For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீயுமா ? ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (18)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஈஸ்வரைப் பார்த்ததும் சில்பாவின் கரிய விழிகளில் அதிர்ச்சி ஒரு திடப்பொருளைப் போல் மாறி அப்படியே உறைந்து போயிற்று.

ஈஸ்வர் அவளை ஒரு சின்ன புன்னகையில் நனைத்தபடி பேசினார்.

" என்னம்மா சி.பி.ஐ.... ! ஒரு கண்ணாடி சில்லை எல்லாம் கையில் வெச்சுகிட்டு வீரத்தைக் காட்டக்கூடாதும்மா. அது ரொம்ப நேரத்துக்கு உபயோகப்படாது. அதை அப்படியே ஒரமாய் தூக்கிப்போடம்மா...... " என்று சொன்னவர் தான் அணிந்திருந்த ஷெர்வாணி பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து பக்கத்தில் நின்றிருந்த நர்மதாவிடம் நீட்டினார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 18

" இந்தாம்மா நர்மதா...... உன்னோட உயிர்த்தோழியை நீயே ஹேண்டில் பண்ணு...... ! "

நர்மதா அந்த கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு இறுகிப்போன முகத்தோடு சில்பாவை குறி பார்த்தாள்.

" சில்பா ட்ராப் தட் பீஸ் ஆஃப் க்ளாஸ் "

சில்பாவின் பார்வை நர்மதாவின் முகத்தில் ஆணியடித்தாற்போல் நிலைத்தது. வார்த்தைகள் உதிர்ந்தது.

" ந....ந..... நர்மதா....... நீயுமா ? "

நர்மதாவின் உதடுகளில் ஒரு சிரிப்பு பரவியது. "ஸாரி சில்பா இது கலியுகம். இந்த யுகத்துல அம்மாவையும் அப்பாவையும் வேற யாரையும் நம்பக்கூடாதுன்னு பகவத் கீதையில் கிருஷ்ணனே சொல்லியிருக்கார். உனக்கு அதையெல்லாம் படிக்க நேரம் இருந்திருக்காது. இனிமேல் படிச்சும் பிரயோஜனம் இல்லை. அந்த கண்ணாடி சில்லை அப்படி ஒரமா போட்டுட்டு மண்டி போட்டு உட்கார். இப்ப செய்ய வேண்டிய வேலை அது ஒண்ணுதான்"

" ந....ந..... நர்மதா...... ! " இன்னமும் வியப்பு அகலாத விழிகளோடு சில்பா அவளையே பார்க்க ஈஸ்வர் சிரித்தார்.

" என்னம்மா சி.பி.ஐ. சில்பா... ! இப்படியே ஆச்சர்யப்பட்டுகிட்டு இருந்தா எப்படீம்மா....... ? இன்னமும் நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கு. அதுக்கு நீ கொஞ்ச நாளாவது உயிரோடு இருக்கணும். அப்படி நீ உயிரோடு இருக்கணும்ன்னா நாங்க சொன்னபடி கேட்கணும். எங்களுக்கு நீ பயப்படாமே போனாலும் பரவாயில்லை. நர்மதாவோட கையில் இருக்கிற துப்பாக்கிக்காவது பயப்பட்டாகணும்.. "

சில்பாவின் முகத்தில் அதுவரைக்கும் இருந்த அதிர்ச்சி சிறிது சிறிதாய் அகன்று ஒருவித துணிச்சல் அரும்பியது. கையில் இருந்த கண்ணாடி சில்லை உயர்த்திக்கொண்டு சற்றே பின்வாங்கி நின்றாள். மூச்சிரைக்க பேசினாள்.

" நர்மதா...... என்னோட அம்மாவும், அப்பாவும் உயிரோடு இருந்த வரைக்கும் அவங்களை மட்டும் நம்பினேன். அவங்க ரெண்டு பேரும் இறந்த பிறகு நான் நம்பினது உன்னை மட்டும்தான். ஆனா நீயும் இப்ப துப்பாக்கியும் கையுமாய் எனக்கு முன்னாடி நின்னுட்டிருக்கே...... இப்ப நான் நம்பறது என் கையில் இருக்கிற இந்த கண்ணாடி சில்லை மட்டும்தான்..... ஒண்ணு நீ என் கையால கிழிபட்டு சாகணும். இல்லேன்னா உன் கையில் இருக்கிற துப்பாக்கி தோட்டாவுக்கு நான் பலியாகணும்.... வா....... "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 18

சில்பா சொல்லிக்கொண்டே இரண்டடி முன்னால் வந்து உடலை எம்பி அதை அரை வட்டமாய் சுழல வைத்து நர்மதாவை நோக்கி பாய முயன்ற விநாடி அவளுடைய கையில் இருந்த துப்பாக்கி விநாடிக்கும் குறைவான நேரத்தில் செயல்பட்டது.

"டப்ப்ப்" என்று ஒரு சிறிய சத்தம். "துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா இவ்வளவு குறைவான சத்தத்தோடு வெளிப்படாதே" என்று சில்பா வியப்பாய் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளுடைய தோள்பட்டையில் ஊசி போட்ட தினுசில் எதுவோ சட்டென்று பாய்ந்து சொருகி நின்றது.

சில்பா தோளைப் பார்த்தாள்.

இரண்டு அங்குல நீளத்தோடு கண்ணாடி உடம்போடு கூடிய சிரிஞ்ச் ஊசியொன்று வலது தோள்பட்டையில் புதைந்து லேசாய் அசைந்து கொண்டிருந்தது.
சில்பாவுக்கு உடனே புரிந்தது. " இது ஒரு ட்ராங்குலைசர் ஊசி "

சில்பா அந்த ஊசியை பிடுங்கி எறிய முயன்ற விநாடியே அவளுடைய தலை சுழல்வது போல் இருந்தது. இரண்டு கண்களுக்குள்ளும் சட்டென்று இருட்டு பாய்ந்து கண்ணிமைகள் இரண்டும் வலுக்கட்டாயமாய் சாத்தப்பட அறுபட்ட ஒரு தோரணமாய் சரிந்து, ஒரு பக்கமாய் சாய்ந்து பிறகு ஸ்லோமோஷனில் மல்லாந்தாள்.

மனோஜ் பக்கத்தில் வந்து சில்பாவின் கையில் இருந்த கண்ணாடி சில்லை ஜாக்கிரதையாய் அகற்றிவிட்டு சொன்னான்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 18

" கொஞ்ச நேரமேயானாலும் மிரட்டிட்டா ஸார் "

வைத்யா வியர்த்த முகத்தோடு வந்தார்.

"நடுங்கிட்டோம் ஸார் "

ஈஸ்வர் மெல்ல நடந்து போய் சோபாவுக்கு சாய்ந்துகொண்டு தன் செல்போனை எடுத்து ஒரு எண்ணைத் தட்டிவிட்டு பேசினார்.

" அபுபக்கர் "

" சொல்லு ஈஸ்வர்...... பெண்புலியை மடக்கியாச்சா ? "

ஈஸ்வர் சிரித்தார்.

" சில்பா என்கிற பெண்புலி இப்போ சுய உணர்வு இல்லாமே மல்லாந்து விழுந்திருக்கு..... "

" அதை நம்ம இடத்துக்கு எப்போ கொண்டுட்டு போகப்போறோம்? "

" இனிமே அடுத்தகட்ட வேலைகள் அதுதான் "

" சில்பாவோட ஃபரண்ட் நர்மதாவுக்கு நாம கொடுத்த 50 லட்ச ரூபாய் நமக்கு எவ்வளவு விசுவாசமாய் வேலை பார்த்திருக்குன்னு இப்பவாவது உனக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் "

" நீ சொல்றது எப்பவும் சரியாத்தான் இருக்கும் அபு. நீ சொல்லி நான் எதை செய்யாமே விட்டிருக்கேன். நம்ம ப்ராஜெக்ட் என்கிற செஸ் ஆட்டத்தில் நீ சொல்றபடிதான் காய்களை மூவ் பண்ணிட்டிருக்கேன் "

" சரி..... நாளைக்குக் காலையில் செம்மேடு ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸூக்கு வந்துடறேன். மத்தியானம் அங்கேதான் எனக்கு லஞ்ச்.... மாதப்பன்கிட்டே சொல்லி மான்கறிக்கு ஏற்பாடு பண்ணு "

" வா....அபு.... மாதப்பனே ரெண்டு மான்களை வளர்த்துட்டு வர்றான். இளசா எது இருக்கோ அதைப் போட்டுடலாம் "

ஈஸ்வர் பேசிவிட்டு சி.பி.ஐ. ஆபீஸர் வைத்யாவை ஏறிட்டார்.

" என்ன ஸார்..... இன்னும் வேர்த்து வழிஞ்சுட்டு இருக்கீங்க ? சில்பா இன்னும் ஒரு பனிரெண்டு மணி நேரத்துக்கு இப்படித்தான் கிடப்பா. நாளைக்குக் காலையில் பத்து மணிக்குத்தான் கண்விழிப்பா.. !"

வைத்யா அவஸ்தையாய் சிரித்து வைத்தார். " எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மிஸ்டர் ஈஸ்வர் "

" என்ன ? "

" சில்பாவை ஒரேயடியாய் தீர்த்து டிஸ்போஸ் பண்றதை விட்டுட்டு எதுக்காக ட்ராங்குலைசர் ஊசி போட்டு இப்படி ... ? "

" மயக்கத்துக்கு கொண்டு போயிருக்கீங்கன்னு கேட்கறீங்க இல்லையா ? "

" ஆமா ஸார் "

" சில்பா இன்னும் ஒரு மூணு மாச காலத்துக்கு உயிரோடு இருக்கிறது அவசியம் "

" எ.... எ....எதுக்காக உயிரோடு இருக்கணும் ? "

" போகப் போக உங்களுக்கே தெரியும் "

----

மறுநாள் காலை பதினோரு மணி

போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குள் தன்னுடைய ஸ்கூட்டியை பார்க்கிங் என்று சொன்ன இடத்தில் நிறுத்திவிட்டு லிஃப்டில் உயர்ந்து கமிஷனர் திரிபுரசுந்தரி இருந்த அறைக்குள் மெதுவாய் எட்டிப் பார்த்தாள் வளர்மதி.

ப்ளாஸ்கில் இருந்த டீயை பீங்கான் கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்த திரிபுரசுந்தரி வளர்மதியைப் பார்த்ததும் புன்முறுவலோடு

" வா..... உள்ளே " என்றாள்.

"குட்மார்னிங் மேடம் "

"குட்மார்னிங் வா..... டீ சாப்பிடலாம் "

" தேங்க்ஸ் மேடம்..... ஒரு அரை கப் போதும் "

வளர்மதி சொல்லிக்கொண்டே திரிபுரசுந்தரிக்கு எதிரே இருந்த காலி இருக்கைக்கு சாய்ந்தாள்.

" சரியான வெயில் மேடம் "

" என்ன இன்னிக்கு ஆபீஸ் இல்லையா ? "

" ஒரு கஸ்டமரைப் பார்த்து பேசறதுக்காக ஆன் ட்யூட்டியில் வந்தேன் மேடம்.... அப்படியே உங்களையும் பார்த்து ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன் "

திரிபுரசுந்தரி பாதி நிரம்பிய டீ கோப்பையை வளர்மதியிடம் நீட்டிக் கொண்டே கேட்டாள்.

" உனக்கு சில்பாகிட்டயிருந்து ஏதாவது போன் வந்ததா ? "

" இல்ல மேடம்..... "

" நான் இன்னிக்கு காலையில் இருந்து நாலைஞ்சு தடவை போன் பண்ணிப் பார்த்துட்டேன். போன் நாட் ரீச்சபிள்ன்னு வருது..... "

" நான் இப்ப போன் பண்ணிப் பார்க்கட்டுமா மேடம்..... !"

" ம்..... பண்ணு "

வளர்மதி தன்னுடைய கைப்பையைத் திறந்து செல்போனை எடுத்து சில்பாவின் எண்ணை தொடர்பு கொண்டாள்.

மறுமுனை மெளனம் சாதித்தது.

வளர்மதி சில விநாடிகள் காத்திருந்து பார்த்துவிட்டு திரிபுரசுந்தரியை ஏறிட்டாள்.

"மேடம்.... எந்த ரெஸ்பான்ஸீம் இல்லை "

" எனி ரெக்கார்டட் வாய்ஸ் ? "

" எதுவுமே இல்லை "

" சில்பாவோட போன்ல ஏதாவது ப்ராப்ளம் இருக்கலாம். சில்பா எங்கே ஸ்டே பண்ணியிருந்தாங்கன்னு தெரியுமா உனக்கு ? "

" தெரியும் மேடம். ஆர்.எஸ்.புரத்துல நர்மதான்னு ஒரு ஃப்ரண்ட் இருக்கிறதாகவும் அந்தப் பொண்ணோட வீட்லதான் ஸ்டே பண்ணியிருக்கிறதாகவும் என்கிட்டே சொன்னாங்க "

" அந்த நர்மதாவோட போன் நெம்பர் உன்கிட்டே இருக்கா ? "

" இல்லை மேடம்.... ஆனா அவங்க ஃப்ரண்ட்டோட வீடு இருக்கிற லேண்ட்மார்க் எனக்குத் தெரியும் "

" எங்கே ? "

" பாஷ்யகார்லு ரோட்ல பீட்சா ஜங்க்சன்னு ஒரு கடையிருக்கு. அந்தக் கடையிலிருந்து நாலாவது வீடு "

" வளர்மதி.... நீ மொதல்ல டீயைக் குடி. அப்புறம் எனக்காக ஒரு வேலை செய் "

" சொல்லுங்க மேடம் "

" உளவுத்துறையிலிருந்து சீஃப் டைரக்டர் ராதேஷ்யாம் எனக்கு போன் பண்ணி சில்பாகிட்டே ஒரு விஷயத்தை ஷேர் பண்ணிக்கச் சொல்லியிருக்கார். நான் சில்பாகிட்டே பேசியாகணும். நீ நேர்ல போய்ப் பார்த்து விபரம் சொல்றியா ? "

" இதோ கிளம்பிடறேன் மேடம் "

டீ கோப்பையை வளர்மதி கையில் எடுத்துக்கொண்ட நேரம் திரிபுரசுந்தரியின் செல்போன் ரிங்டோனை மெலிதாய் வெளியிட்டது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு " எஸ் " என்றாள்.

மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.

" மேடம்.... நான் ஷேடோ புலனாய்வு பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் புகழேந்தி பேசறேன் மேடம் "

" தெரியுது சொல்லுங்க "

" மேடம்..... ஒரு சின்ன க்ளாரிஃபிகேஷனுக்காகத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன். ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் மேடம் "

" அதுதான் போன் பண்ணிட்டீங்களே.. அப்புறம் என்ன ? விஷயம் என்னான்னு சொல்லுங்க "

" மேடம்..... போன மாசம் உங்க கிட்டே பேட்டி எடுக்கும்போது நான் ஒரு கேள்வி கேட்டேன். பிரகாசம் ரோட்ல இருக்கிற பழைய ஜட்ஜ் பங்களாவை அரசு அதிகாரிகளுக்கோ, வி.ஐ.பி.களுக்கோ தங்கறதுக்காக அனுமதிக்கிறது இல்லைன்னு சொன்னீங்க ? "

" ஆமா "

" இப்ப அந்த அனுமதி விவகாரத்துல ஏதாவது மாறுதல் பண்ணியிருக்கீங்களா ? "

" இல்லை.....யாராக இருந்தாலும் அங்கே தங்க அனுமதியில்லை !"

" அப்படீன்னா நேத்து ராத்திரி அந்த பழைய ஜட்ஜ் பங்களாவில் தங்கியிருந்தது யார் மேடம் ? "

- (தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 ]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X