என் வயலில் உன் மாடு மேய்றதா? மாட்டின் காலை துண்டாக வெட்டி.. தஞ்சையில் நடந்த கொடூரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்த வயலில் மேய்ந்த மாட்டின் காலை வயலின் உரிமையாளர் அரிவாளால் பாதி துண்டாக வெட்டினார். மாடு தற்போது நிற்கக்கூட முடியாமல் உயிருக்கு போராடி வருகிறது.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் , தஞ்சை போலீசில் புகார் அளித்த பின்னரே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளியே தெரிந்துள்ளது. இச்சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர், நகலில் வசித்து வரும் ஆனந்த், இரண்டு காளை மாடுகள் வைத்துள்ளார். அந்த மாடுகளை வைத்த மாட்டு வண்டியும் வைத்து விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது காளை மாடான வண்டி மாடு ஒன்று வீட்டின் அருகில் உள்ள மந்திரி என அழைக்கப்படுபவரின் வயிலில் பயிர்களை மேய்ந்திருக்கிறது.

நடக்க முடியவில்லை
இதை பார்த்த வயலின் உரிமையாளரான மந்திரியின் மைத்துனர் காமராஜ், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் காளை மாட்டின் காலை அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில், மாட்டில் கால் எலும்பு முறிந்து பாதி துண்டான நிலையில் இருந்தது. எழுந்து நடக்க முடியாத நிலையில், வயலில் அப்படியே சாய்ந்து கிடந்தது.

கண்ணீர் விட்டு கதறல்
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் மாட்டின் கால் வெட்டப்பட்டுக் கிடப்பது குறித்து ஆனந்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், பதறித் துடித்தபடி ஓடிவந்து வெட்டுப்பட்டுக் கிடந்த மாட்டைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் ஆனந்த். மாட்டைக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று டாக்டரிடம் காட்டியிருக்கிறார்.

போலீசில் புகார்
மாட்டைப் பரிசோதித்த டாக்டர், `கால் எலும்பு பலமாக சேதமடைந்துவிட்டது. இனி சரி செய்வது கடினம்' எனக் கூறியுள்ளார். தற்போது மாடு எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டு வருகிறது. ஆனந்த தனது மாட்டுக்கு ஏற்பட்ட நிலை குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
வயலில் மாடு மேய்ந்ததற்காக, மாட்டின் காலை வயலின் உரிமையாளர் அரிவாளால் பாதி துண்டாக வெட்டிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாயில்லா ஜீவன்களை இப்படி கொடுமைப்படுத்த எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது என்ற கேள்வி எழுகிறது. மிருகத்தனமான செயலில் ஈடுபட்டவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.