For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொய்வின்றி தொடர்ந்து "தொல்லை" தரும் கருணாநிதி.. ஒரே தோல்வியில் ஓய்ந்து போன விஜயகாந்த்!

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. தோல்வி கண்டோர் சொல்லும் சகஜமான வார்த்தை இது. பல அரசியல் தலைவர்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகும் விறுவிறுப்பாக செயல்படும் ஒரே அரசியல்வாதி திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே. தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார் கருணாநிதி. ஆனால் இந்தத் தேர்தலில் நம்மை வெகுவாக கவர்ந்தவர்கள் தேமுதிக "தலைவர்கள்"தான். தேர்தல் தோல்விக்குப் பிறகு யாரையுமே காணவில்லை. கட்சி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.

இதுவரை இவ்வளவு பெரிய தோல்வியை தேமுதிக சந்தித்ததில்லை என்று கூற முடியாது. முதல் இரு தேர்தல்களிலும் படு தோல்வியை மட்டுமே சந்தித்த கட்சிதான் தேமுதிக. ஆனால் தேமுதிவுக்கு இப்போதுதான் முதல் முறையாக மக்களிடமிருந்து அடி கிடைத்துள்ளது. அதுதான் அந்தக் கட்சியை முடக்கிப் போட்டு விட்டது.

Where is VIjayakanth?

மறுபக்கம் திமுகவுக்கு கிடைத்துள்ளதை தோல்வியாகவே அக்கட்சியினர் கருதவில்லை. "ஜஸ்ட் மிஸ்.. ரெஸ்ட் இன் அசெம்பிளி" என்ற நிலையில்தான் அவர்கள் உள்ளனர். ஆனாலும் சோர்ந்து போகாமல் வழக்கம் போல படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இவரிடமிருந்து தேமுதிக தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன.

கிட்டத்தட்ட ஆட்சிக்குப் பக்கத்தில் வந்து ஏமாந்து போன கட்சி திமுக. ஆனால் அத்தனை ஏமாற்றத்தையும் சோகத்தையும் அப்படியே விலக்கி வைத்து தனது வேலையை தொடர்ந்து செய்து வருகிறது திமுக. உண்மையில் அதிமுகவை விட ஆக்டிவாக இருக்கும் கட்சி திமுகதான். ஆட்சியில் அதிமுக இருந்தாலும் கூட கிட்டத்தட்ட திமுகவினர்தான் இப்போது தெம்பாக காணப்படுகின்றனர்.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கம் போல சரமாரியாக அறிக்கைகள் பாய்ந்து வருகின்றன. எந்தப் பிரச்சினை என்றாலும் விடுவதில்லை. சர்ச்சையைக்குகிறார். சலசலக்க வைக்கிறார். அதிமுக அரசு செய்யும் தவறுகள், அதற்கு எதிரான பிரச்சினைகள் என எது வந்தாலும் அவர் விடுவதில்லை. அறிக்கை மூலமாக மக்கள் கவனத்திற்குக் கொண்டு போகிறார்.

தினசரி கட்சியினரை சந்திக்கிறார். தலைவர்களைச் சந்திக்கிறார். கட்சி தொடர்பாகவும், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தோல்விக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து அதை மக்களுடனும் அறிக்கைகள் வாயிலாக பகிர்ந்து கொள்கிறார். அவரது தினசரி அறிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து குறி வைத்து வெளுத்து வாங்கி வருகிறார் கருணாநிதி. அவரது வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளைப் பார்த்தவர்தான் என்றாலும், இந்த டீசன்ட்டான தோல்வியையும் அவர் சமமாகவே பார்க்கிறார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கட்சியினருக்கு தானே முன்னுதாரணமாக இருக்கிறார்.

மறுபக்கம் தேமுதிகவைப் பாருங்கள். ஆள் அரவமே இல்லை. தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஒரு அறிக்கை விட்டார் விஜயகாந்த். அதன் பிறகு கட்சி நிர்வாகிகள், தோல்வி அடைந்த வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களை ஒருமுறை சந்தித்தார். அத்தோடு சரி. அமைதியாகி விட்டது தேமுதிக தரப்பு.

கட்சி ஆரம்பித்த பின்னர் ஒரு சட்டசபைத் தேர்தல், ஒரு லோக்சபா தேர்தலை தனித்துச் சந்தித்து தோல்வி அடைந்தது தேமுதிக. ஆனால் வாக்கு வங்கி கிடைத்தது. இதையடுத்து அடுத்த சட்டசபைத் தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தார் விஜயகாந்த். பெரும் பலன் கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.. அத்தோடு சரி. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவர் பொறுப்பாக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டாரா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது. அதையடுத்து நடந்த பல்வேறு நிகழ்வுகள், விஜயகாந்த்தின் செல்வாக்கை தடம்புரள வைத்து விட்டது. இன்று தூக்கி வீசப்பட்டுள்ளது தேமுதிக.

இந்த பெரும் தோல்வியை தேமுதிக எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதிலிருந்து உடனடியாக எழும் திட்டமும் அதனிடம் இல்லை. வீ்ழ்ந்ததோடு விழுந்து கிடக்கிறது. தனது தவறுகளை உணர்ந்து, அதை சரி செய்து, தோல்வியால் சரிந்து போன தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் வகையிலான பேச்சுக்கள், செயல்பாடுகள் என எதையுமே தேமுதிகவிடம் பார்க்க முடியவில்லை.

காரணம், அது ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சியாகவே இன்னும் உருவெடுக்கவில்லை. விஜயகாந்த்.. இந்த முகத்தை மட்டும் காட்டினால் போதும் அப்படியே ஓட்டு விழுந்து விடும், பதவி வந்து விடும், முதல்வராகி விடலாம். அப்படியே செட்டிலாகி விடலாம்.. இதுதான் தேமுதிக தலைமையின் ஒரே லட்சியமாக இருந்ததே கட்சியின் இந்த அவல நிலைக்குக் காரணம் என்றால் அது மிகையாக இருக்காது.

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, பின்னர் தோல்வியை புறம் தள்ளி விட்டு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வகையிலான செயல்பாடுகளில் எப்படி ஈடுபடுவது என்பதை திமுகவிடமிருந்து தேமுதிக கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இனியாவது ஆக்கப்பூர்வமான, முழுமையான அரசியல் கட்சியாக செயல்பட அது முன்வந்தால் மட்டுமே பிழைக்க முடியும்.

தனது சுறுசுறுப்பான செயல்பாட்டால் கருணாநிதி, திமுகவினருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அருமையான முன்னுதாரணமாக திகழ்கிறார். ஆனால் விஜயகாந்த்தோ முற்றிலும் முடங்கிப் போய் கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். தலைவரே இப்படி இருந்தால் தொண்டர்களுக்கு எப்படி கிடைக்கும் பாசிட்டிவ் எனர்ஜி.?

விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய "சூரியன்"களை மட்டுமே தேமுதிக சுற்றிக் கொண்டிருந்தால், இந்த "கிரகத்தை" விட்டு மக்கள் வேறு கிரகத்திற்கு மாறிப் போய் விடும் அபாயம் அதிகமாகவே உண்டு.

English summary
DMK president Karunanidhi never fedup with the defeats in his political life. But DMDK leader Vijayakanth is defeated by the people for the first time with heavy loss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X