• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன ராயப்பா.... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (20)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் ஒலித்த பேச்சைக் கேட்டு விட்டு ராயப்பன் மெளனம் சாதிக்க, திரிபுரசுந்தரி ராயப்பனை ஏறிட்டு மேற்கொண்டு பேசும்படி சைகை காட்டினாள்.

ராயப்பன் வியர்த்த முகமாய் பேச ஆரம்பித்தான்.

" அது வந்து வந்து......... "

செல்போனின் மறுமுனையில் குரல் சிரித்தது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 20

" என்ன ராயப்பா..... ராத்திரி குடிச்ச விஸ்கி இன்னமும் ரத்தத்துல இருக்கா...... பேச்சே வரமாட்டேங்குது. பேசின அமெளண்ட்டை அந்த சுந்தரமூர்த்தி உனக்குக் கொடுத்தானா இல்லையா ? "

ராயப்பன் எச்சில் விழுங்கிவிட்டு மெள்ளமாய் தயக்கக் குரலில் பேசினான்.

" ம்.... குடுத்தான் "

" கமிஷன் ஏதாவது எடுத்துகிட்டானா ? "

" இல்ல... பேசின தொகையை குடுத்துட்டான் "

" இருபதாயிரம்தானே ? "

" ஆமா "

" உனக்கு இப்ப சந்தோஷம்தானே ? "

" ம் "

" உனக்கு இன்னிக்கு என்னாச்சு ராயப்பா ? நான் எப்ப போன் பண்ணினாலும் என்னை பேசவிடாமே அடைமழை மாதிரி நீயே கொட்டித்தீர்ப்பே..... இன்னிக்கு குரலே மேலே எழும்பாமே பேசிட்டிருக்கே...... உனக்கு வரவேண்டிய பணம் கம்மியாய் இருக்கேன்னு ஃபீல் பண்றியா...... ? அடுத்ததா சூலூர்ல ஒரு பெரிய பார்ட்டியோட 150 ஏக்கர் தென்னந்தோப்பு ஸேலுக்கு வருது. நீயும் நானும்தான் டீல் பண்ணப்போறோம். உனக்குத்தெரிஞ்ச அந்த நீலம்பூர் பார்ட்டிக்கிட்டே பேசிப்பாரு. பார்ட்டி படிஞ்சுதுன்னா உனக்கு ரெண்டு பர்ஸண்ட் கமிஷன் சேர்த்துக் குடுத்துடறேன். இந்த தடவை நடுவுல வந்த ஒரு புரோக்கர்க்கு ஒரு பர்சண்ட் கமிஷன் கொடுக்க வேண்டியதாயிடுச்சு. அதான் உனக்கு கொடுக்க வேண்டிய கமிஷன்ல கை வெச்சுட்டேன். தப்பா எடுத்துக்காதே. நான் ஊருக்கு போய்ட்டு வந்த பின்னாடி உன்னை வந்து பார்க்கிறேன்"

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 20

செல்போனின் உரையாடல் முடிந்து போயிருக்க திரிபுரசுந்தரியும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபனும் ஏமாற்றம் படிந்த முகங்களோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

சடகோபன் ராயப்பனை நெருங்கி அவனுடைய முகத்தை உன்னிப்பாய் பார்த்தபடி கேட்டார்.

" இப்ப போன்ல பேசின நபர் யாரு ? "

" என்னோட ஃப்ரண்ட் மரியதாஸ் ஸார். ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றான். நிலம் வாங்க விருப்பப்படற பார்ட்டீஸை அவன்கிட்டே கூட்டிட்டு போய் விட்டா அவன் எனக்கு கமிஷன் கொடுப்பான் "

" செக்யூரிட்டி வேலையைத் தவிர இந்த லேண்ட் புரோக்கர் வேலையையும் பார்க்கிறே போலிருக்கு ? "

" ஆமா ஸார்...... ஃபேமிலி பெரிசு. வீட்ல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடம்பு முடியலை..... வைத்திய செலவு அதிகம் அதனால இப்படி சைடுல.... "

" சரி..... நீ என்னமோ பண்ணிட்டு போ...... நான் இப்ப கேட்கப் போகிற கேள்விக்கு மட்டும் உண்மையான பதிலைச் சொல்லு... நேத்து ராத்திரி இந்த பங்களாவுக்குள்ளே உங்க ரெண்டு பேரைத்தவிர வேற யார் இருந்தாங்க ? "

" யாரும் இல்ல ஸார்..... நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் இருந்தோம் "

சடகோபனின் பார்வை இப்போது பக்கத்தில் இருந்த இன்னொரு செக்யூரிட்டியான ரஹ்மானின் மேல் பதிந்தது.

" நீ சொல்லு..... நேத்து ராத்திரி இந்த பங்களாவில் யாரைத் தங்க வெச்சீங்க ? "

ரஹ்மான் பதட்டமாய் பேசினான். " இந்த பங்களாவுக்குள்ளே யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாதுங்கிற விதிமுறை இருக்கும்போது நாங்க எப்படி ஸார் அந்நியர்களை தங்க வைப்போம் "

திரிபுரசுந்தரி குறிக்கிட்டாள்.

" இப்படியெல்லாம் பதில் சொல்லி நீங்க ரெண்டு பேரும் தப்பிக்க முடியாது. நேத்து ராத்திரி இந்த பங்களாவுக்குள்ளே வேற்று ஆட்கள் நடமாட்டம் இருந்ததை ஒருத்தர் பார்த்திருக்கார். அவர் பொய் சொல்லக் கூடியவர் இல்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த பங்களாவுக்குள்ளே யாரையாவது தங்க அனுமதிச்சிருந்தா இப்பவே இதே இடத்துல உண்மையைச் சொல்லிடுங்க. இல்லேன்னா ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் லாக்கப்புக்குள்ளே வெச்சு எப்படி விசாரிக்கணுமோ அப்படி விசாரிக்க வேண்டி வரும் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 20

ராயப்பனும் ரஹ்மானும் பதறிப் போனவர்களாய் கையெடுத்து கும்பிட்டார்கள். ராயப்பன் அழுகிற குரலில் பேசினான். " மேடம்..... நாங்க ரெண்டு பேரும் பணம் காசுக்கு ஆசைப்பட்டு அப்படிப்பட்ட காரியத்தை பண்ணமாட்டோம். எங்க புள்ளைங்க மேல சத்தியமா...... நேத்து இந்த பங்களாவில் யாரையும் தங்க வைக்கலை"

" நிஜமாத்தான் சொல்றீங்களா ? "

" ஆமா மேடம் "

சரி..... வீட்டுக் கதவைத் திற..... உள்ளே போய் பார்ப்போம். கடைசியா வீட்டுக்குள்ளே போய் எப்ப சுத்தம் பண்ணீங்க ? "

" போன ஞாயிற்றுக்கிழமை "

" அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேர்ல யாரும் உள்ளே போகலையா? "

" போகலை மேடம் "

" சரி.... டோரை ஒப்பன் பண்ணு "

ராயப்பன் பக்கத்து அறைக்கு ஒடிப்போய் சாவிக் கொத்தை எடுத்து வந்து அதில் இருந்த ஒரு சாவியின் மூலம் பிரதான கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்தான்.

சடகோபன் முதல் ஆளாய் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார். எல்லா ஜன்னல்களும் சாத்தப்பட்டு இருந்ததால் அந்த பகல் நேரத்திலேயே அறைக்குள் அரையிருட்டு பரவியிருந்தது. சுவரில் ஸ்விட்ச் போர்ட்டைத் தேடி பட்டன்களைத் தட்ட இரண்டு ட்யூப் லைட்டுகள் மட்டும் உயிர் பிடித்துக்கொண்டு அறைக்குள் வெளிச்சத்தை நிரப்பியது.

திரிபுரசுந்தரியும் சடகோபனும் அந்த அறையை மெதுவான நடையில் சுற்றிப் பார்த்துவிட்டு மாடிப்படிகளை நோக்கிப் போனார்கள். அவர்களுக்கு முன்பாகவே ராயப்பன் வேகமாக மாடிப்படிகளில் ஏறி வராந்தாவில் இருந்த எல்லா சாத்தப்பட்ட அறைகளையும் சாவிக்கொத்தில் இருந்த சாவிகளையும் உபயோகித்து திறந்து வைத்தான்.

ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து பார்வையை சுழலவிட்ட சடகோபன் சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு அறையின் கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்த விநாடி சட்டென்று நின்றார். திரிபுரசுந்தரியை பார்த்தார்.

" மேடம் "

" என்ன ? "

" உங்களால ஏதாவது ஸ்மெல் பண்ண முடியதா ? "

" எஸ்..... லிக்கர் ஸ்மெல் மே....பி.....பிராந்தி ஆர் விஸ்கி...? "

" நேத்து ராத்திரி இங்கே வந்தவங்க இந்த அறையைத்தான் யூஸ் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்" என்று சொன்ன சடகோபன் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த ராயப்பனையும் ரஹ்மானையும் ஒரு ஊசிப்பார்வை பார்த்தபடி கேட்டார்.

" என்ன சரக்கு வாசனை வருதா ...? "

" ம்.....ம்..... வ...வ....வருது ஸார் "

" எப்படி ...? "

ரஹ்மான் படபடத்தான். " தெ,,,தெ,,,,,தெரியலை ஸார்.... நானும் ராயப்பனும் லிக்கர் சாப்பிடறதாய் இருந்தா கீழே போர்ட்டிகோ படிகளிலேயே உட்கார்ந்து சாப்ட்ருவோம் ஸார்.... வீட்டுக்குள்ளே வந்து இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை ஸார் "

" நீங்க ரெண்டு பேருமே இங்கே வரலைன்னா வேற யாரோ இங்கே வந்து இருக்காங்கன்னு தெரியுது. உங்களுக்குத் தெரியாமே அவங்க எப்படி வந்தாங்க...? "

" தெ,,,தெ,,,,,தெரியலை ஸார் "

" தெரியலையா ? இன்னும் கொஞ்ச நேரத்துக்குத்தான் இப்படி தெரியலை, தெரியலைன்னு சொல்லிட்டிருக்க முடியும். அப்புறம் தெரியும்ன்னு சொல்ற கட்டாயம் வரும்......" சடகோபன் சொல்லிக்கொண்டே போய் வெளிச்சம் உள்ளே வருவதற்காக ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க சூரிய வெளிச்சம் உள்ளே பாயந்தது.

ரஹ்மான், ராயப்பன் இருவரின் முகங்களும் வெளிறிப்போயிருக்க, சடகோபனின் பார்வை அறை பூராவும் பரபரவென்று அலைந்தது. திரிபுரசுந்தரி அறையோடு "அட்டாச்" செய்யப்பட்டிருந்த பாத்ரூம் கதவை திறந்து பார்த்துவிட்டு "சடகோபன்" என்று கூப்பிட்டாள்.

" மேடம்....! "

" நோ டவுட் இந்த அறையை நிச்சயமாய் யூஸ் பண்ணியிருக்காங்க. பாத்ரூமோட ஃபளோர் ஈரமாயிருக்கு ! போன சண்டேதான் வீட்டை சுத்தம் பண்ணியிருக்காங்க. இப்போ எப்படி ஈரம் இருக்கும்.... ? "

சடகோபனின் பார்வை மறுபடியும் ராயப்பன், ரஹ்மான் மேல் சந்தேகமாய் பாய, ராயப்பன் உடல் நடுக்கத்துடன் முன்னால் வந்தான்,

" ஸ...ஸார்.....இப்பத்தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது...! "

" என்ன .... ? "

" ஸார்..... நேத்து ராத்திரி நானும் ரஹ்மானும் வெளியே போர்டிகோ படிகள்ல உட்கார்ந்துட்டு சரக்கு சாப்பிட்டோம். அப்போ ஒன்பது மணி இருக்கும். சரக்கு சாப்பிட்ட கையோட சாப்பாட்டையும் முடிச்சுகிட்டு வழக்கம் போல ரெண்டு பேரும் படுத்துத் தூங்கற ரூமுக்குப் போனோம். ரஹ்மான் படுத்த கொஞ்ச நேரத்துக்குள்ளே தூங்கிட்டான். எனக்கு அரைகுறைத் தூக்கம். அந்த அரைகுறைத் தூக்கத்திலேயும் ரூமுக்குள்ளே ஒரு வாசனை அடிக்கிறதை தெரிஞ்சது. அது என்னான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக எந்திரிக்க முயற்சி பண்ணினேன். ஆனா என்னால எந்திரிக்க முடியலை. கண்ணெல்லாம் இருட்டிகிட்டு வர்ற மாதிரியிருந்தது. அப்படியே படுத்துட்டேன் ஸார். எவ்வளவு சரக்கு அடிச்சுட்டு படுத்தாலும் காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் எனக்கும் ரஹ்மானுக்கும் முழிப்பு வந்துடும் ஸார். ஆனா இன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் கண் முழிக்கும் போது எட்டு மணி ஸார். ஜன்னல்ல வெளிச்சம். எப்படி இவ்வளவு நேரம் அசந்து தூங்கினோம்ன்னு எனக்கும் ரஹ்மானுக்கும் ஆச்சர்யமாய் இருந்தது. சாப்பிட்ட சரக்குதான் காரணமாய் இருக்கும்ன்னு ரஹ்மான் சொன்னான். ஆனா எனக்கு மட்டும் ராத்திரி ரூமுக்குள்ளே அடிச்ச அந்த வித்தியாசமான வாசனையோட ஞாபகம் வந்தது. ரஹ்மான் கிட்டே அதைப்பத்தி சொன்னேன். அவன் அதை ஒரு பெரிய விஷயமாய் எடுத்துக்கலை. நானும் மறந்துட்டேன். ஆனா இப்ப நீங்க இந்த பங்களாவுக்குள்ளே நேத்து ராத்திரி யாரோ இருந்தாங்கன்னு சொன்ன பின்னாடிதான் அந்த வாசனை ஏன் ஒரு மயக்க மருந்தாய் இருக்கக்கூடாதுன்னு தோணுது ஸார் "

திரிபுரசுந்தரி குறுக்கிட்டு கேட்டாள்.

" அதாவது நீங்க படுத்து தூங்கிட்டிருந்த அறைக்குள்ளே யாரோ மயக்க மருந்தை ஸ்பிரே பண்ணியிருப்பாங்கன்னு சொல்ல வர்றியா ? "

" ஆமா மேடம்......நாங்க சரக்கு சாப்பிட்டு சாப்பாட்டையும் முடிச்சுகிட்டு ரூமுக்கு வந்து படுத்த பின்னாடி ஜன்னல் வழியா யாரோ மயக்க மருந்தை ஸ்பிரே பண்ணியிருக்கணும் "

" அந்த வாசனை எப்படியிருந்தது? "

" அழுகிப்போன பழங்களிலிருந்து ஒரு வேண்டாத வாசனை வருமே..... அது மாதிரி இருந்தது மேடம் "

திரிபுரசுந்தரி சடகோபனை ஏறிட்டாள்.

" என்ன சடகோபன்..... இவங்க சொல்றதெல்லாம் நம்பற மாதிரி இருக்கா ? "

சடகோபன் பதில் சொல்லாமல் அறையின் இடது பக்க மூலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க திரிபுரசுந்தரி கேட்டாள்.

" என்ன பார்த்துட்டு இருக்கீங்க ? "

" ஒரு நிமிஷம் மேடம்" என்று சொன்ன சடகோபன் அறையின் மூலையை நோக்கி வேகமாய் போனார்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X