• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 21

By Shankar
|

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது அங்குதான் கொலையாளி இருப்பதாக விவேக் சொல்கிறான். இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்யப் போவதாக தகவல்.

Rajeshkumars crime thriller One + One = Zero - 21

இனி...

செல்போனின் மறுமுனையில் டி.ஜி.பியின் பர்சனல் செக்ரட்ரி தியோடர் சொன்னதைக் கேட்டு விவேக் வழக்கத்துக்கு மாறாய் லேசாய் பதட்டப்பட்டான்.

"ஸார்.... சுடர்க்கொடி, அவளுடைய அண்ணன்னு சொல்லப்படுகிற திலீபன் இந்த ரெண்டு பேரோட கொலைகளுக்குப் பின்னாடி மிகப் பெரிய விபரீதமான விஷயம் ஏதோ ஒண்ணு இருக்கு. அதைக் கண்டுபிடிக்காம அவசர அவசரமாய் ஃபைலை க்ளோஸ் பண்றதுக்காக ஜெயவேல் என்கிற ஒரு அப்பாவியை என்கவுண்டர் பண்றது எந்த வகையில் நியாம்ன்னு எனக்குத் தெரியவில்லை...."

தியோடர் சிரித்தார்.

"நியாயம் இல்லைதான். ஹண்ட்ரட் பர்சன்ட் 'அக்மார்க்' அநியாயம்தான். நம்மாலே என்ன செய்ய முடியும் மிஸ்டர் விவேக். அறிவாளிகளின் கையில் அரசாங்கம் இருந்தா அது ஆரோக்கியமாய் இருக்கும்......"

"இது விஷயமாய் நான் டி.ஜி.பி.யை சந்தித்துப் பேசலாமா ஸார்?"

"ஸாரி மிஸ்டர் விவேக்... ஹி ஈஸ் ஹெல்ப்லஸ்.. அவரோட கையை மீறி எல்லா விஷயங்களும் போயிட்டிருக்கு. பட் ஜெயவேலைக் காப்பாத்தணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு"

"என்ன ஸார்...?"

"அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே நீங்க சுடர்கொடி திலீபன் கொலைகளுக்கு காரணமான நபரைக் கண்டுபிடுச்சு நேரடியாய் மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்தணும்."

"இப்பத்தான் இந்த கேஸ்ல சின்னதாய் ஒரு க்ளூ கிடைச்சிருக்கு. அதுவும் ஜெபமாலை மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி திணறித் திணறிப் பேசின வார்த்தைகள். குர் நோக்கம், ஜே. சி. ஹச், ஹாசீர்வதம். இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்ன்னு கண்டு பிடிச்சுட்டோம்னா கொலையாளியை நெருங்கிடலாம் ஸார்....!"

தியோடர் இப்போது பலமாய் சிரித்தார்.

"கொலையாளியைக் கூட கண்டுபிடிச்சுடலாம் போலிருக்கு. இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்ன்னு கண்டுபிடிக்கறதுதான் உங்களுக்கு ஒரு பெரிய சவாலாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன்."

"ஸார்... ஜெயவேலைக் காப்பாத்துறதுக்காவது கொலையாளியை நான் சீக்கிரமாய் நெருங்கிடணும்"

"விஷ் யூ ஆல் த பெஸ்ட் மிஸ்டர் விவேக். உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.... நான் அப்பப்ப உங்களை காண்டாக்ட் பண்ணி இந்தப் பக்கத்துல எது மாதிரியான நிலவரம் போயிட்டிருக்குங்கறதை 'கன்வே' பண்றேன்."

"தேங்க் யூ ஸார்..." விவேக் வியர்வை மின்னும் முகத்தோடு செல்போனை அணைத்தான். சில வினாடிகள் யோசிப்பாய் இருந்துவிட்டு விஷ்ணுவைத் தொடர்பு கொண்டான்.

"விஷ்ணு!"

"பாஸ்"

"இப்ப நீ எங்கே இருக்கே?"

"இமயமலை அடிவாரத்துல இருக்கற குலுமணாலியில் ரெஸ்ட் எடுத்திட்டிருக்கேன்.... நான் இப்போ எங்கே இருக்கேங்கறதையே மறந்துட்டிங்களா பாஸ்? கமிஷனர் ஆபிஸ் நாலாவது மாடி டாய்லெட்டோட வெண்டிலேட்டர் கம்பியைப் பிடிச்சிட்டு ஒரு குரங்கு மாதிரி தொத்திட்டு இருக்கேன்."

"ஏ. டி.எம் சென்டரிலிருந்து யாராவது வெளியே வந்தாங்களா?"

"வரலை பாஸ்.... இனிமேலும் வரமாட்டாங்க"

"என்னடா சொல்றே ...?"

"இப்பதான் அந்த சின்ன போர்டு என்னோட பார்வைக்கு தட்டுப்பட்டது பாஸ்"

"என்ன போர்டு?"

"THIS ATM DOES NOT WORK."

"சரி ..... ரோட்டை மறுபடியும் அப்ஸர்வ் பண்ணு. சந்தேகப்படும்படியாய் யாராவது தட்டுப்படறாங்களான்னு பாரு!"

"அப்படி யாரும் இல்ல பாஸ்... முடி கொட்டிப்போன மண்டை மாதிரி காலியாய் இருக்கு... நடந்து போற சொற்ப ஜனங்களும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற கவலையிலிருந்து ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு ஏன் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கலை என்கிற கவலை உட்பட லட்சக்கணக்கான கவலைகளோடு ஸ்லோ மோஷனில் நடந்து போயிட்டு இருக்காங்க.... இதுல யாரைப் போய் சந்தேகப்படறது பாஸ் ?"

"சரி.... காருக்கு வா....!"

"அப்பாடா! மீண்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருக்கு பாஸ்... இதோ பறந்து வர்றேன் இது டாய்லெட் இல்லை. மினி நரகம்"

அடுத்த இரண்டாவது நிமிஷம் காரில் விவேக்கிற்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் விஷ்ணு. விவேக்கின் முகத்தை கவனித்து விட்டு கேட்டான்.

"பாஸ்! நீங்க இவ்வளவு டென்ஷனோடு இருக்கறதை நான் ரெண்டாவது தடவையாய்ப் பார்க்கிறேன் !"

"முதல் தடவை எப்பப் பார்த்தே?"

"உங்க கல்யாணத்துல...!"

"விஷ்ணு... நான் டென்ஷனோடு இருக்கக் காரணம் சுடர்கொடியோட கேஸ் இப்போ திசைமாறி போயிட்டிருக்கு. அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே கொலையாளி யாருன்னு கண்டுபிடிச்சு அவன் தோள் மேல கையை வைக்கணும்."

"அதென்ன பாஸ் பேஷண்டுக்கு டாக்டர் கெடு வைக்கற மாதிரி 24 மணி நேரம்?"

"கார்ல போகும்போது விஷயத்தைச் சொல்றேன். நாம இப்போ உடனடியாய் பார்த்து பேச வேண்டிய நபர் 'வளையோசை' பத்திரிக்கையின் ஆசிரியர் மீனலோசினி." சொல்லிக்கொண்டே காரை நகர்த்தினான் விவேக்.

"பாஸ்.... கொலையாளி கமிஷனரோட ஆபிஸ் வளாகத்துக்குள்ளேதான் இருக்கணும்ன்னு சொன்னீங்க. ஆனா அப்படி யாரும் இருந்த மாதிரி தெரியலை?"

"நமக்குத் தெரியலை விஷ்ணு... ஆனா அந்த நபர் இப்பவும் நம்ம ரெண்டு போரையும் பார்த்துக்கிட்டு இருக்கலாம்."

"நீங்க ரொம்பவும் பயமுறுத்தறீங்க பாஸ்"

கார் காம்பௌண்ட் கேட்டை விட்டு வெளியே வந்து சாலையின் போக்குவரத்தில் கலந்து வேகம் எடுத்தது.

விவேக் சொன்னான்.

"விஷ்ணு.... போற வழியில் உனக்கு ஒரு வேலையிருக்கு"

"என்ன பாஸ்?"

"காரோட டேஷ் போர்டைத் திற"

விஷ்ணு திறந்தான்

"ஒரு பாலிதீன் கவர் இருக்கா...?

"இருக்கு பாஸ்"

"அதை வெளியே எடு"

விஷ்ணு எடுத்தான். குழப்பத்தோடு கேட்டான்.

"என்ன பாஸ்... பாலீதீன் கவர்க்குள்ளே ஒரு கர்சீப்பை சுருட்டி வெச்சிருக்கீங்க.....?"

"காரோட ஸ்டியரிங்கில் படிஞ்சிருந்த ரத்தத் துளிகளை என்னோட கர்சீப்பால் சுத்தமாய் துடைச்சு அந்த பாலீதீன் பைக்குள்ளே போட்டு வெச்சிருக்கேன்."

"இது எதுக்கு பாஸ்?"

"போற வழியில் ஃபாரன்ஸிக் லேப் வரும். குடுத்திட்டு போவோம். திரும்பி இந்த வழியாய் வரும்போது ரிப்போர்ட்டை வாங்கி பாப்போம்."

விவேக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். மறுபடியும் தியோடர் டிஸ்ப்ளேயில் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.

விவேக் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு பேசினான்.

"என்ன ஸார்... மறுபடியும் போன்?"

"விவேக் இப்போ எல்லா டி.வி. சானல்களில் பிரேக்கிங் நியூஸ் என்ன தெரியுமா?"

"ஸாரி ஸார்... நான் இப்போ காரை ஓட்டிக்கிட்டு இருக்கேன். நீங்களே சொல்லுங்க என்ன நியூஸ்?"

"சுடர்கொடியை கொலை செய்த கொலையாளி ஜெயவேலை கைது

செய்ய போலீஸார் அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் வீட்டின் பின்வாசல் வழியாய் தப்பி ஓட்டம்."

போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை.

கண்டவுடன் சுட்டுத் தள்ளவும் உத்தரவு.

விவேக் கேட்டான்.

"ஸார் இந்த செய்தி உண்மையா?"

"உண்மைதான். தப்பி ஓடினதால அவன்தான்னு இப்போ கான்ஃபர்ம் ஆயிடுச்சு.... அதனால கமிஷனர் 'சூட் அட் சைட்' ஆர்டர் கொடுத்துட்டார். ஜெயவேல் எந்த நிமிஷமும் சுட்டுக் கொல்லப்படலாம்."

மறுமுனையில் தியோடர் சொல்ல விவேக்கின் காதோடு ஒட்டியிருந்த செல்போன் ஒரு மெலிதான நடுக்கத்துக்கு உட்பட்டது.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

 
 
 
English summary
The 21st Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X