For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதுக்காக இவ்வளவு மூடுமந்திரம் ? .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (11)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

காலை ஒன்பது மணி

வளர்மதியும் ஹரியும் டைனிங் டேபிளில் அருகருகே அமர்ந்து காலை நேர உணவை முடித்துக்கொள்வதில் தீவிரமாய் இருந்த போது ஹரி கேட்டான்.

" உன் ஃப்ரண்ட்டோட சீமந்தம் ஃபங்க்சனுக்கு நீ எத்தனை மணிக்கு போகணும் வளர் ?"

" சாப்ட்டுட்டு உடனே கிளம்ப வேண்டியதுதான். ஃபங்க்சன் பதினோரு மணிக்கு. அவ வீடு தடாகம் ரோட்ல லவ்லி நகர் அவென்யூ. ஒன்பதரை மணிக்குள்ளே புறப்பட்டு போனாத்தான் ஃபங்க்சனுக்கு முன்னாடி போய்ச் சேர முடியும். இன்னிக்கு சண்டே ட்ராஃபிக் அவ்வளவாய் இருக்காது "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 11

" காரை நீயே ட்ரைவ் பண்ணிகிட்டு போயிடுவியா ? "

" போயிடுவேன்.... ஒண்ணும் பிரச்சினையில்லை. மத்தியானம் லஞ்ச் முடிஞ்சதும் உடனே புறப்பட்டு வந்துடுவேன் "

வளர்மதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வளர்மதியின் மாமியார் சிவகாமி ஒரு பெருமூச்சோடு உள்ளே வந்தாள். " இந்த வருஷத்துல நீ மூணு பேரோட சீமந்தத்தை பார்த்துட்டே..... உனக்கு நடக்கப்போகிற சீமந்தத்தை நானும் உன்னோட மாமனாரும் எப்ப பார்க்கறது ? "

வளர்மதி சிரித்தாள்.

" கவலைப்படாதீங்க அத்தே....... அடுத்த வருஷம் பார்த்துடலாம் "

" போன வருஷம் இப்படித்தான் சொன்னே ? "

" அத்தே உங்களுக்கு பேரன் வேணுமா இல்ல பேத்தி வேணுமா ? "

" பேரன்தான் "

" அப்படீன்னா அடுத்த வருஷம் வரைக்கும் நீங்க வெயிட் பண்ணியே ஆகணும். ஏன்னா இந்த வருஷம் எனக்கு குரு திசை முடிஞ்சு சனி திசை ஆரம்பமாகுது. இந்த திசையில் எனக்கு சீமந்தம் நடந்தா ஆண் குழந்தைதான்னு நம்ம உறவுல இருக்கிற ஜோஸ்யர் மாமா ஒருத்தர் சொல்லியிருக்கார் "

சிவகாமியின் முகம் மலர்ந்தது.

" கும்பகோணத்து பரசுராம் மாமா சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன் "

" ஆமா அத்தே அவர்தான்..... ! "

" அவர் அரைகுறை ஜோஸ்யர்தான். இருந்தாலும் அவர் என்ன சொன்னாலும் நடந்துடும் " சிவகாமி சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கிப் போக முன்புற அறையில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்து மாமனார் ராமபத்ரன் உள்ளே எட்டிப் பார்த்து குரல் கொடுத்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 11

" அம்மா..... உன்னோட செல்போனை வைபரேஷன் மோட்ல வெச்சிருப்பே போலிருக்கு. யாரோ கூப்பிடறாங்க போலிருக்கு. ர்ர்ர்ன்னு உறுமிட்டேயிருக்கு வந்து யார்ன்னு பாரும்மா.... "

தட்டில் மீதம் இருந்த அரை இட்லியை சட்னியில் தோய்த்து வாயில் திணித்துக்கொண்டே வளர்மதி வாஷ்பேசினில் கையைக் கழுவிக்கொண்டு வேகவேகமாய் போய் சார்ஜரில் போட்டு வைத்து இருந்த செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

மறுமுனையில் மனோஜ்.

வளர்மதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வீட்டின் முன்புறம் இருந்த சிட்அவுட்டின் மறைவான பகுதியில் போய் நின்று செல்போனை காதுக்கு ஒற்றினாள். தாழ்ந்த ஸ்தாயில் பேச ஆரம்பித்தாள்.

" சொல்லு மனோஜ்?"

" என்ன வீட்லயிருந்து புறப்பட்டியா ?"

" புறப்பட்டுகிட்டே இருக்கேன் "

" வீட்ல என்ன காரணம் சொன்னே ?"

" சீமந்தம்தான் "

" உன்னாலே எப்படி இவ்வளவு தைரியமாய் பொய் சொல்ல முடியுது... ?"

" பழகிடுச்சு "

" எனக்கு உன்கிட்டே பிடிச்சதே இந்த தைரியம்தான் "

பாராட்டு மடல் வாசிக்க இது நேரமில்லை. நீ வீட்லயிருந்து புறப்பட்டியா?"

"புறப்பட்டு நீ சொன்ன மீட்டிங் பாயிண்ட்டை நோக்கி போயிட்டிருக்கேன்"

" டாக்ஸிதானே ?"

" ஆமா....."

" சரி.... அதே பாய்ண்ட்ல வெயிட் பண்ணு. நான் எப்படியும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே வந்துடுவேன்.... "

" லேட் பண்ணிடாதே..... எனக்கு மத்தியானம் வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு.... சீஃப் பாரன்ஸிக் ஆபீஸர் டெல்லியிலிருந்து வர்றார். அவர் வரும்போது நான் சீட்ல இருந்தேயாகணும் ...... "

" புலம்பாதே வந்துடறேன் " வளர்மதி பேச்சை முடித்துக்கொண்டு செல்போனை அணைத்த விநாடி ஹரி டைனிங் அறையிலிருந்து வெளிப்பட்டு அவளை நோக்கி வருவது தெரிந்தது. ஒரு சின்ன சிரிப்போடு கேட்டான்.

" போன்ல யாரு உன்னோட சீமந்தம் ஃப்ரண்டா ?"

" ஆமா.... காலையிலிருந்து மூணாவது போன். வந்துடுவியல்ல.... வந்துடுவியல்லன்னு கேட்டு உயிர் எடுக்கிறா.... சீமந்தம் சம்பந்தமான சடங்குகள் நடக்கும்போது நான் பக்கத்துல இருக்கணுமாம் "

" நியாயம்தானே கிளம்பு..... வளர் ..... "

" இதோ பத்து நிமிஷத்துல ரெடியாயிடுவேன் "

" பட்டுப்புடவைதானே ?"

" பின்னே ?"

" அந்த யெல்லோ கலர் கட்டிக்கோ. எடுப்பாய் இருக்கும் "

வளர்மதி சிரித்தாள்.

" இன்னிக்கு என்னோட சாய்ஸும் அதுதான். ராத்திரியே அந்தச் சேலையை அயர்ன் பண்ணி வெச்சுட்டேன் "

---

வளர்மதி மஞ்சள் பட்டுப்புடவையில் நிரம்பி கார்க்குள் ஏறி உட்கார்ந்த போது நேரம் 9.15

கணவன் ஹரி கார்க்கு வெளியே நின்று கையசைத்தான். " லஞ்ச் சாப்பிட்டதும் உடனே புறப்பட்டு வந்துடு. அரட்டையடிச்சுட்டு உட்கார்ந்துடாதே.

சாயந்தரம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்துல மியூஸிக் கன்சர்ட் இருக்கு. சுபிட்சம் சிங்கர்ஸ் பாட்டுக் கச்சேரி, ரெண்டு காம்பளிமெண்டரி டிக்கெட்ஸ் இருக்கு..... உனக்குத்தான் கர்நாடிக் மியூஸிக் பிடிக்குமே ?

" இதை நீங்க சொல்லணுமா ? மூணு மணிக்கெல்லாம் இங்கே இருப்பேன். போதுமா ? "

வளர்மதி ஒரு புன்னகையோடு சொல்லிக்கொண்டே காரை நகர்த்தினாள்.

அந்த ஞாயிற்றுக்கிழமையின் கோவை நகரத் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் குறைவாய் இருக்க அடுத்த இருபது நிமிஷ நேரத்துக்குள் காந்திபுரத்தின் எல்லைக்குள் நுழைந்து டாடாபாத்தில் இருந்த அந்த சாலையோர பூங்கா அருகே காரை நிறுத்தினாள் வளர்மதி.

ஒரு மேஃப்ளவர் மரத்துக்குக் கீழே நின்றிருந்த மனோஜ் வேகவேகமாய் வந்து கார்க்குள் ஏறிக்கொண்டான். சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டே
"வளர்" என்றான்.

" சொல்லு "

" பட்டுப்புடவை அமர்க்களமாயிருக்கே "

"போடற வேஷத்தை ஒழுங்கா போடணும் இல்லையா ?"

" வீட்டுக்குத் தெரிஞ்சா என்னாகும் என்கிற பயமே உனக்கு இல்லையா?"

" வீட்டைப்பத்தி இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எதுவும் பேசாதே மனோஜ்"

" சரி பேசலை.... இப்ப நாம எங்கே போயிட்டிருக்கோம்.... அதையாவது சொல்லுவியா மாட்டியா ? "

" அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் நீயும் நானும் எங்கே போய் யாரைப் பார்க்கணும் என்கிற விபரத்தை போலீஸ் கமிஷனர் மேடம் திரிபுரசுந்தரி சொன்னாங்க "

" எதுக்காக இவ்வளவு மூடுமந்திரம் ? "

மனோஜ் ! டெல்லியிலிருந்து வந்திருக்கிற சி.பி.ஜ. ஸ்க்ரூட்னைஸிங் ஆபீஸர் சில்பா அந்த அஞ்சு ஜோடிகளோட மர்ம மரணங்களுக்கு பின்னாடி இருக்கிற நபர்களையும், உண்மைகளையும் வெளியே கொண்டு வர்றதுக்காக ஆஃப் த ரிகார்டாய் இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்காங்க. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற பாதிக்கு மேற்பட்ட அதிகாரிகள் சூழ்நிலைக் கைதிகளாய் அரசியல் தலைவர்களின் கைப்பிடியில் இருக்காங்க. ஒரு அரசியல் தலைவர்க்கு வேண்டப்பட்ட எந்த ஒரு நபரும் எப்படிப்பட்ட குற்றத்தை செய்து இருந்தாலும் கைது செய்யப்படாமல் இருக்கிறதுக்கும் இதுதான் காரணம். அந்த அஞ்சு ஜோடி மரணங்களுக்குப் பின்னாடி ஏதோ ஒரு பெரிய விபரீதமான விவகாரம் இருக்குன்னு சி.பி.ஜ.அதிகாரி சில்பாவும், போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் நினைக்கிறாங்க. டிபார்ட்மெண்ட்டோட எதுமாதிரியான நடவடிக்கைகளும் யார்க்கும் ! ெரிஞ்சுடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதை உணர்வுகளோடு எடுக்கப்பட்டு நம்ம உதவி தேவைப்படற நேரங்களில் இலை மறைவாய் காய் மறைவாய் எனக்கு இன்ஃபார்மர் பண்றாங்க. இந்த கேஸ்ல நீயும் இண்ட்ரஸ்ட் காட்றதால நான் அதை உனக்கு கன்வே பண்றேன் "

" சரி..... இப்ப நாம யாரைப் பார்க்கப் போறோம் ?"

" மிஸ்டர் ஸ்டீபன்ராஜ் "

" யார் அவர் ?"

" அவர் யார்ன்னு எனக்கே தெரியாது. கணபதியில் இருக்கிற ஒரு அட்ரஸை கமிஷனர் மேடம் என்னோட வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வெச்சாங்க"

" என்ன அட்ரஸ் ?"

" நெம்பர் 79, தேர்ட் க்ராஸ் சிவானந்தா நகர் "

" இந்த அட்ரஸ் இங்கிருந்து பக்கம்தான். ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே போயிடலாம். ஆனா எனக்கு இப்ப இருக்கிற ஒரே டென்ஷன்... அந்த ஸ்டீபன்ராஜை இப்போ எதுக்காக பார்க்கப் போறோம் என்கிற விஷயம்தான் "

" இதோ பார் மனோஜ், அந்த சி.பி.ஜ.ஆபீஸர் சில்பாவும், கமிஷனர் மேடமும் காரணம் இல்லாமே ஒரு இடத்துக்கு நம்மை போகச் சொல்லமாட்டாங்க. ஸ்டீபன்ராஜ் யார்.... அவர் நம்மகிட்டே எதுமாதிரியான விஷயத்தை ஷேர் பண்ணிக்கப் போறார்ன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும் "

வளர்மதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனோஜின் செல்போன் ரிங்டோனை மெலிதாய் வெளியிட்டது. சட்டைப் பையினின்றும் செல்போனை எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தான்.

மறுமுனையில் அபுபக்கர் காத்திருந்தார். மனோஜ் பதட்டப்படாமல் செல்போனின் டோனை லோ டெஸிபில் அளவில் வைத்துக்கொண்டு காதுக்கு ஒற்றினான்.

" சொல்லுங்க ஸார் "

" வளர்மதியோட காரைத்தான் ஃபாலோ பண்ணிட்டிருக்கேன் "

" ஸார்.... ரிப்போர்ட் இன்னும் தயாராகலை. இன்னும் எப்படியும் ரெண்டு நாளாயிடும் "

" நீ இப்படியே பேசிட்டிரு.... நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடறேன் "

" உங்க அவசரம் புரியுது ஸார்..... ஆனா இது மளிகைக்கடை லிஸ்ட் இல்லை. ஃபாரன்ஸிக் ரிப்போர்ட். ரிப்போர்ட்டை துல்லியமாய் தயாரிக்கணும்ன்னா ரெண்டு நாள் அதிகப்படியாய் வேண்டியிருக்கும்... ரிப்போர்ட் தயாரானதும் நானே உங்களுக்கு போன்ல தகவல் கொடுத்துட்டு மெயில் பண்ணிடறேன் "

" மனோஜ்...... ! வளர்மதியோடு சேர்ந்து இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணும்போது எந்த ஒரு இடத்திலும் டென்ஷனைக் காட்டிக்க வேண்டாம். போன் மியூட் மோடில் இருக்கும்படியாய் பார்த்துக்கோ. ஆடியோ பதிவு பண்ணிடு "

" சரி ஸார்....... " செல்போனை அணைத்தான் மனோஜ். வளர்மதி காரை ஒட்டிக்கொண்டே கேட்டாள்.

" போன்ல யாரு ?"

" ஒரு எஸ்.ஐ. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் எஸ்.ஒ.ஸி. சம்பந்தப்பட்ட சில தடயங்களைக் கொடுத்துட்டு போனார். இன்னிக்கே ரிப்போர்ட் வேணுமாம். எதையுமே எனக்கு துல்லியமாய் பண்ணினால்தான் பிடிக்கும் "

" மனோஜ் "

" சொல்லு "

" எனக்கு உன்கிட்டே பிடிச்சதே இந்த சின்சியாரிட்டிதான். நீ இந்த கேஸில் என்கூட சேர்ந்து இன்வெஸ்டிகேட் பண்றது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா ?"

கார் சிவானந்தா நகர்க்குள் நுழைந்தது.

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7, பகுதி 8, பகுதி 9, பகுதி 10, 11, 12]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X