• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 15

By Shankar
|

முன்கதை:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான்...

இனி...

விவேக் பேரர் கிருஷ்ணனை சற்றே கலவரமாய்ப் பார்த்தான்.

"என்னது... ஜெபமாலை ஃப்ரூட் ஜுஸ்ல விஷத்தைக் கலந்து கொடுத்தையா.... ?"

Rajeshkumars crime thriller One + One = Zero - 15

அந்த கிருஷ்ணன் உதட்டில் இன்னமும் குரூரப் புன்னகையின் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. "ஆமா .... ஸார்... போலீஸ் விசாரிச்சா உண்மையைத் தானே சொல்லணும்..... அந்த ஜெபமாலைக்கு ஃப்ரூட் ஜுஸ்ல விஷத்தைக் கலந்து கொடுத்தது நான் தான். விஷத்தோட பேரு டார்டர் எமிக் .... "

கிருஷ்ணன் அலட்சியமான குரலில் சொல்லிக் கொண்டிருக்க ஹோட்டலின் மானேஜர் மணிமொழியன் தலைக்கேறிய கோபத்துடன் அவனுடைய சட்டையின் காலரைக் கொத்தாய்ப் பிடித்தார்.

"டேய் ... யார்கிட்டே என்ன பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசறியா.... ?"

"தெரிஞ்சுதான் பேசறேன் ஸார்...!"

"எதுக்காக அந்த பொண்ணுக்கு விஷத்தைக் கலந்து கொடுத்தே ?"

"தீர்ப்பு ஸார்"

"தீர்ப்பா.... ?"

"ஆமா ஸார்... கொலைக் குற்றவாளிகளுக்கு 302- வது செக்ஷன் படி மரண தண்டனைதான் தரணும்... ?"

மணிமொழியன் அதிர்ந்து போக விவேக் திகைப்போடு கிருஷ்ணனை பார்த்தான்.

"நீ பேசறது எனக்குப் புரியலை "

"அந்த ஜெபமாலை ஒரு குற்றவாளி ஸார் "

"என்னது குற்றவாளியா ?"

"ஆமா சார்... என்னோட உயிருக்கு உயிரான நண்பன் விக்டர் சாமுவேலோட மரணத்துக்கு அந்த ஜெபமாலைதான் காரணம். ஒரு நிமிஷம் இந்த போட்டோவைப் பாருங்க ஸார். அவ ஒரு கொலைக் குற்றவாளி ஸார் "

கிருஷ்ணன் தன் சட்டை பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு போட்டோவையும் அதனோடு ஸ்டேபிளிங் செய்யப்பட்டிருந்த கசங்கிப் போன கடிதத்தையும் எடுத்து நீட்ட விவேக் வாங்கிப் பார்த்தான்.

போட்டோவில் ஒரு பாறையின் பின்னணியில் கிருஷ்ணன் ஒரு இளைஞனின் தோளில் கையைப் போட்டு சிநேகமாய் சிரித்து போஸ் கொடுத்து இருந்தான். தொலைவில் நீலக்கடல் அலைகளோடு தெரிந்தது.

"அவன்தான் ஸார் என்னோட ஃப்ரண்டு விக்டர் சாமுவேல். ஒரு பிரபலமான ஐ. டி. கம்பெனியில் நல்ல வேளையில் இருந்த அவனுக்கு வாழக்கையில் இருந்த ஒரே உறவு அவனுடைய அம்மா மட்டும் தான். அப்பா எப்பவோ காலமாயிட்டார். விக்டருக்கு எத்தனையோ நண்பர்கள் உத்யோக ரீதியில் இருந்தாலும் என்மேல் அவன் வெச்சிருந்த நட்பு ரொம்பவும் ஆழமாவே இருந்தது. தினமும் சாயந்திரம் ஆறுமணிக்கெல்லாம் விக்டர் திருவல்லிக்கேணியில் நான் தங்கியிருக்கற 'பேச்சுலர்' லாட்ஜுக்கு வந்து என்கிட்டே ஒருமணி நேரமாவது பேசிட்டுதான் போவான். போன வருஷம்தான் ஒருநாள் ஒரு பொண்ணோட போட்டோவை என்கிட்டே காட்டி 'இவ பேரு ஜெபமாலை, இவளைத்தான் நான் உயிருக்கு உயிராய் காதலிச்சிட்டிருக்கேன். அம்மாகிட்டே முறைப்படி சொல்லி இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்'னு சொன்னான். அவன் அப்படிச் சொன்னது எனக்கும் சந்தோஷமாகவே இருந்தது. ஆனா அந்த சந்தோஷம் மூணு மாசம் கூட நிலைக்கலை. ஒரு அதிகாலை நேரத்துல அந்த தகவல் வந்தது. விக்டர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி பண்ணி இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கான் என்கிற தகவல்தான் அது. ஓடிப்போய் பார்த்தேன்.... உயிருக்குப் போராடிகிட்டு இருந்தான். அவனோட அம்மா ஒரு பக்கம் மயக்கமாய் கிடந்தாங்க. 'ஏண்டா இப்படியொரு முடிவுக்கு வந்தேன்'னு கேட்டேன். அதுக்கு 'ஜெபமாலை என்னை ஏமாத்திட்டா. வெளிநாட்டு ஐ. டி. கம்பெனியில் நல்ல வேளையில் இருக்கற ஒருத்தனை காதலிக்க ஆரம்பிச்சுட்டா. உனக்கு விபரமாய் கடிதம் எழுதி நேத்து ராத்திரி போஸ்ட் பண்ணியிருக்கேன். நாளைக்கு உன் கைக்கு அந்த லெட்டர் கிடைக்கும். ஆனா அந்த லெட்டரை யாருக்கும் காட்ட வேண்டாம். என்னோட தற்கொலை முடிவுக்கு ஜெபமாலைதான் காரணம்ன்னு யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமாய் அம்மாவுக்கு தெரியவேகூடாது. .... ஜெபமாலைக்கு காலம் தண்டனை கொடுக்கும்'ன்னு சொல்லிட்டு விக்டர் தன் கடைசி மூச்சை விட்டான். அவன் எழுதின அந்த லெட்டர் ரெண்டு நாள் கழிச்சு என் கைக்குக் கிடைச்சது... "

"அந்த லெட்டர் தானா இது... ?" விவேக் கேட்டான்.

"ஆமா ஸார்.... ஜெபமாலை அவனை ஏமாத்திட்டதாலே அவனோட மனசு எப்படியெல்லாம் கஷ்டப்பட்டதுன்னு உருகி உருகி கடிதம் எழுதியிருக்கிறான். அந்த லெட்டரை இது வரைக்கும் ஒரு நூறு தடவையாவது. படிச்சிருப்பேன். ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் என்னாலக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. ஜெபமாலையை கடவுள் தண்டிப்பாரா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் அவளைத் தண்டிக்க முடிவு அவளோட நடவடிக்கைகளை கவனிச்சிட்டு இருந்தேன். கடந்த ஆறுமாசக் காலமாய் கிடைக்காத அந்தப் பொன்னான வாய்ப்பு இண்னைக்கு எனக்கு இந்த ஹோட்டலில் கிடைச்சது."

"ஜெபமாலை இந்த ஹோட்டலுக்கு வர்றது உனக்கு முன்கூட்டியே தெரியுமா ?"

"தெரியாது ஸார்... நான் கேட்டரிங் கோர்ஸ் படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி பண்ணிட்டிருந்தேன். வேலை கிடைக்கற மாதிரி தெரியலை. வேலை கிடைக்கறவரை ஏதாவது ஒரு ஹோட்டலில் பேரர் வேலையாவது பார்க்கணும்ன்னு நினைச்சேன். இந்த ஹோட்டல்ல வேலை கிடைச்சது சேர்ந்துட்டேன். இந்த ஹோட்டலுக்கு ஜெபமாலை வருவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. என்னோட கையில்தான் அவ சாகணும்ன்னு நினைக்கும் போது யார் என்ன பண்ண முடியும் ஸார்.... ?"

"ஃப்ரூட் ஜூஸில் நீ கலந்த அந்த விஷத்துக்கு என்ன பேர்ன்னு சொன்னே?"

"டார்டர் எமிக் "

"அந்த விஷம் உன்னோட கைக்கு எப்படி கிடைச்சது ?"

"ஸார்.... இப்பவும் நான் திருவல்லிக்கேணியில் இருக்கற பேச்சுலர் லாட்ஜில்தான் 'ஸ்டே' பண்ணியிருக்கேன். என் கூட அதே அறையில் இன்னும் நாலஞ்சு பேர் தங்கியிருக்காங்க. அதுல ஒருத்தன் மெடிக்கல் ரெப். அவன் கிட்டே சாம்பிள் டிரக்ஸில் ஒண்ணுதான் இந்த டார்டர் எமிக். பௌடர் மாதிரி இருக்கும். இந்த டார்டர் எமிடிக் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். "

"நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியலை "

"உங்களுக்கு புரியும்படியாவே சொல்றேன் ஸார். இந்த 'டார்டர் எமிடிக்'கை ஒரு மில்லிகிராம் அளவுக்கு எடுத்துட்டா மருந்து. அதையே ரெண்டு மில்லிகிராம் அளவுக்கு எடுத்துக்கிட்டா விஷம். இந்த விபரத்தை அந்த மெடிக்கல் ரெப் நண்பன் பலதடவை என்கிட்டே சொல்லியிருக்கான். ஜெபமாலையை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல தீர்த்துக்கட்ட வாய்ப்பு கிடைக்கும்போது அந்த 'டார்டர் எமிடிக்' கை உபயோகப்படுத்தலாம்ன்னு நினைச்சு அந்த 'ரெப்' க்கு தெரியாமே எடுத்து வெச்சிருந்தேன். இன்னைக்கு ஜெபமாலைக்கு நேரம் சரியில்லை. நான் வேலை செய்யிற இந்த ஹோட்டலுக்கே வந்து மாட்டிக்கிட்டா. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை அவ இருந்த ரூமுக்கு போய் டீ, காப்பி, ஜூஸ் ஏதாவது வேணுமான்னு கேட்டேன். முதல் தடவை கேட்டபோது எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டா. ரெண்டாவது தடவை போய்க் கேட்டதும் சரி ஜூஸ் ஏதாவது கொண்டுவான்னு சொல்லிட்டா. சந்தோஷமாய் வந்து சாத்துக்குடி ஜூஸ் போட்டேன். அதுல ரெண்டு கிராம் 'டார்டர் எமிடிக்' பௌடரைக்கலந்தேன்..... அந்தப் பௌடர் விஷமாய் மாறி ரத்த வாந்தியை உண்டு பண்ணி ஒருத்தரை மரணத்தோடு விளிம்பு வரைக்கும் கொண்டு போய் நிறுத்த ஒரு மணி நேரம் பிடிக்கும். "

விவேக் தனக்குள் பீறிட்ட கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். "ஜெபமாலைக்கு நீ விக்டரோட ஃப்ரண்டு என்கிற விஷயம் தெரியாதா ?"

"தெரியாது ஸார்... தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னாடி விக்டர் எனக்கு எழுதிய அந்த லெட்டரைப் படிச்சுப் பாருங்க ஸார் உங்களுக்கு உண்மை புரியும். மேரேஜ் இன்விடேஷனைப் பிரிண்டு பண்ணின பிறகு தான் என்னை ஜெபமாலைக்கு முன்னாடி கொண்டு போய் நிறுத்தி அவளுக்கு அறிமுகப்படுத்தலாம்ன்னு இருந்தானாம்..."

கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விவேக்கின் செல்போன் மெலிதாய் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்துப் பார்த்தான். மறுமுனையில் விஷ்ணு காத்திருந்தான். விவேக் அந்த அறையை விட்டு வெளியே வந்து குரலைத் தாழ்த்தினான். "என்ன விஷ்ணு.... ?"

"ஜெபா இப்போ ஐ. ஸி. யூ. வில் பாஸ் "

"டாக்டர் என்ன சொன்னார் ?"

"அவர் உதட்டைப் பிதுக்கி தலையை ஆட்டிக்கிட்டே உள்ளே போயிருக்கார்... எனக்கென்னமோ.... "

"சொல்லு ...."

"ஜெபா இனிமே நமக்கு உபயோகப்படமாட்டா பாஸ் "

"ஆனா ... ரத்தவாந்தி எடுத்ததுக்குப் பின்னாடி நமக்கு உபயோகப்படற மாதிரி ஒரு வாக்கியத்தைப் பேசிட்டு போயிருக்கா "

"என்ன பாஸ் சொல்றீங்க... ரத்த வாந்தி எடுத்ததுக்குப் பின்னாடி அவ தான் ஒரு வார்த்தை கூட பேசலையே ?"

"அவ பேசலை... ஆனா அவளுடைய உதடுகள் அசஞ்சதா இல்லையா ?"

"அசைஞ்சது .....!"

"அதை நான் படிச்சிட்டேன் "

"என்ன பாஸ் சொல்றீங்க ?"

"இனிமேல்தான் நமக்கு நிறைய வேலை..."

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The 15th Chapter of Rajeshkumar's Crime Thriller 'One + One = Zero.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more