• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"கரெக்டா தெரியலை சார்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (27)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

"கன்ட்ரோல் ரூம்"

"எஸ் சார்"

"இன்ஸ்பெக்டர் ஜெயசிங் ஹியர். நான் சொல்ற லொக்கேஷனுக்கு ரீ இன்போர்ஸ்மென்ட் உடனே அனுப்புங்க.. அந்த ஏரியாவை மொத்தமா ரவுண்டப் செய்யணும். தேவைப்பட்டா துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வரலாம். அந்தக் கும்பலிடம் ஒரு பொண்ணு சிக்கிருக்கு.. ஸோ, கவனமா ஆபரேஷனை செய்தாகணும்.. லொக்கேஷன் நோட் பண்ணிக்கங்க"

போனை ஆப் செய்த ஜெயசிங், விபின் பக்கம் திரும்பினார்.

"எத்தனை பேரைடா இதுவரை கடத்திருக்கீங்க.. அவங்களை என்ன பண்ணுவீங்க?"

"கரெக்டா நம்பர் தெரியலை சார். நான் இங்கே கொஞ்ச காலமாதான் இருக்கேன். மொத்தமா எத்தனை பேர்னு எனக்கு சத்தியமா தெரியாது சார்"

"என்ன பண்ணுவீங்க கடத்தி வர்ற பொண்ணுங்களை?"

"தெரியலை சார்.. ஆனால் அவங்களை இங்க எதுவுமே செய்ய மாட்டாங்க சார். வெளிநாடுகளுக்கு விற்பாங்கன்னு கேள்விபட்டேன் சார்"

"எந்த நாட்டுக்கு?"

"தெரியலை சார்.. பல நாடுகளுக்கு விற்பதாக கதிர் சொல்லிருக்கான் சார்... சார்.. அந்த பச்சை கலர் வீடுதான் சார் கதிரோட வீடு"

போலீஸார் உஷாரானார்கள். ஜீப்பை சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டு விபினை கீழே இறக்கினர். அவனுடன் ஒரு மப்டி போலீஸ்காரரை மட்டும் ஜெயசிங் அனுப்பினார். மப்டி போலீஸ்காரர் துப்பாக்கியை செக் செய்து கொண்டு விபினுடன் நடக்க ஆரம்பித்தார்.

Nilavukku Neruppendru Peyar Tamil series episode 27

வீட்டை அடைந்ததும் காலிங் பெல்லை அடிக்குமாறு விபினுக்கு கண்ணால் ஜாடை காட்டினார் போலீஸ்காரர். கதவோரமாக அவர் சற்று மறைவாக நின்று கொண்டார். கையில் துப்பாக்கியை தயாராக வைத்துக் கொண்டார். மீண்டும் ஒருமுறை காலிங் பெல்லை அழுத்தினான் விபின். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. வெளியில் எட்டிப் பார்த்தது கதிரின் மனைவி.

"யார் வேணும்?"

"கதிர் இருக்கானா?.. நான் அவனோட வேலை பார்க்கிற விபின்"

"ஓ.. உள்ளே வாங்க. சாப்பிட்டுட்டு இருக்கார்"

கதவை முழுமையாக திறந்த அந்தப் பெண் விபினை உள்ளே அழைத்தார். ஹாலிலேயே டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கதிர். விபினைப் பார்த்ததும் "இன்னாடா.. இந்த நேரத்துக்கு" என்று ஆச்சரியமாக பார்த்தபடி அழைத்தான்.

அதே நேரம் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த போலீஸ்காரர், கதிர் தலையில் துப்பாக்கியை வைத்தார்.

வீடே ஷாக்காகிப் போனது. கதிரின் மனைவி அலறவே, "இந்தா.. அலறக் கூடாது.. அப்படியே உட்காருங்க.. ஒன்னும் செய்ய மாட்டேன். சத்தம் போட்டு ரகளை செய்தால் வெளியே போலீஸ் படையே இருக்கு.. ரணகளம் ஆயிரும்" என்று அதட்டவே அந்தப் பெண் அப்படியே வாயைப் பொத்திக் கொண்டு அமைதியாக உட்கார்ந்தபடி சத்தம் வராமல் அழ ஆரம்பித்தார்.

கதிர் அருகே விபினையும் அமரச் சொன்னார் போலீஸ்காரர். பின்னர் தன்னிடமிருந்து வாக்கி டாக்கியால், இன்ஸ்பெக்டர் ஜெயசிங்கைத் தொடர்பு கொண்டார்.

"சார்.. கதிர் சிக்கிட்டான்.. உடனே வாங்க"

அடுத்த சில நொடிகளில் மொத்த போலீஸ் படையும் கதிர் வீட்டில் குவிந்திருந்தது. கதிர் கைகளை பின்னால் கட்டினார்கள். அடுத்த சில நொடிகளில் அவன் ஜீப்பில் இருந்தான். வந்த வேகத்தில் போலீஸ் படை பறந்தது.

காவல் நிலையம் கொண்டு வரப்பட்ட விபினையும், கதிரையும் விசாரணை அறைக்குக் கொண்டு போய் அமர வைத்தார்கள். இன்ஸ்பெக்டர் ஜெயசிங் ஒரு நொடி கூட தாமதம் செய்யாமல் விசாரணையைத் தொடங்கினார்.

முதலில் கதிரை தனியாக அமர வைத்து விசாரணை தொடங்கியது.

"எனக்கு அதிக நேரம் கிடையாது.. உனக்கும் அதிக நேரம் தர முடியாது. மொத்தமா எல்லாத்தையும் கக்கிட்டா நல்லது. சொல்லு.. யார் நீங்க.. எதுக்காக பெண்களை கடத்தறீங்க.. இப்ப கடத்தப்பட்ட பெண்ணை எங்கே கொண்டு போயிருக்காங்க?"

"சார் எனக்கு முழுசா எதுவும்..."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஓங்கி வந்து அறைந்தது குமரேசனின் கை.. கண்ணில் பட்டாம் பூச்சி பறக்க நிலை குலைந்தான் கதிர்.

"சொல்லு கதிர்.. முழுசா சொல்லு"

" சார்.. சார் நிஜமாதான் சார்.. எனக்கு முழுசா.."

மறுபடியும் ஒரு பேரிடி.. இந்த முறை இடது கன்னம் பழுத்துப் போனது.

"சொல்லுப்பா.. ஏன் அவரை கோபமாக்குறே.. சொல்லிடேன்.. அவ்வளவுதானே"

"சார்.. சார் சொல்லிடறேன் சார்.. சொல்லிடறேன்.. அவரை அடிக்க வேணாம்னு சொல்லுங்க சார்"

"அடிக்க மாட்டார்.. நீ கரெக்டா சொல்லிட்டா யாருமே அடிக்க மாட்டாங்க.. சொல்லிடு"

"சொல்றேன் சார்.. சொல்றேன் சார்.. செல்வின் சார்தான் எங்களுக்கு தலைவர்.. அவர் நிறைய பிசினஸ் செய்றார். ஆனால் பெருசா லாபம் கிடையாது. கேரளாவில்தான் பெரும்பாலும் இருப்பார். அப்பப்ப சென்னைக்கு வருவார். அவரோட சினேகிதர் ஒருவர் ஹைதராபாத்தில் இருக்கார். அவர் இளம் பெண்களை பல்வேறு வகையில் மயக்கி அவர்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவருடன் சேர்ந்துதான் செல்வின் சார் இதில் ஈடுபடுகிறார். துபாய், குவைத், ரஷ்யா, இலங்கை என பல நாடுகளுக்கு இந்தப் பெண்கள் அனுப்பப்படறாங்க. இவங்களை எதுக்காக அனுப்பறாங்கன்னு எங்களுக்குத் தெரியாது. ஆனால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் அனுப்புறதில்லைன்னு நான் நினைக்கிறேன். பெரிய பெரிய கோடீஸ்வரர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காகத்தான் கடத்துறாங்கன்னு அரசல் புரசலா கேள்விப்பட்டேன். இதன் காரணமாகத்தான் நாங்கள் கடத்தும் பெண்களை மிகவும் பத்திரமாக அனுப்பி வைப்போம்"

"பிறகு எதுக்குடா ப்ரீத்தியை அடிச்சீங்க?"

"அது வந்து.. அது.. நாங்க கடத்த நினைச்சது இந்தப் பொண்ணு இல்லை சார்.. அது வேற பொண்ணு. நாங்க தப்பா கடத்திட்டோம்"

"வாட்.." அதிர்ச்சியில் சீட்டிலிருந்து சற்று முன்வந்து கோபமாக கதிரைப் பார்த்தார் ஜெயசிங்.

"ஆமா சார்.. நாங்க கடத்த திட்டமிட்டிருந்த பெண்ணோட பெயர் சாத்விகா.. அது ஒரு இந்திக்காரப் பெண். அந்தப் பெண்ணோட சாயல்ல, இந்தப் பெண் (ப்ரீத்தி) இருந்ததால மாத்திக் கடத்திட்டோம். ஆனால் தவறு நடந்தது தெரிஞ்ச பிறகு மறுபடியும் ஸ்கெட்ச் போட்டு சாத்விகாவையும் கடத்திட்டோம்.."

ஜெயசிங்குக்கு வந்ததே கோபம்.. வேகமாக எழுந்து.. கதிரை நெருங்கி.. பளார் பளார் என சரமாரியாக விளாசித் தள்ளி விட்டார்.. நிலை குலைந்து போன கதிர் சேரிலிருந்து அப்படியே கீழே விழுந்தான். தூக்கி நிறுத்திய அவனை மீண்டும் சேரில் உட்கார வைத்த ஜெயசிங், "பொறுக்கி ராஸ்கல்ஸ்.. இப்ப எங்க இருக்காங்க ரெண்டு பேரும்?.. சொல்லலை.. சுட்டுப் பொசுக்கிருவேன் இந்த இடத்திலேயே" என்று உறுமிய உறுமலில், தனது பேன்ட்டை நனைத்து விட்டான் கதிர்.

அப்படியே அடுத்த சேருக்கு அவனை மாற்றிய வேகத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்தது.

கதிர் உண்மைகளைக் கக்கத் தொடங்கினான். செல்வின் ஹைதராபாத் கும்பலுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் பெண்களை கடத்தும் தொழிலை செய்து வருகிறார். தமிழகத்திலும், கேரளாவிலும் பெண்களை கடத்தி வரும் பொறுப்பு செல்விவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தப்படும் பெண்களை அவர் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைப்பார்.

ஹைதராபாத்துக்கு அனுப்பபடும் பெண்கள், அவர்களது வயது, அழகு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நாடுகளுக்கு தரம் பிரித்து அனுப்புவார்களாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் பல லட்சம் விலை நிர்ணயிக்கப்படுகிறதாம். வருகிற பணத்தில் 70 பெர்சன்ட் ஹைதராபாத் கும்பலுக்கு, 30 பெர்சன்ட் செல்வினுக்காம். தற்போது கடத்தப்பட்ட பெண்களில் சாத்விகாவை ஹைதராபாத்துக்கு அனுப்பி விட்டனர். தவறாக கடத்தி விட்ட காரணத்தால் ப்ரீத்தியை எப்படி வெளியே அனுப்புவது, அனுப்பினால் சிக்கலாகி விடுமே என்ற அச்சத்தில் கூடவே வைத்துள்ளனர். இதுவரை கடத்தலைத் தவிர வேறு தவறுகளில் இவர்கள் ஈடுபடவில்லை என்பதால் ப்ரீத்தியை எப்படி ஹேன்டில் செய்வது என்பதிலும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனராம்.

கதிர் கத்திய விவரங்கள் இவை..

"இவனைத் தூக்கி லாக்கப்பில் வைங்க. தேவைப்பட்டா மறுபடியும் விசாரிக்கலாம்"

ஜெயசிங் அங்கிருந்து எழுந்து தனது இருக்கைக்கு வந்தார். கடுமையாக தலை வலித்தது. டீ வாங்கி வரச் சொல்லி விட்டு செல்போனை எடுத்தார். கமிஷனருக்கு கால் பறந்தது.

"சார்.. இன்ஸ்பெக்டர் ஜெயசிங்"

"....................."

"சார் ப்ரீத்தி கேஸில் ஒரு முக்கியத் திருப்பம். கடத்திய கும்பலின் முழு விவரம் தெரிந்து விட்டது. அந்தப் பெண்ணை வேறு ஒரு பெண் என்று நினைத்து தவறுதலாக கடத்தியுள்ளனர். அத்தோடு மட்டும் இல்லை சார், ப்ரீத்தி கடத்தலுக்குப் பிறகு சரியான பெண்ணையும் இந்தக் கும்பல் கடத்திருக்கு சார்.. அந்தப் பெண்ணோட பேரு சாத்விகா... எஸ் சார்.. அதுதொடர்பாக யார் புகார் கொடுத்திருக்காங்கன்னு தெரியலை சார், செக் பண்ணனும். இந்தக் கும்பலைச் சேர்ந்த 2 பேரை இப்போ கஸ்டடில கொண்டு வந்திருக்கோம். தொடர்ந்து விசாரிக்கிறோம் சார். இந்தக் கும்பலோட தலைவன் பத்தின தகவல்களும் கிடைச்சிருச்சு. அவனையும் இன்னிக்கே தூக்கிருவோம் சார்.. நான் தொடர்ந்து அப்டேட் பண்றேன் சார்"

சூடான டீ வந்தது.. நிதானமாக அதைப் பருகிய ஜெயசிங், டீ குடித்து முடிந்ததும் எழுந்தார்.

"குமரேசன்.. செல்வினைத் தூக்கணும்.. அதுக்கு முன்னாடி அவனோட குடும்பத்தைத் தூக்கணும். அப்பதான் செல்வின் நம்மளைத் தேடி வருவான்.. கேரள போலீஸை அலர்ட் பண்ணுங்க. ஜஸ்டினை உடனே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க. இன்னிக்குள்ள ப்ரீத்தியை மீட்டாகணும்.. அப்படியே சாத்விகா குறித்த தகவல் ஏதாவது இருக்கான்னு ராம்ஜியை பார்க்கச் சொல்லுங்க"

"ஓகே சார்"

ஜெயசிங்கின் செல்போன் ஒலித்தது.

"சார்... நான் சுனில் பேசறேன்"

"சொல்லுங்க சுனில்"

"சார் ப்ரீத்தி கிட்ட இருந்து இப்போ போன் வந்தது.. அவ தப்பிச்சுட்டாளாம்"

"வாட்.. என்ன சொல்றீங்க.. எங்க இருந்து போன் பண்ணாங்க"

"இடம் சரியா தெரியலைன்னு சொல்றா.. ஆள் அரவம் இல்லாத இடமா இருக்கு.. நான் இப்ப ஒரு வீட்டில் இருக்கேன்.. அந்த வீட்டில் யாரும் இல்லை.. என்னை அடைத்து வைத்திருந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே தான் இருக்கேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்.. சீக்கிரம் வாங்கன்னு அழறா சார்.. அவ பேசிய நம்பரை வைத்து இடத்தை டிரேஸ் பண்ணுங்க சார்.. ப்ளீஸ்.. அவளுக்கு எதுவும் ஆபத்து ஆயிடக் கூடாது சார்"

"கொஞ்சம் அமைதியா இருங்க.. அவங்க பேசிய போன் நம்பரைச் சொல்லுங்க"

"98........"

"ஓகே.. தைரியமா இருங்க.. அவங்க கிட்ட பேசி போனை சுவிட்ச் ஆப் ஆகாமல் பார்த்துக்க சொல்லுங்க... பயப்படாம இருக்கச் சொல்லுங்க"

குமரேசன் பக்கம் திரும்பிய ஜெயசிங், "குமரேசன், ப்ரீத்தி தப்பிச்சுட்டாங்க.. கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே இருப்பதாக கூறியுள்ளார். இதுதான் நம்பர்.. உடனே டிரேஸ் அவுட் பண்ணுங்க. அந்த இடத்துக்குப் போயாகணும்"

"கண்டிப்பா சார்"

அடுத்த சில நொடிகளில் மொத்த ஸ்டேஷனும் ப்ரீத்தியை மீட்கும் ஆபரேஷனுக்கு தயாரானது. ஜீப்புகள் ரெடி, போலீஸாரும் காத்திருந்தனர். ஆம்புலன்ஸுக்கும் சொல்லி வைத்து விட்டனர்.

"சார்.. செங்கல்பட்டு அருகே பழவேலி என்ற இடத்தில் சிக்னல் காட்டுது சார்.. அது ஒரு ரிமோட் ஏரியா"

"ஓகே.. செங்கல்பட்டு எஸ்பிக்கு மெசேஜே் அனுப்புங்க.. நாமளும் கிளம்பலாம்.. இந்த முறை கோட்டை விட்டுடக் கூடாது"

மொத்தம் 3 ஜீப்புகளில் போலீஸார். இதுதவிர செங்கல்பட்டிலும் போலீஸாரை அலர்ட் செய்து அவர்களும் படைகளுடன் புறப்பட்டனர். சென்னையிலிருந்து மின்னல் வேகத்தில் கிளம்பியது போலீஸ் படை. வழியில் மீண்டும் சுனிலிடமிருந்து போன்.

"சார்.. ப்ரீத்தி .. ப்ரீத்தி.."

சுனில் சொன்ன தகவலைக் கேட்டு " வாட்..." என்று ஷாக்கானார் ஜெயசிங்.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X