• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"நோ.. மிஸ்டர் மனோஜ்".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)

|

-ராஜேஷ்குமார்

வளர்மதி தன் நெற்றிப்பரப்பில் வியர்த்துவிட்ட வியர்வையுடன் சில்பாவை ஏறிட்டாள்.

” மேடம்...... இந்த ஜீன் சம்பந்தப்பட்ட ரெண்டு புத்தகங்களும் கோலப்பன் தான் சாவதற்கு ரெண்டு நாளைக்கு முன்பு வரை இந்தப் புத்தகங்களைத்தான்

படிச்சுட்டிருந்தான் என்கிற விபரமும் உங்களுக்கு எப்படி கிடைச்சுது ? ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 13

சில்பா மென்மையாய் புன்முறுவலித்து விட்டு சொன்னாள்.

” ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்களும் மனோஜூம் கோலப்பன் வீட்டைத் தேடிட்டு போனபோது கோலப்பனோட அண்ணன் ராஜப்பன் தன்னோட தம்பியைப் பத்தி ஒரு சில விபரங்களை மட்டும்தான் சொல்லியிருக்கான். ஆனா ராஜப்பன் பல விஷயங்களை மறைச்சிருக்கலாம்ன்னு எனக்கும் கமிஷனர் மேடத்தோட மனசுக்கும் பட்டது. நேத்து ராத்திரி பத்து மணிக்கு மேல் மஃப்டி டிரஸ்ல நாங்க ரெண்டு பேரும் ராஜப்பனை போய்ப் பார்த்தோம். கோலப்பனைப்பத்தி விசாரிச்சோம். வந்து இருக்கிறது போலீஸ்தான்னு தெரிஞ்சுகிட்ட ராஜப்பன் நாங்க கேட்ட கேள்விக்கெல்லாம் சரியான பதிலை பதிலை சொன்னதோடு மட்டும் இல்லாமல் கோலப்பன், பூங்கோதை மரணங்களுக்குப் பின்னாடி இருக்கிற எல்லா உண்மைகளும் வெளியே வரணும்ன்னுக்கிறதுக்காக நல்ல ஒத்துழைப்பும் கொடுத்தான். அவன்தான் பூட்டியிருந்த கோலப்பன் வீட்டைத் திறந்து இந்த புத்தகங்களையும் எடுத்துக் கொடுத்தான். பள்ளிக்கூட படிப்பையே முடிக்காத கோலப்பனால் இந்த ஆங்கில புத்தகங்களை எப்படி படிக்க முடிஞ்சுதுங்கிறதுதான் எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆச்சர்யம் ”

மனோஜ் உள்ளுக்குள் கலவரமாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சில்பாவை ஏறிட்டான்.

” மேடம்...... ! இந்த பூங்கோதை கோலப்பன் கேஸை கடந்த ரெண்டு மூணுநாளாய்த்தான் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருக்கோம். இந்த குறுகிய காலத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய விபரீதங்கள் இதுக்குள்ளே இருக்குங்கிற உண்மை எனக்கும் வளர்மதிக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாய் இருக்கு. மேற்கொண்டு இந்த கேஸை நாங்க இன்வெஸ்டிகேட் பண்றதைக் காட்டிலும் போலீஸ்துறையில் இருக்கிற ஒரு சிறப்பு புலனாய்வுதுறை விசாரிக்கிறதுதான் பொருத்தமாய் இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன் ”

திரிபுரசுந்தரி கையமர்த்தினாள்.

” நோ ...... மிஸ்டர் மனோஜ். இது ஒரு ”பயோ ஹைடெக் க்ரைம்” போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற சில பேர்க்குத் தெரியாமே இந்த சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ண ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை எவ்வளவு ரகசியமாய் நியமித்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்தக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்கிற முழு விபரமும் அந்த கறுப்பு ஆடுகளுக்குப் போய்விடும். பணம் உலகத்தில் இருக்கும் எந்த ஒரு மொழியையும் பேசிவிடும் என்பதால் நியமிக்கப்படும் ரகசிய புலனாய்வு குழு ஒரு கண்துடைப்பு விசாரணையை நம்முடைய கண்ணுக்கு முன்பாகவே நடத்திக்கொண்டிருக்கும். ஸோ இந்த இன்வெஸ்டிகேஷனை மேற்கொண்டு நடத்தி குற்றவாளிகளை இனம் கண்டுபிடிக்க வேண்டியது உங்க கடமை... பை...த..... பை உங்களுக்கு இதுல ஏதாவது பிரச்சினை இருக்கா மிஸ்டர் மனோஜ் ? ”

” நோ மேடம்........ இது மாதிரியான சவாலான கேஸ்களை மீட் பண்ணவும் சேஸ் பண்ணவும் எனக்குப் பிடிக்கும். ஆனா வளர்மதிதான் இந்த விஷயத்துல யோசிச்சு ஒரு முடிவு எடுக்கணும். ஏன்னா எனக்கு ஃபேமிலி கிடையாது. வளர்மதிக்கு அப்படியில்லை. ஹஸ்பெண்ட், மாமியார் மாமனார்ன்னு ஒரு அழகான குடும்பம் இருக்கு. வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மர் என்கிற விஷயம் அவங்க யார்க்கும் தெரியாது. அந்த உண்மை அவங்களுக்கு தெரிய வரும்போது வளர்மதியோட எதிர்கால வாழ்க்கையே தடம் புரண்டு போக வாய்ப்பு இருக்கு. அதுவுமில்லாமே..... ”

மனோஜ் மேற்கொண்டு பேசும்முன்பு அவனுடைய பின்னந்தலையில் செல்லமாய் தட்டிவிட்டு பேச ஆரம்பித்தாள்.

” என்ன மனோஜ்..... செண்டிமெண்டாய் பேசி என்னை இந்த கேஸிலிருந்து கழட்டிவிடப் பார்க்கிறியா..... ? என்னோட ஃபேமிலிக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது அதை எப்படி ஃபேஸ் பண்ணி சால்வ் பண்றதுன்னு எனக்குத் தெரியும். அதுவுமில்லாமே இன்னொரு விஷயம் இந்த பூங்கோதை கோலப்பன் கேஸ்ல உன்னை இன்வால்வ் பண்ண வெச்சதே நான்தான். அதை மறந்துடாதே!”

” ஸாரி .... வளர்...... இந்த கேஸ் இப்போ ஒரு விபரீதத்தை நோக்கி போயிட்டு இருக்கிறதாலத்தான் சொன்னேன். நாளைக்கு ஏதாவது வேண்டாத சம்பவம் நடந்துடுச்சுன்னா அதுக்கான பொறுப்பை நானும் ஏத்துக்கணும் இல்லையா ....... ? ”

” வேண்டாத சம்பவம்ன்னா என்ன ? யாராவது என்னை கொலை பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறியா ? ”

மனோஜ் மேற்கொண்டு பேசும் முன்பு திரிபுரசுந்தரி ஒரு சிரிப்போடு இருவரையும் கையமர்த்தினாள்.

” இதோ பார் மனோஜ்..... நீங்க வளர்மதியை வார்ன் பண்றது தப்புன்னு சொல்ல மாட்டேன். நீங்க பேசின விஷயத்தையே நான் பல தடவை வளர்மதிகிட்டே பேசிக் களைச்சு போயிட்டேன். ஷி ஈஸ் வெரி அடமண்ட். அந்த அடமண்ட் எனக்குப் பிடிச்சிருக்கு. அதை அடமண்ட்ன்னு சொல்றதுகூட தப்பு. ஒரு தார்மீக தைரியம்ன்னு சொல்லணும்..... கணவர்க்கும் ஃபேமிலி மெம்பர்ஸூக்கும் தெரியாமே இப்படிப்பட்ட அபாயகரமான இன்வெஸ்டிகேஷனில் ஈடுபடறது தப்புதான். ஆனா அது கண்டிக்ககூடிய அளவுக்கு ஒரு தப்பான விஷயம் இல்லை..... நாளைக்கு இந்த விஷயம் தெரிய வந்தா வளர்மதியோட ஃபேமிலி மெம்பர்ஸை சமாதானப்படுத்தக்கூடிய கமிட்டியில் நானும் இருப்பேன் ”

மனோஜ் செயற்கையாய் சிரித்து வைத்தான்.

” தென் நோ ப்ராப்ளம் மேடம்..... நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்றோம். இது எதுமாதிரியான விபரீதம், இதுக்குப் பின்னாடி யார் யார் இருக்காங்க என்கிற எல்லா விபரங்களையும் வெளியே கொண்டு வர்றோம் ”

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் சற்று தள்ளி நின்றிருந்த ஸ்டீபன்ராஜ் சில அடிகள் முன்னால் வந்து மனோஜ்க்கு முன்பாய் நின்றான்.

” மிஸ்டர் மனோஜ்.... நீங்க ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல ஒரு ”கீ ” போஸ்ட் ஆபீஸர். உங்களுக்கு இந்த கேஸைப்பத்தி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இது ஒரு ”பயோ ஹைடெக் க்ரைம்” என்கிற விஷயம் நூறு பர்சென்ட் கன்ஃபார்ம். படிப்பறிவு இல்லாத கோலப்பன் இங்கிலீஷ் பேசியிருக்கான். ” தி ஷெல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச் மேக்கர் ஜீன் என்கிற ரெண்டு பிரபலமான ஜீன் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிச்சிருக்கான். இந்த கேஸில் நாம் கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? ”

” என்ன ஸார் ? ”

” ஈஸ்வர் கல்யாணம் பண்ணி வெச்ச ஜோடிகளில் பலியான அஞ்சு ஜோடிகளில் ஒரு ஜோடிதான் கோலப்பன் பூங்கோதை ஜோடி. மீதி நாலு ஜோடி யார் யார்ன்னு தெரியுமா ? ”

” தெரியும் ஸார் ”

” யார் யார்ன்னு சொல்லுங்க ”

” ரெண்டு ஜோடி திருப்பூரைச் சேர்ந்தவங்க பேரு பத்மநாபன் கமலா, சாரதி, மீனா மற்ற ரெண்டு ஜோடி பொள்ளாச்சியை சேர்ந்தவங்க வைசாலி, சிவகுமார், சந்திரா, இளங்கோ ”

” அவங்க அட்ரஸையெல்லாம் நோட் பண்ணிட்டீங்களா ? ”

” கமிஷனர் மேடம் கொடுத்தாங்க ஸார். நாளைக்கு நானும் வளர்மதியும் திருப்பூர் முதல்கட்ட விசாரணையை ஆரம்பிக்கப் போறோம். அப்புறம் பொள்ளாச்சி ”

” இந்த விசாரணையின் போது நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும் எச்சரிக்கையாய் செயல்படணும். குற்றவாளிகள் இந்த விசாரணையை ஒரு சதவீதம் மோப்பம் பிடிச்சுட்டாக்கூட போதும். நீங்க போக வேண்டிய எல்லா வழிகளையும் அடைச்சுடுவாங்க..... இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனா உங்க உயிருக்குக்கூட ஆபத்து வரலாம் ”

மனோஜ் மெல்ல சிரித்தான். ” ஸார், நீங்க சொன்ன இந்த ரெண்டு விஷயமும் எங்களுக்கு பாலபாடம் இதுல எவ்வளவு ரிஸ்க் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும். யூ டோண்ட் வொர்ரி ஸார். இன்னும் வாரம் பத்து நாளைக்குள்ளே இந்த விபரீதத்துக்கான ஆணிவேர் இலவச திருமணங்களை நடத்தி வெச்ச ஈஸ்வரா இல்லை வேற யாராவதான்னு எப்படியும் கண்டுபிடிச்சுடுவோம் ..... ”

சில்பா குறுக்கிட்டாள் ”இன்னொரு விஷயம் ? ”

” என்ன மேடம்.... ? ”

” இந்த பயோ டெக் குற்றத்தில் ஈஸ்வர் ஒருத்தர் மட்டுமே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு இல்லை. அவர்கூட இன்னும் பலர் இருக்க வாய்ப்பு அதிகம். மே....பி.... ஒரு க்ரூப்பே இருக்கலாம் ”

மனோஜ் மனசுக்குள் திடுக்கிட்டுப் போனவனாய் சில விநாடிகள் மெளனம் சாதித்தான். நெற்றி வியர்ப்பது அவனுக்கே தெரிந்தது. ”இவர்கள் எல்லாவற்றையுமே ஒரளவு கணித்துக் கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ”

” உச்சபட்ச ஜாக்கிரதை அவசியம் ”

” ஈஸ்வரையும், அபுபக்கரையும் கொஞ்ச நாளைக்காவது சந்திக்காமல் இருப்பது உத்தமம்”

திரிபுரசுந்தரி மெல்ல சிரித்தாள்.

” என்ன மனோஜ் .....பேச்சையே காணோம். பயம் வருதா....... ? ”

” இது பயமில்லை.... மேடம்...... ! எப்படி செயல்பட்டா எதிரிகளைப் போயி தொடமுடியும் என்கிற யோசனைதான் ”

வளர்மதி ஆமோதிப்பாய் தலையாட்டினாள். ” எஸ்.....மேடம் .... காலேஜ் டேஸிலிருந்து நான் மனோஜை கவனிச்சுட்டு வர்றேன். எந்த பிரச்சினையைக் கையாண்டாலும் அந்தப் பிரச்சினையை ஜெயிக்கக்கூடிய அளவுக்கு மனோஜ்கிட்டே ஒரு அறிவுபூர்வமான ப்ளானிங் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ப்ளானிங்கைத்தான் இந்த இன்வெஸ்டிகேஷனிலும் மனோஜ் பயன்படுத்துவார் ”

”தட்ஸ் குட்.... நீங்க ரெண்டு பேரும் எப்போ திருப்பூர் புறப்பட்டு போறீங்க ?”

” நாளைக்கே மேடம் ”

” உனக்கு ஆபீஸ்ல எப்படி லீவு கிடைக்கும் ? ”

” நாளைக்கு ஆபீஸ் லீவு மேடம் ”

” எதுக்காக லீவு ...... ? ”

” ஆபீஸோட ஃபவுண்டர்ஸ் டே ....... ”

” சரி.... வீட்ல என்ன காரணம் சொல்லுவே ? ”

” கைவசம் ஆயிரம் காரணம் இருக்கு மேடம். ஏதாவது ஒரு பொருத்தமான காரணத்தை சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதான் ” வளர்மதி சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க மனோஜ் மட்டும் இறுகிப்போன முகத்தோடு தன்னுடைய உதட்டுக்கு செயற்கையாய் ஒரு சிரிப்பைக் கொடுத்தான்.

-----

இரவு பத்து மணி

தன்னுடைய தோழி நர்மதாவின் வீட்டில் தங்கியிருந்த சில்பா படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இனி தூங்கலாம் என்று படுக்கத் தயாரானபோது அவளுடைய செல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்து கூப்பிட்டது. அழைப்பது யார் என்று பார்த்தாள்.

சி.பி.ஐ. சீஃப் ஆபீஸர் வைத்யா கூப்பிட்டுக்கொண்டிருந்தார். செல்போனின் ஹேண்ட் செட்டை தன் காதுக்கு கொடுத்தாள்.

” ஸார் ? ”

” எப்படியிருக்கே சில்பா..... அந்த அஞ்சு ஜோடி மர்டர் கேஸ்ல எனி ப்ராக்ரஸ் ? ”

” கொலைக்கான மோட்டிவேஷனை ஒரளவு நெருங்கிட்டேன் ஸார் ”

” எனக்குத் தெரியும் ”

” எப்படி ஸார் ? ”

” நான் இப்போ கோயமுத்தூர்லதான் இருக்கேன். சர்க்யூட் ஹவுஸ்ல ஸ்டே பண்ணியிருக்கேன். எனக்கு சாயந்தரம் ஒரு முக்கியமான தகவல் கிடைச்சுது. அந்தத் தகவல் உண்மையா இல்லையான்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிறதுக்காக உடனடியாய் ஃப்ளைட் பிடிச்சு கோவை வந்துட்டேன்”

” அப்படியென்ன முக்கியமான விஷயம் ஸார் ? ”

” நீ இப்போ உன்னோட ஃப்ரண்ட் நர்மதாவோட வீட்லதானே ஸ்டே பண்ணியிருக்கே ? ”

” ஆமா ஸார் ”

” அட்ரஸை வாட்ஸ் அப் பண்ணு. நான் வந்து பார்க்கிறேன் ”

” நீங்க வந்து பார்க்கறீங்களா ..... ? வேண்டாம் ஸார்.....நான் வர்றேன். சர்க்யூட் ஹவுஸ்லதானே இருக்கீங்க... இங்கிருந்து பத்து நிமிஷ ட்ரைவிங்தான். என் ஃப்ரண்ட் நர்மதாவோட காரை எடுத்துட்டு வந்துடறேன் ஸார்......... ”

” பார்த்து வாம்மா ”

” எஸ்...... ஸார் ” செல்போனை அணைத்துக்கொண்டே எழுந்தாள் சில்பா.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12], 13 ]

(தொடரும்)

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X