று அனுமதித்தார். அங்கு சுனிலுக்கான ஆக்சிஜன் அளவு 88 ஆக குறைந்தது. ஆனால் முறையான சிகிச்சையும் உடனடி ஆக்சிஜனும் அளிக்கவில்லை. இதனால் வேறுவழியே இல்லாம ரூர்கியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இப்போது சுனிலின் நிலைமை தேறி உள்ளதாம்.

ராம்தேவின் ஹரித்வார் கொரோனா சிகிச்ச்சை மையத்தில் மே 4-ந் தேதி முதல் மே 7-ந் தேதி வரை மொத்தம் 5 நோயாளிகள் மரணித்துள்ளதாகவும் டாக்டர் சோனி கூறுகிறார். அப்படி ஹரித்வார் கொரோனா சிகிச்சை மையத்துக்கு வருகிறவர்களுக்கும் பதஞ்சலி நிறுவனத்தின் Coronil தான் கொடுக்கப்படுகிறது. கொரோனாவை குணப்படுத்தக் கூடியது என பில்ட்டப்பாக அறிவித்து பின்னர் திரும்பப் பெற்ற நோய் எதிர்ப்பு மட்டுமே கொண்டதுதான் இந்த கொரோனில். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் இந்த கொரோனில் தயாரிப்பு குறித்து கடுமையாக விமர்சித்தும் இருக்கிறது.

ஹரித்வாரில் உள்ள ராம்தேவ்-ன் கொரோனா சிகிச்சை மையத்தில் ஆயுர்தேவ சிகிச்சை மூலம் கொரோனாவை குணப்படுத்துகிறோம் என சில நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் இதன்மூலம் கொரோனா குணமடைந்ததா என்பது உறுதியானது இல்லை. அத்துடன் கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒரு பானையில் சிலவற்றை எரியூட்டி புகையை பரப்பிக் கொண்டும் இருந்தனர். இப்படி செய்தால் ஆக்சிஜன் அளவும் அதிகமாகுமாம்; தோல் நோய்களும் குணமாகுமாம். ஆயுர்வேத மூலிகைகளை எரிப்பதால் இது சாத்தியம் என்கிறார்கள்.

English summary
Here is an Article on Baba Ramdev’s Haridwar Covid centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X