• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 7

By Shankar
|

- ராஜேஷ்குமார்

ஜெபமாலையின் செல்போன் இணைப்பு சட்டென்று அறுந்து போனதும் விவேக்கின் முகத்தில் ஒரு சின்ன பதட்டம் 'டென்ட்' போட்டுக் கொண்டது. அதைக் கவனித்த விஷ்ணு கேட்டான்,

"என்ன பாஸ்.... உங்க முகத்துல சின்னதா ஒரு வர்தா புயல் தெரியுது"

"ஜெபமாலையோட போன் கனெக்‌ஷன் கட்டாயிடுச்சு."

"நினைச்சேன். இவளுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இருக்கணுமேன்னு நினைச்சேன். வந்துருச்சு.... நம்ம எதிரிகள் வேகமாய் இருக்காங்க பாஸ்."

Rajeshkumars One + One = Zero -7

விவேக் ஜெபமாலையின் எண்ணைத் தொடர்பு கொண்டான். உடனே ஒரு பெண்ணின் ரிக்கார்டட் வாய்ஸ் இன்ஸ்டன்ட் சப்பாத்தி புரோட்டா வேகத்தில் வந்தது.

"நீங்கள் தொடர்பு கொண்ட நபரின் எண் தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது."

"என்ன பாஸ்..??"

"ஸ்விட்ச் ஆஃப்"

"நினைச்சேன். மறுபடியும் போன் பண்ணிப் பாருங்க. 'தி போன் ஈஸ் நாட் இன் யூஸ்'ன்னு ஒரு பொண்ணோட சாக்லேட் வாய்ஸ் கேட்கும்... ஜெபமாலைக்கும் மலர் வளையம் வெச்சுட்டாங்க போலிருக்கு"

விவேக் மறுபடியும் போன் செய்ய நினைத்த நொடி, அவனுடைய போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைத்தது யாரென்று பார்த்தான்.

ஒரு புது எண்.

"யாரது ?" என்றான் விவேக்.

மறுமுனையிலிருந்து குரல் வேகமாக வந்தது.

"ஸார் ! நான்தான் ஜெபமாலை. இதுவும் என்னோட போன்நம்பர் தான் ஸார். இதுக்கு முன்னாடி நான் பேசின போன்ல 'சார்ஜ்' தீர்ந்துட்டதால என்னோட இன்னொரு போன்லயிருந்து காண்டக்ட் பண்றேன்."

"போன் இணைப்பு கட் ஆனது நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்"

"ஸார் ! நானும் இப்ப டென்ஷன்லதான் இருக்கேன். சுடர்கொடி என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். வாரத்துக்கு ரெண்டு தடவையாவது அவளைச் சந்திச்சு நாட்டு நடப்புகளில் இருந்து பர்சனல் விஷயங்கள் வரை எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவோம்.. ரொம்ப போல்ட் டைப் ஸார். யார்க்காகவும், எதுக்காகவும் பயப்படவே மாட்டா. நான் எத்தனையோ தடவை அவளை 'வார்ன்' பண்ணியிருக்கேன். அதையெல்லாம் அவ பொருட்படுத்தவே மாட்டா. ஆனா எது மாதிரியான சம்பவம் நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அது இன்னிக்கு வேளச்சேரி ஸ்டேஷன்ல நடந்துருச்சு.... எனக்கும் அது மாதிரி எதுவும் நடந்துடுமோன்னு உதறலாயிருக்கு ஸார்...!"

"உன்னோட உயிர்க்கும் ஆபத்து வரும்ன்னு நீ ஏன் நினைக்கிறே ?"

"சுடர்கொடிக்கு தெரிஞ்ச பல முக்கியமான விஷயங்கள் எனக்கும் தெரியுமே.... ஸார்."

"சாரி.. சுடர்கொடியோட படுகொலைக்கு யார் காரணம்.... எது மாதிரியான விஷயங்கள் காரணம் ?"

"ஸார் ! போன்ல எதையும் பேச முடியாது. நான் உங்கள் நேர்ல மீட் பண்றேன். பெசன்ட் நகர்ல காலசேத்ரா காலனியில் இருக்கும் 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்டுக்கு நான் எத்தனை மணிக்கு வரணும் ஸார் ?"

"சரியா ஆறு மணிக்கு"

"வேண்டாம் ஸார் இன்னும் கொஞ்சம் இருட்டட்டும்"

"அப்படின்னா ஏழு மணி ?"

"ஓ கே.... வந்துட்றேன் ஸார். என்னோட ட்ரஸ் கோட் யெல்லோ சுடிதார், ஆரஞ்ச் துப்பட்டா"

"இட்ஸ் ஓகே...! ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு போன் பண்ணு !"

"ஷ்யூர் ஸார்.. பட் இனிமேல்தான் பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் ஆரம்பமாகும்...! உங்களுக்கு இந்த கேஸ்ல நிறைய வேலையிருக்கு ஸார்..!"

"பார்த்துடலாம்.. என்னோட ஒர்க் கேரியர்ல எந்த ஒரு குற்றவாளியும் ஜெயிச்சதாகவோ தப்பிச்சதாகவோ வரலாறே இல்லை !"

"சரியா ஏழு மணிக்கு நீங்க சொன்ன அந்த 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்ல இருப்பேன் ஸார்" மறுமுனையில் ஜெபமாலை பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட விவேக்கும் செல்போனை மெளனமாக்கினான். காரை ஸ்டார்ட் செய்யும் போது விஷ்ணு மெல்ல கூப்பிட்டான்.

"பாஸ்"

"என்ன ?"

"நம்ம ஜெபா என்ன சொல்றா ?"

விவேக் விஷ்ணுவை முறைக்க விஷ்ணு "ஸாரி... பாஸ்.. என்னோட ஜெபா.." என்றான்.

"விஷ்ணு..! ஜெபமாலைகிட்டே நிறைய விஷயங்கள் இருக்கு.. 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்டுக்கு சரியா ஏழு மணிக்கு போறோம். அவகிட்ட பேசுறோம். எல்லா விஷயங்களையும் வாங்கறோம். ஆனா ஜெபமாலை எல்லா விஷயங்களையும் நம்மகிட்ட சொல்லுவாளான்னு கொஞ்சம் சந்தேகமாய் இருக்கு..!"

"அந்த பொறுப்பை என்கிட்டே விடுங்க பாஸ்..! ஜெபாவை நான் ஹேண்டில் பண்றேன்... எனக்கு ஜன வசியம் தெரியும். அத வெச்சு அவகிட்டேயிருந்து எல்லாத்தையும் கறந்துடறேன்.'

"என்னது ஜன வசியமா ?"

"ஆமா பாஸ்...! நான் போன தடவை சதுரகிரி மலைக்குப் போயிருந்த போது அங்கேயிருந்த ஒரு மலைக்குகையில் சாமியார் ஒருத்தரைப் பார்த்து பேசிட்டு இருந்தப்ப அவர் ஒரு அரதப் பழச புஸ்தகம் ஒண்ணைக் கொடுத்தார். வீட்டுக்குக் கொண்டு வந்து படிச்சுப் பார்த்தேன் பாஸ். அப்படியே அசந்து போயிட்டேன்."

"டேய் !"

"நம்புங்க பாஸ் ! வசியம் ஒரு கலை. ஏமாற்று வேலை கிடையாது. வசியத்தில் ஜன வசியம், தன வசியம், சத்ரு வசியம், ஸ்த்ரீ வசியம், புருஷ வசியம், மிருக வசியம், தேவ வசியம், லோக வசியம், ராஜ வசியம், யந்திர வசியம், தந்திர வசியம்ன்னும் பல வகை இருக்கு பாஸ்."

"ஏண்டா ! இப்ப நீ சொன்னதயெல்லாம் மனப்பாடம் பண்ணவே ஒரு மாசம் ஆகும் போலிருக்கே ?"

"அது உங்களுக்கு பாஸ்... என்னை மாதிரி கட்டை பிரம்மச்சாரிகளுக்கு ஒரு நிமிஷ வேலை."

விவேக் சின்னதாய் கொட்டாவி ஒன்றை வெளியேற்றிவிட்டு காரின் வேகத்தை அதிகரிக்க விஷ்ணு "பாஸ் ! நான் சொன்னதை நீங்க நம்பலைன்னு நினைக்கிறேன்" என்றான்.

"சுத்தமாய்"

"இன்னிக்கு நம்பப் போறீங்க பாஸ். சாயந்தரம் ஏழு மணிக்கு 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்ட்டுக்கு ஜெபா வரப் போறா இல்லையா?"

"ஆமா...!"

"நான் உங்களுக்குப் பக்கத்துல இருந்தாலும் ஜெபா உங்ககிட்டதான் எல்லா விஷயத்தையும் சொல்லுவா. ஆனா அப்பப்ப சாப்பிடும்போது ஊறுகாயைத் தொட்டுக்கற மாதிரி என்னையும் போனாப் போகுதுன்னு பார்ப்பா. அப்படிதானே எப்பவும் நடக்கும் ?"

"ஆமா.."

"ஆனா அப்படி நடக்க போறது இல்லை. இன்னிக்கு ஜெபா என்னை மட்டும் பார்த்து பேசப்போறா. உங்க பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டா பாஸ்!"

"அப்படியா ?"

"அப்படியான்னு கேட்காதீங்க பாஸ், அது எப்படின்னு கேளுங்க. அந்த சதுரகிரி சாமியார் எனக்கு அந்த வசிய புஸ்தகத்தை மட்டும் தரல..?"

"அப்புறம்... இலவச இணைப்பா வேற எதாவது கொடுத்தாரா?"

"கிண்டல் பண்ணாதீங்க பாஸ்! சித்த ஹத்தி தோஷம் வந்துடும்.. அந்த சாமியார் புத்தகத்தோடு சின்னதா 'அர்த்த இஷ்டம்' என்கிற ஒரு சின்ன மை டப்பியையும் கொடுத்தார். அந்த மை சாதாரண மை கிடையாது பாஸ். கோரோசனையோடு, மச்சக்கல், சிறு தேன் எனப்படும் கொசுத்தேன் இந்த மூணையும் கலந்து ஒரு அமாவாசையன்னிக்கு பண்ணின மையை ஒரு கடுகளவு எடுத்து உச்சந்தலையில் வெச்சுகிட்டு போய் யார்க்கு எதிரிலே போய் உட்கார்ந்துலும் சரி, எதிராளி மனசுக்குள்ளே இருக்குற எல்லாமே வெளியே வந்துடும்..!"

"அப்படின்னா ... அந்த ஜெபமாலை இன்னிக்கு உன்கிட்டதான் பேசப் போறா..??"

"நோ டவுட் பாஸ்..."

"அந்த அர்த்த இஷ்ட மை டப்பி இப்ப வீட்ல இருக்கா. உன்னோட பாக்கெட்ல இருக்கா ?"

"பாக்கெட்ல ஒரு கர்ச்சீப்ல சுத்தி வெச்சிருக்கேன் பாஸ்"

"எங்கே காட்டு பார்க்கலாம்"

"ஸாரி.. பாஸ் ! கல்யாணமானவங்க அந்த டப்பியை பார்த்தா அதனோட சக்தி போயிடும்னு சாமியார் சொல்லியிருக்கார்".

********

சாயந்திரம் மணி ஆறு பத்து

ரூபலா இரண்டாவது தடவை போட்டுக் கொடுத்த டீயையும் சாப்பிட்டுவிட்டு டி.வி.யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த விவேக்கை நெருங்கி உட்கார்ந்தான் விஷ்ணு.

"பாஸ்"

" ம்... "

"மணி 6.10. கிளம்ப வேண்டாமா ?"

"எங்கே ?"

"என்ன பாஸ்.... மறந்துட்டீங்களா... ஏழு மணிக்கு ஜெபா நமக்காக பெசன்ட் நகர் 'செவன்த் டேஸ்ட்' ரெஸ்டாரண்டுக்கு வந்துருவா. அவளை நாம் அவரச் சொல்லியிருக்கோம்..!"

"அப்படியா ?'

"என்ன அப்படியா...?" ரூபலா கோபத்தோடு உள்ளேயிருந்து வந்தான்.

"விஷ்ணு சீரியஸாய் கேட்டுட்டு இருக்கான். நீங்க என்னடான்னா... ரொம்பவும் அலட்சியமாய் பதில் சொல்லிட்டு இருக்கீங்க. இப்ப கிளம்பினாத்தானே ஏழு மணிக்கு பெசன்ட் நகர் போய் சேர முடியும்."

விவேக் மெலிதாய் புன்னகைத்தான்.

"பெசன்ட் நகர் போய்ச் சேர்ந்துடலாம்.. ரெஸ்டாரண்ட்டுக்கு போயிடலாம்.. ஆனா..."

"என்ன ஆனா..?"

"ஜெபமாலை ரெஸ்டாரண்ட்டுக்கு வரணுமே ?"

"எ...எ...என்ன சொல்றீங்க ?"

"அந்த ஜெபமாலை ரெஸ்டாரண்ட்டுக்கு வர மாட்டான்னு சொல்றேன் !"

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 7th chapter of Rajeshkumar's One + One = Zero crime series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X