• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஏய் சில்பா...... என்னாச்சு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (17)

|

- ராஜேஷ்குமார்

சில்பா உச்சபட்ச பதட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் தன்னுடைய செல்போனில் வளர்மதியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள மறுபடியும் அதே ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது.

நீங்கள் அழைக்கும் நபரின் எண்ணானது தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது

சில்பாவின் உள்மனம் எச்சரித்தது.

" போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியின் எண் தொடர்பில் இல்லை என்கிற விஷயமோ, வளர்மதியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப்பில் உள்ளது என்கிற உண்மையோ இந்த இரண்டு பேர்க்கும் தெரியக்கூடாது. மேற்கொண்டு என்ன செய்யலாம் ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 17

சில்பா யோசித்துக்கொண்டிருக்கும் போதே நர்மதாவின் நினைவு சட்டென்று மூளையை இடறியது. அவளுடைய எண்ணை செல்போனில் வேகமாய் ஒற்றி எடுத்தாள்.

அடுத்த விநாடியே மறுமுனையில் ரிங் போயிற்று. சில்பா வலது கையில் கண்ணாடி சில்லை ஒரு கத்தியைப்போல் பிடித்துக்கொண்டு மனோஜையும், வைத்யாவையும் மாறி மாறி பார்த்தபடி இடது காதுக்கு செல்போனை பொருத்தி நர்மதாவின் குரலுக்காக காத்திருந்தாள்.

மூன்றாவது ரிங் முடிந்திருந்த போது நர்மதாவின் குரல் கேட்டது.

" என்ன சில்பா..... போன வேலை முடிஞ்சுதா ? "

" இ....இ..... இல்லை நர்மதா ........ இனிமேல்தான் வேலையை ஆரம்பிக்கணும் "

" ஏய் சில்பா...... என்னாச்சு ஏன் இப்படி மூச்சு வாங்கிட்டு பேசறே.... ஏதாவது பிரச்சினையா ? "

" ஆ....ஆமா பிரச்சினைதான்..... இந்த ராத்திரி நேரத்துல என்னை வெளியே புறப்பட்டு போக வேண்டாம்ன்னு நீ சொன்னது எவ்வளவு ஆபத்துன்னு இப்ப தெரியுது "

" விஷயம் என்னான்னு சொல்லு "

" எல்லாத்தையும் விளக்கமாய் சொல்லிட்டிருக்க நேரமில்லை. முக்கியமான விஷயத்தை மட்டும் சொல்லிடறேன். என்னோட பாஸ் வைத்யாவும் சரி, ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிற மனோஜூம் சரி நல்லவங்க இல்லை..... ரெண்டு பேருமே கறுப்பு ஆடுகள். அந்த ஈஸ்வர்க்கு விசுவாசமாய் வாலை ஆட்டிகிட்டு இருக்கிற நாய்கள் "

" சி.....சி.....சில்பா..... நீ என்ன சொல்றே ? "

" எனக்கும் அதிர்ச்சிதான். நீ உடனடியாய் இப்ப பண்ண வேண்டிய வேலை என்ன தெரியுமா ? "

" சொல்லு ......"

" போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரிக்கும் வளர்மதிக்கும் போன் பண்ணிப் பார்த்தேன். ஒரு போன் நாட் ரீச்சபிள், இன்னொரு போன் ஸ்விட்ச் ஆஃப். ரெண்டு பேரையுமே என்னால காண்டாக்ட் பண்ண முடியலை. அதனால நீ உடனடியாய் உன் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்டே விபரம் சொல்லி ஒரு போலீஸ் டீமோடு ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்ல இருக்கிற பழைய ஜட்ஜ் பங்களாவுக்கு வந்துடு "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 17

" பழைய ஜட்ஜ் பங்களாவா ....... நீ சர்க்யூட் ஹவுஸூக்கு போறதாகத்தானே சொன்னே ? "

" இடத்தை மாத்தினதே வைத்யாதான் ...... "

" சில்பா ...... நீ பேசறதைப் பார்த்தா எனக்குப் பயமாய் இருக்கு. உன்னோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லையே ? "

" நீ போலீஸை கூட்டிகிட்டு வர வேகத்தையும் நேரத்தையும் பொறுத்துதான் நான் உயிரோடு இருப்பேனா இல்லையான்னு சொல்ல முடியும் .... "

" சில்பா..... நீ என்ன சொல்றே ? "

"பேசிட்டிருக்காதே..... போலீஸை கூட்டிகிட்டு உடனடியாய் வா.....இல்லேன்னா அவசர போலீஸீக்கு போன் பண்ணி விபரம் சொல்லு..... !"

" சரி...... நான் மொதல்ல அவசர போலீஸீக்கு போன் பண்ணிடறேன். பி-1 ஸ்டேஷன் பக்கத்து தெருதான். ஸ்கூட்டர்ல போனா ரெண்டே நிமிஷம்தான் "

" இந்த ரெண்டு பேரையும் எவ்வளவு நேரத்துக்கு சமாளிக்க முடியும்ன்னு எனக்குத் தெரியலை.... சீக்கிரமா வா "

சில்பா மூச்சிரைக்க பேசிவிட்டு செல்போனை அணைத்து இடுப்பில் செருகிக்கொண்டு வலது கையில் இருந்த கண்ணாடி சில்லை உயர்த்திப் பிடித்தாள். உண்மையிலேயே அது ஒரு கத்தி போல் பளபளத்தது.

இந்தப்பக்கம் மனோஜும், அந்தப்பக்கம் வைத்யாவும் சில்பாவையே பார்த்தபடி உறைந்து போய் நின்றார்கள்.

அறைக்குள் கனமான நிசப்தம் நிலவிக்கொண்டிருக்க மனோஜ் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டடி முன்னால் நகர்ந்து சில்பாவை நோக்கிப் போனான்.

தன்னுடைய இடது கையின் ஆட்காட்டிவிரலை உயர்த்தி எச்சரித்தாள் சில்பா.

" மனோஜ் .............. பக்கத்துல வராதே....... "

" என்ன..... கையில் நீளமாய் ஒரு கண்ணாடி சில்லை வெச்சுகிட்டா நான் பயந்துடுவேன்னு நினைச்சியா ? எங்கே குத்து பார்க்கலாம்"
சொல்லிக்கொண்டே மேலும் இரண்டடி முன்னால் வந்தான் மனோஜ்.

" டேய்...... பக்கத்துல வந்து என்னைக் கொலைகாரியாக்காதே...... ! "

மனோஜ் அவளை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்க வைத்யா காய்ந்து போன தொண்டையோடு பயக்குரல் கொடுத்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 17

" ம...ம...மனோஜ்...... பார்த்து ..... அவ வெறியோடு இருக்கா...... கையில இருக்கிறது கத்தியாய் இருந்தாக்கூட பரவாயில்லை.... ஷார்ப்பாய் இருக்கிற கண்ணாடிச் சில்லு "

" தெரியுது ஸார் .... ஆனா இனி பயந்துகிட்டு இப்படியே நின்னுட்டிருந்தா போலீஸ் கையில் மாட்டிக்குவோம். அந்த நர்மதா எப்படியும் போலீஸோடு இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வந்துடுவா.... முதல்ல இவ கதையை முடிப்போம் "

மனோஜ் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவன் கவனம் சிதறிய ஒரு மைக்ரோ விநாடியில் சில்பா ஒரு மின்னல் கீற்றுப்போல் செயல்பட்டாள்.

எதிர் சுவற்றில் தன் ஒரு காலை வைத்து சற்றே மேலே எம்பியவள் அரை வட்டமாய் சுழன்று இன்னொரு காலை உயர்த்தி மனோஜின் நடு மார்பில் "நெக்" கென்று ஓர் உதை விட்டாள். அந்த மூர்க்கமான உதையை சற்றும் எதிர்பார்க்காத மனோஜ் அந்தரத்தில் இரண்டு விநாடி பறந்து நாற்காலி மேல் விழுந்து அதை முடமாக்கிவிட்டு மல்லாந்தான். மூக்கும் உதடும் எதன் மீதோ மோதிக் கொண்டதில் வாய்க்குள் புளிப்பாய் ரத்தம் ஊறியது.

ரத்தத்தை உமிழ்ந்துவிட்டு ஆத்திரம் தலைக்கேற ஒரு நேர்கோடாய் எழுந்து நின்றான் மனோஜ். ஒரு பெண்ணிடம் அடி வாங்கியதில் தன்மானம் சிதைந்து போயிருந்தது. சில்பாவை நோக்கி மறுபடியும் கோபமாய் நடக்க முயன்ற விநாடி வைத்யா பதட்டத்தோடு குரல் கொடுத்தார்.

" மனோஜ்........... ! அவளுக்கு கராத்தே தெரியும். ப்ளாக் பெல்ட் ஹோல்டர். பி... கேர்ஃபுல்...... "

மனோஜ் இப்போது மிரண்டு போனவனாய் மெல்ல பின்வாங்கினான். வைத்யாவும் பக்கவாட்டில் நகர்ந்து வந்து மனோஜோடு ஒண்டிக்கொண்டார்.

சில்பாவுக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி இப்போது அதிகமாயிருக்க வைத்யா மனோஜீக்கு மட்டும் கேட்கும் தொனியில் அவனுடைய காதோரமாய் முணுமுணுத்தார்.

" மனோஜ் ...... சில்பாவை கையாள்கிற விஷயத்தில் கொஞ்சம் அலட்சியமாய் இருந்துட்டோம். என்னோட ரிவால்வர் பக்கத்து ரூம்ல இருக்கிற என்னோட ப்ரீப்கேஸ்ல இருக்கு. ஆனா இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு உன்னாலேயும் சரி, என்னாலேயும் சரி நகர முடியாது போலிருக்கே "

மனோஜூம் கிசுகிசுத்தான். "ஸார்..... நான் அவளை ஹேண்டில் பண்றேன்.... நீங்க பக்கத்து ரூமுக்கு மெல்ல மூவ் பண்ணிப்போய் ரிவால்வரை எடுத்துட்டு வந்துடுங்க " மனோஜ் சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தனக்குப் பின்புறம் இருந்த பாலிவினைல் ஸ்டூலை எடுத்துக்கொண்டான். அதை ஒரு கேடயமாய் பாவித்து முன்புறம் நீட்டிக்கொண்டே சில்பாவை நோக்கிப்போனான். இரண்டடி எடுத்து வைத்திருப்பான்.

அதே விநாடி சில்பாவும் கண்ணாடி சில்லை உயர்த்திப் பிடித்துக்கொண்டு மறுபடியும் அரை வட்டமாய் சுழன்று எம்பி இடது காலால் மனோஜின் கையில் இருந்த ஸ்டூலை எட்டி உதைத்தாள். அது எகிறிப்போய் விழ மனோஜ், வைத்யா இருவரும் நிலைமையை உணர்ந்து சுதாரிப்பதற்குள் வைத்யாவின் முதுகை எதுவோ நெருடியது.

திடுக்கிட்டுப் போனவராய் திரும்பிப் பார்த்தார்.

சில்பா நின்றிருப்பது தெரிந்தது. நடுமுதுகில் கண்ணாடி சில்லின் கூர்மை சற்றே கடினமாய் பதிந்து "சுரீர்" என்ற உணர்வை கொடுக்க சில்பா அவருடைய காதோரமாய் பேசினாள்.

" ஸாரி ஸார்.... நான் இப்போ "ஆன் ட்யூட்டி"யில் இருக்கேன். நீங்க என்னைத் தாக்க முயற்சி பண்ணினாலோ மனோஜ் இப்ப நின்னுட்டிருக்கிற இடத்தை விட்டு ஒரு அங்குலம் அசைஞ்சாலோ உங்க முதுகுல பதிஞ்சிருக்கிற கண்ணாடித் துண்டு உங்க தண்டுவடத்தை அறுத்துடும் "

வைத்யா கிட்டத்தட்ட அலறினார்.

" வே....வேண்டாம் சில்பா..... என்னை ஒண்ணும் பண்ணிடாதே......! "

" நான் உங்களை ஒண்ணும் பண்ணாமே இருக்கணும்ன்னா உங்க பார்ட்னர் கறுப்பு ஆடு மனோஜ் கத்தாமே இருக்கணும். அவன் ஒரு மில்லி மீட்டர் அசைந்தாலும் சரி இந்த கண்ணாடித் துண்டு உங்க முதுகுக்குள்ளே ஒரு செண்டி மீட்டர் உள்ளே போயிடும் "

வைத்யா மனோஜை பார்த்து பதட்டமாய் குரல் கொடுத்தார். குரலில் எவரெஸ்ட் குளிர்.

" மனோஜ் ........ கொஞ்ச நேரம் பேசாமே இரு..... என்னைக் காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்காதே ......! "

அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சில்பாவின் செல்போன் தன்னுடைய ரிங் டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். மறுமுனையில் நர்மதா காத்திருந்தாள்.

" என்னாச்சு நர்மதா? "

" போலீஸோடு வந்துட்டிருக்கேன்... இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஸ்டேஷன்ல இருந்தார். பிரச்சினையை சொன்னதும் நாலு கான்ஸ்டபிள்களோடு புறப்பட்டுட்டார். நானும் இப்ப ஜீப்லதான் இருக்கேன்..... இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள அங்கே இருப்போம். உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே ? "

" இல்லை...... வைத்யா, மனோஜ் ரெண்டு பேரும் இப்ப என்னோட கஸ்ட்டியில்தான் இருக்காங்க. மூச்சு விட மட்டும்தான் அவங்களுக்கு பர்மிஷன் கொடுத்து இருக்கேன் "

" குட் ஜாப்"

" சீக்கிரமா வா..... பாராட்டெல்லாம் அப்புறம் "

" பத்தே நிமிஷம் ..... இப்போ டி.பி.ரோட்ல இருக்கோம் ......! "

-----

சரியாய் பத்து நிமிஷம்.

சில்பாவுக்கு அந்த பங்களாவின் வெளியே ஒரு வாகனம் வேகமாய் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஹெட்லைட் வெளிச்சம் ஜன்னல் கண்ணாடிகளில் பட்டு விலகியது.

வந்துவிட்டார்கள்.

வைத்யா, மனோஜ் பீதி உறைந்து போன முகங்களோடு அசையாமல் நின்றிருக்க மாடிப்படிகளில் காலடிச் சத்தம் தபதபவென்று கேட்டது.
சில்பா காத்திருந்தாள்.

அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்தில் அறையின் கதவைத் திறந்து கொண்டு நர்மதா உள்ளே வந்தாள்.

"வா நர்மதா" என்றவளின் பார்வை அவளுக்குப் பின்பக்கம் போயிற்று.

யாரும் இல்லை.

" நர்மதா ..... இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் எங்கே ..... நாலு கான்ஸ்டபிள்களோடு வந்துட்டு இருக்கிறதாய் சொன்னே? "

" ஸாரி மேடம்.... நர்மதா சொன்னது பொய்"

அறையின் வாசல் அருகே ஆண் குரல் கேட்டு சில்பா அதிர்ந்து போனவளாய் திரும்பிப் பார்த்தாள்.

ஈஸ்வர்.

- (தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X