For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 12

By Shankar
Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

'மினி' முன்கதை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... அப்போது யாரோ பின் தொடர்வதாய் உணர்கிறார்கள்...

அப்போது...

"பின்னாடி யாரோ ஃபாலோ பண்றாங்கன்னு நினைக்கிறேன். நீ அப்படியே கீழே உட்கார்ந்து 'ஷூ லேஸ்' கட்டற மாதிரி நிதானமாய் தலையைத் திருப்பிப்பாரு!" என்று விவேக் சொன்னதும் விஷ்ணு "தாங்க்ஸ் பாஸ்," என்றான்.

"இப்ப எதுக்கு இந்த நன்றி அறிவிப்பு?"

"இந்த வேலையையாவது எனக்குக் கொடுத்தீங்களே பாஸ்?"

"சொல்றதைச் செய் விஷ்ணு.... இந்த கேஸ்ல போகப் போக உனக்கு நிறைய வேலையிருக்கு.... கொஞ்சம் வெயிட் பண்ணு"

Rajeshkumars One + One = Zero -12

"உங்க உறுதிமொழியை நம்பறேன் பாஸ்," சொன்ன விஷ்ணு குனிந்து உட்கார்ந்த நிலையில் நன்றாக கட்டியிருந்த ஷூ லேஸை அவிழ்த்து மறுபடியும் அதைக் கட்டிக்கொண்டே நிதானமாய் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான்.

"பாஸ்," என்று மெல்லக் கூப்பிட்டான்.

"சொல்லு...."

"யாரோ ஒருத்தன் நின்னுகிட்டு 'உச்சா' போயிட்டிருக்கான்"

"அவன் நிஜமாவே 'உச்சா' போயிட்டிருக்கானா இல்லை... நம்மை அப்ஸர்வ் பண்றானா?"

"நான் வேணும்னா பக்கத்துல போய்ப் பார்த்துட்டு வரட்டுமா பாஸ்...?"

"ஒரு நிமிஷம் உன்னிப்பாய் கவனி. உண்மை தெரிஞ்சிடும்"

"எப்படி பாஸ்?"

"ஒரு நிமிஷத்துக்கு மேல யாரும் 'உச்சா' போயிட்டிருக்க முடியாது"

"அப்படியா பாஸ்?"

"ஆச்சரியப்பட இது நேரமில்லை. அவனைக் கவனி"

விஷ்ணு மறுபடியும் மெல்லத் திரும்பிப் பார்த்தான். "பாஸ் லைவ் டெலிகாஸ்ட்டை கண்டினியூ பண்ணட்டுமா?"

"ம்.... பண்ணு"

"அவன் 'உச்சா' பார்ட்டிதான். 'ஜிப்'பை மாட்டிக்கிட்டு கிளம்பிட்டான்...."

"நாம இருக்கற பக்கம் திரும்பிப் பார்க்கிறானா?"

"இல்லை பாஸ்..... அவனோட கடைக்கண் பார்வைக்கூட நம்ம பக்கம் திரும்பலை...!"

"எதுக்கும் இன்னொரு நிமிஷம் அதே போஸ்ல உட்கார்ந்துகிட்டு அப்ஸர்வ் பண்ணு....!"

விஷ்ணு இரண்டு நிமிஷ நேரம் பொறுமையாய் உட்கார்ந்து காக்கா பார்வை பார்த்து விட்டு எழுந்தான்.

"அவன் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கலை பாஸ். வந்த ஆள் டியூட்டியைப் பார்த்துகிட்டு போயிட்டான்."

"சரி... வா.. நாம 'மினி பாரடைஸ்'க்கு போயிடலாம்..."

இருவரும் மறுபடியும் சின்னச் சின்ன சாக்கடைகளைத் தாண்டி கொண்டு நடந்தார்கள். விஷ்ணு பொறுமையிழந்தவனாய்க் கேட்டான்.

"இப்ப நாம யாரைப் பார்க்க போயிட்டிருக்கோம் பாஸ்.....?"

"மணி மொழியன்"

"யார் அவரு...?"

"மினி பாரடைஸ் ஹோட்டலின் மானேஜர்"

"அவரை எதுக்காக பார்க்கப் போறோம்?"

"அவர்க்கு ஒரு வேலை கொடுத்து இருந்தேன். அந்த வேலையை அவர் ஒழுங்காய் பண்ணியிருக்காரா இல்லையான்னு பார்க்கணும்...." விவேக் சொல்லிக் கொண்டே அந்த சந்திலிருந்து வெளிப்பட்டான். எதிரே தெரிந்த ஒரு பழைய கட்டிடத்தைக் காட்டினான்.

"ஹோட்டலுக்கு வந்துட்டோம்"

விஷ்ணு ஏறிட்டுப் பார்த்தான். எப்போதோ அடித்த டிஸ்டெம்பர். இன்ன நிறம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சாயம் போயிருக்க, வெகு புராதனமாய்த் தெரிந்தது, அந்த இரண்டு மாடிக் கட்டிடம். ஹோட்டல் மினி பாரடைஸ் என்ற போர்டு படிக்க முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தது. ஒரு மஞ்சள் நிற குண்டு பல்பு தன்னால் முடிந்த அளவுக்கு வெளிச்சத்தை தெளித்து ஹோட்டல் ஒன்று இருப்பதை அடையாளம் காட்டியது.

விவேக் ஹோட்டலின் வாசற்படிகளில் ஏறி உள்ளே போக நெற்றியில் விபூதிக் கீற்றோடு அந்த நடுத்தர வயது நபர் கும்பிட்டபடி எதிர்பட்டார்.

"வாங்க ஸார்!"

"என்ன மணி மொழியன்...! நான் சொன்னபடி எல்லாமே செஞ்சுட்டீங்க போலிருக்கு?"

"ஆமா ஸார்...."

"ரூம் நெம்பர்?"

"இருபத்தி மூணு சார்..... ரெண்டாவது மாடி"

"சரி.... நாங்க பார்த்துட்டு வந்திடறோம்"

விவேக் தனக்கு இடதுபுறமாய் தெரிந்த மாடிப்படிகளை நோக்கிப் போக விஷ்ணு குழப்பத்தோடு தொடர்ந்தான்.

இரண்டாவது மாடியின் கோடியில் இருந்தது அந்த 23 எண் அறை.

இருவரும் அறைக்கு முன்பாய் போய் நின்றார்கள். அறைக் கதவு சாத்தியிருக்க விவேக் விஷ்ணுவைப் பார்த்தான்.

"விஷ்ணு! காலிங்பெல் பட்டனை பிரஸ் பண்ணு!"

"ரொம்பவும் கஷ்டமான வேலையை எல்லாம் எனக்கு கொடுத்துடறீங்க பாஸ்"

சொல்லிக் கொண்டே பட்டனை அழுத்தினான் விஷ்ணு.

பத்து வினாடிகளுக்குப் பிறகு கதவு மெல்லத் திறக்க, அந்த இளம் பெண் சுமாரான அழகோடு பார்வைக்குக் கிடைத்தாள். கண்களில் பயம் தெரிந்தாலும் கட்டாயமாய் புன்னகை செய்தாள். சன்னமான குரலில் பேசினாள்.

"ஸார்.... நீங்க வர்ற வரைக்கும் என்னோட உயிர் என்கிட்டே இல்லை....!"

"இனிமேல் நீ எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. வா... உள்ளே போய் பேசுவோம்...!"

விவேக் சொல்லியபடி அறைக்குள் நுழைய விஷ்ணு கேட்டான். "பாஸ்... இந்தப் பொண்ணு....?"

"ஜெபமாலை" என்றான் விவேக்.

..............................................

ஜெபமாலை கண்கள் நிறைய நீரோடு தலை குனிந்து உட்கார்ந்திருக்க விவேக் அவளுக்கு எதிரே உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்தான்.

"இதோ பார் ஜெபமாலை..... இப்ப நாம மூணு பேரும் ஒரு பாதுகாப்பான இடத்துல இருக்கோம். நானும் விஷ்ணுவும் என் வீட்டுப் பின்பக்கமாய் வெளியே வந்து ஒரு நம்பிக்கைக்குரிய நபரின் டாக்ஸியில் பயணம் பண்ணி இந்த ஹோட்டலுக்கு வந்து இருக்கோம். ஹோட்டலின் மானேஜர் மணி மொழியன் எனக்குத் தெரிஞ்சவர். இவரும் ஒரு நம்பிக்கையான மனிதர். எந்த ஒரு விஷயமும் வெளியே போக வாய்ப்பில்லை.... அதனால்தான் உன்னை இந்த ஹோட்டலுக்கு வரச் சொல்லிட்டு மணி மொழியனுக்கு தகவல் கொடுத்தேன். நான் உன்னைச் சந்திக்கப் போகிற விஷயம் என் கூடவே இருக்கற விஷ்ணுவுக்கும் கூட தெரியாது. "

"ஆமா சிஸ்டர், " என்றான் விஷ்ணு.

விவேக் தன்னுடைய நாற்காலியை இழுத்து ஜெபமாலைக்கு முன்னாள் நெருக்கமாய் போட்டுக்கொண்டான்.

"சொல்லு ஜெபமாலை...! உன்னோட ஃப்ரண்டு சுடர்கொடி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், அவளுடைய அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கலிடப்பட்ட சம்பவத்துக்கும் யார் காரணம்?"

விவேக் இந்த கேள்வியைக் கேட்டதும் சில வினாடிகள் பேசாமல் இருந்த ஜெபமாலை தான் கையோடு கொண்டு போயிருந்த கைப்பையைத் திறந்து ஒரு செல்போனை எடுத்து உயிர்ப்பித்தாள். 'வாட்ஸ் அப்' ஆப்ஷனுக்குப் போய் வீடியோ காட்சி ஒன்றைத் தேர்ந்து எடுத்து விவேக்கிடம் நீட்டினாள்.

"மொதல்ல தொன்னூறு வினாடிகள் ஓடக்கூடிய இந்த விடியோவைப் பாருங்க ஸார். இதை நீங்க பார்த்த பிறகு நான் எல்லா விபரங்களையும் சொல்றேன்.....!"

விவேக் ஜெபமாலை கொடுத்த செல்போனை வாங்கி அந்த வீடியோ காட்சியை 'ப்ளே' செய்தான். விஷ்ணுவும் அதில் பார்வையைப் போட்டான்.

செல்போன் திரை ஒரு கோயிலைக் காட்டியது. அது ஒரு வடநாட்டுக் கோயில் என்பதற்கு அடையாளமாய் ஹிந்தி வாசகங்களோடு கூடிய விளம்பர போர்டுகள் தெரிந்தன. கோயிலின் வாசலில் பிச்சைக்காரர்கள் வரிசையாய் உட்கார்ந்து தட்டுகளை ஏந்திக் கொண்டிருக்க, கார்கள் வாசலில் வந்து நிற்பதும் காரில் இருந்தவர்கள் இறங்கி கோயிலுக்குள் போவதுமாய் இருந்தனர். முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு ஆடி கார் 'அட்லாண்டிக் ப்ளூ' நிறத்தில் தேர் மாதிரி அசைந்து வந்து கோயில் வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய உயரமான இளைஞன் ஒருவன் தன் கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து நூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்தான். நோட்டுக்கட்டில் இருந்த 'ரப்பர் பேண்ட்' டை கழற்றி வீசிவிட்டு ஒவ்வொரு நூறு ரூபாய் தாளாய் உருவி வரிசையாய் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களின் தட்டுகளில் போட்டுக் கொண்டே போனான்.

விவேக் செல்போனில் இருந்து பார்வையை எடுக்காமல் ஜெபமாலையிடம் கேட்டான்.

"யார் இந்த இளைஞன்?"

"சொல்றேன் ஸார்... மொதல்ல வீடியோ காட்சி முழுவதையும் பார்த்து முடிங்க...!"

விவேக் செல்போன் திரையை உன்னிப்பாய் பார்க்க அந்த இளைஞன் இன்னமும் பிச்சைக்காரர்களின் தட்டுகளில் நூறு ரூபாய் தாள்களைப் போட்டுக் கொண்டிருந்தான்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 12th episode of Rajeshkumar's One + One = Zero, crime series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X