For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (12)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சிவானந்தா நகர், அண்மையில் போடப்பட்டிருந்த தார்ச்சாலைகளோடும் சாலையின் இருபுறங்களிலும் செழித்து வளர்ந்திருந்த சரக்கொன்றை மரங்களோடும் பார்க்க அழகாய் இருந்தது. அங்கிருந்த ஒரு சிறிய காலி மைதானத்தில் வருங்கால விராட்கோலிகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வளர்மதி காரின் வேகத்தைக் குறைத்து ஒரு மரத்துக்கு கீழ் நின்றிருந்த மொபைல் இஸ்திரி வண்டியோடு தெரிந்த நபரிடம் கேட்டாள்.

”தேர்ட் கிராஸ் ரோடு எந்தப்பக்கம் ? ” பனியன் லுங்கி அணிந்த அந்த நபர் காலி மைதானத்துக்கு அப்பால் கை காட்டியபடி சொன்னான்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 12

” மைதானத்துக்கு அந்தப்பக்கமாய் போயிடுங்கம்மா. ஒரு ரேஷன் கடை வரும். அதையொட்டி உள்ளே போனா மூணாவது குறுக்கு ரோடு ”

வளர்மதி காரை வலது பக்கமாய் திருப்பிக்கொண்டு ஒரு நிமிட பயணத்திற்குள்ளாக ரேஷன் ஒட்டியிருந்த மூன்றாவது தெருவுக்குள் நுழைந்து 79 என்று எண்ணிட்ட அந்தச் சிறிய பங்களாவுக்கு முன்பாய் காரை நிறுத்தினாள்.

” ஏரியா ரொம்பவும் சைலண்டாயிருக்கு ” மனோஜ் சொல்லிக்கொண்டே காரை விட்டு இறங்கினான். சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. பக்கத்து வீட்டில் மட்டும் டி.வி.யை சத்தமாக வைத்து இருந்தார்கள். ஏதோ ஒரு டி.வி. சீரியலில் வில்லி சத்தமாய் சபதம் போட்டுக்கொண்டு இருந்தாள்.

” இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்த்துடறேன்.... அவன் தாலி கட்டறதுக்கு முந்தி ஜெயில்ல இருந்தேயாகணும்.... அந்தக் குடும்பமே நடுத்தெருவுக்கு வரணும்”

வளர்மதி காம்பெளண்ட் கேட்டை நெருங்கி அதைத் தள்ளினாள். கதவு உள்ளே போக பங்களாவின் சிட்அவுட்டில் அந்த இளைஞன் நின்றிருந்தான்.

க்ரீம் நிறத்தில் சட்டையும் பேண்ட்டும் அணிந்து அடர்த்தியான தலைமுடியுடன் மீசை இல்லாத முகத்தோடு ஹிந்திப்பட ஹீரோ மாதிரி தோற்றம் கொடுத்தான். வளர்மதி தயக்கமான குரலில் கேட்டாள்.

”இங்கே மிஸ்டர் ஸ்டீபன்ராஜ் ?”

” நான்தான்....... ! ப்ளீஸ் கம்........ நீங்க வளர்மதி.... இவர் மனோஜ். ஏம்.......ஐ...... கரெக்ட் ?”

” எஸ் ”

” உங்க ரெண்டு பேர்க்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். வாங்க..... உள்ளே போலாம். யூ.ஆர்..... மோஸ்ட் வெல்கம் ”

அந்த ஸ்டீபன்ராஜ் ஒரு புன்னகையோடு பேசிக்கொண்டே பங்களாவின் உட்புறத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட, வளர்மதியும், மனோஜூம் தொடர்ந்தார்கள். அந்த நீண்ட ஹாலைக் கடந்து கடைசியில் இருந்த அறைக்குள் ஸ்டீபன்ராஜ் நுழைந்தான்.

அவனைப் பின்தொடர்ந்து குழப்பத்தோடும், தயக்கத்தோடும் இருவரும் அந்த அறைக்குள் நுழைய, போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும், சி.பி.ஜ. ஆபீஸர் சில்பாவும் அறையின் மையத்தில் போடப்பட்டிருந்த பெரிய சோபா ஒன்றில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்திருந்தார்கள்.

வளர்மதியும், மனோஜூம் திகைத்துப் போனவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

திரிபுரசுந்தரி சிரித்துக்கொண்டே தனக்கு எதிரே இருந்த சோபாவை காட்ட இருவரும் உட்கார்ந்தார்கள்.

” என்ன வளர்மதி..... ! நானும் மிஸ் சில்பாவும் இங்கே இருப்போம்ன்னு நீங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்கலை போலிருக்கு ! ”

” ஆமா மேடம்...... நிஜமாகவே எங்களுக்கு இது ஒரு சர்ப்ரைஸான விஷயம்தான் ”

” அந்த அஞ்சு ஜோடி மரணங்களுக்குப் பின்னாடி இருக்கிற எல்லா உண்மைகளும் வெளியே வந்து குற்றவாளிகள் பிடிபடுகிறவரைக்கும் இதுமாதிரியான சர்ப்ரைஸ் நிகழ்வுகளை நீங்க ரெண்டு பேருமே பார்க்க வேண்டியிருக்கும் ”

மனோஜ் தன்னுடைய மனக்கலக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் பேசினான்.

” மேடம்..... நீங்க ரெண்டு பேரும் எங்க மேலே வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு நாங்க எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை.... ”

சில்பா மெல்லச் சிரித்தாள்.

” மிஸ்டர் மனோஜ் ! நன்றி சொல்ல வேண்டியவங்க நீங்க இல்லை நாங்கதான். வளர்மதி ஒரு ஹவுஸ் ஒய்ஃப். அவங்க வீட்டுக்குத் தெரியாமே விதவிதமான பொய்களை சமயத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லி வெளியே வந்து இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு வர்றாங்க. அதேமாதிரி நீங்களும் ஃபாரன்ஸிக்கில் வேலை பார்த்தாலும் இந்த கேஸில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படணும் என்கிற ஆர்வத்துல வளர்மதியோடு சேர்ந்து புலனாய்வு பண்ணிட்டு இருக்கீங்க. நானும் கமிஷனர் மேடமும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பொறுப்பான பதவிகளில் இருந்தாலும் சுதந்திரமாய் செயல்படமுடியாத காரணத்தால்தான் உங்க ரெண்டு பேரையும் இந்த கேஸில் ஆஃப் த ரிக்கார்ட்டாய் இன்வால்வ் பண்ண வெச்சிருக்கோம்”

வளர்மதி குறுக்கிட்டாள்.

” இட்ஸ் ஒ.கே மேடம்....... நாங்க இப்ப எதுக்காக இங்கே வரவழைக்கப்பட்டிருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கலாமா ? ”

ஷ்யூர் என்று புன்னகை செய்த திரிபுரசுந்தரி பேச்சைத் தொடர்ந்தாள்.

” ஸ்டீபன்ராஜ் பேரை இதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் எந்த சந்தர்ப்பத்திலாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா ? ”

” இல்ல மேடம் ”

” ஸ்டீபன்ராஜ் மாதிரியான திறமையான இளைஞர்கள் மண்ணுக்குள்ளே மறைஞ்சு கிடக்கிற வைரங்கள் மாதிரி இந்த சமுதாயத்தில் இருக்காங்க. இவர் எது மாதிரியான விஷயங்களை ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கார்ன்னு உங்களுக்கு தெரிஞ்சா நீங்க ஆச்சர்யப்படுவீங்க ”

” மிஸ்டர் ஸ்டீபன்ராஜ் ஒரு ஜெனிடிக்சிஸ்ட். எம்.எஸ்.ஸி ஜெனிடிக்ஸ் முடிச்சுட்டு வேலைக்கு போக விரும்பாமே ஜெனிடிக்ஸ்ட் சம்பந்தப்பட்ட சில அரிய விஷயங்களை ஆய்வு பண்ணிட்டிருக்கார். அதுல ஒரு ஆய்வுதான் இன்பார்ன் எர்ரர்ஸ் ஆஃப் மெட்டபாஸிஸம் (INBORN ERRORS OF METABOLISM) ”

ஸ்டீபன்ராஜ் ஒரு சின்ன சிரிப்போடு குறுக்கிட்டான்.

” மேடம் ! வளர்மதியும், மனோஜூம் ஏற்கனவே குழம்பிப் போய் வந்து இருக்காங்க. எனக்குப் பாராட்டு மடல் வாசிக்கிறதை விட்டுட்டு நேரா விஷயத்துக்கு வாங்க ”

திரிபுரசுந்தரி கையமர்த்தினாள்.

” இது பாராட்டு மடல் இல்லை ஸ்டீபன். நீங்க யார்ங்கிறதை இவங்க புரிஞ்சுக்கிட்டாத்தான் அந்த 5 ஜோடி கொலைக்கேஸை சுலபமாய் புலனாய்வு செய்ய முடியும்” என்று சொன்னவள் மறுபடியும் வளர்மதி, மனோஜை ஏறிட்டாள்.

” ரெண்டு வருஷத்துக்கு முந்தி புனேயில் ஒரு மெடிகல் செமினார் நடந்தது. அந்த செமினார் நடத்தப்பட்டதுக்கான முக்கியமான காரணம் மஹாராஷ்ட்ராவில் பிறந்த குழந்தைகளோட இறப்பு விகிதம் அதிகமாய் இருந்ததுதான். மத்திய சுகாதார துறை அமைச்சகம் இந்த விஷயத்துல தனிப்பட்ட கவனம் எடுத்துகிட்டு அந்த செமினார்க்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அதுல நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகளும் கலந்துகிட்டாங்க. அதுல நானும் ஒருத்தி. அந்த செமினார்லதான் நான் ஸ்டீபன்ராஜை சந்திச்சேன். ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திகிட்டோம். செமினார் ரெண்டு நாள் நடந்தது. அதுல பேசினவங்க எல்லாருமே பெரிய பெரிய டாக்டர்ஸ், மெடிக்கல் சயின்டிஸ்ட்ஸ். பிறந்த குழந்தைகளோட இறப்பு விகிதத்துக்கு காரணம் மருத்துவ நிர்வாகத்தின் கவனக்குறைவு. கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் வீரியம் இல்லாத மருத்துவ வகைகள்தான்னு பேசிட்டு இருந்தாங்க. ஆனா ஸ்டீபன்ராஜ் மட்டும்தான் பிறந்த குழந்தைகள் சில மணி நேரங்களில் இறந்துபோகக் காரணம் இன்பார்ன் எர்ரர்ஸ் ஆஃப் மெட்டபாஸிஸம் என்கிற ஆர்ட்டிகளைப் படிச்சு செமினார்க்கு வந்து இருந்த அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தினார். குழந்தைகளோட இறப்பு விகிதத்தை எப்படி குறைக்கலாம்ங்கிறதை மருத்துவ ரீதியாய் சில யோசனைகளையும் சொன்னார். அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்திய பிறகுதான் பிறக்கும் குழந்தைகளோட இறப்பு விகிதம் படிப்படியாய் குறைய ஆரம்பித்தது”

மனோஜ் குறுக்கிட்டான்.

” ஒ.கே மேடம்...... இப்ப நீங்க சொன்ன விஷயத்துக்கும் நாங்க இங்கே வந்ததுக்கும் என்ன சம்பந்தம் ?”

”சம்பந்தம் இருக்கு மனோஜ். ரெண்டு நாளைக்கு முன்னாடி அரவணைப்பு இல்லத்தைச் சேர்ந்த பூங்கோதையும், அவளுடைய கணவன் கோலப்பனும் எப்படி இறந்தாங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக பேரூர்க்குப் பக்கத்துல அவங்க குடியிருந்த வீட்டுக்கு நீங்களும் வளர்மதியும் போனீங்க இல்லையா ?”

” ஆமா ”

” அங்கே யாரைப் பார்த்தீங்க ?”

” கோலப்பனும் பூங்கோதையும் குடியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஆனா அந்த வீட்டுக்கு எதிர் வீட்ல இருந்த கோலப்பனோட அண்ணன் ராஜப்பனைப் பார்த்தோம் ”

அந்த ராஜப்பன் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சியாய் இருந்ததுன்னு சொன்னீங்க இல்லையா ?”

” ஆமா மேடம் ”

” அது என்ன மாதிரி அதிர்ச்சி விஷயம். மறுபடியும் சொல்ல முடியுமா?”

” கோலப்பன் பள்ளிக்கூட படிப்பைக்கூட தாண்டாதவன். ஆனா பூங்கோதையை கல்யாணம் பண்ணிகிட்டு வந்த பிறகு அவன்கிட்டே சில மாற்றங்கள் தெரிஞ்சுது. நீட்டா ட்ரஸ் பண்ணி அடிக்கடி வெளியூர் போய்ட்டு வந்தான். ஒரு தடவை மும்பைக்கு ஃப்ளைட்ல போய்ட்டு வந்திருக்கான். அப்புறம் ஒருதடவை ராஜப்பன் கோலப்பன் வீட்டுக்கு ஏதேச்சையா போனபோது அவன் வீட்டுக்கு பின்புறத்துல இருக்கிற ஒரு மரத்துக்கு கீழே நின்னுகிட்டு செல்போன்ல யார் கூடவோ நல்ல இங்கிலீஷ்ல பேசிட்டு இருந்திருக்கான்”

” யூ ஆர் கரெக்ட் வளர்மதி..... ஆனா இப்ப நீ சொன்ன எல்லா அதிர்ச்சிகரமான விஷயங்களையும் தாண்டி கோலப்பன்கிட்டே இன்னொரு விபரீதமான விஷயமும் இருந்திருக்கு ”

” என்ன மேடம் சொல்றீங்க ?”

திரிபுரசுந்தரி தன்னிடம் இருந்த பெரிய கைப்பையைத் திறந்து இரண்டு கனமான ஆங்கில புத்தகங்களை எடுத்து வைத்தாள். மனோஜூம், வளர்மதியும் குழப்பமாய் பார்க்க இப்போது சில்பா பேச ஆரம்பித்தாள்.

” அந்த ரெண்டு புத்தகங்களோட தலைப்புகளை கொஞ்சம் பலமா படிங்க”

வளர்மதி அந்த இரண்டு புத்தகங்களையும் கையில் எடுத்து தலைப்புகளை பார்த்தாள். வாய்விட்டு படித்தாள்.

” தி ஷெல்ஃபிஷ் ஜீன் (THE SELFISH GENE) தி ப்ளைண்ட் வாட்சி மேக்கர் ஜீன் (THE BLIND WATCH MAKER GENE) ”

சில்பா சொன்னாள்.

” இப்ப நீங்க சொன்ன ரெண்டு ஜீன் சம்பந்தப்பட்ட புகழ் பெற்ற ஆங்கில புத்தகங்களைதான் சாவதற்கு ரெண்டு நாள் முன்பு வரை படிச்சுட்டு இருந்திருக்கான் கோலப்பன்...... ” சில்பா சொல்லச் சொல்ல –

வளர்மதியின் ஒட்டுமொத்த இருதயப்பிரதேசமும் கலவர பூமியாய் மாறியது.

[ பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12], 13 ]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X