For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிங்கம் காண்போம் - பகுதி 73 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

விடிகாலையிலேயே எழுந்துவிட்டோம். குளித்து முடித்து பளிச்சென்று அணியமானோம். இந்நெடும்பயணத்தில் இன்று புவனேசுவரத்தில் கழிக்கும் கடைசி நாள் என்று நினைத்துக்கொண்டேன். இனியொரு நாள் இம்மண்ணில் களித்துச் சுற்றுமாறு அமையுமோ, அமையாதோ தெரியவில்லை. ஆனால், சுற்றியவரைக்கும் காணற்கரிய பற்பலவற்றைக் கண்டுவிட்டோம்.

பயணத்தின் கடைசி நாள் பார்க்க வேண்டியவற்றின் பட்டியல் இதுவரை கண்டவற்றுக்கு முத்தாய்ப்பாக அமைய வேண்டுமே. அதனாற்றான் புவனேசுவரத்தின் அரும்பெரும் கோவில்களையும் வரலாற்றுத் தொல்லிடங்களையும் இறுதிநாளில் கண்டு மகிழ்வது என்று ஒத்தி வைத்திருந்தோம். அதன்படி விடியல் பரபரப்பு தொடங்கும் முன்னேயே விடுதியறையை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தாயிற்று.

exploring kalingam odissa part 73

இறைவனைக் காணச் செல்கையில் காலந்தாழ்த்தலாகாது. காலை வேளையில் ஒரு தானிழுனியை அமர்த்திக்கொண்டு இலிங்கராஜா கோவில் பகுதியை அடைந்தோம். அந்தக் கோவிலை அடைகின்றோம் என்னும்போதே அத்தெருமலர்ச்சி தென்படுகின்றது. புவனேசுவரத்தில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பசுக்கள் சுற்றித் திரிகின்றன. உண்பதற்குக் குறைவின்றிக் கிடைப்பதால் அவை குண்டுருவங்களாக நிற்கின்றன. மக்களைக் கண்டு கண்டு மகிழ்ந்தவை என்பதால் உரசிச் சென்றாலோ ஒட்டிமுட்டிச் சென்றாலோ அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை. அமைதி பொங்கும் பார்வையால் நம்மை ஏற்று அருள்கின்றன. அஃறிணையின் பார்வையை எப்போதும் எதிர்கொள்ளுங்கள். அதில் உயிர்ப்பின் கண்ணாடிக்குளம் ததும்பிக்கொண்டே இருக்கும். என்னால் ஓர் அஃறிணையோடு உரையாட முடியும். என் உணர்வுகளை எடுத்துக் கூற இயலும். அதனை வயப்படுத்தி அதன் அன்பின் சிறு திவலையை என்மீது தெளித்துக்கொள்ளத் தெரியும். இலிங்கராஜா கோவில் மாடுகளுக்கு என்னைத் தெரிந்திருந்தது. உரக்கக் கேட்கும் மூச்சொலியால் என்னை அவை வாழ்த்தி மகிழ்ந்தன.

புவனேசுவரத்திற்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த ஒடிய மாநிலத்திற்கும் தலைமைத் தகைமையுடைய கோவில் இலிங்கராஜா கோவில்தான். கொனாரக்குக் கோவில் அதன் சிற்பப்பேரழகுக்காகவும், ஜகந்நாதர் கோவில் அதன் விழாப்பெருமைக்காகவும் புகழ்பெற்றது எனில் இலிங்கராஜா கோவில் அதன் வரலாற்றுத் தொன்மைக்காகப் புகழ்பெற்றது.

exploring kalingam odissa part 73

ஆயிரமாண்டுப் பழைமையுடைய அக்கோவிலை இதற்கு முன்பே எங்கேனும் பார்த்திருக்கிறோமா என்று நினைத்துப் பார்த்தேன். ஏனென்றால் எவ்வொரு கோவிலும் ஏதேனுமொரு தமிழ்த் திரைப்படப்பாடலில் இடம்பெற்றுவிடும். இலிங்கராஜா கோவிலும் அப்படியொரு திரைப்படப் பாடலில் இடம்பெற்றிருக்கிறது. விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி என்ற திரைப்படத்தில் இடம்பெறும் “செங்குருவி செங்குருவி” என்ற பாடலில் பல்லவியின் முதலிலும் பாடலின் இறுதியிலும் காட்டப்படுவது இலிங்கராஜா கோவில்தான். இருபதாண்டுகளுக்கு முன்னேயே நாம் இலிங்கராஜா கோவிலைத் திரையில் கண்டிருக்கிறோம். ஆனால், அதுதான் இலிங்கராஜா கோவில் என்பது நமக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருமூர்த்தி திரைப்படத்தில் அந்தச் 'செங்குருவி’ பாடலில் புவனேசுவரத்தின் புகழ்பெற்ற பல கோவில்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இராஜா இராணி கோவில், முக்தேசுவரர் கோவில் ஆகியனவும் அப்பாடல் காட்சியில் வருகின்றன. அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடலான 'மஞ்சள் நிலாவின் இரவில் திருமூர்த்தியைப் பார்த்தேன்’ என்ற பாடல் முழுவதும் கொனாரக் கோவிலில் எடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகாறும் பேசப்பட்ட கலிங்கக் கோவில்கள் பலவும் காட்டப்பட்ட ஒரே தமிழ்த்திரைப்படம் என்று 'திருமூர்த்தி’யைச் சொல்லலாம். வேறெந்தப் படக்குழுவும் இவ்வளவு முனைந்து இங்கே வந்திறங்கவில்லை.

அரிய பயணத்தொடரில் ஒரு திரைப்படத்தின் காட்சியை ஏன் நினைவுகூர்கிறேன் ? அதற்குப் பிறகு வேறெந்தத் தமிழ்த் திரைப்படக் குழுவும் புவனேசுவரத்தின் அருமையுணர்ந்து படப்பிடிப்புக்கு வரவில்லை என்பதால்தான். அப்படியே இனி வந்தாலும் இலிங்கராஜா கோவிலுக்குள் நுழைவதற்கு இசைவு பெற இயலாது. இலிங்கராஜா கோவிலுக்குள் கைப்பேசி முதற்கொண்டு படக்கருவிகள் எவற்றையும் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் உட்கட்டுமானங்கள் பலவும் காலத்தின் கரைப்புக்கு ஆளாகி மிகவும் வலுக்குன்றியிருப்பதால் அங்குள்ள ஒவ்வொன்றும் கண்போல் கருதிக் காக்கப்படுகிறது.

இலிங்கராஜா கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழையவும் கூடாது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசுத்தலைவராக விளங்கிய கர்சன் பிரபு அக்கோவிலைப் பார்வையிட முயன்றபோதும் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு கோவிலுக்கு வெளியே நின்று கோவிலின் முழுப்பேரழகைக் காணுமாறு அவர்க்கு ஒரு மேடை அமைத்துத் தரப்பட்டது. அங்கிருந்து கோவிலைக் கண்டு சென்றார். அந்த மேடையிலிருந்து இப்போது பிற மதத்தவர்கள் இலிங்க ராஜா கோவிலைப் பார்த்துச் செல்கின்றார்கள்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68, 69, 70, 71, 72, 73]

English summary
Travel series essay about exploring kalingam odissa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X