For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ இப்போ எங்கே இருக்கே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (15)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

இருட்டான அந்த மாடிப்படிகளில் ஏற முயன்ற சில்பா தன்னுடைய செல்போன் ரிங் டோனை வெளியிட்டதும் அதைக் கைப்பையினின்றும் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

மறுமுனையில் நர்மதா காத்திருந்தாள்.

சில்பா செல்போனை காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தாள்.

" என்ன நர்மதா ? "

" சர்க்யூட் ஹவுஸூக்கு போய் சேர்ந்துட்டியா ? "

" இல்லை..... இப்ப வேற ஒரு இடத்துக்கு வந்துட்டேன் "

" வேற இடம்ன்னா ....... ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 15

" நான் நேர்ல வந்து சொல்றேன். போன்ல பேச இப்போ நேரமில்லை. சி.பி.ஐ. ஆபீஸர் வைத்யா இங்கே எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார் "

" சரி, இப்ப நீ எங்கே இருக்கேன்னு சொல்லு...... "

" இதோ பார் நர்மதா...... நீ எனக்கு ஒரு நெருக்கமான தோழிதான். ஆனா அந்த ஒரு காரணத்துக்காக நான் உன்கிட்டே என்னோட உத்யோகபூர்வமான சில ரகசிய விஷயங்களை ஷேர் பண்ணிக்க முடியாது. நான் வெளியே எங்கேயும் தங்காமே உன் வீட்ல தங்கறதுக்கு காரணமே என்னோட பாதுகாப்புக்காகத்தான். நீ எதுக்கும் பயப்படாதே. நான் என்னோட டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த மேலதிகாரியைத்தான் சந்திக்கப் போறேன். டோண்ட் வொர்ரி.......நீயும் பயப்பட்டு என்னையும் பயப்பட வைக்காதே...... நீ போய் தூங்கு,,,,,, "

" சரி.... நீ அங்கேயிருந்து புறப்படும்போது எனக்கு போன் பண்ணு "

"கண்டிப்பாய்" பேசிவிட்டு செல்போனை அணைத்தாள் சில்பா. பின் மெதுவாய் மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள். மேலே போகப் போக இருட்டின் சாயம் கரைந்து மெலிதாய் வெளிச்சம் தெரிந்தது.

மாடி வராந்தாவுக்கு வந்தாள். வராந்தாவில் இருந்த முன் இரண்டு அறைகள் கனமான பூட்டால் சாத்தப்பட்டிருக்க மூன்றாவது அறையின் கதவு மட்டும் பாதி திறந்த நிலையில் காற்றுக்கு லேசாய் அசைந்து கொண்டிருந்தது.

சில்பா வராந்தாவில் நடந்து திறந்திருந்த அந்த அறைக்கு முன்பாய் நின்று எட்டிப் பார்த்தாள்.

அறை மிதமான வெளிச்சத்தில் தெரிய அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த வைத்யா ப்ரவுன் நிற நைட் கவுன் அணிந்து சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி டி.வி.திரையை மியூட்டில் வைத்து வொர்ல்ட் கப் ஃபுட்பால் மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தார்.

சில்பா கண்ணில் பட்டதும் டி.வியின் திரையை இருட்டாக்கிவிட்டு ஒரு பெரிய புன்னகையை தன்னுடைய நரை மீசைக்குக்கீழே கொடுத்தார்.

" வாம்மா சில்பா..... இந்த ராத்திரி நேரத்துல உன்னை அலைய வெச்சுட்டேன்...... வெரி ஸாரி "

சில்பா அவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சல்யூட்டை கொடுத்துவிட்டு மெல்லச் சிரித்தாள்.

" ஸார்..... ! நீங்க இந்த "ஸாரி" என்கிற வார்த்தையை மென்ஷன் பண்ணக்கூடாது. ஏன்னா நீங்க எந்த நேரத்துல கூப்பிட்டாலும் வர வேண்டியது என்னோட ட்யூட்டி "

" இருந்தாலும் இந்த அகால வேளையில் உன்னைக் கூப்பிட கொஞ்சம் தயக்கமாய் இருந்த ஃபை த பை நீ எனக்கு கீழே பணி புரியற ஸ்டாஃபாய் இருக்கலாம். ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் நீ எனக்கு பிறக்காத மகள்"

" தேங்க்யூ ஸார்...... "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 15

" உட்காரம்மா,...... " சொன்ன வைத்யா சோபாவைக் காட்ட சில்பா உட்கார்ந்தாள்.

" ஏதாவது சாப்ட்றியாம்மா ? "

" ஒண்ணும் வேண்டாம் ஸார்...... நீங்க எதுமாதிரியான விஷயத்தை என்கிட்டே ஷேர் பண்ணிக்கப் போறீங்கங்கிற ஆர்வம் மட்டுமே இப்ப என்னோட மனசுல இருக்கு ஸார் "

" நானும் சி.பி.ஐ. டைரக்டர் ஹரிகோவிந்தும் நீயும் போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் சேர்ந்து அனுப்பின அந்த ரெட் டேப் ஃபைலைப் படிச்சுப் பார்த்துட்டு ஒரு சில நிமிஷங்கள் அதிர்ந்து போயிட்டோம். அந்த ஃபைலில் இருந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு விஷப்பாம்பு மாதிரி விபரீதமாயிருந்தது. இலவச திருமணங்கள் நடத்தி வெக்கிற ஈஸ்வர்கிட்டே ஏதோ பெரிய தப்பு இருக்கு. இறந்துபோன அந்த அஞ்சு ஜோடிகளில் ஒரு ஜோடியான கோலப்பன் பூங்கோதை விவகாரத்துல ஏதோ ஒரு விஞ்ஞான பயங்கரம் இருக்கிறதும் புரியுது. படிப்பறிவு இல்லாத கோலப்பன் அந்த " தி ஷெல்ஃபிஷ் ஜீன்" என்கிற புத்தகத்தையும், வாட்ச் மேக்கர் ஜீன் என்கிற புத்தகத்தையும் படிச்சிருக்கான். எல்லாத்துக்கும் மேலா இறந்துபோன அஞ்சு பெண்களுமே மூணு மாச கர்ப்பமாய் இருந்திருக்காங்க என்கிற விஷயத்தை கேட்டு சி.பி.ஐ. டைரக்டர் ஆடிப் போயிட்டார். ஒரு மணி நேரம் அவர் எதுவும் பேசாமே அசையாமே உட்கார்ந்திருந்தார். அவரை அப்படி ஒரு நிலைமையில் கடந்த 20 வருஷ காலத்துல ஒரு நாள் கூட பார்த்தது இல்லை. அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு என்னை அவர் கூப்பிட்டு இந்த கேஸ் விஷயமாய் டிஸ்கஸ் பண்ணி கடைசியில் அதிரடியான ஒரு முடிவைச் சொன்னார் "

" அதிரடியான முடிவா ....... ? "

" எஸ் "

" அப்படியென்ன முடிவு ஸார் ....... ? "

" ஈஸ்வரை உடனடியாய் கைது பண்ணி ரெட் செல்லுக்கு கொண்டு போய் வெச்சு தேர்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் கொடுத்து அவர்கிட்டயிருந்து உண்மைகளை வாங்கணும்ன்னு சொன்னார். அந்த வேலையைப் பண்ணத்தான் நான் வந்திருக்கேன் "

வைத்யா சொன்னதைக்கேட்டு அதிர்ந்தாள் சில்பா.

" ஸாரி ஸார் "

" எதுக்கம்மா ஸாரி ? "

" ஈஸ்வரை உடனடியாய் கைது பண்ணி விசாரிக்கிறது அவ்வளவு விவேகமான செயலாய் என்னோட மனசுக்குப்படலை ஸார் "

" ஏம்மா அப்படி சொல்றே ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 15

" ஸார்.... மிஸ்டர் ஈஸ்வர் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஊர் ஊரா போய் இலவசத் திருமணங்களை நடத்தி வெச்சிருக்கார். அதுக்கு ஆதாரம் இருக்கே தவிர அஞ்சு ஜோடிகள் மரணத்துக்கு காரணம் அவர்தான்னு சொல்றதுக்கு எந்தவிதமான ஒரு சின்ன எவிடென்ஸ் கூட இல்லையே ஸார் "

வைத்யா மெலிதாய் புன்னகைத்தார்.

" நீ சொல்றது சரிதான் சில்பா. நம்மகிட்டே அவரை குற்றம் சாட்டுகிற அளவுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லைதான். ஆதாரம் நமக்கு வேணுமின்னா அதை அவரோட வாயிலிருந்துதான் வரவழைக்க முடியும். அப்படி வரவழைக்கத்தான் அவரை அதிரடியாய் கைது பண்ணி ரெட் செல்லுக்கு கொண்டு போறோம்

"

சில்பா தயக்கமாய் குறுக்கிட்டாள்.

" ஸார்..... இஃப் யூ டோண்ட் மைண்ட் இந்த விஷயத்தில் நான் என்னோட கெஸ் வொர்க்கைச் சொல்லலாமா? "

" தாராளமாய் சொல்லும்மா "

" உங்களுக்கே தெரியும் ஈஸ்வர் சாதாரண ஒரு நபர் கிடையாது. இந்த சிட்டியில் இருக்கிற மிகப் பெரிய பணக்காரர்களில் அவரும் ஒருத்தர். அவர்க்கு ஒரு மகன், ஒரு மகள். ரெண்டு பேர்க்குமே கல்யாணமாகி அமெரிக்காவில் இருக்காங்க. மகன் ஒரு டாக்டர். புகழ்பெற்ற ஒரு ஹாஸ்பிடலை நிர்வகிக்கிற பொறுப்பை அந்த மாநில அரசாங்கம் கொடுத்திருக்கு. அதுவுமில்லாமே மருமகளும் டாக்டர். ஈஸ்வரோட மகளும், மருமகனும் பெரிய அளவில் ஸீ ஃபுட் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிட்டு வர்றாங்க. ஈஸ்வரோட மனைவியும் சாதாரணப்பட்டவங்க கிடையாது. வெளிநாட்டில் பொண்ணு மாப்பிள்ளையோடவே தங்கி அவங்க பண்ற பிசினஸீக்கு உறுதுணையாய் இருக்காங்க. அது தவிர .......... "

சில்பா பேசப்பேச வைத்யா இறுகிப்போன முகத்தோடு அவளைக் கையமர்த்தினார்.

" அதாவது ஈஸ்வரோட ஃபேமிலியை ஒரு மெஜஸ்டிக் ஃபேமிலின்னு சொல்ல வர்றே ? "

" ஆமா ஸார்...... அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரை நாம் கைது பண்ணினா அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே அவர் ஜாமீன்ல வெளியே வந்துடுவார். காரணம் அவர்மேல குற்றம் சாற்றக்கூடிய அளவுக்கு நம்மகிட்டே ஒரு சின்ன ஆதாரம் கூட கிடையாது. ஆதாரம் கிடைக்கிற வரை நாம கொஞ்சம் பொறுமையாய் இருக்க வேண்டியது அவசியம் ஸார் "

" சரி, ஆதாரம் எப்படி கிடைக்கும் ? "

" அதற்கான ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி பண்ணியிருக்காங்க ஸார். போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிற வளர்மதியும், ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்டில் ஒரு அதிகாரியாய் வேலை பார்க்கிற மனோஜூம் வெளியே யார்க்கும் தெரியாத முறையில் ரகசியமாய் ஈஸ்வரை ஸ்மெல் பண்ணிட்டு இருக்காங்க "

வைத்யா மென்மையாய் ஒரு புன்னகை பூத்தார். " அந்த ரெண்டு பேரினாலே எதையும் கண்டுபிடிக்க முடியாது"

" ஏன் ஸார் அப்படி சொல்றீங்க..... அந்த வளர்மதி ஒரு குடும்பப் பெண்ணாக இருந்தாலும் இது மாதிரியான இன்வெஸ்டிகேஷனில் ரொம்பவும் திறமைசாலி. ஏற்கனவே போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி கொடுத்த நாலைஞ்சு அசைன்மெண்ட்டை சக்சஸ்ஃபுல்லா முடிச்சிருக்கா"

" அது எனக்கும் தெரியும் சில்பா.... ஆனா ஈஸ்வரை ஸ்மெல் பண்ற இந்த இன்வெஸ்டிகேஷனில் வளர்மதியால் எதையும் பண்ண முடியாது "

" ஏன் ஸார் முடியாது ? "

" ஏன் முடியாதுன்னா..... கட்டுச்சோத்துக்குள்ளே எலி "

" எலியா ? "

" ம்...... அந்த எலி வேற யாருமில்லை.... அந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர் மனோஜ்தான்"

" என்ன ஸார் சொல்றீங்க ? " அதிர்ச்சியில் கண்கள் விரிய கேட்டுக் கொண்டே எழ முயன்று சில்பாவை கையமர்த்தினார் வைத்யா.

" உட்காரம்மா...... இந்த விஷயமே உனக்கு அதிர்ச்சியாய் இருந்தா இன்னும் நான் சொல்லப் போகிற விஷயங்களைக் கேட்டா அதையெல்லாம் நீ எப்படி தாங்கிக்கப்போறே ? "

" ஸார்...... வளர்மதியோடு சேர்ந்து இன்வெஸ்டிகேஷனை பண்ணப் போகிற மனோஜ் நம்பகரமான நபர் இல்லைன்னு சொல்ல

வர்றீங்களா? "

" ஆமா "

" இது உங்களுக்கு எப்படி ஸார் தெரியும் ? "

" ஒருத்தர் சொன்னார் "

" யார் ஸார் அது ? "

வைத்யா ஒரு கேலிப்புன்னகையோடு சொன்னார்.

" கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பார் சில்பா. அது யார்ன்னு உனக்கே தெரியும் "

சில்பா வியர்த்துப் போயிருந்த முகத்தோடு மெல்ல திரும்பிப் பார்த்தாள்.

சுவரோரமாய் இருந்த வார்ட்ரோப்பின் மறைவிலிருந்து சின்ன சிரிப்போடு வெளிப்பட்டான் மனோஜ்

- (தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X