• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

வளர் ....... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (27)

|

-ராஜேஷ்குமார்

செல்போனில் வளர்மதி சொன்னதைக்கேட்டு சில விநாடிகள் மின்சாரம் தாக்கப்பட்ட உணர்வோடு அதிர்ந்து போனவளாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள் திரிபுரசுந்தரி.

” வளர் ....... நீ என்ன சொல்றே ....... ஜெனிடிக்சிஸ்ட் ஸ்டீபன்ராஜ் தூக்குல தொங்கிட்டிருக்காரா ? ”

” ஆமா மேடம்...... ”

” ஒரு நிமிஷம் லைன்ல அப்படியே இரு ....... ” சொன்ன திரிபுரசுந்தரி தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த டி.ஜி.பியை கலவர விழிகளோடு ஏறிட்டாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 27

” ஸார்..... ஒரு அன்எக்ஸ்பெக்டட் நியூஸ் ”

” நான் புரிஞ்சுகிட்டேன்..... அந்த ஸ்டீபன்ராஜ் இப்ப உயிரோடு இல்லை..... போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியோடுதானே பேசிட்டு இருக்கீங்க ? ”

” எஸ்...ஸார் ”

” செல்போன் ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு வளர்மதியோடு பேச்சை கண்டினியூ பண்ணுங்க ”

சரி என்கிற பாவனையில் தலையாட்டிய திரிபுரசுந்தரி ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு செல்போனில் பேச்சைத் தொடர்ந்தாள்.

” வளர்..... எப்ப இந்த சம்பவம் நடந்தது ? ”

” இப்பத்தான் மேடம்..... ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்தி ”

” எங்கே ? ”

” ஸ்டீபன்ராஜோட வீட்லதான் ”

”நீ எதுக்காக அங்கே போனே...... ? ”

” அது வந்து மேடம்.... நாளைக்கு நானும் மனோஜூம் திருப்பூர்க்குப் புறப்பட்டு போய், அந்த இலவச திருமண ஜோடிகள் இறந்து போன விவகாரத்தை விசாரிக்கலாம்ன்னு இருந்தோம். அந்த விசாரணையில் எதுமாதிரியான கேள்விகளைக் கேட்டா உண்மைகள் வெளியே வரும்ன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ஸ்டீபன்ராஜை சந்திச்சு பேச ஆசைப்பட்டோம். இன்னிக்கு காலையில் ஆறுமணி சுமார்க்கு ஸ்டீபன்ராஜுக்கு போன் பண்ணி ”உங்களை எப்ப வந்து பார்க்கலாம்”ன்னு கேட்டேன். பத்து மணி சுமார்க்கு வரச் சொன்னார். நான் அவர் சொன்னமாதிரி 10 மணிக்கெல்லாம் அவர் வீட்டுக்குப் போயிட்டேன்”

திரிபுரசுந்தரி குறுக்கிட்டாள்.

” மனோஜ் உன்கூட வரலையா ? ”

” மனோஜூம் என்கூட வந்து ஜாய்ண் பண்ணிக்கறேன்னு சொல்லியிருந்தார். ஆனா காலையில ஒன்பது மணிக்கு போன் பண்ணி ஒரு எஸ்.ஒ.சி. பார்க்கிறதுக்காக பொள்ளாச்சி வரைக்கும் போக வேண்டியிருக்கு. நீ மட்டும் போய் ஸ்டீபன்ராஜைப் பார்த்து பேசிட்டு வந்துடு. நாம சாயந்தரமாய் மீட் பண்ணுவோம்ன்னு சொல்லிட்டார். அதனாலதான் நான் மட்டுந்தான் ஸ்டீபன்ராஜைப் பார்க்கப் போனேன். சரியா பத்து மணிக்கு அவர் வீட்டு காம்பெளண்ட் கேட்டுக்கு முன்னாடி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே போய் காலிங் பெல் கொடுத்தேன். வீட்டு வேலைக்காரிதான் வந்து கதவைத் திறந்தா, நான் விபரம் சொன்னதும் அவ என்னை சோபாவில உட்காரச் சொல்லிட்டு இண்டர்காம் போன் ரிஸீவரை எடுத்து ஸ்டீபன்ராஜ்கிட்டே பேசினா..... ”

திரிபுரசுந்தரியின் இரண்டு புருவங்களும் சற்றே உயர்ந்து தாழ்ந்தன.

” வளர் ....... நீ என்ன சொல்றே........ வேலைக்காரி இண்டர்காம் போன் மூலமா ஸ்டீபன்ராஜ்கிட்டே பேசினாளா ? ”

” ஆமா மேடம் ”

” பேசினது ஸ்டீபன்ராஜ்தான்னு உனக்கு எப்படி தெரியும் ? ”

” போன்ல நானும் அவர்கிட்டே பேசினேன் மேடம். வேலைக்காரி ரிஸீவரை என்கிட்டே கொடுத்தா. ஸ்டீபன்ராஜ் எனக்கு ”குட்மார்னிங்” சொல்லிட்டு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. ஒரு ரிசர்ச் ரிப்போர்ட்டை முடிச்சு மெயில் பண்ணிட்டு வந்துடறேன்னு சொன்னார் ”

திரிபுரசுந்தரியும், டி.ஜி.பி. பஞ்சாபகேசனும் திகைப்போடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொள்ள வளர்மதி செல்போனின் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தாள்.

” நானும் அவர்கிட்டே டேக் யுவர் வோன் டைம் ஸார்.... நான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்னு சொல்லிட்டு டீபாயின் மேல் இருந்த அன்னிக்கு வந்த பேப்பரையெல்லாம் புரட்டி படிக்க ஆரம்பிச்சேன். மணி பத்தே காலாச்சு..... பத்தரை மணியாச்சு ஸ்டீபன்ராஜ் மாடியிலிருந்த இறங்கி வர்ற மாதிரி தெரியலை. வேலைக்காரி ஒரு தடவை டீ போட்டுட்டு வந்து குடுத்தா. இப்ப பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நான் வேலைக்காரியைக் கூப்பிட்டு மறுபடியும் ஒரு தடவை போன் பண்ணிப் பாரம்மா. வேலை மும்முரத்துல நான் வந்து இருக்கிறதையே ஒருவேளை மறந்து போயிருக்கலாம்ன்னு சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு வேலைக்காரியும் போன் பண்ணினா. ஆனா இண்டர்காம் போன் வேலை செய்யலை. நானும் ட்ரை பண்ணிப் பார்த்தேன். மறுமுனையிலிருந்து எந்த ஒரு சத்தமும் வரலை. வேலைக்காரி உடனே நீங்க இருங்கம்மா... நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு மாடிக்குப் போனா. அடுத்த நிமிஷமே வேலைக்காரியோட அலறல் சத்தம் கேட்டது. நான் மாடிப்படிகளில் வேகமாய் ஏறி மேலே போனேன். வேலைக்காரி அழுதுட்டிருந்தா...... ஸ்டீபன்ராஜ் தூக்குல தொங்கிட்டிருந்தார் ”

” தற்கொலையா..... எனி கெஸ் ஒர்க் ? ”

” எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மேடம் ”

” சரி.... அந்த ஏரியா பீட் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் குடு. நானும் புறப்பட்டு வர்றேன் ”

திரிபுரசுந்தரி பேசி முடித்து செல்போனை அணைத்துவிட்டு டி.ஜி.பி. பஞ்சாபகேசனை ஏறிட்டாள்.

” ஸார்,..... இது ஒரு எதிர்பாராத செய்தி....... நான் ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு........ ”

டி.ஜி.பி. கோபமாய் கையை உயர்த்தினார்.

” லிசன் மீ..... கொஞ்ச நேரத்துக்கு முந்தி நான் உங்ககிட்டே கொடுத்த ஃபைலில் அஞ்சு விபரீதமான சம்பவங்களைக் குறிப்பிட்டு அது எப்படி நடந்து இருக்கும் என்கிற கேள்விகளையும் கேட்டிருந்தேன். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு முந்தி இப்ப இது ஆறாவது சம்பவம். ஜெனிடிக்சிஸ்ட் ஸ்டீபன்ராஜ் நிச்சயமாய் தற்கொலை பண்ணிக்க வாய்ப்பில்லை. போய் என்கொயரி பண்ணுங்க. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே ஃபைலில் நான் கேட்டிருந்த எல்லா கேள்விகளுக்கும் எனக்கு பதில் கிடைக்கணும். வில் யூ ............. ? ”

” எஸ்.......ஸார்....... ” திரிபுரசுந்தரி எழுந்து விறைப்பாய் சல்யூட் அடித்துவிட்டு அறையினின்றும் தளர்வாய் வெளியேறினாள்.

அடுத்த இருபது நிமிஷம் ஜீப்பில் பயணித்து ஸ்டீபன்ராஜ் வீடு போய் சேர்ந்த போது வீட்டு வாசலில் ஒரு போலீஸ் ஜீப்பும், ஆம்புலன்ஸ் வேனும் சாலையோரமாய் நின்றிருக்க அந்தத் தெருவில் குடியிருந்தவர்கள், சின்னச் சின்ன குழுக்களாய் திரண்டு சத்தம் வெளியே வராமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

திரிபுரசுந்தரி ஜீப்பினின்றும் இறங்கி உள்ளே போக வளர்மதி களைத்துப் போன முகத்தோடு எதிர்பட்டாள்.

” மேடம் ”

” லோக்கல் போலீஸ் ஸ்பாட்டுக்கு வந்தாச்சா ? ”

” வந்தாச்சு மேடம் ”

” இன்ஸ்பெக்டர் யாரு...... ? ”

” பரசுராம் ” வளர்மதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே நடுத்தர வயதில் இருந்த அந்த இன்ஸ்பெக்டர் பரசுராம் வேக நடையில் வந்து நின்று சல்யூட் வைத்தார். மாடிப்படிகள் ஏறிக்கொண்டே திரிபுரசுந்தரி கேட்டாள்.

” ஃபார்மாலீடீஸ் முடிஞ்சுதா ? ”

” பாடியை இறக்கிட்டோம் மேடம் ஃபாரன்ஸிக் பீப்பிள் இப்பத்தான் வந்து எஸ்.ஒ.ஸி. பார்த்துட்டு இருக்காங்க ”

” எனி ஃபர்ஸ்ட் இன்ஃபார்மேஷன் ? ”

” மே.....பி..... சூஸையிட் மேடம் ”

” கன்ஃபார்ம்ட் ? ”

” அ.அ.அது வந்து எஸ்.ஒ.ஸி. ரிசல்ட் வந்த பின்னாடிதான் தெரியும் மேடம்”

” பின்னே சூஸையிட்ன்னு எப்படி சொல்றீங்க ? ”

”வேலைக்காரியை என்கொயர் பண்ணினபோது அவ சொன்ன சில விஷயங்கள் ஸ்டீபன்ராஜை தற்கொலை பண்ணிக்க தூண்டியிருக்கலாம்ன்னு நினைச்சேன் மேடம் ”

” ஈஸிட் ? ” என்ற திரிபுரசுந்தரி மாடிப்படிகளை ஏறி முடித்துக்கொண்டு திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள்.

ஸ்டீபன்ராஜின் உடல் சுவரோரமாய் ஒரு போர்வையால் போர்த்தப்பட்டு தெரிய, ஃபாரன்ஸிக் அதிகாரிகள் நான்கு பேர் பவுடரை அறையில் இருந்த பொருள்களின் மேல் ஸ்பிரே செய்து கைரேகை பதிவுகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். திரிபுரசுந்தரியைப் பார்த்ததும் அட்டென்ஷனுக்கு வந்து உத்யோக பூர்வமான சல்யூட்டைக் கொடுத்துவிட்டு பணியைத் தொடர்ந்தார்கள். சுவரோரமாய் நின்றிருந்த ஒரு கான்ஸ்டபிள் போர்வையை விலக்கி ஸ்டீபன்ராஜின் உடலைக் காட்ட திரிபுரசுந்தரி பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டர் பரசுராமிடம் திரும்பினாள்.

” நீங்க அந்த வேலைக்காரியை விசாரிச்சபோது அவ ஏதோ ஸ்டீபன்ராஜைப்பத்தி சொன்னதாய் சொன்னீங்களே ? ”

” ஆமா மேடம் ”

” அவ என்ன சொன்னா ? ”

” நீங்களே அவளை விசாரிங்க மேடம் ” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் பரசுராம் சற்றுதள்ளி அழுத கண்களும் வீங்கிய முகமுமாய் நின்றிருந்த வேலைக்காரியை கையசைத்துக்கூப்பிட அவள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டபடி திரிபுரசுந்தரியை நெருங்கினாள்.

அவளை ஒரு முறை தன் பார்வையால் ஸ்கேன் செய்த திரிபுரசுந்தரி நிதானமான குரலில் பேச்சை ஆரம்பித்தாள்.

” உம் பேர் என்ன...... ? ”

அவள் விசும்பிக்கொண்டே ” லீலா ” என்றாள்.

” எத்தனை வருஷமாய் இங்கே வேலை பார்க்கிறே ? ”-

” அஞ்சு வருஷமா..... ? ”

” ஸ்டீபன்ராஜ் கல்யாணம் பண்ணிக்கலை என்கிற விஷயம் எனக்குத் தெரியும். அவரோட ஃபேமிலியைப் பத்தி உனக்கு தெரியுமா ..... ? ”

” ஸார்க்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே இல்லை. மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. ஸார்க்கு இப்ப இருக்கிற ஒரே சொந்தம் அவரோட அண்ணன் நேசமணிதான். அவர் துபாய்ல ஒரு எண்ணெய்க் கம்பெனியில் வேலை பார்க்கிறார். வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியா வரும்போது ஸாரைப் பார்க்க வீட்டுக்கு வருவார் ”

” அப்படீன்னா இந்த ஊர்ல அவர்க்கு சொந்தம்ன்னு யாருமில்லை...! ”

”சொந்தம்ன்னு யாருமில்லை... ஆனா.......” என்று சொல்லி லீலா பேச்சை நிறுத்த திரிபுரசுந்தரி அவளைக்கூர்மையாய்ப் பார்த்தபடி கேட்டாள்.

” என்ன ஆனா ..... ? ”

”மெர்ஸி என்கிற ஒரு பெண்ணை ஸார் விரும்பிட்டு இருந்தார். ஒவ்வொரு சண்டேயும் அந்தப் பொண்ணு இங்கே வரும். கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பாங்க. அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து சர்ச்சுக்கு போயிட்டு வருவாங்க. ஆனா கடந்த ஒரு மாச காலமா அந்தப் பொண்ணு இங்க வர்றதில்லை ”

” ஏன் ? ”

” காரணம் என்னான்னு எனக்குத் தெரியலை. ரெண்டு பேர்க்குள்ளே ஏதோ சண்டைன்னு நினைக்கிறேன் ”

” என்ன சண்டை ? ”

” சரியா எனக்குத் தெரியலை.... நேத்தைக்கு காலையில் ஸார் போன்ல அந்த பொண்ணுகிட்டே கோபமா ஏதோ பேசிட்டிருந்தார். இங்கிலீஷ்ல பேசிட்டிருந்தார். எனக்குப் புரியலை. காலையில் வெளியே போனவர் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த பின்னாடிதான் நான் என்னோட வீட்டுக்குப் போனேன். வழக்கமா நான் ஆறு மணிக்கெல்லாம் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிடுவேன். மறுநாள் காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு வந்துடுவேன் ”

” உனக்கு வீடு எங்கே ? ”

” பக்கத்துலதான்..... சாயிபாபாகாலனி..... ”

திரிபுரசுந்தரி மேற்கொண்டு பேசும்முன்பு இன்ஸ்பெக்டர் பரசுராம் பக்கத்தில் வந்தார்.

” மேடம்.....”

திரிபுரசுந்தரி என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தாள். பரசுராம் அறையின் கதவருகே நின்றிருந்த ஒரு இளைஞனைச் சுட்டிக் காட்டியபடி சொன்னார்.

” ஹி ஈஸி அனிஷ்..... இந்த வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கார். உங்க்கிட்டே பேசணும்ன்னு சொல்றார் ”

திரிபுரசுந்தரி அந்த இளைஞனைப் பார்த்தாள். சாயம் போன் தினுசில் இருந்த ஸ்டோன்வாஷ் பேண்டிலும் தொளதொளப்பான டீ சர்ட்டிலும் பார்வைக்குத் தட்டுப்பட்டான். மோவாயில் ப்ரெஞ்ச் தாடியும் கண்களில் கலவரமும் தெரிந்தது.

” ப்ளீஸ் கம்...... ”

அவன் உள்ளே வந்தான். திரிபுரசுந்தரிக்கு முன்பாய் நின்று மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

” மேடம்..... உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும் ”

” என்ன சொல்லுங்க ”

” மேடம்....... ஸ்டீபன்ராஜ் தற்கொலை பண்ணிக்க வாய்ப்பில்லை. இது திட்டமிட்ட கொலை ”

” எப்படி சொல்றீங்க ? ”

” நான் அந்த கொலையாளிகளைப் பார்த்தேன் மேடம். மொத்தம் மூணு பேர் ”

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X