• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ஒன் + ஒன் = ஜீரோ'... - அத்தியாயம் 2

By Shankar
|

- ராஜேஷ்குமார்

விவேக்கும் விஷ்ணுவும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனைத் தொட்டபோது ஒட்டுமொத்த ஸ்டேஷன் வளாகமும் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

மௌனமும் பயமும் கலந்த முகங்களோடு ஜனக்கும்பல் ஆங்காங்கே தேங்கி ஒருவித மிரட்சியோடு நின்றிருந்தது.

இன்ஸ்பெக்ட்டர் ஒருவர் விவேக்கை எதிர்கொண்டு சல்யூட் வைத்து தளர்ந்தார்.

"எந்த பிளாட்பார்ம் ?" விவேக் நடந்து கொண்டே கேட்டான்.

"ரெண்டாவது ஸார் "

"ஆள் கிடைச்சானா ?"

"தப்பி ஓடிட்டான் ஸார்.... கையில் அரிவாள் வச்சிருந்ததால யாரும் அவனை துரத்திக்கிட்டு போகலை....!"

"சம்பவத்தை நேர்ல பார்த்தது யாரு ? "

" ஒரு பூக்காரி ஸார்..."

இரண்டாவது பிளாட்பாரத்தின் மையத்தில் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட சுடர்கொடியின் உடல் ஒரு மூட்டை மாதிரி தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டே வந்தார்.

"மத்தியான நேர ஸ்டேஷன் ஸார். கூட்டமேயில்லை. கொலையாளிக்கு வசதியாய் போச்சு. எங்கே வெட்டினா உடனே உயிர் போகும்ன்னு தெரிஞ்சு அந்தந்த இடமாய்ப் பார்த்து சாவகாசமாய் வெட்டிட்டு போயிருக்கான் ஸார்...! "

Rajeshkumars One + One = Zero -2

விவேக்கும் விஷ்ணுவும் வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட உடம்புக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.

இன்ஸ்பெக்டர் கண்ணசைக்க, கான்ஸ்டபிள் ஒருவர் கையில் வைத்து இருந்த லாட்டியால் துணியை விளக்க சுடர்கொடி தாறுமாறான கோலத்தில் ரத்தச் சகதியில் மிதந்து கொண்டிருந்தாள். தலையில் விழுந்த வெட்டு முகத்தை சரிபாதியாய் பிளந்து வைத்திருந்தது. துண்டிக்கப்பட்ட இரண்டு கைகளும் அவளுடைய வயிற்றின் மேல் எடுத்து வைக்கப்பட்டிருக்க, வலது கையில் பாதி காணாமல் போயிருந்தது. வாய் உலர்ந்து போன விஷ்ணு விவேக் காதருகே, "பாஸ்" என்றான்.

"கொலை பண்ணினவன் ஒரு ப்ரொபெஷனல் கில்லர் கிடையாது"

Rajeshkumars One + One = Zero -2

" எப்படிச் சொல்றே ?"

" இது ஒரு மாதிரி எமோஷனல் அண்ட் ப்ரூட்டல் மர்டர் பாஸ் ... இந்த மரணத்துக்குப் பின்னாடி ஒரு வெறித்தனமான காதல் இருந்திருக்கணும். அதான் இப்படி ஒரு அரிவாள் அராஜகம். கையில் அரிவாளை வச்சிக்கிட்டு ருத்ரதாண்டவமே ஆடிட்டுப் போயிருக்கான் "

"விஷ்ணு !"
"சொல்லுங்க பாஸ்..."

" 'வலையோசை' பத்திரிக்கையின் ஆசிரியர் மீனலோசனிக்கு போன் பண்ணி அவங்களை ஸ்பாட்டுக்கு வரச் சொல்லிட்டியா ?"

"கார்ல வரும்போதே சொல்லிட்டேன் பாஸ்.. நியூசைக் கேட்டதுமே அந்த அம்மா நொறுங்கிப் போய்ட்டாங்க... ஒரே அழுகை... அவங்களைச் சமாதானப்படுத்தறதுக்கு என்னோட உடம்பிலிருந்து 250 கலோரியை செலவு பண்ண வேண்டியிருந்தது ."

விவேக் விஷ்ணுவின் புலம்பலைப் பொருட்படுத்தாமல் தனக்கு பக்கத்தில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரிடம் திரும்பினான்.

"சுடர் கொடியோட ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு தகவல் கொடுத்துட்டிங்களா ?"

" ஸாரி ஸார்...! சுடர்கொடியோட ஃபேமிலி மெம்பர்ஸைப் பத்தி எந்த தகவலும் கிடைக்கவில்லை ."

"சுடர் கொடிக்கிட்டே செல்போன் இருந்து இருக்குமே?"

"செல்போனை தேடிப் பார்த்தோம்... கிடைக்கலை... கொலையாளி எடுத்துட்டு போயிருக்கலாம்... சம்பவம் நடந்த போது சுடர் கொடியின் தோளில் இந்த ஒரு கைப்பை மட்டும்தான் இருந்தது ஸார். இந்த கைப்பையை ஓபன் பண்ணிப் பார்த்த போதுதான் இந்த பெண் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்கிற விஷயம் தெரிய வந்தது."

" அந்த கைப்பை எங்கே...?"

கான்ஸ்டபிள் ஒருவர் பத்திரப்படுத்தி வைத்து இருந்த கைப்பையை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதை விவேக்கிடம் கொடுத்தார்.

விவேக் வாங்கிப் பிரித்தான்.

உள்ளே சொற்பமாய் சில பொருள்கள். வலையோசை பத்திரிக்கையின் சீஃப் ரிப்போர்ட்டர் என்பதற்கான ஒரு ஐ.டி. கார்டு. இரண்டு பேனாக்கள், ஒரு கூலர் கண்ணாடி. வித விதமான நெற்றி பொட்டு ஸ்டிக்கர்களோடு கூடிய ஒரு அட்டை. பேட்டி எடுக்கும் போது செய்திகளைக் குறித்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகம். சில ரப்பர் பேண்டுகள்.

விவேக் நிமிர்ந்தான். " இந்தக் கைப்பையில் இருந்ததே இவ்வளவுதானா?"

"ஆமா ஸார்...."

"சம்பவத்தைப் பார்த்தது ஒரு பூக்காரின்னு சொன்னீங்க... அந்த அம்மாவைக் கூப்பிடுங்க...."

இன்ஸ்பெக்டர் பின்னால் திரும்பிப் பார்த்து சற்றுத் தொலைவில் பூக்கூடையும் கையுமாய் கலவர முகத்தோடு உட்க்கார்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்ணை கையசைத்து வரச்சொன்னார்.

அந்த பெண் பெரிய நெற்றிப் பொட்டோடும், பயம் இன்னமும் பிடிவாதமாய் இடம் பிடித்து இருந்த விழிகளோடும் விவேக்கிற்கு எதிராய் வந்து நின்றாள்.

"உம் பேர் என்னம்மா....?

"சிநேகா" வெற்றிலைக் காவி படிந்து சிதிலமான பல்வரிசையைக் காட்டி பூக்காரி பதில் சொல்ல விஷ்ணு மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு உண்மையான சிநேகாவை நினைத்துக் கொண்டு அனல் பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

விவேக் அந்த பெண்ணை நெருங்கி நின்றான்.

"சம்பவத்தை நீ பார்த்ததாய் இன்ஸ்பெக்டர் சொல்றார். நீ பார்த்தியா?"

"ஆமாங்கய்யா "

"என்ன நடந்தது.... அப்படியே சொல்லு ....!"

பூக்காரி குரல் கம்மியது.

"அய்யா...! மணி ஒண்ணு இருக்கும். அதோ அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு தான் பூ வியாபாரம் பண்ணிட்டிருந்தேன்.... கடற்கரை மார்க்கத்திலிருந்து வந்த ட்ரெய்ன் நின்னது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. பொம்பளைங்க இருந்த பெட்டி எனக்கு நேரா வந்து நின்னது. ரெண்டே ரெண்டு பொண்ணுங்க மட்டும்தான் பெட்டியிலிருந்து எறங்கினாங்க.... அதுல ஒரு பொண்ணு வேகமாய் இறங்கி போயிடுச்சு... ஒரு பொண்ணு மட்டும் இறங்கி சுத்தும் முத்தும் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.. அந்த சமயத்துல ஒரு ஆள் வந்தான். டாக்டர் ஆபரேஷன் பண்ணும் போது தன்னோட முகத்துக்கு பச்சக் கலர்ல ஒரு துணி கட்டுவாரே அது மாதிரி அவனும் பச்சைக் கலர்ல முகமூடி மாதிரி போட்டிருந்தான்."

விவேக் குறுக்கிட்டு கேட்டான்

"முகம் உனக்கு சரியா தெரியலை? "

"தெரியலைங்கய்யா"

"சரி... அப்பறம்....என்ன நடந்தது... சொல்லு? "

"வந்தவன் அந்தப் பொண்ணு கிட்ட ஏதோ கேட்டான்.

பதிலுக்கு அந்தப் பொண்ணு எதுவும் பேசாம நடந்து போக அவன் தன் முதுகுத் தோல் பையில் மறைச்சு வச்சிருந்த வீச்சரிவாளை எடுத்து கண்டமேணிக்கு அந்தப் பொண்ணை வெட்ட ஆரம்பிச்சான். ரத்தம் நாளா பக்கமும் தெறிச்சு விழ தலை துண்டாகி அந்த பொண்ணு குப்புற விழுந்தா.... அப்பவும் அவன் விடலை. ரத்தம் சொட்ட சொட்ட அவ உடம்பை வெறிபிடிச்சவன் மாதிரி கொத்தி எடுத்தான். ஸ்டேஷன்ல கூட்டம் இல்ல ... பார்த்துகிட்டு இருந்த ரெண்டொருத்தரும் அலறியடிச்சுக்கிட்டு ஓடிப் போய்ட்டாங்க. நானும் பயந்து போய் அந்த தூணுக்குப் பின்னாடி போய் ஒண்டிக்கிட்டேன்... கொஞ்ச நேரம் கழிச்சு எட்டிப் பார்த்தேன். அவன் அறிவாளோடு தூரத்துல வேகமாய் ஓடிட்டு இருந்தான். எனக்கு உடம்பு 'வெட வெட' ன்னு வந்து அப்படியே மயக்கமா உட்கார்ந்துக்கிட்டேன். கண்ணுக்கு லட்சணமாய் ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி உயிரோட இருந்த பொண்ணு என் கண்ணு முன்னாடியே துண்டு துண்டாய் இப்ப வெட்டப்பட்டதை நினைச்சாலும் கண்ணை இருட்டிக்கிட்டு மயக்கம் வர்ற மாதிரி இருக்குங்கய்யா...!"

"மறுபடியும் அந்த ஆளைப் பார்த்தா உன்னால அடையாளம் கண்டுபிடிச்சுட முடியுமா...?"

"அந்த ஆளோட மூஞ்சியையே நான் பாக்காதப்ப எப்படீங்கய்யா சொல்ல முடியும்?"

விவேக்கின் பார்வை இப்போது இன்ஸ்பெக்டரின் மேல் நிலைத்தது. " ஸ்டேஷன்ல இருக்கற சி.சி.டீ.வி. காமிராக்களில் கொலையாளியோட நடமாட்டம் பதிவாகியிருக்கா...?"

"ஸாரி ஸார் ... இந்த ஸ்டேஷனில் இருக்கற ஒரு சி.சி.டீ.வி. காமிரா கூட வொர்கிங் கண்டிஷனில் இல்லை... அதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டுதான் கொலையாளி தைரியமா செயல்பட்டிருக்கான். "

"நீங்க ரயில்வே போலீஸ் தானே ?"

"ஆமா ஸார்"

"ஆர் யூ அஷேம்டு டு பி ஏ போலீஸ் ஆபிஸர்...? எத்தனையோ பேர் வந்து போகிற ஒரு இடம் சரியான பாதுகாப்புக்கு உட்படுத்தியிருக்க வேண்டாமா...?"

"ஸார்... இந்த விஷயத்தை என்னோட மேலதிகாரிகளின் கவனத்துக்கு எத்தனையோ முறை கொண்டு போயிருக்கேன். அவங்க அதை ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாத போது நான் என்ன பண்ண முடியும் ஸார். அயாம் டோட்டலி ஹெல்ப்லஸ்...!"

விவேக் மேற்கொண்டு கோபமாய் பேசும் முன்பு விஷ்ணு அவன் காதருகே "பாஸ்" என்றான்.

"என்ன?"

"வளையோசை பத்திரிகையின் ஆசிரியர் மீனலோசனி அந்த அம்மாதானே? யாரோ ஒரு பொண்ணு தாங்கலாய் படிச்சி கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்க...!"

விவேக் திரும்பிப் பார்த்தான்.

மீனலோசனிதான்! அழுது அழுது களைத்துப்போன கண்களோடும் வீங்கிய முகத்தோடும் பார்வைக்குத் தட்டுப்பட்டாள்.

விவேக்கைப் பார்த்ததும் அவளுக்குள் மறுபடியும் ஒரு அழுகை வெடித்தது. "ஸார்... உங்களைப் பேட்டி எடுக்க வர்றதுக்காக ஏகப்பட்ட கேள்விகளை தயார் பண்ணிக்கிட்டு சந்தோஷமாய் ஆபீசிலிருந்து புறப்பட்டா... அவளுக்கு இப்படி ஒரு முடிவு இந்த வேளச்சேரி ஸ்டேஷனில் காத்திருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை...!"

இதோ பாருங்க மேடம்... திஸ் ஈஸ் ஹைலி அன்ஃபார்ச்சுனேட். இனி அழுது புலம்பி பிரயோஜனமில்லை. கொலையாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதுக்கு உங்க ஒத்துழைப்பு வேணும். சுடர்கொடியோட ஃபேமிலி மெம்பர்ஸுக்கு இதுவரையிலும் தகவல் தெரிவிக்கப்படலை. அவங்க எங்கே இருக்காங்க?"

மீனலோசனி கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.

"சுடர் கொடிக்கு அம்மா அப்பா கிடையாது. ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். ராஜா அண்ணாமலைபுரத்துல வீடு..."

"அண்ணனோட பேர் என்ன?"

"திலீபன்"

"அவரோட ஃபோன் நம்பர் உங்ககிட்ட இருக்கா?"

"இல்லையே...!" மீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும்போதே விஷ்ணுவின் குரல் மறுபடியும் அவன் காதருகே கேட்டது.

"பாஸ்...! ஒரு முக்கியமான துப்பு கிடைச்சிருக்கு. ரெண்டு நிமிஷம் அப்படி ஓரமாய் வர்றீங்களா?"

விவேக் விஷ்ணுவை உன்னிப்பாய்ப் பார்த்தான்.

"என்ன துப்பு...?"

"ஜெபமாலை" என்றான் விஷ்ணு.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
Here is the 2nd Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X