For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எனக்கு திருப்தி இல்லை ஜெயசிங்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (26)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

கமிஷனர் அலுவலகம். மொத்த அலுவலகமும் பரபரப்பாக காணப்பட்டது. கமிஷனர் ஜெயந்த் ரொம்ப அப்செட்டாக காணப்பட்டார். அவர் முன்பு பல உயர் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயசிங்கும் உடன் இருந்தார்.

"ஜெயசிங்.. வழக்கோட ஸ்டேட்ஸ் என்ன?. ஏன் இத்தனை டிலே ஆகுது.. அந்த மிரட்டல் கால் குறித்த தகவல் ஏதேனும் கிடைத்ததா?.. எந்த பெரிய திருப்பமும் இல்லாமல் வழக்கு தேங்கிக் கிடப்பது ஏன்?"

"சார்.. வழக்கு தேங்கிக் கிடப்பது என்பது உண்மைதான் சார். ஆனால் நாங்கள் முழுமையாக முயற்சித்து வருகிறோம். பிட்டுப் பிட்டாகத்தான் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் சேர்த்து வைத்துப் பார்த்தால் எதுவுமே லிங்க் ஆக மாட்டேங்குது. கடத்தல்காரர்கள் மிகவும் தெளிவாக பிளான் போட்டு செய்துள்ளது போலத் தெரிகிறது. இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் செயல்படுகிறோம். நிச்சயம் விரைவிலேயே திருப்புமுனை கிடைக்கும் என நம்புகிறோம் சார்"

"எனக்கு திருப்தி இல்லை ஜெயசிங். உங்களைப் போன்ற துல்லியமான அதிகாரிகள் இப்படித் தடுமாறுவது வியப்பாக இருக்கிறது. இதை சவாலா எடுத்துட்டுப் பண்ணுங்க. இந்த வழக்கில் மட்டும் ஈடுபடுங்க. மத்த வழக்குகளை விட்ருங்க.. சேலஞ்சிங்கான இந்த வழக்கில் சீக்கிரமே திருப்பம் வரணும். அந்தப் பெண் காப்பாற்றப்படணும்.. இதுதான் உங்களது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.. ரைட்?"

"கண்டிப்பாக சார்.. நான் மற்ற வழக்குகளை இன்னொருவரிடம் ஏற்கனவே கொடுத்துட்டேன் சார்.. நிச்சயம் ப்ரீத்தியை பத்திரமாக மீட்போம்.. இது உறுதி சார்" சொல்லிய ஜெயசிங்கின் முகத்தில் நம்பிக்கை தெறித்தது.. கூடவே இத்தனை தடுமாறுகிறோமே என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது.

கமிஷனர் மீட்டிங் முடிந்து வெளியே வந்த ஜெயசிங்குடன், குமரேசனும் இணைந்து கொண்டார்.

"என்ன சார் ஆச்சு?"

"கமிஷனர் ரொம்ப அதிருப்தியா இருக்கார். அவரது அதிருப்தியில் நியாயம் இருக்கு. நாம ரொம்பவே தடுமாறிட்டிருக்கோம். எந்த க்ளூவும் சரியா வரலையே.. வழக்கு நகராமல் அதே இடத்தில் இருப்பது போலவே தோணுது"

"உண்மைதான் சார்.. ஆனால் நமக்கு ரொம்ப அருகில்தான் சார் அவனுக இருக்கானுக.. அது மட்டும் நல்லாத் தெரியுது"

"இருக்காங்க.. ஆனால் நம்மாள நெருங்க முடியலையே.. நமக்கு மிரட்டல் விடுத்த கால் டிரேஸ் பண்ணச் சொன்னேனே.. ஏதாவது தகவல் கிடைத்ததா?"

"இல்லை சார்.. அந்த நம்பர் இப்போது சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு.. கடைசியா கிடைத்த டவர் கோடம்பாக்கம்னு வந்தது.. விசாரிக்கச் சொல்லிருக்கேன்.. பெருசா எதுவும் கிடைக்கலை சார்"

அப்போது பரந்தாமன் வேகமாக அங்கு விரைந்து வந்தார். அவரைப் பார்த்த குமரேசன் பேச்சை நிறுத்த, பரந்தாமன் பக்கம் திரும்பினார் ஜெயசிங்.

"சார்.. முக்கியமான தகவல்.. "

"என்னாச்சு பரந்தாமன்?"

Nilavukku Neruppendru Peyar Tamil series episode 26

"சார் ஜஸ்டின் தம்பியோட நம்பரை டிரேஸ் செய்தபோது அவர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு கிட்டத்தட்ட 500 முறைக்கு மேல் பேசியுள்ளது தெரிய வந்திருக்கிறது. இது சஸ்பீசியஸா இருக்கு சார்"

"இஸிட்.. யாருடன் அதிகம் பேசியிருக்கார்?"

"உங்களுக்கு ஒரு திரெட்டனிங் கால் வந்ததே.. அந்த நம்பருக்குத்தான் சார்"

"வாட்.. என்ன சொல்றீங்க"

"ஆமா சார்.. ஆச்சரியமாவும், அதிர்ச்சியாவும் இருக்கு"

"இப்ப ஜஸ்டின் தம்பி எங்கே இருக்கார்"

"அவரோட போன் நம்பரை டிரேஸ் செய்தபோது சென்னைன்னுதான் காட்டுது சார்.. கோடம்பாக்கம்"

"ஓ காட்.. குமரேசன்.. முதல் முறையா ஒரு தெளிவான க்ளூ கிடைச்சிருக்கு.. பரந்தாமன் தேங்க்ஸ் ஃபார் த இன்ஃபோ. நாம ஜஸ்டின் தம்பியை முதல்ல தூக்கியாகணும்.. பிளான் ரெடி பண்ணலாம்.. கிளம்புங்க"

புதிய நம்பிக்கையுடன் மூன்று பேரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

---------------

"சொல்லுங்க மிஸ்டர் ஜஸ்டின்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (25)

காவல் நிலையம்.

ஜெயசிங்கின் இருக்கை முன்பு அமர்ந்திருந்தார் ஜஸ்டின். முகமெல்லாம் வெளுத்துப் போயிருந்தது. அவருக்கு எதுவுமே புரியவில்லை.

"சொல்லுங்க ஜஸ்டின்.. உங்க தம்பியைப் பத்தின டீட்டெய்ல் தெரியணும்"

"சார்.. அவன் பேரு செல்வின் கென்னி. கல்யாணமாய்ருச்சு. மனைவியுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறான். குழந்தை கிடையாது. என்னோட பிசினஸ்லதான் பார்ட்னரா இருந்தான். கல்யாணமான பிறகு நானே அவனுக்கு திருவனந்தபுரத்திஸ் பிசினஸ் வச்சுக் கொடுத்தேன். அதுதொடர்பான கொடவுன்தான் இங்கே நாம போய் பார்த்தது. 3 பிசினஸ் பண்றான். சோலார் விளக்குகள் அமைத்துக் கொடுப்பது, அரிசி ஏற்றுமதி மற்றும் பூ ஏற்றுமதி.. அவனைப் பத்தி நீங்க சொல்றது ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு.. என்னால நம்ப முடியலை சார்"

"நாங்களும் கூட முழுமையாக இன்னும் முடிவுக்கு வரலை.. அவர் இப்போ எங்கே இருக்கார்னு தெரியுமா?"

"நேத்து கூட பேசினேன் சார்.. திருவனந்தபுரத்தில்தான் இருப்பதாக சொன்னான். நீங்கெல்லாம் வந்து போன தகவலைக் கூறினேன். அப்படியான்னு மட்டும் கேட்டுக்கிட்டான். ஆனால் நேத்து ராத்திரி மறுபடியும் கால் பண்ணப்ப போன் சுவிச்ட் ஆப்னு வந்தது. காலையில் முயற்சித்த போதும் அதேபோலதான் வந்தது"

"இனி அது சுவிட்ச் ஆன் ஆக வாய்ப்பில்லை ஜஸ்டின்.. அவர் தப்பு செஞ்சுட்டிருக்கார்"

"ரொம்ப அதிர்ச்சியா இருக்கு சார்.. என்னால நம்ப முடியலை"

"பார்க்கலாம்.. ஆள் கிடைச்சதும் அதைப் பத்தி முடிவு செய்யலாம். இப்ப நீங்க போகலாம்.. தொடர்ந்து உங்க தம்பிக்கு போன் டிரை பண்ணிட்டிருங்க. லைன் கிடைச்சா பொதுவா பேசி எங்கிருக்கார்னு தகவல் பெற முயற்சியுங்க. உங்களைப் பார்த்தா நல்லவர் போலத் தெரியுது. எங்களோட விசாரணைக்கு ஒத்துழைச்சா நல்லது. இல்லாட்டி போலீஸ் வேலையை நாங்க காட்ட வேண்டி வரும்"

"கண்டிப்பா சார்.. நிச்சயம் உதவறேன்"

"ஓகே நீங்க போகலாம்"

ஜஸ்டின் கிளம்பிச் செல்லவும், சைபர் கிரைம் ராஜேந்திரன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

வேகமாக வந்த ராஜேந்திரன், ஜெயசிங்குக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு, "சார் நம்பரை டிரேஸ் அவுட் பண்ணியாச்சு. இந்த குரூப் தாம்பரத்துல ஒரு இடத்தில் இருப்பது தெரிய வந்திருக்கு"

"ஓ.. ஓகே.. தாம்பரம் ஸ்டேஷனைக் கால் பண்ணி அலர்ட் பண்ணுங்க.. சம்பந்தப்பட்ட இடத்தை ரவுண்டப் பண்ணச் சொல்லுங்க.. நாமளும் கிளம்பலாம்"

சொல்லிய வேகத்தில் கமிஷனருக்கு போனைப் போட்டார் ஜெயசிங். அவரிடம் லேட்டஸ்ட் நிலவரத்தை விவரித்து விட்டு தனது ஃபோர்ஸுடன் புறப்பட்டார்.

------------------------------------

தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்பாகவே வலது புறமாக போலீஸ் வாகனங்கள் திரும்பின. ராஜாஜி சாலையில் விரைந்தோடிய வாகனங்கள்.. கிஷ்கிந்தா செல்லும் சாலையில் புகுந்து பறக்க ஆரம்பித்தன. அரை கிலோமீட்டர் சென்றவுடன் மீண்டும் இடது புறமாக திரும்பின. குறுகிய சாலை அது. குண்டும் குழியுமாக இருந்த அந்த சாலைக்குள் ஜீப்புகள் தடுமாறி செல்ல ஆரம்பித்தன. சிறிது நேர பயணத்திற்குப் பிறகு அந்த இடத்தில் ரோடு இரண்டாக பிரிந்தது.

"எந்தப் பக்கம் போகணும் ராஜேந்திரன்"

"சார்.. நாம இடது பக்கமாக திரும்பணும். இது முட்டுச் சந்து போல இருக்கும். அந்தக் கட்டடம்தான் கடைசியில் இருக்கிறது. இந்த சாலையிலிருந்து வேறு பக்கம் வாகனம் போக முடியாது. ஸோ, நாம இந்த ரோட்டை பிளாக் செய்து விட்டு உள்ளே போகலாம்"

உடனடியாக உடன் வந்த ஜீப்புகளில் ஒன்றை அந்த இடத்திலேயே ஆயத்த நிலையில் இருக்குமாறு சொல்லி விட்டு ஜெயசிங் வந்த ஜீப்பும் மேலும் 2 ஜீப்புகளில் போலீஸாரும் உள்ளே புகுந்தனர். இருபக்கமும் உயர்ந்த சுவர்கள் இருந்தன. ஏதாவது கொடவுனாக இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டார் ஜெயசிங்.

நேராக சாலையில் உன்னிப்பாக பார்த்துக் கொண்டே வந்தார். அவர்களது டார்கெட் கட்டடம் கண்ணில் பட ஆரம்பித்தது. அது ஒரு அலுவலகம் போல இருந்தது. அலுவலகத்திற்கு முன்பு 2 பைக்குகள், ஒரு பழைய அம்பாசடர் கார் நின்று கொண்டிருந்தன.

ஜீப்புகளை சற்று தூரத்திலேயே நிறுத்தி வைத்து விட்டு.. அனைவரும் மெதுவாக இறங்கி கட்டடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அதில் சிலரிடம் துப்பாக்கி இருந்தது. ஆயத்த நிலையில் அதை கையில் எடுத்து வைத்துக் கொண்டனர். ஜெயசிங் முன்னே நடக்க அவருடன் அனைவரும் தொடர்ந்து வந்தனர். கட்டடத்தை நெருங்கியபோது அனைவருக்குள்ளும் ஒரு வேகம் பிறந்தது. இப்படி அலைய வச்சுட்டீங்களேடா ராஸ்கல்ஸ் என்ற கோபம் அது.

கட்டடத்தை நெருங்கியதும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து சென்றனர். ஜெயசிங் தலைமையிலான படை மட்டும் முன்பக்க வாசலை நெருங்கியது. கதவு மூடியிருந்தது.. மெதுவாக தள்ளிப் பார்த்தார் ஜெயசிங். திறக்கவில்லை. உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.. ஜன்னல்கள் அனைத்தும் உள்பக்கமாக மூடப்பட்டிருந்தன. கதவை உடைத்துத் திறப்பது என்று முடிவானது.

முன்னெச்சரிக்கையுடன் போலீஸ் படையினர் நின்று கொள்ள, துப்பாக்கியால் சுட்டுக் கதவை திறந்தனர். மெதுவாக உள்ளே நுழைந்து பார்த்தபோது பெருத்த நிசப்தத்துடன் உட்புறம் காட்சி அளித்தது. இருளாக இருந்தது. சுவிட்ச் எங்கிருக்கிறது என்று தெரியாததால் செல்போன் லைட்டுகளை ஆன் செய்தது போலீஸ் படை.. ஜெயசிங் மெதுவாக அடியெடுத்து உள்ளே நுழைய பின் தொடர்ந்தது போலீஸ் பட்டாளம்.

ஹாலில் பெரிதாக எந்த பொருளும் இல்லை. சில சேர்கள் உருண்டு கிடந்தன. புறக்கணிக்கப்பட்ட கட்டடத்தின் சாயலில் அது இருந்தது. முடை நாற்றம் மூக்கைத் துளைத்தது. சுத்தம் செய்தே பல காலமாகியிருக்கும் போலும். மெதுவாக உள்ளே நுழைய எத்தனித்தபோது திடீரென ஒரு சத்தம்..

சத்தம் வந்த திசையை நோக்கி போலீஸ் படை விரைந்தது. உள்ளே நுழைந்தபோது அங்கிருந்து சிலர் ஓடுவது தெரிந்தது. பெருத்த நம்பிக்கையுடன் ஜெயசிங்கும், அவரது சகாக்களும் அவர்களைத் துரத்தினர். அறைகள் இருளாக இருந்ததால் துரத்துவது கடினமாக இருந்தது. இருந்தாலும் போலீஸார் விடவில்லை. வெறி கொண்டு விரட்டினர்.

வேகமாக ஓடியபோது சில போலீஸார் தடுமாறி கீழே விழ, மற்றவர்கள் தொடர்ந்து விரட்டினர். 3, 4 அறைகளுக்கு மேல் தொடர்ந்த அந்த ஓட்டத்தின் இறுதியில் ஒருவன் ஜெயசிங்கின் பிடியில் சிக்கினான். அவனுடன் வந்த மற்றவர்கள் பின் பக்க கதவு வழியாக தப்பி ஓடி விட்டனர். பின்னால் போலீஸ் படை எதுவும் இல்லாதது அவர்களுக்கு சாதகமாகி விட்டது. வேகமாக வெளியில் ஓடி வந்த போலீஸார் அந்த இடத்தில் இருந்த மதில் சுவர் வழியாக அந்த கும்பல் தப்பி ஓடி விட்டதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தன்னிடம் சிக்கியவனை தரதரவென ஹாலுக்கு இழுத்து வந்த ஜெயசிங், அவனை முன்பக்க வாசல் வழியாக நல்ல வெளிச்சம் உள்ள இடத்திற்கு கொண்டு வந்து கிடத்தினர். சுற்றிலும் போலீஸ் படை சூழ்ந்து நிற்க அந்த நபரின் முகம் இப்போது தெளிவாக தெரிந்தது.

அடர்த்தியான தாடி மீசையுடன் காணப்பட்டான்.

"யார்.. நீ.. உன் பேரு என்ன?". அதட்டிக் கேட்டார் ஜெயசிங். அந்த நபர் அமைதியாக இருந்தான்.

பளாரென ஒரு அறை விட்டார் குமரேசன்.. விழுந்த வேகத்தில் கன்னம் நிச்சயம் கலங்கிப் போயிருக்கும். அந்த அதிர்ச்சியை கண்ணில் காட்டினான் அந்த நபர்.

"சொல்லிடுறேன் சார்.. அடிக்காதீங்க"

"சொல்லு"

"என் பேரு விபின். இங்க மொத்தம் 10 பேர் இருந்தோம். நான் இந்த இடத்தோட வாட்ச்மேன். ஒரு பொண்ணை கடத்திட்டு வந்திருந்தாங்க. அந்தப் பொண்ணோட 5 பேர் காலையிலேயே கிளம்பிப் போயிட்டாங்க. மறுபடியும் 2 நாளைக்குப் பிறகு வருவோம்னு சொல்லிட்டுப் போனாங்க. அதனால நாங்க 5 பேர் மட்டும் இங்கே தங்கியிருந்தோம்"

"நீங்கெல்லாம் யார்.. உங்க கூட்டத்துக்குத் தலைவன் யாரு"

"தலைவர் யார்னு தெரியாது சார். இந்த இடத்தோட ஓனர் பேரு செல்வின் கென்னி. திருவனந்தபுரத்துல இருக்காரு. அவர் அடிக்கடி இங்கே வருவார். இங்கு தங்கியிருப்பவர்களிடம் ரகசியமாக பேசுவார். பிறகு போய் விடுவார். ஆனால் அடிக்கடி சில பெண்களை கடத்திட்டு வருவாங்க. எந்தத் தப்பும் நடக்காது. பெண்களை இங்கு அடைத்து வைத்திருந்து விட்டு கூட்டிட்டுப் போய்ருவாங்க. ஒவ்வொரு முறையும் எனக்கு 10,000 ரூபாய் பரிசு போல தருவாங்க. எனக்கு அது பெரிய பணம். அதனால நானும் இங்கு நடப்பதை வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டேன்"

"இதுவரைக்கும் எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக்காங்க?"

"எண்ணிக்கை சரியா தெரியலை சார். இதுக்கு முன்னாடி வேற ஒரு வாட்ச்மேன் இருந்தார். அவர் இருந்தப்ப எத்தனை பேர் வந்தாங்கன்னு தெரியாது. ஆனால், நான் வந்த பிறகு 7 பேர் வரை வந்திருக்காங்க"

"இப்ப கொண்டு வந்த பெண்ணை எங்க கூட்டிட்டுப் போயிருக்காங்கன்னு தெரியுமா"

"அது தெரியாது சார்.. இந்த இடத்தில் இருப்பது மட்டும்தான் தெரியும். வெளியில் நடப்பது தெரியாது சார். யாருமே அதுகுறித்து எனக்கு சொல்ல மாட்டாங்க சார்"

"நீ கரெக்டா தகவல் சொன்னா.. உன்னையை விட்டுருவோம். அப்படி இல்லாம இப்படி அரைகுறையா சொன்னா.. உசுரு மிஞ்சாது.. சுட்டுத் தள்ளிட்டு போய்ட்டே இருப்போம் .. ஒழுங்கா சொல்லு" அதட்டினார் குமரேசன்.

"நிச்சயமா எனக்கு வேறு எதுவுமே தெரியாது சார். இந்தக் கும்பல்ல இருக்கிற கதிர் அப்படிங்கிறவன்ட்ட கேட்டா ஒரு வேளை தெரியலாம் சார். அவனோட வீடு இந்தப் பக்கம் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கு"

"சரி வா வீட்டைக் காட்டு"

"சரி சார்"

விபினை போலீஸார் ஜீப்பில் ஏற்றினர். அந்த வீட்டுக்கு காவலாய் சில போலீஸார் நிற்க வைத்து விட்டு மற்றவர்கள் கிளம்பினர்.

ஜீப் கிளம்பியதும், விபின் போனுக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ"

"-------------------"

"ஸ்பீக்கர்ல போடுடா" அதட்டினார் குமரேசன்.

போனை ஸ்பீக்கரில் போட்டான் விபின்.

"மச்சான்.. நாங்க சேபா வந்து சேர்ந்துட்டோம்.. நீயும் கிளம்பி வீட்டுக்குப் போய்ரு.. நாளைக்கு காலைலதான் அங்க வருவோம். மத்த பசங்களையும் வீட்டுக்கு அனுப்பிரு.. நாளைக்கு வந்ததும் பார்த்துக்கலாம்"

"சரி மச்சான்"

"அப்புறம் முக்கியமான விஷயம்.. சார் இன்னிக்கு நம்மளை வீட்டாண்ட வரச் சொல்லிருக்கார்.. நீயும் வா.. சம்பளம் தர்றேன்னு சொல்லிருக்கார்"

"சரி.. வர்றேன்"

போன் ஆப் ஆனது.

"யாருடா அந்த சார்" உறுமினார் ஜெயசிங்.

"செல்வின் கென்னி சார்தான் அது"

(தொடரும்)

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X