• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னம்மா...... அப்படி பார்க்கிறே?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (26)

|

-ராஜேஷ்குமார்

நர்மதா அதிர்ந்து போனவளாய் அபுபக்கரைப் பார்க்க அவர் தன்னுடைய புன்னகையின் பரப்பளவை சற்றே பெரிதாக்கினார்.

” என்னம்மா...... அப்படி பார்க்கிறே ? ”

” ஸ....ஸார்..... நீங்க இப்ப பேசினது மனசுக்கு கொஞ்சம் குழப்பமாய் இருக்கு ...... ”

” நான் என்ன சொன்னேன் ? ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 26

” எனக்கு மனைவியே இல்லாத போது அவ எப்படி வீட்ல இருப்பான்னு சொன்னீங்க. ஆனா ஈஸ்வர் ஸார் போன்ல பேசும் போது உங்களுக்கு கல்யாணமாகி நஸ்ரினா என்கிற பேர்ல மனைவி இருக்கிறதாய் சொன்னாரே....... ? ”

அபுபக்கர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டே சொன்னார். ” ஈஸ்வர் சில சமயங்களில் பேசற பொய்களில் இதுவும் ஒரு பொய் நர்மதா ”

” அவர் எதுக்காக ஸார் இப்படிப்பட்ட பொய்யைச் சொல்லணும் ? ”

” முதல்ல வீட்டுக்குள்ளே வாம்மா ”

” எனக்கு பயமாயிருக்கு ஸார்..... என்னை ஒண்ணும் பண்ணீடாதீங்க ஸார்..... நான் எங்கேயாவது தலைமறைவாய் போயிடறேன் ” நர்மதா சொல்லிக்கொண்டே இரண்டடி பின்வாங்கி நகர வேக நடையோடும் ஒரு மென்மையான சிரிப்போடும் அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்றார் அபுபக்கர்.

” இதோ பாரம்மா..... சில்பா விஷயத்துல நீ எங்களுக்கு மிகப் பெரிய உதவி பண்ணியிருக்கே. அந்த நன்றியை நானும் சரி, ஈஸ்வரும் சரி மறக்கவே மாட்டோம். ஒரு பெண்ணான உன்னாலே வெளியே போலீஸூக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கையை நடத்த முடியாது. போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் சரி, அந்த வளர்மதியும் சரி உன்னை எப்படியும் ட்ரேஸ் அவுட் பண்ணிடுவாங்க.... போலீஸ்ல மாட்டினா உன்னோட கதி என்னாகும்ன்னு கொஞ்சம் யோசனை பண்ணிப்பாரு ”

நர்மதா ஒன்றும் பேசத் தோன்றாமல் கலவரமாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். அபுபக்கர் சிரிப்பு மாறாமல் பேசினார்.

” இதோ பாரம்மா நர்மதா.....இப்ப உன்னோட மனசுல எதுமாதிரியான எண்ணம் ஒடிட்டு இருக்கும்ங்கிறதை என்னால கெஸ் பண்ண முடியுது. உன்னை போலீஸ் ஸ்மெல் பண்ணிட்டதால எங்களால உன்னோட உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்ன்னு நினைக்கிறே... இல்லையா ? ”

நர்மதா வியர்வை மினுமினுக்கும் முகத்தோடு காய்ந்து போன தொண்டையில் எச்சில் விழுங்கி பலவீனமாய் குரல் கொடுத்தாள்.

” நா....நான் அப்படியெல்லாம் நினைக்கலை ஸார் ”

” ஒருவேளை அப்படிப்பட்ட நினைப்பு உன்னோட மனசுக்குள்ளே இருந்தா அதை உடனடியாய் இந்த விநாடியே அழிச்சுடும்மா..... போலீஸ் வலைக்குள்ளே நீ மாட்டிக்கக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துலதான் உன்னை இங்கே கூட்டிகிட்டு வந்திருக்கோம். வீட்ல என்னோட மனைவி இருக்குன்னு சொன்னாத்தான் நீ தைரியமாக என்கூட வருவேன்னு ஈஸ்வர் ஒரு பொய்யைச் சொன்னார். அந்தப் பொய்யை நீ பெரிசாய் எடுத்துக்க வேண்டாம் ”

” ஸார்.... அது வந்து ..... ”

” எதையும் யோசனை பண்ணாமே உள்ளே வாம்மா. உனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் சொந்த கிராமத்துல இருக்கிற விஷயம் எனக்குத் தெரியும். என்னை உன்னோட அப்பா மாதிரி நினைச்சுகிட்டு உள்ளே வாம்மா...... ”

அபுபக்கர் சொன்ன அந்த கடைசி வாக்கியத்தில் ஒரு சில விநாடிகள் கரைந்து போன நர்மதா அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள். பெரிய வீடு என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. எல்.இ.டி.விளக்கு வெளிச்சத்தில் மில்க்கிவே க்ரானைட் தளம் பளபளத்தது. ஹாலின் மையத்தில் இருந்து இரு

திசைகளிலும் படிகள் பிரிந்து உச்சியில் போய் ஒன்று சேர்ந்து பால்கனியைக் காட்டின.

” ஒரு பத்து நிமிஷம் சோபாவில் உட்காரம்மா...... கூல் ட்ரிங்க் ஏதாவது சாப்பிடறதாய் இருந்தா அந்த ஃபிரிஜ்ல எல்லா ஃப்ரூட் ஃப்ளேவர்லேயும் ட்ரிங்க்ஸ் இருக்கு. எடுத்துக்கோம்மா ” அபுபக்கர் சொல்ல, நர்மதா சரி என்கிற பாவனையில் தலையாட்டிக்கொண்டிருக்கும் போதே அபுபக்கரின் செல்போன் முணுமுணுப்பாக டயல் டோனை வெளியிட்டது.

எடுத்துப் பார்த்தார்.

மறுமுனையில் ஈஸ்வர் .

செல்போனோடு சற்று நகர்ந்து போய் பேசினார். குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

” சொல்லு ஈஸ்வர் ”

” என்ன அபு....... நர்மதா ஏதாவது பிரச்சினை பண்றாளா ? ”

” அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் பேச வேண்டிய விதத்துல பேசி நம்ம வழிக்கு கொண்டு வந்துட்டேன் ”

” அவகிட்டே இருந்த இரிடியம் செல்போன், வளர்மதி ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போன மைக்ரோ ரிஸீவர் பக் எல்லாத்தையும் வாங்கி பத்திரப்படுத்திகிட்டியா

? ”

” ம்...... என்கிட்டதான் இருக்கு ...... ”

” சரி, இப்ப நர்மதா உனக்குப் பக்கத்தில் இல்லையே ? ”

” இல்லை...... இருபதடி தள்ளி ஹால் சோபாவில் உட்கார்ந்திருக்கா ”

” நீ எதுவும் பேசாதே..... நான் சொல்றதை மட்டும் கவனமாய் கேளு ”

” ம்... ”

” அடுத்த வாரம் என்னோட சன் தீபக் ஃபாரீன்லிருந்து புறப்பட்டு கோயமுத்தூர் வர்றான் ”

” சர்ப்ரைஸ்.... எதுக்காக இந்த திடீர் பயணம் ? ”

” என்னோட சன் தீபக் மட்டும் வரப் போறதில்லை ”

” அப்புறம் ? ”

” டாக்டர் ஜான் மில்லரும் வர்றார் ”

அபுபக்கர் குரலைத் தாழ்த்தினார்.

” ஏதாவது முக்கியமான விஷயமா ? ”

” ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நாம ரொம்ப நாளாய் கனவு கண்ட ஒரு விஷயம் நனவாகப் போகுது ”

அபு மெல்லச் சிரித்தார். ” நமக்குத்தான் நிறைய கனவுகள் இருக்கே. நீ எதைச் சொல்றே ஈஸ்வர் ? ”

” நியூரல் போஸ்ட் கார்ட், நியூராலிங்க் டிவைஸ் இந்த ரெண்டையும் டாக்டர் ஜான் மில்லர் உருவாக்கிட்டார் ”

” நிஜமாவா ? ”

” நம்பு..... அடுத்த வாரம் பார்க்கப் போறோம். டாக்டர் ஜான் மில்லரும், தீபக்கும் வந்துட்டு போகிறவரைக்கும் நர்மதா உயிரோடு இருக்கணும். நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா அபு ? ”

” நல்லாவே புரியுது..... மொதல்ல எலி, ரெண்டாவது முயல், மூணாவது குரங்கு, நாலாவதாய் நர்மதா. சரியா ? ”

” ரொம்பச்சரி ” மறுமுனையில் ஈஸ்வர் சிரித்துக் கொண்டே செல்போனை அணைத்தார்.

அபுபக்கர் தன்னுடைய செல்போனையும் அணைத்து சட்டையின் பாக்கெட்டில் போட்டபடி சோபாவில் உட்கார்ந்து வீட்டை மலங்க மலங்க பார்த்தபடி உட்கார்ந்திருந்த நர்மதாவிடம் வந்தார்.

” என்னம்மா கூல் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கலையா ? ”

” வேண்டாம் ஸார்.... எதையும் சாப்பிடணும்ன்னு தோணலை ”

” இது புது இடம்...... ஒரு ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும். மாடியில் ரெண்டு ரூம் கீழே ரெண்டு ரூம் இருக்கு. உனக்கு எந்த ரூம் பிடிக்கிறதோ அந்த ரூம்ல நீ ஸ்டே பண்ணிக்கலாம். இந்த பங்களாவுக்கு பின்னாடி ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு. அங்கே வஹிதாங்கிற வேலைக்காரி தங்கியிருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல அவ இங்கே வருவா. ராத்திரி டின்னர்க்கு நாம என்ன சாப்பிட விருப்பமோ அதைச் சொன்னா ப்ரிப்பேர் பண்ணிக் குடுத்துட்டு போவா. வஹிதா ரொம்ப வருஷமா இந்த வீட்ல வேலை செய்யறா. வயசு ஐம்பதுக்கு மேல் ஆனாலும் ஒரு சின்னப் பொண்ணு மாதிரி வேலை செய்வா. அதிகமா பேசமாட்டா ” அபுபக்கர் பேசிக் கொண்டே போக நர்மதா தயக்கமாய் குரல் கொடுத்தாள்.

” ஸ....ஸார் ”

” என்னம்மா ? ”

” கட்டின சேலையோடு தப்பிச்சு வந்துட்டேன். மாற்று ட்ரஸ் இல்லை ”

” புரியுது..... உனக்கு வேண்டிய ட்ரஸ் மெட்டீரியல்ஸூக்கு நான் ஏற்பாடு பண்றேன். நாளைக்கு காலையில் நீ கேட்டதெல்லாம் உன்னோட ரூமுக்குள்ளே இருக்கும் ”

” ஸார்..... நான் பர்தா போட்டுகிட்டு வெளியே போலாமில்லையா ? ”

” நோ....நோ.... ஒரு பத்து நாளைக்கு நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. போலீஸோட வேகம் கொஞ்சம் தணியட்டும். பின்னாடி பார்த்துக்கலாம் ”

நர்மதா கலவரம் படிந்த விழிகளோடு தலையாட்டி வைத்தாள்.

*****

மறுநாள் காலை பதினோரு மணி

டி.ஜி.பி. பஞ்சாபகேசன் முன்பாக திரிபுரசுந்தரி அவரை நேர் பார்வை பார்த்தபடி நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். உடம்பில் உத்யோக பதட்டம்.

பஞ்சாபகேசன் கோபத்தில் முகம் சிவந்து போனவராய் நிறுத்தி நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாய் பேசிக்கொண்டிருந்தார்.

” அந்த நர்மதாவைத் தேடி மொத்தம் ஆறு பேர் அவ வீட்டுக்கு போயிருக்கீங்க. அவளும் வீட்டுக்குள்ளே இருந்திருக்கா.... உங்களோடு பேசியும் இருக்கா. அப்படியிருந்தும் அந்த நர்மதா உங்களையெல்லாம் ஏமாத்திட்டு தப்பிச்சு போயிருக்கா ”

” ஸாரி ஸார்..... அவ வீட்டுக்குள்ளேதானே இருக்கான்னு கொஞ்சம் அலட்சியமாய் இருந்துட்டோம் ”

பஞ்சாபகேசன் சட்டென்று எரிந்து விழுந்தார். ” ஐ டோண்ட் வாண்ட் யுவர் ப்ளடி ஸாரி. ஜி.பி.ஆபீஸிலிருந்து ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எனக்கு வந்த ரெட் டேப் ஃபைல் இது. அந்த ஃபைலை ஒரு ரெண்டு நிமிஷம் படியுங்க. ஜி.பி. அஞ்சு கேள்வி கேட்டிருக்கார். அந்த அஞ்சு கேள்வியில் ஒரு கேள்விக்காவது உங்களால பதில் சொல்ல முடியுதான்னு பார்க்கலாம்” டி.ஜி.பி. சொல்லிக்கொண்டே மேஜையின் ஒரத்தில் வைத்து இருந்த ஒரு ஃபைலை எடுத்து திரிபுரசுந்தரியின் முன்பு போட்டார்.

திரிபுரசுந்தரி அந்தப் ஃபைலை தயக்கத்தோடு எடுத்துப் புரட்டினாள்.

THE CONSEQUENCES OF MISTRY CASE

டி.ஜி.பி. கேட்டார். தமிழில் விபரீதங்கள்ன்னு சொல்லப்படுகிற வார்த்தைக்கு இங்கிலீஷ்ல கான்ஸிகொயின்ஸ்ஸ்ன்னு அர்த்தம். இது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா ? ”

” தெரியும் ”

ஜி.பி. அந்த வார்த்தையைத்தான் மென்ஷன் பண்ணி அஞ்சு கேள்விகளை கேட்டிருக்கார். முதல்ல கேள்விகளைப் படியுங்க. பதிலை யோசிச்சு சொல்லுங்க.

திரிபுரசுந்தரி அந்தப் ஃபைலில் இருந்த ஆங்கில வாசகங்களைப் படிக்க ஆரம்பித்தாள். தமிழாக்கம் மனசுக்குள் ஒடியது.

முதல் கேள்வி

ஈஸ்வர் என்னும் தொழிலதிபர் நடத்தி வைத்த இலவசத் திருமண ஜோடிகளில் 5 ஜோடிகள் ரிசின் என்ற விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள். அது தற்கொலைகளா இல்லை கொலைகளா ?

இரண்டாவது கேள்வி

தற்கொலை அல்லது கொலை காரணமாய் இறந்து போயிருக்கும் அந்த 5 ஜோடிகளில் பெண்கள் மூன்று மாத கர்ப்பிணிகளாய் இறந்து போயிருக்கிறார்கள். இந்த நிகழ்வு கோ இன்ஸிடென்டலாக இருக்க வாய்ப்பில்லை என்றால் வேறு என்ன காரணம் ?

மூன்றாவது கேள்வி

ஐந்து ஜோடிகளில் ஒரு ஜோடியான பூங்கோதை கோலப்பன் சம்பந்தப்பட்ட விசாரணைக்கோணம் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. அவ்வளவாக படிப்பறிவு இல்லாத கோலப்பன் பயோ ஹைடெக் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து இருக்கிறான். அவன் படித்த புத்தகங்களில் தி ஷெல்ஃபிஷ் ஜீன் , தி ப்ளைண்ட் வாட்ச்மேன் ஜீன் போன்ற விஷயங்கள் இருந்ததாக ஜெனிடிக்சிஸ்ட் ஸ்டீபன்ராஜ் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை ?

நான்காவது கேள்வி

டெல்லி சி.பி.ஐ.யின் ஸ்க்ரூட்னைஸ் ஆபீஸர் சில்பா கோவைக்கு வந்து இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்து இருக்கிறார். அப்படி வந்தவர் ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் பழைய ஜட்ஜ் பங்களாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் யாரைப் பார்ப்பதற்காகப் போனார். அதற்குப்பிறகு அவர் எங்கே போனார் ?

ஐந்தாவது கேள்வி

இரிடியம் செல்போன் போன் வைத்திருந்த சில்பாவின் தோழி நர்மதா அந்த வீட்டிலிருந்து தப்பித்துப் போனாளா ? இல்லை கடத்தப்பட்டாளா? போலீஸார் வீட்டுக்கு வரப் போகிற விஷயத்தை நர்மதாவுக்கு முன்கூட்டியே யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கறுப்பு ஆடு நிச்சயமாக நம்முடைய டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கறுப்பு ஆடு யார் ?

திரிபுரசுந்தரி ஃபைலை படித்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய செல்போனிலிருந்து வைபரேஷன் அதிர்வலைகள் கேட்டது.

டி.ஜி.பி.தலையசைத்தார்.

” அட்டெண்ட் த போன் ”

திரிபுரசுந்தரி செல்போனை எடுத்து காதுக்கு வைக்க மறுமுனையில் வளர்மதி பேசினாள்.

” மேடம் ”

” சொல்லு வளர் ”

மறுமுனையில் வளர்மதி மெளனம் சாதிக்க லேசாய் எரிச்சலானாள் திரிபுரசுந்தரி.

” விஷயம் என்னான்னு சொல்லு”

” மே....மேடம்...... நம்ம விசாரணைக்கு தேவைப்பட்ட பயோடெக் சம்பந்தப்பட்ட விஷயங்களை நமக்கு கொடுத்துகிட்டிருந்த ஜெனிடிக்சிஸ்ட் ஸ்டீபன்ராஜ் இப்போ உயிரோடு இல்லை ”

” எ...எ....என்னாச்சு? ”

” தெரியலை மேடம்.... தூக்குல தொங்கிட்டிருக்கார் ”


[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X