• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ.. விறுவிறுப்பான க்ரைம் தொடர்கதை - அத்தியாயம் 1

By Shankar
|

-ராஜேஷ்குமார்

விவேக் கூகுளில் வலைவீசி 'ஸ்காட்லாந்து யார்ட்' போலீஸ் பற்றிய ஒரு தகவலைத் தேடிக் கொண்டிருக்க, ரூபலா கையில் அன்றைய நாளிதழோடு பக்கத்தில் வந்து நின்றாள்.

"என்னங்க?"

"சொல்லு ரூபி"

"இந்த பேப்பர்ல போட்டிருக்கிற செய்தி உண்மைதானா?"

"என்ன போட்டிருக்கான்?"

"நீங்களே படிங்க" ரூபலா நாளிதழை நீட்ட விவேக் வாங்கிப் படித்தான்.

 Rajeshkumars One + One = Zero crime series

"மீன் நல்ல உணவுதான். ஆனால் அந்த மீனும் இப்போது சிறிது சிறிதாக விஷத்தன்மை அடைந்து கொண்டிருக்கிறது. இதில் ஆபத்தானது கடல் மீன்கள். பூமியில் உருவாகும் அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேர்கின்றன. ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு இருக்கிறது. எதையும் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதுதான் உப்பு. எனவே தன்னிடம் வந்து சேர்கிற கழிவுகளையும் அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறது. கடல் நீரில் வாழும் பலவகை மீன்கள் அந்த விஷப் பொருட்களையெல்லாம் விழுங்கி தன் உடலில் பாதுகாக்கிறது. எவ்வளவு அடர்த்தியான ரசாயனக் கழிவுகள் கடல் நீரில் இருந்தாலும், அவற்றை உட்கொண்டு தனது உடலிலும், கொழுப்பிலும் தேக்கி வைக்கக் கூடிய சக்தி மீன்களுக்கு உண்டு. இந்த மீனின் உடம்பில் இருக்கும் விஷப் பொருளில் மிகவும் முக்கியமானது பாதரசம். மீன் பெரிதாக வளர வளர விஷப் பொருட்களின் அளவும் வளர்ந்து கொண்டே போகும். அந்த மீன்களை எவ்வளவு கொதிக்க வைத்து சமைத்தாலும் சரி, விஷப் பொருட்கள் முழுமையாய் நீங்குவது இல்லை. தொடர்ந்து கடல் மீன்களை உணவாக எடுத்துக் கொள்பவர்கள் உடம்பில் PCB எனப்படும் ஒரு வித ரசாயனப் பொருள் சேரும். PCB என்பதன் விரிவாக்கம் Poly Chlorinated Biphenyls. இது ஆபத்தான ஒன்று என்றும் மனிதனின் ஆரோக்கியத்தைப் பதம் பார்க்கும் புதுப் புது நோய்களை உண்டாக்கும் சாத்தியக் கூறுகள்கொண்டது என்பும் உணவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்."

-விவேக் செய்தித் தாளில் இருந்த மீன் விவகாரத்தைப் படித்துவிட்டு ரூபலாவிடம் நிமிர்ந்தான். ஒரு மெல்லிய சிரிப்போடு கேட்டான்.

"இனிமே மீன் சாப்பிடலாமா வேண்டாமான்னு கேட்கப்போறே?"

"ஆமா..."

"மேடத்தோட சந்தேகத்துக்கு நான் பதில் சொல்லலாமா பாஸ்...?" வாசலில் குரல் கேட்க, விவேக்கும் ரூபலாவும் திரும்பிப் பார்த்தார்கள்.

விஷ்ணு நின்றிருந்தான். ரூபலா கடிகாரத்தை ஏறிட்டாள். மணி சரியாய் 1.15.

விஷ்ணு மெல்ல நடந்து உள்ளே வந்தான்.

"பயப்படாதீங்க மேடம். நான் பொன்னுசாமி ஹோட்டலுக்குப் போய் ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாத்தையும் ஒரு கை பாத்துட்டுத்தான் வர்றேன். இனி மூணு மணி வரைக்கும் எனக்குப் பசிக்காது. அதுக்கப்புறம் நீங்க எனக்கு வெங்காய பஜ்ஜி போட்டுக் கொடுத்தாலும் சரி, உருளைக் கிழங்கு போண்டா போட்டுக் கொடுத்தாலும் சரி... உங்க அன்புக்குக் கட்டுப்பட்டு பத்தோ பதினைஞ்சோ சாப்பிடுவேன்..."

ரூபலா தன் கையில் வைத்திருந்த நாளிதழைச் சுருட்டி விஷ்ணுவின் தலையில் அடித்தாள்.

" என்னோட சந்தேகத்துக்கு பதில் சொல்லப் போறதாய் சொன்னியே... சொல்லு... கடல் மீன்கள் சாப்பிடறது நல்லதா கெட்டதா?"

"ரொம்ப ரொம்ப நல்லது மேடம்...."

"பின்னே மீன் விஷமாயிட்டு வருதுன்னு பேப்பர்காரன் போட்டிருக்கானே...?"

"மேடம்... இதெல்லாம் ஒரு பரபரப்புக்காக போடற செய்தி. கடலில் கழிவுகள் போய்க் கலக்கறது உண்மைதான். ஆனா அந்தக் கழிவுகளை எல்லாம் சாப்பிட கடலுக்குள்ளே வேறு பல உயிரினங்கள் இருக்கு. நாம சாப்பிடற மீன்கள் எல்லாம் கழிவுகளை உதாசீனம் பண்ணிட்டு கடலுக்குள்ளே ஃபைவ் ஸ்டார் ஃபுட்டைத்தான் சாப்பிடும். நீங்க எந்த கடல் மீனைச் சாப்பிட்டாலும் சரி, அதுல ஒமேகா -3 ஹவுஸ்ஃபுல். ஒரு மனுஷனோட மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 ரொம்ப ரொம்ப முக்கியம். பாஸும் நானும் இன்னிக்கு மிகப் பெரிய அறிவாளிகளாய் இருக்கிறதுக்குக் காரணமே கொல்கத்தாவுக்குப் போய் மூணு மாச ட்ரெய்னிங் பீரியட்டில் இருந்தப்ப நாங்க தினமும் சாப்பிட்ட மீன்தான்..."

"என்னங்க... இவன் சொல்றது உண்மையா...?"

 Rajeshkumars One + One = Zero crime series

ரூபலா கேட்டுக் கொண்டிருந்தபோதே விவேக்கின் செல்போன் ஒளிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

ஒரு புது எண்.

எண்ணை ஒற்றை விரலால் தேய்த்துவிட்டு காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தான்.

"எஸ்"

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

"ஸார்.... நான் மீனலோசனி. 'வளையோசை' பெண்களுக்கான மாதப்பத்திரிகையின் எடிட்டர். போன வாரம் மியூசிக் அகாடமியில் நடந்த ஒரு ஃபங்ஷனில் பார்த்துப் பேசினோம். ஞாபகம் இருக்கா சார்?"

விவேக் லேசாய் மலர்ந்தான்.

"ஓ... ! நீங்களா மேடம்? ஸாரி.... நீங்க எனக்கு உங்க செல்போன் நம்பரைக் கொடுத்தீங்க.. நான்தான் அதை save பண்ண மறந்துட்டேன்..."

"நோ ப்ராப்ளம் ஸார்... இப்பவாவது என்னோட நம்பரை save பண்ணிக்குங்க"

"ஷ்யூர் ... ஷ்யூர்..! பை த பை... என்ன விஷயம் மேடம்... திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க?"

"பார்த்தீங்களா... மறந்துட்டீங்க?"

விவேக் திகைத்தான்.

"என்ன மறந்துட்டேன்?"

"இன்னிக்கு என்ன கிழமை?"

"ஞாயிற்றுக்கிழமை"

"இன்னிக்கு மத்தியானம் மூணு மணியிலிருந்து நாலு மணிக்குள்ளே எங்க பத்திரிகைக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுக்க ஒப்புதல் கொடுத்து இருக்கீங்க.. ஸார்"

"ஓ... ஸாரி... எப்படியோ மறந்துட்டேன்"

"எனக்குத் தெரியும் ஸார் ...உங்களுக்கு இருக்கும் டைட் ஷெட்யூலில் என்னோட பத்திரிகை , பேட்டி இதெல்லாம் ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சுத்தான் ஒரு 'ஜென்டில் ரீமைண்டர் ' கொடுக்கலாம்ன்னுதான் போன் பண்ணினேன். இது ஒண்ணும் தப்பு இல்லையே ...?

"நோ...நோ... சரியான நேரத்துல எனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தியிருக்கீங்க ..."

"அப்படீன்னா என் பத்திரிகையோட சீப் ரிப்போர்ட்டர் சுடர் கொடியை மூணு மணிக்கு உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டுமா ஸார் ? ஒரு மணி நேரத்துக்குள்ளே பேட்டி முடிஞ்சிடும். பேட்டியோட நோக்கம் இப்பொது நம் நாட்டில் பெண்கள் ஒரு வித பயத்தோடுதான் வெளியே போய்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்காங்க. தமிழ்நாட்டில் திறமையான காவல்துறை இருந்தும் பெண்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மை? வேலைக்குப் போகும் பெண்கள் எது மாதிரியான ஜாக்கிரதை உணர்வோடு நடக்கணும்? இது மாதிரியான கேள்விகளுக்கு ஒரு க்ரைம் ப்ரான்ச் அதிகாரி என்கிற முறையில் நீங்க சொல்ற பதில்கள் பெண்களுக்கு ஒரு பாடமாய் அமையணும்ன்னு விரும்பறேன்"

"ஷ்யூர் ...ஷ்யூர்...என்னைப் பேட்டி எடுக்க உங்க பத்திரிகையிலிருந்து யார் வரப்போறதாய் சொன்னீங்க மேடம்?"

"பத்திரிகையோட சீப் ரிப்போர்ட்டர் சுடர்கொடி.முக்கியமான வி.ஐ .பி க்களைப் பேட்டி எடுக்க அந்தப் பெண்ணைத்தான் அனுப்பி வைப்பேன். எம்.ஏ ஜர்னலிஸம் படிச்ச பொண்ணு. சரியா மூணு மணிக்கு அங்கே இருப்பா..."

"நான் வெயிட் பண்றேன் மேடம்..."

"தேங்க்யூ !"

விவேக் செல்போனை அணைக்க ரூபலா கேட்டாள்.

"போன்ல யாருங்க...பேட்டி கீட்டின்னு காதுல விழுந்தது?"

விவேக் விபரம் சொல்ல, விஷ்ணு பரவசமானான்.

"பாஸ்...அந்த ரிப்போர்ட்டர் பொண்ணோட பேரு என்னன்னு சொன்னீங்க?"

"சுடர் கொடி "

ரூபலா சிரித்தாள் "டேய் விஷ்ணு! உணர்ச்சி வசப்பட்டு கற்பனைகளை வளர்த்துக்காதே....நான் காலேஜில் படிக்கும்போது மலர்கொடின்னு ஒரு பொண்ணு என் கூட படிச்சுட்டு இருந்தா...அவளோ வெயிட் எவ்வளவு தெரியுமா 92 கிலோ...சேலையைக் கட்டிட்டு வந்தான்னா ஒரு பேரலுக்கு துணியைச் சுத்தின மாதிரி இருக்கும்..."

"எனக்கென்னமோ இந்த சுடர்கொடி பத்து வருஷத்துக்கு முந்தி இருந்த நயன்தாரா மாதிரி இருப்பான்னு என் மனசுக்குள்ளேயிருந்து ஒரு பட்சி சொல்லிகிட்டே இருக்கு மேடம்...."

"அந்தப் பட்சியும் ஏமாற்றப் போவுது...நீயும் ஏமாறப்போரை...அந்த சுடர்கொடி கன்னங்கறேன்னு அண்டங்காக்கை மாதிரி வந்து நிக்கப்போறா..."

"இல்ல மேடம்...எனக்குள்ளே இருக்கறது வெறும் பட்சி இல்லை. பட்சி ரூபத்தில் இருக்கிற ஒரு சித்தர் "

"அவர் எப்படா உன்னோட மனசுக்குள்ளே என்ட்ரி ஆனார்?"

"ஆறு மாசத்துக்கு முன்னாடி மேடம் ஒரு பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையை நான் கிரிவலம் வரும்போது என் கூடவே நீளமாய் தாடி வெச்சுகிட்டு ஒரு பெரியவர் வந்தார். ஏதேதோ பேசிக்கிட்டே வந்தார். திடீர்ன்னு பார்த்தா அவரைக் காணோம். நான் எவ்வளவோ தேடித் பார்த்தும் என்னோட பார்வையில் அவர் பாடலை. அப்புறம் கோயிலுக்குள்ளே சாமி தரிசனம் பண்ணும்போது ஒரு பூசாரிக்கிட்டே இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அவர் கேட்டுட்டு என்ன சொன்னார் தெரியுமா மேடம்....?"

"அவர் 'கப்ஸா' கதையையும் நீயே சொல்லிடு...உன்னை மாதிரி அடித்துவிட எனக்குத் தெரியாது"

"க்ரேட் இன்சல்ட்! நான் உங்ககிட்டே இதைப் பத்தி பேசமாட்டேன் மேடம்... நான் பாஸ்கிட்டே பேசுகிறேன். பாஸ், நீங்களாவது என்னை நம்பறீங்களா...இல்லை நீங்களும் மேடம் கட்சிதானா ..?"

"உன்னோட தெய்வீகக் கதையை நான் நம்பறேன்...நீ சொல்லுடா... அந்தப் பூசாரி உன்கிட்டே என்ன சொன்னார்...?"

"உன் கூட கிரிவலத்தில் வந்தது சாதாரண பெரியவர் இல்லை. அவர் ஒரு சித்தராய் இருக்கலாம். உன்னோட தலைக்குப் பின்னால் லேசாய் ஒரு வெளிச்சவட்டம் தெரியறதால அந்த சித்தர் உனக்குள்ளே ஐக்கியமாயிட்டாருன்னு சொன்னார். "

ரூபலா விஷ்ணுவிடம் திரும்பினாள்.

"என்னங்க...இவன் கூட கதை பேசிட்டிருக்க இது நேரம் இல்லை. நீங்க லஞ்ச் சாப்பிட்டு ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்தாதான் அந்தப் பத்திரிக்கைக்காரப் பொண்ணுக்கு பிரெஷ்ஷா பேட்டி கொடுக்க முடியும்!"

"மேடத்துக்கு எப்பதான் இந்த விஷ்ணுவோட அருமையும் பெருமையும் புரியுமோ..? நீங்க போய் சாப்டுட்டு வாங்க பாஸ். அதுவரைக்கும் நான் டி .வி.யில் 'சந்திரலேகா' பார்த்துட்டிருக்கேன்...!"

விவேக்கும் ரூபலாவும் உன்னேயிருந்த டைனிங் டேபிளை நோக்கிப் போக விஷ்ணு சோபாவுக்கு நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ரிமோர்ட் கண்ட்ரோலைத் தட்டினான்.

எதோ ஒரு தொலைக்காட்சியின் செய்தித் சேனலில் அந்த 'BREAKING NEWS' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

சற்றுமுன் வேளச்சேரி ரயில் நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் சுடர்கொடி சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

பட்டப் பகலில் படு பயங்கரம்.

வெட்டிய மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்.

விஷ்ணு அதிர்ந்து போனவனாய் தள்ளிச்சையாய் எழுந்து நின்றான். கழத்து நரம்புகள் புடைக்கக் கத்தினான்.

"பாஸ்!"

விஷ்ணுவின் அலறலைக் கேட்டு டைனிக் டேபிளில் உட்கார்ந்திருந்த விவேக்கும், அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த ரூபலாவும் அறையினின்றும் புயலாய் வெளிப்பட்டார்கள்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
Here is the first chapter of Rajeshkumar's One + One = Zero Crime story series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X