• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (24)

|

-ராஜேஷ்குமார்

வளர்மதி மனோஜின் முகத்தை கவனித்துவிட்டு கேட்டாள்.

” மனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே..... யூ ஸீம்ஸ் டு பி வெரி டென்ஷன் ”

” ஒண்ணுமில்லை வளர்..... நீ சமயோசிதமாய் செயல்பட்டு ஒரு பிரில்லியண்டான ஜாப்பை பண்ணியிருக்கே. இருந்தாலும் சில்பா மேடத்துக்கு என்னவாகியிருக்குமோன்னு நினைக்கும்போது முதுகு தண்டுவடத்துல ஒரு பய ஊசி பாயற மாதிரி இருக்கு. அவங்க ஏன் அந்த பழைய ஜட்ஜ் பங்களாவுக்கு போகணும்? அந்த பங்களாவில் இருந்தவங்க யாரு....? பங்களா செக்யூர்ட்டி ஆட்களுக்கு தெரியாமே பங்களாவில் நுழைய வேண்டிய அவசியம் என்ன...... இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் நமக்கு சரியான பதில் கிடைக்குமா ? ” மனோஜ் சற்றே பதட்டத்தோடு பேச வளர்மதி தன்னுடைய உதட்டை ஒரு பெரிய புன்னகையால் நனைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 24

” மனோஜ் .... அடுத்த இருபது நிமிஷத்துக்குள்ளே அந்த நர்மதா போலீஸ் வளையத்துக்குள்ளே இருப்பா ? அப்ப என்கிட்டே எல்லா கேள்விகளுக்கும் அந்த நர்மதா பதில் சொல்லுவா. நர்மதா ஒரு சாதாரண பெண். அவகிட்டே இரிடியம் செல்போன் இருக்குன்னா நிச்சயமாய் அவ ஒரு தப்பான பெண்ணாய் இருக்க வாய்ப்பு அதிகம். அவளை போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துவிடும்... ஈஸியா சில்பாவை ட்ரேஸ் அவுட் பண்ணிடலாம்” வளர்மதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைபர் க்ரைம் பிராஞ்ச்சை சேர்ந்த விஜயபூபதியும், சாரங்கனும் அசிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபனுடன் இணைந்து வேகநடை போட்டு பக்கத்தில் வந்தார்கள். திரிபுரசுந்தரியை ஏறிட்டார் சடகோபன்.

” மேடம்..... கார் ரெடி.... கிளம்பலாமா ? ”

” ஃபாரன்சிக் மனோஜூம் நம்ம கூட வர்றார்.... வேன்ல இடம் இருக்குமா ? ”

” நோ.... ப்ராப்ளம் மேடம்.... தாராளமாய் இடம் இருக்கும் ”

” தட்ஸ் குட் ” என்று சொன்ன திரிபுரசுந்தரி ஆபீஸின் வாசலில் நின்றிருந்த டவேரா காரை நோக்கி நடக்க, ஐந்து பேரும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். மனோஜ் தனக்குள் இருந்த பதட்டத்தையும் பயத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களோடு நடந்தான். மனசுக்குள் யோசனை எறும்புகளாய் ஊர்ந்தன.

” நர்மதாவுக்கு விஷயத்தை எப்படியாவது கன்வே செய்தாக வேண்டும்..... எப்படி செய்யலாம் ? ”

” இப்போது இருக்கிற நிலைமையில் செல்போனை எடுத்து ஈஸ்வரிடமோ, அபுபக்கரிடமோ, நர்மதாவிடமோ பேச முடியாது. வாட்ஸ்அப் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ செய்தியை அனுப்புவதும் அவ்வளவு உசிதமில்லை..... இந்த ஜந்து பேர்களில் யாராவது ஒருத்தர் கவனிக்க கூடிய சாத்தியம் இருக்கிறது. முக்கியமாய் வளர்மதி ”

ஆறுபேரும் கட்டிட வளாகத்தினின்றும் வெளிப்பட்டு வாசலுக்கு வந்தார்கள். இளம்பச்சை வண்ண டவேரா காத்திருந்தது.

ஒவ்வொருவராய் ஏறி உட்கார்ந்தார்கள். கார் புறப்பட்டு சாலையில் வேகம் எடுத்ததும் திரிபுரசுந்தரி ஏ.சி.பியிடம் கேட்டாள்.

” சடகோபன்.... ட்ரைவர்கிட்டே நாம எங்கே போகணும்ங்கிறதை சொல்லிட்டீங்களா ? ”

” சொல்லிட்டேன் மேடம் ”

கார் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வேகம் எடுத்தது. மனோஜின் இதயம் ஒரு கடிகார பெண்டுலம் மாதிரி அசைந்து இதயத்தின் சுவர்களில் மோத, வேனில் பரவியிருந்த ஏ.ஸியின் குளிர்ச்சியிலும் உடம்பு வியர்த்து நெற்றி பிசுபிசுத்தது.

” என்ன செய்யலாம் ? ” மனோஜ் ஒருவித அவஸ்தையில் நெளிந்து யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து வைபரேஷனில் உறுமியது.

செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். AB என்ற இரு எழுத்துக்கள் ஒளிர்ந்தன. AB என்றால் அபுபக்கர்.

மனோஜின் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்த்து வியர்வை சுரப்பிகளை அடக்கியது. செல்போனை எடுத்து பேசலாமா வேண்டாமா என்று இரண்டு விநாடி அவன் தயங்க திரிபுரசுந்தரி திரும்பிப் பார்த்து ” போன் உங்களுக்கா மனோஜ் ? ” என்று கேட்டாள்.

” ஆமா மேடம்...... ”

” அட்டெண்ட் பண்ணிப் பேசுங்க. ஏதாவது உங்க ஃபரான்ஸிக் டிபார்ட்மெண்ட் விஷயமாய் இருக்கப் போகுது ”

மனோஜ் செல்போனை எடுத்து லோ டெஸிபல் மோடுக்கு கொண்டு போய் இடது காதுக்கு ஒற்றினான். மெள்ள குரல் கொடுத்தான்.

” எஸ் ”

மறுமுனையில் அபுபக்கர் பேசினார்.

” என்ன மனோஜ்......ஏதாவது செய்தி உண்டா ? ”

” ஸாரி ஸார்.... முழுமையான ரிப்போர்ட் இன்னமும் ரெடியாகலை.... எப்படியும் ரெண்டு நாளாயிடும் ”

” மனோஜ் ...... இப்போ வெளிப்படையா எதுவுமே பேச முடியாத நிலைமையில் இருக்கேன்னு நினைக்கிறேன் ”

” ஆமா...... ”

” ஒரு மணி நேரம் கழிச்சு பேசலாமா ? ”

” வேண்டாம்.... ரிப்போர்ட்டோட முக்கியமான ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் குறிப்பிட்டு இப்ப உங்களுக்கு வாட்ஸ்அப் பண்றேன். உடனடியாய் அதை பார்த்துட்டு தேவையான ஸ்டெப்ஸ் எடுங்க......”

ம்......அனுப்பு.... பார்த்துடறேன் ”

மனோஜ் செல்போனை ஊமையாக்கிவிட்டு ஒருவிதமான செயற்கை சலிப்போடு திரிபுரசுந்தரியை ஏறிட்டபடி சொன்னான்.

” ஃபரான்ஸிக் ரிப்போர்ட்ன்னா ஜவுளிக்கடையில் போடற பில்லு மாதிரி நினைச்சுகிட்டு உடனே வேணும்ன்னு கேட்கிறாங்க.... மேடம் ”

திரிபுரசுந்தரி உதடு பிரியாமல் சிரித்து விட்டு சொன்னாள்.

” அவங்களுக்கு என்ன அவசரமோ...... ? நீங்க சொன்ன மாதிரி வாட்ஸ்அப்ல முக்கியமான ரெண்டு பாயிண்ட்டுகள் மட்டும் அனுப்பிவிடுங்க..... ”

” அப்படித்தான் பண்ணனும் மேடம் ” என்று சொன்ன மனோஜ் வாட்ஸ்அப் ஆப்ஷனுக்குப் போய் அபுபக்கரின் எண்ணைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வேகமாய் ஆட்காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி டைப் செய்ய ஆரம்பித்தான்.

” நர்மதாவின் வீட்டை சோதனையிட போலீஸ் கமிஷனர், அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சடகோபன். வளர்மதி இரண்டு சைபர் க்ரைம் ஆபீஸர்ஸ் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அவர்களோடு நானும் இருக்கிறேன். என்னால் நர்மதாவுக்கு தகவல் கொடுக்க முடியாது. நீங்கள் உடனடியாக போன் செய்து தகவல் தரவும். நாங்கள் அங்கே போகும்போது நர்மதா வீட்டில் இருக்கக்கூடாது. போலீஸின் கைகளில் அகப்படவும் கூடாது. உடனடியாய்

செயல்படுங்கள். ஈஸ்வர்க்கும் தகவல் அனுப்பி விடுங்கள். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ”

மேற்கண்ட வாசகங்களை ஒரு நிமிஷ நேரத்திற்குள் டைப் அடித்து வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு நிம்மதி பெருமூச்சோடு வேனின் இருக்கைக்கு சாய்ந்து உட்கார்ந்தான் மனோஜ்.

கோவை நகரின் அந்த மாலை வேளைப் போக்குவரத்தில் தத்தளித்த டவேரா கார் நான்கைந்து முக்கியமான சிக்னல்களில் மெளனம் காத்து நர்மதாவின் வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்த போது நேரம் சரியாக ஆறு மணி.

டிரைவர்க்கு சடகோபன் நர்மதாவின் வீட்டைக் காட்ட கார் அவளுடைய வீட்டுக்கு முன்பாய் போய் நின்றது. ஆறு பேரும் கீழே இறங்கினார்கள்.

மற்றவர்கள் பின் தொடர முதல் நபராய் திரிபுரசுந்தரி நடந்தாள்.

மனோஜின் பார்வை வீட்டின் கதவை நோக்கிப் போயிற்று.

வீடு பூட்டியிருந்தால் பிரச்சினையிலிருந்து தப்பி விடலாம். பார்வை ஆர்வமாய் பாய மனோஜின் முகத்தில் ஏமாற்றம்.

கதவில் பூட்டு இல்லை. ட்யூப்லைட் உள்ளே உயிரோடு இருக்க ஜன்னல் வழியே வெளிச்சம் பரவி வீட்டின் முன்பக்கம் இருந்த போர்டிகோவை தெளிவாய் காட்டியது.

வளர்மதி முன்னதாக போய் அழைப்பு மணியின் பட்டனை அழுத்தினாள். வீட்டுக்குள்ளே ஒரு பத்து விநாடி இன்னிசை ஒலித்தது.

மனோஜின் நெற்றி மறுபடியும் வியர்க்க ஆரம்பிக்க பார்க்கும் தெரியாமல் கர்ச்சீப்பை எடுத்த ஏற்றிக் கொண்டான்.

”அபுபக்கர்க்கு நான் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி போய் சேரவில்லை. செய்தி போய் சேர்ந்திருந்தால் நர்மதா வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்பியிருப்பாளே ? ”

” நர்மதா வீட்டுக்குள் இருப்பதற்கு அறிகுறியாக உள்ளே வெளிச்சம் தெரிகிறது ”

கதவு திறக்கப்பட எல்லோரும் காத்திருந்தார்கள். ஒரு நிமிடம் மெளன விநாடிகளில் கரைந்து கொண்டிருக்க திரிபுரசுந்தரி வளர்மதியை ஏறிட்டாள்.

” இன்னொரு தடவை காலிங் பெல் குடு ”

வளர்மதி மறுபடியும் அழைப்பு மணிக்கான பட்டனை அழுத்துவதற்காக தன் ஆட்காட்டிவிரலை அதன் மேல் வைத்த விநாடி உள்ளேயிருந்து குரல் கேட்டது.

” யாரது ? ” வேகமான குரலைத் தொடர்ந்து, பக்கவாட்டு ஜன்னல் திறக்கப்பட, நர்மதாவின் தலை தெரிந்தது. தலையின் பின்புறக் கொண்டையில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக சுற்றப்பட்ட டவல் அவிழும் நிலையில் இருக்க, திரிபுரசுந்தரியை பார்த்ததும் விழிகள் வியப்பில் விரித்தன.

” மேடம்..... நீங்களா ? ”

” நானேதான் கதவைத் திற ”

” ஒரு நிமிஷம் மேடம்...... இப்பத்தான் குளிச்சுட்டு வர்றேன். ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் ”

” ம்....ம்... சீக்கிரம் ........ ”

” ரெண்டே நிமிஷம் மேடம்...... ”

ஜன்னலில் நர்மதாவின் தலை மறைய திரிபுரசுந்தரி அசிஸ்டெண்ட் கமிஷனரை ஏறிட்டாள்.

” சடகோபன் ”

” மேடம் ”

” நர்மதாவை நான் என்கொயர் பண்றேன்...... நீங்க பேச வேண்டாம் ”

” எஸ் மேடம் ”

” வளர்..... நீயும் எதுவும் பேசாதே...... அப்புறம் நீ ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்த அந்த ”மைக்ரோ ரிஸீவர் பக்” கை எடுக்க உடனடியாய் ஆர்வம் காட்டாதே.......

நான் சொல்லும் போது மட்டும் நீ அதை எடுத்தா போதும்......”

” சரி மேடம்.... ”

திரிபுரசுந்தரி பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

” மனோஜ் ”

” மேடம் .......... ”

” உங்களுக்குத்தான் முக்கியமான வேலை..... நான் நர்மதாவை விசாரணை பண்ணிட்டிருக்கும்போது நீங்க வீட்டுக்குள் இருக்கிற அறைகளுக்குப் போய் அங்கே வித்தியாசமான பொருட்கள் ஏதாவது இருக்கான்னா நோட் பண்ணுங்க. முடிஞ்சா செல்போன்ல வீடியோ எடுத்துக்குங்க ”

” எஸ் மேடம் ”

சைபர் க்ரைம் பிராஞ்ச் அதிகாரிகளான விஜயபூபதியையும், சாரங்கனையும் ஏறிட்டாள் திரிபுரசுந்தரி.

” இன்ஸ்ட்ரக்சன் ஃபார் யூ....... நர்மதா உபயோகிக்கிற செல்போன் எது மாதிரியானதுன்னு பார்வையாலேயே ஸ்கேன் பண்ண வேண்டியது உங்க வேலை. அவளை ட்ராப் பண்ணனும்ன்னா நிதானமான அணுகுமுறை வேணும்..... அவளை நாம சந்தேகப்படற மாதிரி எந்த ஒரு நடவடிக்கையும் இருக்கக்கூடாது ”

” எஸ் மேடம் ”

ஆறுபேரும் கதவு திறக்கப்பட கனத்த நிசப்தத்தோடு காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

நிமிஷங்கள் ஒன்று இரண்டு...... மூன்று...... நான்கு ஐந்து என்று வேகமாய் கரைந்து கொண்டிருக்க வீட்டுக்குள் கனத்த மெளனம்.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X