• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)

|

- ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி சில நிமிடங்கள் வரை பொறுமையாய் காத்துவிட்டு வளர்மதியை ஏறிட்டாள்.

” வளர் ”

” என்ன மேடம் ? ”

” இதோ ட்ரஸ் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு உள்ளே போன நர்மதா இன்னமும் என்ன பண்றா ? மறுபடியும் காலிங்பெல் குடு ”

வளர்மதி தன்னுடைய இடது கையின் பெருவிரலால் அழைப்புமணியின் பொத்தானை பலமாய் அழுத்த அது உள்ளே கதறியது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 25

பதிலுக்கு வீட்டுக்குள் கனத்த மெளனம்.

மனோஜ் பதட்டத்தை காட்டிக்கொள்ளாமல் திரிபுரசுந்தரியிடம் சொன்னான்.

” மேடம்.... லேடீஸ் ட்ரஸ் பண்ற விஷயத்தில் கொஞ்சம் லேட் பண்ணத்தான் செய்வாங்க..... கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம் ”

” இல்லை மிஸ்டர் மனோஜ் எனக்கென்னவோ சந்தேகமாய் இருக்கு ” என்று சொன்னவள் திறந்திருந்த ஜன்னல் பக்கமாய் போய் உள்ளே எட்டிப் பார்த்தாள். டி.வி.மியூட் மோடில் வைக்கப்பட்டிருக்க டி.வி.திரையில் ஒரு சீரியல் மெளன பாஷை பேசிக் கொண்டிருந்தது. ட்யூப் லைட் வெளிச்சம் பிரகாசமாய் தெரிந்தது.

திரிபுரசுந்தரி பலமாய் குரல் கொடுத்தாள்.

” நர்மதா ”

வீட்டுக்குள்ளிருந்து ஒரு சின்ன முனகல் சத்தம் கூட கேட்கவில்லை. வளர்மதி மறுபடியும் நீளமாய் அழைப்புமணியை அழுத்த உள்ளே நிசப்தம் நீடித்தது.

திரிபுரசுந்தரி பதட்டமானாள்.

” சடகோபன் ”

” மேடம் ”

” சம்திங் ஈஸ் கோயிங் ராங்க்....... வீட்டுக்குள்ளே நர்மதாவுக்கு ஏதோ பிரச்சினை. இந்த வீட்டுக்கு பின்பக்கம் ஏதாவது வழியிருக்கான்னு பாருங்க..... ”

சடகோபன் வீட்டுக்குப் பின்பக்கம் வேகமாய் போனார். அடுத்த சில விநாடிகளில் அவருடைய குரல் பதட்டமாய் கேட்டது.

” மேடம்.... இங்கே வாங்க...... ”

” என்னாச்சு? ” திரிபுரசுந்தரி கேட்டுக்கொண்டே வேக நடையில் வீட்டின் பின்பக்கம் நோக்கிப் போக, அவளை வளர்மதி மனோஜ் உட்பட எல்லோரும் தொடர்ந்தார்கள்.

வீட்டின் பின்பக்கம் ஒரு சின்ன தோட்டத்தோடு தெரிய அரையிருட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபன் தவிப்புடன் நின்றிருந்தார்.

” என்ன சடகோபன் ? ”

” வீட்டோட பின்பக்கக் கதவு திறந்திருக்கு மேடம். ஷி மே ஹேவ் எஸ்கேப்பட் ”

” உள்ளே போய் பாருங்க ”

சடகோபன் உள்ளே நுழைந்தார். எல்லா அறைகளிலும் எல்.இ.டி. விளக்குகள் பிரகாசமாய் இருந்தன. எல்லோரும் பரபரவென்று வீட்டுக்குள் பரவி நர்மதாவைத் தேட ஆரம்பித்தார்கள். அவள் எந்த அறையிலும் இருப்பதற்கான அறிகுறிகள் அறவே இல்லை என்பது அடுத்த சில விநாடிகளிலேயே தெரிந்துவிட்டது. திரிபுரசுந்தரியின் முகத்தில் கோபமும் ஏமாற்றமும் மாறி மாறி பிரதிபலித்தது.

” வளர் ”

” மேடம் ”

” அந்த இரிடியம் செல்போனை எந்த இடத்தில் பார்த்தே ? ”

” அதோ அந்த புக் ஷெல்ஃப்பில் மேடம் ”

” இப்ப அது அந்த இடத்துல இருக்கான்னு பாரு ”

” பார்த்துட்டேன் மேடம்..... அந்த புக் ஷெல்ஃப்ல நான் பார்த்த இடத்துல அந்த போன் இல்லை ”

” நீ ஃபிக்ஸ் பண்ணின ”மைக்ரோ ரிஸீவர் பக்” இருக்கான்னு பாரு ”

” அந்த இடத்தையும் செக் பண்ணிப் பார்த்துட்டேன் மேடம். அந்த மைக்ரோ ரிஸீவர் பக்கையும் காணோம் ”

திரிபுரசுந்தரி தன்னுடைய நெற்றியைப் பிடித்துக் கொண்டாள். ” நாம இங்கே வரப் போகிற விஷயம் எப்படியோ அவளுக்கு தெரிஞ்சிருக்கு... அதான் ட்ரஸ் பண்ணிட்டு வர்றேன்னு நம்மகிட்டே சொல்லிட்டு வீட்டு பின் வாசல் வழியா தப்பிச்சு ஒடிட்டா.... நாம இங்கே வரப் போறது அவளுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும் ”

மனோஜின் உடம்புக்குள் மகிழ்ச்சி ததும்பி வழிந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் செயற்கையான கவலையோடு படபடத்தான்.

” மேடம்.... அந்த நர்மதா தப்பிச்சு போய் ரொம்ப நேரமாயிடலை.... மீறிப் போனா ஒரு பத்து நிமிஷம்தான் ஆகியிருக்கும்.... இந்த ஏரியா எல்லையை விட்டு ரொம்ப தூரம் போயிருக்க மாட்டா. நான் வேணும்ன்னா போய்ப் பார்க்கட்டுமா ? ”

” தட்ஸ் குட்.....ஏ.சி.பியையும் கூட்டிட்டு போங்க. அதுக்கு முன்னாடி ட்ராஃபிக் கண்ட்ரோல் ரூமுக்கு இன்ஃபார்ம் பண்ணி சிட்டியில் இருக்கிற எல்லா செக்போஸ்ட்களையும் அலர்ட் பண்ணுங்க......”

” எஸ்..... மேடம் ”

மனோஜூம், ஏ.சி.பி.சடகோபனும் அந்த இடத்தைவிட்டு வேகவேகமாய் வெளியேறினார்கள்.

*****

அபுபக்கர் காரை நிதானமான வேகத்தில் ஒட்டிக் கொண்டே தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நர்மதாவை ஒரு கேலிப் புன்னகை பார்த்தார்.

” நாம பண்றது தப்புன்னு நமக்கு நல்லாவே தெரியும். அந்தத் தப்பை பண்ணும் போது நமக்குள்ளே எச்சரிக்கை உணர்வு வேணும்? அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியோட பார்வையில் படற மாதிரி இரிடியம் செல்போனை புக் ஷெல்ஃப்பில் வெச்சிருக்கியே ஒரு பொறுப்பு வேண்டாம்? ”

நர்மதா வியர்த்து வழிகிற முகத்தோடு பேசினாள்.

” ஸ...ஸாரி.... ஸார். ஏதோ அவசரத்துல வெச்சுட்டேன். அந்த வளர்மதி இவ்வளவு கீன் அப்ஸர்வேஷனோடு இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை ”

” சரி.... அதுதான் போகட்டும்..... அந்த வளர்மதி உன்கூட பேசிகிட்டே சோபாவுக்கு அடியில் இருக்கிற ராடில் ஒரு மைக்ரோ ரிஸீவர் பக்கை ஃபிக்ஸ் பண்ணிட்டு போயிருக்கா. அதை எப்படி நோட் பண்ணாமே விட்டே?”

” ஸாரி.... ஸார் அவ ரொம்பவும் கேஸீவலா பேசிட்டு இருந்ததால அதை என்னால கவனிக்க முடியலை ”

” எல்லாத்துக்கும் ஒரு ஸாரி சொல்லிட்டா சரியாயிடுமா.... ? மனோஜ் மட்டும் எனக்கு சரியான நேரத்துல வாட்ஸ் அப் செய்தியை அனுப்பாமே இருந்திருந்தா இந்நேரம் நீ போலீஸ் பிடியில் இருப்பே......நான் அனுப்பின வாட்ஸ் அப் செய்தியையும் நீ ரொம்பவும் லேட்டா பார்த்ததால கடைசி நிமிஷத்துல கஷ்டப்பட்டு தப்பிக்க வேண்டியதாயிச்சு. எல்லாத்துக்கும் மேலா நான் மூணு தடவை உன்னோட செல்லுக்கு போன் பண்ணின பிறகுதான் நீ போனையே அட்டெண்ட் பண்ணினே ? ”

” போன் மியூட்ல இருந்ததால ரிங் டோனை என்னால கேட்க முடியலை ஸார் ”

” சரி சரி இனி பழையதைப் பேசி என்ன பிரயோஜனம் இந்நேரம் போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி அலர்ட்டாகி மொத்த போலீஸ் டிபார்ட்மெண்டையும் உசுப்பியிருப்பா. கோயமுத்தூர் எல்லையை விட்டு நீ இனி ரெண்டு நாளைக்கு வெளியே எங்கேயும் போக முடியாது ”

” அப்படீன்னா நான் இப்ப எங்கேதான் ஸ்டே பண்றது ஸார்”

” எனக்கும் இப்ப அந்த குழப்பம்தான். இரு ஈஸ்வர்க்கு போன் பண்ணி கேட்டுடலாம் ” சொன்ன அபுபக்கர் காரை ரோட்டோரமாய் ஒதுக்கி நிறுத்தினார். செல்போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு ஈஸ்வரோடு பேசினார்.

” ஈஸ்வர்..... நர்மதாவை ஒரு ஸேஃப்டியான இடத்துக்கு கொண்டு போய் பாதுகாப்பாய் வெச்சிருக்கணும். எங்கே கூட்டிட்டு போறது ? ”

” உன்னோட வீட்டுக்கு கொண்டு போயிடு ”

” என்னோட வீட்டுக்கா...... ? ”

” ஆமா... அபு.... பர்தா ஒண்ணை மாட்டிகிட்டு உன்னோட வொய்ஃப்புக்கு சொந்தக்கார பொண்ணாய் அந்த வீட்லயே கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்.... போலீஸோட சுறுசுறுப்பெல்லாம் ஆடி அடங்கின பிறகு நர்மதாவை நம்ம டெல்லி பிராஞ்சுக்கு அனுப்பி வெச்சுடலாம். இனிமே நர்மதா கோயமுத்தூரை மறந்துட வேண்டியது தான்............... ”

” சரி...... ஈஸ்வர் ”

” நர்மதாகிட்டே போனை குடு.....நான் ரெண்டு வார்த்தை பேசிடறேன் ”

அபுபக்கர் தன்னுடைய செல்போனை நர்மதாவிடம் நீட்ட அவள் வாங்கிப் பேசினாள்.

” ஸ....ஸார் ”

” இதோ பாரம்மா..... நீ தெரியாமே பண்ணின ரெண்டு தப்புகளாலே இப்போ நிலைமையே மாறி போச்சு. போலீஸ் உன்னை ஸ்மெல் பண்ணிட்டாங்களேன்னு பயப்படாதே. சில்பா விஷயத்துல நீ பண்ணின உதவியை நானும் அபுபக்கரும் மறக்க மாட்டோம். போலீஸோட பார்வைக்கு நீ தட்டுப்படாமே இருக்கணும்ன்னா அபுபக்கரோட வீடுதான் உனக்கு பாதுகாப்பான இடம். அபுபக்கரோட ஒய்ப் நஸ்ரினாவுக்கு துணையாய் நீ அந்த வீட்லயே இருந்துக்கலாம். வெளியே போகணும்ன்னா ஒரு பர்தாவை மாட்டிகிட்டு நஸ்ரினாவோடு எங்கே வேணும்ன்னாலும் பயமில்லாமே போகலாம். இது எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அதுக்கப்புறம் நீ டெல்லி போய் எனக்கு சொந்தமான கம்பெனி ப்ராஞ்சில் வேலை பார்க்கலாம் ”

” ஸ....ஸார் ”

” என்னம்மா ? ”

” எனக்கு பயம்மாயிருக்கு ஸார் ”

” எதுக்கம்மா பயப்படறே...... ? இன்னிக்கு உன்னோட வீட்டுக்கு வந்த போலீஸ் சாதாரண போலீஸ். மேல் மட்டத்துல எனக்கு எல்லா போலீஸ் ஆபீஸரையும் தெரியும். உனக்கு எந்த பிரச்சினையும் வராமே நான் பார்த்துக்கிறேன். நீ அபுபக்கர் வீட்ல பிரியாணி சாப்பிட்டுகிட்டு சந்தோஷமாய் இரு. தேவைப்பட்டா பர்தாவை போட்டுகிட்டு வெளியே வா..... சினிமாவுக்குப் போ. ஷாப்பிங் பண்ணு. மனசைப் போட்டு குழப்பிக்காமே சந்தோஷமாய் இரு.......” ஈஸ்வர் சொல்லிவிட்டு செல்போனை அணைத்துவிட அபுபக்கர் நர்மதாவைப் பார்த்து புன்னகைத்தார்.

” என்னம்மா..... ஈஸ்வர் சொன்னதைக் கேட்டியா ? ”

” மனசுக்கு இப்போ கொஞ்சம் தைரியமாய் இருக்கு ஸார்”

” போகப் போக இன்னும் தைரியம் ஜாஸ்தியாயிடும்.... ” சொல்லிக் கொண்டே காரை நகர்த்தினார் அபுபக்கர்.

இருபது நிமிஷப் பயணம்

இருட்டான குறிச்சி ஏரியாவில் இருந்த அந்த பங்களாவின் காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் காரை நிறுத்திய அபுபக்கர் ஹார்னை அழுத்த செக்யூர்ட்டி ஒடி வந்து காம்பெளண்ட் கேட்டின் ஸ்லைடிங் டோரைத் திறந்து வைத்தான்.

கார் உள்ளே போயிற்று. விஸ்தாரமான போர்டிகோவில் நின்று இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.

அபுபக்கர் இறங்கிக் கொண்டே சொன்னார். ” கொஞ்ச நாளைக்கு இனிமேல் இதுதாம்மா உன்னோட வீடு. வா போகலாம் ”

அவர் சொல்லிக்கொண்டே போர்டிகோ படிகளில் ஏறி உள்ளே போனார். நர்மதா பின்தொடர்ந்தாள்.

அந்தப் பெரிய வாசல் கதவுக்கு முன்பாய் போய் நின்ற அபுபக்கர் தன்னிடம் இருந்த சாவியொன்றை எடுத்து கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டுக்கு விடுதலை கொடுத்தார்.

நர்மதா சற்றே அதிர்ச்சியடைந்தவளாய் கேட்டாள்.

” என்ன ஸார்... வீடு பூட்டியிருக்கு. உங்க மனைவி வீட்ல இல்லையா?”

அபுபக்கர் ஒரு கபடப் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்.

” எனக்கு மனைவியே இல்லாத போது அவ எப்படி வீட்ல இருப்பா ? ”


[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25], 26]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X