• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 29

By Shankar
|

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே ஒரு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் விசாரணைக்கு நுழைகிறார்கள்.

இனி...

விஷ்ணு அந்தக் கல்லில் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை மெல்ல கிழித்து விடாமல் பிரித்து விரித்தான்.

அதில் பென்சிலால் எழுதப்பட்ட கோணல் மாணலான தமிழ் எழுத்துக்கள் சின்னச் சின்ன வார்த்தைகளாக மாறியிருந்தன.
விவேக்கை ஏறிட்டான் விஷ்ணு, "பாஸ்... ஏதோ லெட்டர் மாதிரி தெரியுது..."

"படி..."

விஷ்ணு படித்தான்.

"எங்களுக்குத் தேவை நீதி விசாரணை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை நான்கைந்து பேர் தப்பித்து போய்விடுகிறார்கள். ஆனால், யாரும் பிடிபட்டு மீண்டும் இங்கு வருவது இல்லை. இந்தச் சிறை என்ன செய்கிறது?"

கடிதத்தைப் படித்த விஷ்ணு விவேக்கிடம் நீட்டினான். "பாஸ்.. இந்த விடுதியில் சிறைக் கைதியாய் இருக்கிற யாரோ ஒரு பையன் தான் இந்த லெட்டரை எழுதி கல்லில் சுத்தி நம்ம பார்வைக்கு தட்டுப்படும்படியாய் வீசி இருக்கணும்."

விவேக் அந்த சிறை விடுதியை திரும்பிப் பார்த்தான்.

எல்லா ஜன்னல் கதவுகளும் அடைபட்டு இருக்க அந்த சிறைவிடுதி பகல் நேரத்திலேயே கனத்த நிசப்தம் இருந்தது.

"உங்களுக்கு யார் வேணும்?"

பின்பக்க குரல் கேட்டு விவேக்கும் விஷ்ணுவும் திரும்பி பார்த்தார்கள். நடுத்தர வயதில் அந்த மனிதர் வேப்ப மரத்துக்குக் கீழே நின்றிருந்தார். காக்கி பேண்ட், வெள்ளை சர்ட். பெப்பர் சால்ட் தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்தார். மீசைக்கு மட்டும் 'டை' அடித்து இருப்பது தெரிந்தது.

விஷ்ணு அவரை நோக்கிப் போய் தன்னுடைய உத்யோக அட்டையைக் காட்ட, அவர் சட்டென்று அட்டென்ஷனுக்கு வந்து தளர்ந்தார். நெற்றி இன்ஸ்டண்டாய் வியர்வையின் மினுமினுப்புக்கு உட்பட்டது.

"ஸாரி.... ஸார்"

"நீங்கதான் இங்கே அப்சர்வேடிவ் ஆபீஸர், மிஸ்டர் சச்சிதானந்தம்...?"

"ஆமா....ஸார்...."

"கொஞ்சம் பேசணுமே.... ஒரு சின்ன என்கொய்ரி"

"வாங்க ஸார்.... என்னோட ரூமுக்குப் போயிடுவோம்"

சச்சிதானந்தம் சொல்லிவிட்டு பக்கத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் இருந்த அறையை நோக்கிப் போனார். விவேக்கும், விஷ்ணுவும் பின் தொடர்ந்தார்கள்.
வெளியே இருந்து பார்ப்பதற்கு ஒரு சிறிய அறையைப் போல் இருந்தாலும், உள்ளே நான்கைந்து பெரிய பெரிய பீரோக்களோடு அறை விஸ்தாரமாய் தெரிந்தது. பழங்கால தேக்கு மர மேஜையைச் சுற்றி பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.

Rajeshkumars crime thriller One + One = Zero - 29

"ப்ளீஸ்.... பி ஸீட்டட் ஸார்"

"நீங்களும் உட்காருங்க சச்சிதானதம்"

எல்லோரும் உட்கார்ந்தார்கள். விவேக் சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு கேட்டான்.

"நீங்க இந்த அப்ஸர்வேடிவ் போஸ்டிங்குக்கு வந்து எத்தனை நாளாச்சு..?"

"ரெண்டு.... வருஷம் முடியப் போகுது ஸார்"

"உங்களுக்கு முனாடி இந்த போஸ்ட்ல யார் இருந்தாங்க...?"

"ரஹீம் கஸாலி ன்னு ஒருத்தர் ஸார்"

"இப்ப அவர் எந்த ஊர்ல இருக்கார்?"

"அவர் ரிடையர்ட் ஆயிட்டார் ஸார்... திருச்சியில் ஃபேமிலியோடு செட்டில் ஆயிட்டார்"

"இட்ஸ் ஒகே.... மிஸ்டர் சச்சிதானந்தம்..!"

"நாங்க இங்கே வந்தது ஒரு என் கொய்ரிக்காக. ப்ளீஸ் கோ-அப்ரே வித் அஸ்"

"ஷ்யூர் ....ஸார்...."

விவேக் விஷ்ணுவைப் பார்க்க, அவன் தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த சுடர்கொடியின் போட்டோவை எடுத்து சச்சிதானந்தத்தின் முகத்துக்கு நேராய் காட்டியபடி கேட்டான்.

"இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா...?"

போட்டோவைப் பார்த்ததுமே அவருடைய கண்களில் மின்னல் வெட்டைப் போல் அதிர்ச்சி கோடு ஒன்று ஓடி மரைந்தது.

"தெ....தெரியும் ஸார்"

"எப்படி?"

"பத்து நாளைக்கு முன்னாடி இந்த சுடர்கொடி இந்த சிறைவிடுதிக்கு வந்து இருந்தாங்க...."

"எதுக்கு?"

"இந்த விடுதியில் இருக்கிற குற்றவாளிகளைப் பார்த்துப் பேசி ;வளையோசை' என்கிற பத்திரிக்கையில் ஒரு கட்டுரைத் தொடர் எழுத ஆசைப்பட்டாங்க.... தொடர்க்கான தலைப்பு 'அவிழ மறுக்கும் அரும்புகள்'ன்னும் சென்னாங்க....!"

"நீங்க அதுக்கு அனுமதி கொடுத்தீங்களா?"

"இல்லை"

"ஏன்?"

"நான் இங்கே அப்ஸர்வேடிவ் ஆபீஸர் மட்டுமே. தன்னிச்சையாய் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது ஸார். மேலிடத்துக்கு தகவல் தகவல் கொடுத்துத்தான் அனுமதி வாங்க முடியும். இந்த விபரத்தையும் சுடர்கொடி கிட்டே சொன்னேன்."

"எனக்கு எப்படியாவது அனுமதி குடுங்க ஸார். நான் இன்னும் ஒரு வாரத்துல தொடரைத் தொடங்கும்ன்னு சொன்னாங்க"

"நீங்க அதுக்கு ஏதாவது முயற்சி எடுத்தீங்களா?"

"ஆமா ஸார் . நான் உடனடியாய் எனக்கு மேல் இருக்கிற விஜிலன்ஸ் அபீஸர்க்கு போன் பண்ணி விபரத்தைச் சொன்னேன். ஆனா, அவர் அனுமதி கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டார்."

"காரணம்?"

"விதி முறைகளில் இடம் இல்லைன்னு சொன்னார்"

"உண்மையிலேயே விதிமுறைகளில் இடம் இல்லையா?"

"அப்படினு கிடையாது ஸார்... மேலதிகாரிகள் பார்த்து கோரிக்கை சரியானதாக இருந்தால் அனுமதி தரலாம். சுடர்கொடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் எனக்குத் தெரியாது."

விவேக் இப்போது குறுக்கிட்டான். "சுடர்கொடி உயிரோடு இல்லை என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும் ஸார்... டி.வி. யையும் , பேப்பரையும் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். வெரி வெரி ப்ரூட்டல் மர்டல்... பட்டப் பகலில் வேளச்சேர் ரயில்வே ஸ்டேஷனில் அந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை இன்னமும் என்னால் ஜீர்ணிக்க முடியலை. என்னோட மனசுக்குள்ளே இன்னனும் அந்த அதிர்ச்சி இருக்கு."

"சுடர் கொடியின் கொலைக்கும் இந்த கூர்நோக்கு இல்லம் என்கிற ஜுவைனல் கேர் ஹோமுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்னு நீங்க நினைக்கறீங்களா மிஸ்டர் சச்சிதானந்தம்?"

"அப்படியிருக்கும்ன்னு நான் நினைக்கலை ஸார். அந்தப் பெண் சுடர்கொடி ஒரு தைரியமான ப்ரஸ் ரிப்போர்ட்டர் மற்றும் பிரச்சனைக்குரிய கட்டுரைகளை எழுதுவதில் நல்ல ரைட்டர். ஸோ விரோதிகள் நிறையவே உருவாக வாய்ப்பு இருக்கு... அரசியல்வாதிகளோட பகை வேற. அந்தப் பெண்ணின் மரணத்துக்கு இந்த ஹோம் ஒரு காரணமாய் இருக்க முடியாது ஸார்."

"சரி.... ஜெபமாலை என்கிற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?"

"நல்லாவே தெரியும் ஸார்"

"எப்படி ?"

"அந்த பெண் ஜெபமாலை கடந்த ஒரு வருட காலமாய் இந்த ஹோமுக்கு வந்து இங்கே இருக்கிற இளம் குற்றவாளிகளுக்கு கவுன்ஸிலின் கொடுத்துட்டு இருக்கு"

"கவுன்ஸ்லிங்கா.... எதுக்கு....?"

"ஸார்... இந்த ஹோம்ல 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மொத்தம் 57 பேர் இருக்காங்க... இந்த 57 பேரும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். இந்த சிறுவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தகப்பன் குடிகாரனாகவோ, தாய் கூலிவேலை செய்பவளாகவும் உள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளிப் படிப்பில் நாட்டம் இன்றி பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் அற்ற சூழலில், மன அழுத்தத்துக்கு ஆளாகி வழித் தவறிப் போய், போதைக்கு அடிமையாகி அதன் காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபடுபவர்கள், அல்லது குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என பலதரப்பட்ட சிறுவர்கள் இது மாதிரியான ஹோம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் இவர்கள் குற்றவாளிகள் இல்லை. இதுமாதிரியான சிறூவர்களுக்கு தேவை மனிதாபிமான அணுகுமுறையுடன் கூடிய உளவியல் ஆலோசனை. இந்த உளவியல் ஆலோசனையைத்தான் ஜெபமாலை இங்கே வந்து வாரா வாரம் பண்ணிட்டு இருக்காங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் சரியாய் பத்து மணிக்கு வந்து ஒரு மணி நேரம் கவுன்சிலிங் கொடுத்துவிட்டு போயிடுவாங்க."

"ஜெபமாலையும், சுடர் கொடியும் நெருங்கிய தோழிகள் என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா ?"

"நல்லாவே தெரியும்.... எனக்கு சுடர்கொடியை அறிமுகப்படுத்தியதே ஜெபமாலைதான்!"

"சரி.... இதை கொஞ்ச்ம பாருங்க" சொன்ன விவேக் கல்லில் வீசப்பட்ட அந்த கசங்கிய காகிதத்தை சச்சிதானந்தத்திடம் நீட்டினார். வாங்கிப் பார்த்து படித்த அவர் தன்னுடைய உதடுகளில் ஒரு புன்னகையை உதிக்க வைத்தார்.

"இந்த கல் கடிதத்தை உங்களுக்கும் வீசிட்டாங்களா ?"

"அப்படீன்னா இது வழக்கமான ஒண்ணா?"

"ஆமா ஸார்... இது காம்பெளண்ட்டுக்குள்ளே யார் புதுசாய் வந்தாலும் சரி இப்படியொரு கல் கடிதம் அவர்களுக்கு முன்னாடி வந்து விழும்..."

விவேக் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"வீசறது யாரு...?"

"இங்க இருக்கிற பசங்கள்ல யாரோ ஒருத்தன் இந்த வேலையை பண்ணிட்டிருக்கான்...!"

"யார் அந்த பையன் ?"

"கண்டு பிடிக்க முடியலை ஸார்"

"மிஸ்டர் சச்சிதானந்தம் நீங்க சொல்ற விஷயம் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கு... இது மாதிரியான கல் கடிதம் எத்தனை முறை வீசப்பட்டுள்ளதுன்னு சொல்ல முடியுமா ?"

"இந்த ஆறுமாசத்துக்குள்ளே ஒரு பத்து தடவையாவது இருக்கும் ஸார். ஒரு தடவை மினிஸ்டர் வந்தப்பக் கூட இப்படியொரு கல்லால் சுற்றப்பட்ட கடிதம் வீசப்பட்டிருக்கு..."

"மினிஸ்டர் என்ன சொன்னார் ?"

"அவர் இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கலை, மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருக்கிற பசங்க இப்படித்தான் எதையாவது எழுதி வீசுவாங்க ... நீங்க கண்டுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா என்னால அப்படி இருக்க முடியலை. இது மாதிரியான கடிதங்களை எழுதி கல்லில் சுற்றி எறிகிற பையன் யார்ன்னு கண்டு பிடிக்க முயற்சி எடுத்துகிட்டேன்."

"ரிசல்ட் என்ன ?"

"யார்ன்னு கண்டு பிடிக்க முடியலை ஸார்... பையன்களோட கையெழுத்தை இந்த லெட்டர்ல இருக்கிற கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்த போது யாரோட கையெழுத்தும் ஒத்துப் போகவில்லை."

"இதுக்கு முன்னாடி இப்படி வீசப்பட்ட கடிதங்களை பத்திரமாய் வெச்சு இருக்கீங்களா ?"

"வெச்சிருக்கேன் ஸார்...." சொன்ன சச்சிதானந்தம் மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் கவரில் பத்திரப்படுத்தி வைத்து இருந்த அந்தக் கடிதங்களை எடுத்த விநாடி, அவருடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. டயல் ஸ்க்ரீன் வெளிச்சமாய் தெரிய அழைப்பவரின் பெயர் பளிச்சிட்டது.

ஆசீர்வாதம்

விவேக்கின் பார்வைக்கு அந்த பெயர் கிடைக்க, ஜெபமாலை சொன்ன அந்த கடைசி வார்த்தை 'ஹாசீர்வாதம்' ஸ்லோமோஷனில் ஸ்க்ரோலிங் செய்தபடி அவனுடைய மூளையின் ஓரமாய் நகர்ந்தது.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 29th chapter of Rajeshkumar's One + One = Zero crime series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X