For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஒன் + ஒன் = ஜீரோ'... - அத்தியாயம் 3

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

விஷ்ணு சொன்னதைக் கேட்டு விவேக்கின் இரண்டு புருவங்களும் சில மில்லி மீட்டர் உயரத்துக்கு மேலேறின.

"என்னடா சொல்றே... ஜெப மாலையா?"

"ஆமா பாஸ்... என்னோட பார்வைக்குக் கிடைச்ச ஒரு சின்ன துப்பு. சின்ன வயசிலயே அதாவது என்னோட டீன் ஏஜ் வயசிலயே எனக்கு கருடப் பார்வைன்னு எதிர்வீட்டு மாமி சொன்னது இப்போ என்னோட ஞாபகத்துக்கு வருது பாஸ்!"

"டேய் போதுண்டா... எங்கே அந்த ஜெப மாலை? கொடு பார்க்கலாம்... அது எப்படி சுடர் கொடியோட கொலைக்கு உபயோகப்படுத்துன் பாத்துடலாம்..!"

Rajeshkumars One + One = Zero -3

"அதைக் கொடுக்க முடியாது பாஸ்... படிச்சுத்தான் பார்க்கணும்...!"

"என்னது படிச்சுப் பார்க்கணுமா?"

"ஆமா பாஸ்...!" சொன்ன விஷ்ணு அந்த சிறிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.

"பாஸ்! இது சுடர்கொடியோட கைப்பையில் இருந்த குறிப்பு நோட்டுப் புத்தகம். ரயில்வே இன்ஸ்பெக்டர் கைப்பையை என்கிட்டே கொடுத்தபோது அதில் இருந்த நோட்டுப் புத்தகத்தை வெளியே எடுத்து மெல்லப் புரட்டிப் பார்த்தேன். உங்ககிட்ட பேட்டி எடுக்கறதுக்காக அந்த சுடர்கொடி எது மாதிரியான கேள்விகளை 'ப்ரிப்பேர்' பண்ணிட்டு வந்திருக்கான்னு படிச்சுட்டே வந்தேன். அதுல ஒரு கேள்வி அப் - நார்மலாய் இருந்தது பாஸ். அதை நீங்களே படிச்சுப் பாருங்க!"

சொன்ன விஷ்ணு அந்த சிறி நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வரிசையாய் எழுதப்பட்டிருந்த கேள்விகளில் ஒரு கேள்வியைச் சுட்டிக் காட்டினான். விவேக் பார்த்தான். வாய்விட்டு மெல்ல படித்தான்.

"ஜெபமாலை சொன்னதை ஒரு கேள்வியாய் கேட்டு பதிலை வரவழைக்க வேண்டும்!"

"என்ன பாஸ் ஏதாவது பிடிபடுதா?"

"யார்ரா இந்த ஜெபமாலை?"

"பாஸ்..! பொதுவா கிறிஸ்தவப் பெண்கள்தான் ஜெபமாலைன்னு பேர் வெச்சுக்குவாங்க... ப்ரஸ் ரிப்போர்ட்டர் சுடர்கொடிக்கு ஜெபமாலைங்கிற பேர்ல யாரையோ தெரிஞ்சிருக்கு. ஒருவேளை தோழியாய் கூட இருக்கலாம். அந்த ஜெயபமாலை என்கிற பெண் சொன்ன ஏதோ ஒரு விஷயம் சுடர்கொடியை பாதிச்சிருக்கலாம். அதை ஒரு கேள்வியாய்க் கேட்டு உங்கிட்டயிருந்து பதிலை வரவழைக்கிறது ஒரு நோக்கமாய் இருக்கலாம்...!"

விவேக் மௌனமாய் சில விநாடிகளைச் செலவழித்து அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்த எல்லாக் கேள்விகளையும் படித்துவிட்டு சற்றுத் தள்ளி நீர் நிரம்பிய விழிகளோடு நின்றிருந்த மீனலோசனியிடம் வந்தான்.

Rajeshkumars One + One = Zero -3

"மேடம்...!"

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு என்ன என்பது போல் பார்த்தாள். விவேக் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.

"உங்களுக்கு ஜெபமாலை என்கிற பேர்ல எந்தப் பெண்ணையாவது தெரியுமா?"

"ஜெபமாலை...?"

"ஆமா..."

"தெரியும்... ஆனா... அந்தப் பொண்ணை நான் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அதுவும் போன வாரம் ஒரு மத்தியான நேரம் மூணு மணி இருக்கும். அந்தப் பொண்ணு என்னோட வளையோசை பத்திரிக்கை ஆபீசுக்கு வந்தா. சுடர்கொடியைப் பார்க்கணும்னு சொன்னா. அந்த சமயத்துல சுடர்கொடி ஒரு முக்கியமான நபரை பேட்டி எடுக்கறதுக்காக தாம்பரம் வரைக்கும் போயிருந்தா. நான் சுடர்கொடி இல்லைன்னு சொன்நதும் ஜெபமாலை தன்னோட பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டா. சுடர்கொடி தன்னோட போனை 'ஸ்விட்ச் ஆஃப்' பண்ணி வெச்சிருக்கிறதால நேர்ல பார்க்க வந்ததாய் சொன்னா..."

"அந்த ஜெபமாலை சுடர்கொடியை எதுக்காக பார்க்க வந்தாள்னு கேட்கலையா மேடம் ?"

"கேட்டேன்... அதுக்கு அவ ஏதோ ஒரு மழுப்பலான பதிலைச் சொன்னா. நானும் பெருசா ஆர்வம் காட்டலை. நாளைக்கு காலையில் வர்றதாய் சொல்லிட்டு கிளம்பிட்டா .. என்று சொல்லி பேச்சை நிறுத்திய மீனலோசினி சற்றே பயத்தோடு கேட்டாள்.

"இப்ப எதுக்காக அந்தப் பொண்ணு ஜெபமாலையைப் பத்தி விசாரிக்கறீங்க....?"

விவேக் அந்தச் சிறிய நோட்டுப் புத்தகத்தை மீனலோசினியிடம் காட்டிக் கேட்டான். "இது சுடர்க்கொடி பேட்டி எடுக்கும்போது உபயோகப்படுத்தும் நோட்டுத்தானே...?"

அவள் பார்த்துவிட்டு தலையாட்டினாள்.

"ஆமா.."

" சுடர்க்கொடி என்கிட்டே கேட்க இருந்த இந்தக் கேள்வியைப் படிச்சுப் பாருங்க மேடம் ....!"

மிரட்சியோடு மீனலோசினி படித்தாள் .

"ஜெபமாலை சொன்னதை ஒரு கேள்வியாய் கேட்டு பதிலை வரவழைக்க வேண்டும்."

"இதுக்கு என்ன அர்த்தம் மேடம்?"

"தெரியலையே.."

"ஜெபமாலை ஏதோ ஒரு விஷயத்தை சுடர்கொடிக்கிட்டே சொல்லியிருக்கா . அந்த விஷயத்தை சுடர்கொடி என்கிட்டே ஒரு கேள்வியாய் கேட்டு அதுக்கான பதிலை எதிர்பார்த்து இருக்கா... இல்லையா மேடம்?"

"ஆமா..."

"அது ஏன் ஒரு பிரச்னைக்குரிய விஷயமாய் இருக்கக்கூடாது? "

"இந்தக் கேள்வியை ஜெபமாலைகிட்டேதான் கேட்கணும். அந்தப் பொண்ணோட போன் நெம்பர் கிடைச்சா போய்ப் பார்த்துடலாம்."

"அவ போன் நெம்பர் எனக்கு தெரியாதே?"

"சுடர்கொடிக்கு வேற யாராவது ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களா...?"

"ஸாரி... எனக்கு தெரியலை ..."

"வீடு எங்கேயிருக்குன்னு சொன்னீங்க.. ராஜா அண்ணாமலை புறம்தானே?"

மீனலோசினி தலையசைத்தாள்.

"சுடர்கொடிக்கு அம்மா அப்பா கிடையாது. அண்ணன் மட்டும்தான் இல்லையா?"

"ஆமா..."

"பேரு... திலீபன்?"

"ஆமா..."

"அவரோட போன் நெம்பர் தெரியாதுன்னு சொல்லிட்டீங்க. ராஜா அண்ணாமலைபுரத்துல வீடு எங்கேன்னு தெரியுமா...?"

"பட்டாபிராமன் தெருவுல கடைசி வீடு... ஒரு தடவை என்னோட கார்ல சுடர்கொடியை அந்தத் தெருமுனையில் ட்ராப் பண்ணியிருக்கேன் ."

"ஓகே மேடம்... நீங்க புறப்படுங்க . இனிமேல் டிபார்ட்மெண்ட்டோட அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகி கொலையாளி இருக்கற திசையை மோப்பம் பிடிக்கும்... இந்தப் படுகொலைக்குப் பின்னாடி இருக்கற காரணமும் தெரியவரும்..."

மீனலோசினி மறுபடியும் ஒரு தடவை புதிய அழுகைக்குத் தயாராக, விவேக் மெல்ல நகர்ந்து விஷ்ணுவிடம் வந்தான்.

"கிளம்பு விஷ்ணு"

"எங்கே பாஸ்... இப்பத்தான் ஃபிரான்ஸிக் பீப்பிள் வந்து எஸ். ஓ. ஸி. பார்த்துட்டிருக்காங்க..."

"அவங்கப் பார்த்துட்டு இருக்கட்டும். நாம அதுக்குள்ள ராஜா அண்ணாமலைபுரம் போயிட்டு வந்துடலாம்"

"சுடர்கொடியோட வீட்டை உடனடியாய் 'ஸ்கேன் ' பண்ணிடலாம்னு சொல்ல வர்றிங்க ?"

"அதே தான்...!"

"ஜுட்" என்றான் விஷ்ணு.

*************

அந்தப் பிற்பகல்வேளையில் சுடர்கொடியின் வீடு இருந்த பட்டாபிராமன் தெரு ஆள் நடமாட்டம் அறவே இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது .

சாலையின் இரண்டுபக்கமும் நடுத்தர மக்களின் வீடுகள் நெருக்கியடித்துக் கொண்டு தெரிய, மொட்டை மாடியில் காயப் போட்ட துணிகள் அரசியல் கட்சிகளின் கொடிகளைப் போல் பறந்து கொண்டிருந்தன. போலீஸ் ஜீப் போய்க்கொண்டிருக்க விஷ்ணு சொன்னான்.

"என்ன பாஸ்... இந்த தெருவுல இருக்கற யாருமே டி. வி. பார்க்க மாட்டாங்க போலிருக்கே... இந்த தெருவைச் சேர்ந்த ஒரு பெண் வேளச்சேரி ஸ்டேஷனில் கொடூரமாய் கொலை செய்யப்பட்டு செய்தியை எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுகிட்டு ஒளிபரப்பிட்டு இருக்காங்க. அதனோட பாதிப்பு இந்தத் தெருவில் பாயிண்ட் ஜீரோ ஜீரோ ஒன் பர்ஸண்ட் கூட தெரியலையே? ஒரு வேளை தப்பான தெருவுக்கு வந்துட்டோமா?"

"இது மத்தியான நேரம்... எல்லாரும் வேலைக்குப் போயிருப்பாங்க... வீட்ல இருக்கறவங்க பகல் தூக்கத்தில் இருப்பாங்க ..."

கடைசி வீட்டுக்கு முன்பாய் போய் ஜீப் நின்றது. விவேக்கும் விஷ்ணுவும் கீழே இறங்க, வாசற்படியில் உட்கார்ந்து செல்போனை நோண்டிக்கொண்டிருந்த அந்த நபர் போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து நின்றார்.

விவேக் கேட்டான் .

"சுடர்கொடியோட வீடு இதுதானே...?"

"இ.... இ... இது இல்ல... ஸார்... எதிர்த்தாப்புல இருக்கற வீடு...!"

விவேக் திரும்பிப்பார்த்தான் .

வீடு பூட்டப்பட்டு கதவில் பெரிய மஞ்சள் நிற பூட்டு ஒன்று மத்தியான வெய்யிலில் பளபளப்பாய் மின்னியது.

"வீடு பூட்டிருக்கு...?"

"எனக்கு ஒண்ணும் தெரியாது ஸார்... வீட்டு ஓனர் உள்ளே இருக்கார். அவரைக் கேட்டா விபரம் தெரியும்," என்று சொன்னவர் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்து "முத்துராஜ் அண்ணே...! கொஞ்சம் வெளியே வாங்க..." என்று குரல் கொடுத்தார்.

அடுத்த சில வினாடிகளில் அந்த முத்துராஜ் பளீரென்ற வெள்ளை சர்ட்டிலும் வேஷ்டியிலும் வெளியே வந்தார். முன்பக்கம் வழுக்கை. பின் பக்கத்தலையில் மிச்சமிருந்த நரைமுடி சமீபத்தில் அடித்த 'டை'யின் காரணமாய் வயதைக் குறைத்துக் காட்ட முயற்சி செய்து தோற்றும் போயிருந்தது. ராத்தின நேர பீர்களில் புஷ்டியாய் தெரிந்தது தொப்பை.

போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் லேசாய் வாய் உலர்ந்தார். அரையும் குறையுமாய் வணக்கம் வைத்ததை விவேக் பொருட்படுத்தாமல் கேட்டான்.

"சுடர்கொடியும் திலீபனும் தங்கியிருக்கற வீடு இதுதானே?"

"ஆமா... ஸார்... நான்தான் ஹவுஸ் ஓனர். ஏன் ஸார் என்ன விஷயம்? "

"சொல்றேன்....வீடு பூட்டியிருக்கு. ரெண்டு பேரும் எங்கே போயிருக்காங்க?"

"அந்தப் பொண்ணு ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்ட்டரா வேலை பார்க்குது ஸார். அண்ணன் திலீபன் ஒரு மெடிக்கல் ரெப். வாரத்துல அஞ்சு நாள் வெளியூர்."

"இப்ப திலீபன் எங்கே...?"

"ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் ஹைதராபாத் புறப்பட்டுப் போனார் ஸார்...!"

"அந்த பொண்ணு சுடர்க்கொடி....?"

"அது சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் வந்திடும் ஸார். ஏன் ஸார்... என்ன விஷயம் ஸார்?"

"இந்த வீட்டுக்கு மாற்றுச் சாவி உங்ககிட்டே இருக்கா...?"

"அது எப்படி ஸார் இருக்கும்... குடியிருக்கறவங்க வேற பூட்டைப் போட்டுக்குவாங்களே !"

விவேக் விஷ்ணுவைப் பார்க்க அவன் தன் பேண்ட் பாக்கெட்டில் எப்போதும் வைத்து இருக்கும் 'லாக் ரிலீவர் டிவைஸோடு' கதவில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டை நோக்கிப் போனான்.

வீட்டு ஓனர் முத்துராஜ் பதட்டமானார்.

"என்ன பிரச்னை ஸார்?"

"ஒண்ணும் பேசாம என்கூட வாங்க"

"ஸார்! நான் ஒரு கட்சியோட மாவட்ட செயலாளர். பிரச்னை என்னான்னு என்கிட்டே சொல்லுங்க ஸார். பூட்டியிருக்கற வீட்டை குடியிருக்கறவங்க அனுமதி இல்லாம ஓப்பன் பண்ணினா நாளைக்கு அதுவே ஒரு பெரிய பிரச்னையாயிடும் ஸார்."

விஷ்ணு குரல் கொடுத்தான்.

"பாஸ்...! லாக் ரொம்பவும் வீக். பத்தே செக்கண்ட்ல பல்லைக் காட்டிடுச்சு..."

கதவை விரிய திறந்து வைத்தான். முத்துராஜ் கலவர முகத்தோடு விவேக்கை பின்தொடர்ந்தார் .

"அந்த திலீபன் ஏதாவது ஏதாவது தப்பு பண்ணிட்டானா ஸார்?"

"இதோ பாருங்க முத்துராஜ். ஒரு பத்து நிமிஷம் பொறுமையாய் இருங்க. நாங்க இந்த வீட்டை சோதனைப் போட்ட பிறகு நீங்க என்னோட நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்."

முத்துராஜ் மௌனமானார்.

விவேக்கும், விஷ்ணுவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். முன்பக்க அறையின் சுவரில் ஒரு இளைஞனின் போட்டோவும் ஒரு பெண்ணின் போட்டோவும் பக்கம் பக்கமாய் தெரிய விவேக் முத்துராஜிடம் திரும்பினான்.

"இவங்கதான் சுடர்கொடியும், திலீபனுமா?"

"ஆமா.... ஸார்..."

இரண்டு பேருமே அழகாய் இருந்தார்கள். போட்டோஜீனிக் ஃபேஸ்.

"மொத்தம் எத்தனை ரூம்?" விவேக் உள்ளே போய்க்கொண்டே கேட்டான்.

"நாலு ஸார் ..."

"வாடகை எவ்வளவு ?"

"பதினஞ்சாயிரம் ஸார்"

விவேக் இடது பக்கமாய் நடந்து அந்த சாத்தியிருந்த அரைக் கதவைத் தள்ளினான். பார்வை உள்ளே போக விவேக்கின் உடம்பு ஒரு மெலிதான நடுக்கத்துக்கு உட்பட்டது.

ஒரு ஸ்டூல் கிழே கவிழ்ந்து கிடக்க....

திலீபன் தூக்கு கயிற்றில் ஒரு நேர்கோடாய் சலனமில்லாமல் தொங்கி கொண்டிருந்தான்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
This is the 3rd chapter of Rajeshkumar's One + One = Zero crime story series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X