• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (10)

|

- ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரியின் நெற்றிப்பரப்பு பெரியதொரு வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உட்பட்டு சுருங்கியது. சில்பாவை கலவரமாய் ஏறிட்டாள்.

" மிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க ?"

சில்பா இறுகிப்போன முகத்தோடு "எஸ்" என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

" புனேவில் இருக்கும் நேஷனல் ஃபாரன்ஸிக் சயின்ஸ் லேப்ரட்ரி இறந்துபோன அந்த அஞ்சு பெண்களோட கருப்பையின் சதை பாகங்களை ஒரு ரசாயன சோதனைக்கு உட்படுத்திப் பார்த்த போது அந்த பெண்கள் எல்லோருமே மூணு மாச கர்ப்பமாய் இருக்கும்போதுதான் இறந்து போயிருக்காங்கன்னு உறுதிபடச் சொன்னதோடு மட்டுமில்லாமே அதை ரிப்போர்ட்டாகவும் எழுதி கொடுத்துட்டாங்க... இந்த ரிப்போர்ட் பற்றின விபரங்களை மீடியாக்களுக்கு தெரியப்படுத்தினா இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிற நபர்கள் உஷாராகிவிடலாம்ங்கிற எண்ணத்துலதான் சி.பி.ஜ. ஒரு ரகசியமான விசாரணைக்கு தயாராகி காய்களை நகர்த்த ஆரம்பிச்சது. அதனோட ஆரம்பம்தான் நான் கோயமுத்தூர் வந்தது"

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 10

திரிபுரசுந்தரி கவலையாய் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு கம்மிப்போன குரலில் பேச ஆரம்பித்தாள்.

" மிஸ் சில்பா.....நீங்க இப்ப சொன்ன இந்த மூணுமாச கர்ப்பம் என்கிற விஷயம் ஏன் ஒரு கோ இன்ஸிடென்டாய் நிகழ்வாய் இருக்கக்கூடாது? ஏன்னா ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நடந்ததுமே அடுத்தது எல்லோரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் அவளோட கர்ப்பத்தைத்தான். அந்த அஞ்சு ஜோடிகளுக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் நடந்ததாலே அடுத்த மூணு மாசத்துக்குள்ளே ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கே ?"
சில்பா குறுக்கிட்டாள்.

" எஸ்..... யூ மே பி கரெக்ட். பட் அந்த அஞ்சு ஜோடிகளும் தற்கொலை செய்துக் கொள்ளவோ இல்லேன்னா கொலை செய்யப்படவோ ஏதோ ஒரு ஒற்றுமையான காரணம் இருக்கணுமே மேடம். அந்தக் காரணம் எதுன்னு நாம கண்டுபிடிச்சுட்டா அதுக்கு காரணமானவங்களை நெருங்கிடலாம் "

சில்பா சொல்லிக்கொண்டிருக்கும் போதே திரிபுரசுந்தரியின் செல்போன் மெலிதான டெஸிபிலில் ரிங்டோனை வெளியிட்டது. போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு லேசான மலர்ச்சியோடு சில்பாவிடம் நிமிர்ந்தாள்.

" நான் சொன்ன அந்த இன்ஃபார்மர் பெண் வளர்மதிதான் லைன்ல இருக்கா "

" ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க மேடம். அந்தப் பெண்ணோட பேச்சு எப்படியிருக்குன்னு நானும் கேட்கிறேன் "

திரிபுரசுந்தரி செல்போனின் ஸ்பீக்கர்க்கு உயிர் கொடுத்துவிட்டு பேசினாள்.

" ஹலோ ..... வளர்மதி"

மறுமுனையில் வளர்மதி கேட்டாள்.

" மேடம்....... நீங்க ஃபீரியாய் இருந்தா பேசலாமா ?"

" ஃபீரிதான். என்ன விஷயம் சொல்லு "

" மேடம் ! அந்த அஞ்சு பேரோட மரணங்களுக்கு காரணமான விஷம் ரிசின் பற்றின விபரங்களை கலெக்ட் பண்ணிட்டேன். காட்டாமணக்கு விதையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிற ஒரு வகை என்சைம்க்கு பேர்தான் ரிசின். இது சுலபமாய் தயாரிக்கக்கூடிய ஒரு மோசமான விஷம். பொதுவாய் கிராமப்பகுதியில் இருக்கிறவங்க தற்கொலை பண்ணிக்க இதுமாதிரியான காட்டாமணக்கு விதைகளை அரைத்து சாப்பிடறதும் உண்டாம் "

" இந்த விபரங்கள் எல்லாம் உனக்கு எப்படி கிடைச்சுது...... ?"

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 10

" மேடம்....... ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்டின் டேக்ஸாலஜி செக்சனில் என்கூட காலேஜ்ல படிச்ச மனோஜ் அங்கே அனலிஸ்டா இருக்கார். நேத்தைக்கு சாயந்தரம் அவரைப் போய்ப் பார்த்தேன். ரிசின் விஷம் பற்றின விபரங்களைக் கேட்டேன். அவர் உடனே அது சம்பந்தப்பட்ட ஒரு ஃபைலை எடுத்துக் கொடுத்து படிக்கச் சொன்னார். படிச்சுப் பார்த்தேன். அதிலிருந்த விஷயங்கள் எல்லாமே பிரமிப்பாவும், படிக்க பயமாவும் இருந்தது "

" டேக்ஸாலஜி டிபார்ட்மெண்டில் இருக்கிற மனோஜை எனக்குத் தெரியும். "நாட் ஃபவுண்ட்"ன்னு நான் ஒரு கொலைக் கேஸோட ஃபைலை க்ளோஸ் பண்ணின பிறகு மனோஜ் கொடுத்த "க்ளூ" வாலே கொலையாளி யார்ங்கிறதை என்னால கண்டுபிடிக்க முடிஞ்சுது. அவர் உன்னோட காலேஜ்மேட்டா ?"

" எஸ் மேடம்...... காலேஜ் டேஸில் இருந்தே எனக்கும் மனோஜூக்கும் சோஷியல் ஆக்டீவிடீஸில் ஆர்வம் அதிகம். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், குழந்தைகள் பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராகவும் ஒரு பெரிய போரட்டத்தையே நடத்தியிருக்கோம். அதுக்காக ஒரு வார ஜெயில் வாசத்தையும் அனுபவிச்சுட்டு வந்திருக்கோம். காலேஜ் படிப்பை முடிச்சதும் ரெண்டு வருஷம் எங்களுக்குள்ளே எந்த ஒரு தொடர்பும் இல்லாமே இருந்தது. அப்புறம் ஒரு நாள் ஏதேச்சையா ஒரு மெடிக்கல் கேம்பில் பார்த்துகிட்டோம். அடிக்கடி செல்போன்ல காண்டாக்ட் பண்ணி பேசிக்குவோம். இந்த ரிசின் விவகாரத்தைப்பத்தி நீங்க சொன்னதும் எனக்கு ஃபாரன்ஸிக் டேக்ஸாலஜியில் வேலை பார்க்கிற மனோஜ் ஞாபகம்தான் வந்தது. போய்ப் பார்த்தேன். அவர் அந்த விஷத்தைப் பற்றின எல்லா விபரங்களையும் எடுத்துக் கொடுத்தார் "

" அவர் எதுக்காக இந்த விபரங்கள்ன்னு கேட்கலையா....?"

" கேட்டார் மேடம்..... நான் கேஸோட முழு விபரத்தையும் சொல்லாமே லேசா கோடிட்டு காட்டிட்டேன். ஒரளவுக்கு அவரும் புரிஞ்சுக்கிட்டார்"

" நோ ப்ராப்ளம் வளர்மதி..... நீ அவர்கிட்டே இந்த கேஸைப்பத்தின எல்லா முழு விபரங்களையும் சொல்லலாம். ஏன்னா மனோஜ் ஒரு ஜென்யூன் பர்ஸன். எந்த ஒரு குற்றவாளியும் சட்டத்தோட பிடியிலிருந்து தப்பிச்சுடக் கூடாதுன்னு நினைக்கிறவர். இந்தக் கேஸை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஷேடோ என்கொயரி பண்ணி ஏதாவது உபயோககரமான தடயங்கள் கிடைச்சா உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க "

" கண்டிப்பாய் மேடம் ..... "

திரிபுரசுந்தரி மேற்கொண்டு பேசும் முன்பு சில்பா குறுக்கிட்டாள். " நான் வளர்மதிகிட்ட ஒரு ரெண்டு வார்த்தை பேசலாமா ?"

"தாராளமாய் பேசலாம் மிஸ் சில்பா. நீங்க பேசினா வளர்மதி ரொம்பவும் சந்தோஷப்படுவா. நீங்க யார் என்கிற விபரத்தை சொல்லிடலாமா ?"

" தாராளமாய் சொல்லலாம்.... அந்த வளர்மதியும், மனோஜூம் உங்க "குட்புக்"ல இருக்காங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன் "

திரிபுரசுந்தரி செல்போனை காதுக்கு ஒற்றி பேச முயல மறுமுனையில் இருந்த வளர்மதி கேட்டாள்.

" மேடம்....... உங்க ரூம்ல வேற யாராவது இருக்காங்களா? அவங்க குரல் கேட்குது. போனை ஸ்பீக்கர்ல போட்டு இருக்கீங்க போலிருக்கு "

" யூ ஆர் கரெக்ட்..... வளர்மதி ! அவங்க யார்ன்னு சொல்றேன். மனோஜ்க்கு மட்டும் தெரிஞ்சா போதும் " என்று ஆரம்பித்தவள் சில்பாவைப் பற்றிய எல்லா விபரங்களையும் இரண்டு நிமிஷ நேர அவகாசத்தில் சொல்லி முடித்துவிட்டு சில்பாவிடம் போனை நீட்டினாள்.

" பேசுங்க சில்பா "

போனை வாங்கிய சில்பா " ஹலோ" என்று குரல் கொடுத்தாள்.

" ஹேவ் ஏ க்ரேட் டே மேடம். நான் வளர்மதி பேசறேன். உங்க மாதிரியான போலீஸ் அஃபிஷியல்ஸ்கிட்டே பேசறதும் பழகறதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் "

சில்பா சிரித்தாள்.

" கமிஷனர் மேடம் உங்களைப்பத்தியும், ஃபாரன்ஸிக் பர்சன் மனோஜ்பற்றியும் ரொம்பவும் உயர்வாய் சொன்னார். நவ் அயாம் இன் ஏ ஹேப்பி மூட். காரணம் சில கேஸ்களில் குற்றவாளிக்களை கண்டுபிடிக்க போலீஸ் டிபார்ட்மெண்ட் என்னதான் முயற்சி பண்ணினாலும் அந்த இன்வெஸ்டிகேஷன்களில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது. உண்மையான குற்றவாளிகள் எந்த திசையில் இருக்காங்க என்பதையும் கண்டுபிடிக்க முடியாது. அதுமாதிரியான கேஸ்களில் உங்களை மாதிரியும், மனோஜ் மாதிரியும் இருக்கிற தேர்ட் பர்சன்ஸ் தனிப்பட்ட முறையில் இன்வெஸ்டிகேட் பண்ணினால்தான் உண்மைகள் வெளியே வரும் "

" நீங்க இப்படி சொல்றதை கேக்கும்போது மனசுக்கு சந்தோஷமாய் இருக்கு மேடம். கோவையில் இருக்கிற மிகப்பெரிய தொழில் அதிபரான ஈஸ்வர் இலவசத் திருமணங்களை நடத்தி வைக்கிறது ரொம்பவும் இயல்பாக தெரிஞ்சாலும், அந்த திருமண ஜோடிகளில் ஒரு ஐந்து ஜோடி இறந்து போனது எனக்கும் மனோஜூக்கும் பெரிய நெருடலை ஏற்படுத்தியிருக்கு. அதுவும் அவங்க ஒரேமாதிரியான விஷத்தை சாப்பிட்டு இறந்து போயிருக்காங்க என்கிற ஒரு விஷயம் அதிர்ச்சிகரமானது "

" இந்த கேஸ்ல இன்னும் சில விஷயங்கள் அதிர்ச்சி தர்ற வகையில் இருக்கிறதை கண்டுபிடிச்சுட்டேன். அது எதுமாதிரியான விஷயங்கள்ன்னு நான் உங்களை நேர்ல பார்க்கும்போது சொல்றேன். பை.... த....... பை இந்த கேஸ்ல நீங்களும் மனோஜூம் எடுக்கப்போகிற அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன ? "

" மேடம்..... இறந்து போன அந்த அஞ்சு பெண்களில் ஒரு பெண் பூங்கோதை. அந்தப் பெண் அரவணைப்பு என்கிற காப்பகத்தில்தான் தங்கியிருந்தா... அந்த காப்பகத்துக்கு போகும்போதெல்லாம் அந்தப் பெண்ணோடு ரெண்டு வார்த்தையாவது பேசுவேன். அவளுக்கு கல்யாணமாயிருச்சுன்னு தெரிஞ்சப்ப ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். ஆனா இறந்துபோன அஞ்சு ஜோடிகளில் அவளும் அவளோட ஹஸ்பெண்டும் ஒரு ஜோடின்னு தெரிஞ்சதும் அப்படியே இடிஞ்சு போயிட்டேன். நானும் மனோஜூம் பூங்கோதையோட மரணத்தில் இருந்துதான் விசாரணையை ஆரம்பிக்கப் போறோம் "

" பூங்கோதையே உயிரோடு இல்லாதபோது விசாரணையை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பீங்க..... வளர்மதி "

" மேடம்..... பூங்கோதையை கல்யாணம் பண்ணிகிட்ட நபர் யார்ங்கிறதை நானும் மனோஜூம் எப்படியோ கண்டுபிடிச்சுட்டோம். அந்த நபரோட பேரு கோலப்பன். பேரூர்க்கு போகிற வழியில் செட்டிகுளம் என்கிற ஏரியாவில் வீடு எடுத்து கோலப்பன் தங்கியிருந்தான். நேத்து அந்த வீட்டுக்கு போனோம். வீடு பூட்டியிருந்தது. வீட்டுக்கு எதிரில் கோலப்பனோட அண்ணன் வீடு இருந்தது. அண்ணனோட பேரு ராஜப்பன். அவர்க்கு மனைவி, குழந்தைன்னு யாரும் இல்லை. ஒண்டிக்கட்டை அவர்கிட்டே பூங்கோதையைப்பற்றியும், கோலப்பனைப்பற்றியும் விசாரிச்சோம். அப்போ அந்த ராஜப்பன் சொன்ன ஒரு விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது மேடம்"

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7, பகுதி 8, பகுதி 9]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X