• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 5

By Shankar
|

- ராஜேஷ்குமார்

விவேக் செல்போனில் '168 மணி நேரம்' வேண்டும் என்று சொன்னதும் செல்போனின் மறுமுனையில் இருந்த டி.ஜி.பி.யின் பர்சனல் அசிஸ்டண்ட் தியோடர் திகைத்தார்.

"அது என்ன 168 மணி நேரம் கணக்கு ?"

"எனக்கு ஒரு வார காலம் தேவைப்படும்ன்னு சொன்னேன் ஸார். நான் அப்படி மணிக்கணக்கில் சொன்னதுக்கு ஒரு காரணமும் இருக்கு..."

"என்ன காரணம்?"

Rajeshkumars One + One = Zero -5

"இந்த சுடர்கொடி, திலீபன் மரணங்களை நாம் அன்றாடம் ஏதாவது ஒரு இடத்தில நடக்கும் சாதாரணக் கொலைகளாய் நினைச்சு இன்வெஸ்டிகேஷன் பண்ணினா, கொலைக்கான காரணமும், கொலையாளியும் நம்ம பார்வைக்குப் படாத தூரத்துக்குப் போக வாய்ப்பு இருக்கு. ஏன்னா நீங்களே இந்தப் பிரச்னைக்குப் பின்னாடி ஒரு பவர்ஃபுல் பர்சன் இருக்கறதாய் சொல்லிட்டீங்க.... அதனால இந்த கேஸை இடைவிடாம ஒவ்வொரு நிமிஷமும் ஏதாவது ஒரு வகையில் எச்சரிக்கை உணர்வோடு இன்வெஸ்டிகேஷன் செய்ய வேண்டியிருக்கு. அதே நேரத்துல கொலையாளிக்கு நாம இந்த கேஸை தீவிரமாய் விசாரணைப் பண்ணிட்டுருக்கோம்ன்னு தெரியக்கூடாது. அதுக்கு நீங்க ஒரு காரியம் செய்யணும் ஸார்."

"சொல்லுங்க மிஸ்டர் விவேக்... நான் என்ன பண்ணனும் ?"

"ப்ரஸ் மீடியாவும் சரி, சானல் மீடியாவும் சரி சுடர்கொடி, திலீபன் கொலைகளில் போலீஸ் விசாரணை மெத்தனமாகவும், அலட்சியப் போக்கோடும் நடைபெறுவதாய் குற்றம் சாட்டிக்கிட்டே இருக்கும்படியான ஒரு சூழ்நிலையை நீங்க உருவாக்கணும். நானும் விஷ்ணுவும் 'அண்டர் காப்' வேலை பார்த்து கொலைகளுக்கான காரணத்தையும், கொலையாளியையும் நெருங்கிருவோம். நம்ம நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் யார் இருந்தாலும் சரி, அவங்க குற்றவாளியாய் இருந்தால் சட்டத்துக்கு முன்பாய் நிறுத்தப்பட்டேயாகணும். "

"அப்சல்யூட்லி ஐ செக்கண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் விவேக்.... நீங்க சொன்ன மாதிரி நான் ப்ரஸ், சானல் மீடியா பீப்பில்ஸை பார்த்துக்கறேன். நீங்க உங்க சூரசம்ஹாரத்துக்கு அஸ்திவாரம் போடுங்க...."

"தேங்க்யூ ஸார்"

"தேவைப்பட்டா மட்டும் என்னை இதே நெம்பர்ல காண்டாக்ட் பண்ணுங்க... "

"எஸ் . ஸார்"

" விஷ் யூ ஆல் த பெஸ்ட். நீங்க கேட்ட அந்த 168 மணி நேரம் இந்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகுது.....!"

"தாங்க யூ ஸார்...."

விவேக் செல்போனில் பேச்சை முடித்துக் கொண்டு திரும்ப, விஷ்ணு வெகு அருகில் நின்றிருந்தான்.

"என்ன பாஸ்... பிரச்னை சீரியஸா?"

"கொஞ்சம்... "

"நீங்களே கொஞ்சம்ன்னு சொன்னா என்னோட அகராதியில் அது மகா பெரிய பிரச்சனைன்னு அர்த்தம்... பார்த்துடலாம் பாஸ்... செல்போன், இன்டர்நெட் இல்லாத காலத்திலேயே கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் துரத்தி துரத்தி பிடிச்சிருக்கோம்... இன்னைக்கு விஞ்ஞானம் விஸ்வரூபம் எடுத்து இருக்கு. சுடர்கொடியையும், திலீபனையும் கொன்ற கொலையாளி செவ்வாய் கிரகத்துக்குப் போய்கிட்டு இருந்தாக் கூட கண்டு பிடிச்சுடலாம் பாஸ்."

விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஒரு வாகனத்தின் எஞ்ஜின் சத்தம் கேட்க, விவேக் ஜன்னலில் எட்டிப்பார்த்தான்.

வாசலில் நின்ற ஜீப்பிலிருந்து ஃபாரன்ஸிக் சீஃப் ஆபீசர் பிராணேஷ் பிஸ்கெட் நிற சபாரியில் முடி கொட்டி பளபளத்த மண்டையோடு இறங்கிக் கொண்டிருந்தார். கையில் ஒரு மெடிக்கல் கிட்.

விவேக் வேகமாய் போய் அவரை எதிர்கொண்டான் .

"வாங்க மிஸ்டர் ப்ரணேஷ்.... அயாம் வெயிட்டிங் ஃபார் யூ"

"ஸாரி மந்தைவெளிப் பக்கம் ஹெவி டிராஃபிக். கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்."

"நோ ப்ராப்ளம். யூ ஆர் இன் ரைட் டைம். நான் கூட இன்னும் எஸ். ஓ.பி. சரியா பார்க்கலை..."

"பாடி எங்கே....?"

"ப்ளீஸ் கம் திஸ் சைட்..." ப்ரணேஷக் கூட்டிக் கொண்டு விவேக் உள்ளே போனான். வீட்டு ஓனர் முத்துராஜ் தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியோடு திலீபனின் உடலை கீழே இறங்கி சுவரோரமாய் படுத்து வைத்து இருக்க ப்ரணேஷ் கையுறைகளை மாட்டிக் கொண்டு உடலருகே மண்டியிட்டு உட்கார்ந்தார். மெடிக்கல் கிட்டிலிருந்து ஒவ்வொரு உபகரணமாய் வெளிப்பட்டு திலீபனின் உயிரற்ற உடலை ஒரு சில நிமிடங்கள் முகர்ந்து விட்டு மறுபடியும் உள்ளே போயிற்று.

ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களுக்குப் பின் ப்ரணேஷ் இறுக்கமான முகத்தோடு விவேக்கை ஏறிட்டார்.

"மிஸ்டர் விவேக்... இது நிச்சயமாய் தற்கொலை இல்லை. இந்த நபரை தூக்குல தொங்கவிடறதுக்கு முந்தி சைக்கிளோப்ரோபேன் (CYCLOPROPANE ) என்கிற மயக்க மருந்தை ஸ்ப்ரே பண்ணி இவரை மயக்க நிலைக்குக் கொண்டு போய் அதுக்கப்புறமாய் கழுத்துக்கு கயித்தால சுருக்கு போட்டு தொங்கவிட்டு இருக்காங்க...."

"சம்பவம் நடந்து எவ்வளவு மணி நேரம் ஆகியிருக்கும்ன்னு நினைக்கறீங்க ?"

"சுமார் பனிரெண்டு மணி நேரம்"

"அதாவது நேத்து மிட் நைட்"

"எஸ் "

விவேக் முத்துராஜிடம் திரும்பினார். "நேத்து ராத்திரி நள்ளிரவில் திலீபன் கொலை செய்யப்பட்டிருக்கார். ஹைதராபாத்துக்கு போறதாய் உங்க கிட்டே சொன்ன திலீபன் மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கார். அப்படி வீட்டுக்கு வந்தவர்தான் கொலையாளிக்கிட்டே மாட்டியிருக்கார் மயக்க மருந்தை ஸ்பிரே பண்ணி திலீபனை மயக்கத்துக்கு உட்படுத்தி அவர் சுய உணர்வு இழந்ததும் கழுத்துக்கு கயித்தை மாட்டி தொங்கவிட்டுட்டு வீட்டையும் பூட்டிக்கிட்டு கொலையாளி போயிருக்கணும். நேத்து ராத்திரி இவ்வளவு சம்பவங்கள் நடந்து இருக்கு... இந்த வீட்டுக்கு எதிரில் இருக்கற உங்களுக்கு ஒரு சின்ன சத்தம் கூட கேட்கலையா?"

முத்துராஜ் மறுபடியும் புதிதாக வியர்த்தார்.

"ஸார்! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு கட்சிக்கு மாவட்டச் செயலாளராய் இருக்கற நான் அந்தக் கட்சித் தலைவரோட பிறந்த நாளுக்காக ரெண்டு மூணு நாள் கட்சி ஆபீஸிலேயே இருந்துட்டேன். வீட்டுக்கே சரியாய் வரலை... என்னோட ஒய்ஃப்பும் ஊர்ல இல்லை. ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்றதுக்காக கோயமுத்தூர்க்குப் போயிருக்கா. பொதுவா இந்த தெருவுல குடியிருக்கற யாரும் ஒருத்தரை ஒருத்தர் கண்டுக்க மாட்டாங்க ஸார். அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பாங்க....".

முத்துராஜ் பதட்ட குரலில் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த ஏரியா பீட் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் இரண்டு கான்ஸ்டபிள்களோடு உள்ளே வந்து விவேக்கைப் பார்த்து நேர்க்கோடாய் நின்று 'சுள்' என்று சல்யூட் அடித்து விட்டுத் தளர்ந்தார்.

விவேக் இன்ஸ்பெக்டரின் நேம் 'பேட்ச்' சைப் பார்த்து விட்டு பேசினான்.

"மிஸ்டர் சந்திரசேகர்...! வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் சுடர்கொடி என்கிற பெண் வெட்டிக் கொலை செய்ப்பட்ட சம்பவம் உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்."

"தெரியும் ஸார். டி.வி. யில் நியூஸ் போயிட்டிருக்கு."

"அந்தப் பெண்ணோட அண்ணன்தான் இங்கே தூக்கில் தொங்கிய நபர். ஃபாரன்சிக் ஆபிஸரின் முதல் அறிக்கையின்படி திலீபன் நேற்று ராத்திரி கொலையாளியால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கார். நான் சீன் ஆப் க்ரைம் பார்த்துட்டேன். நீங்களும் ஒரு தடவை பார்த்துட்டு பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்ப வேண்டிய ஃபார்மாலிடீஸைப் பண்ணிடுங்க. "

"எஸ்... ஸார்..."

"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உங்க கைக்குக் கிடைச்சதும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க !"

"எஸ்... ஸார்..."

"இவர் ஹவுஸ் ஓனர் முத்துராஜ். நான் இவரை என்கொயர் பண்ணிட்டேன். ஹி ஈ ஸ் ஹார்ம்லஸ். பட் இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை அவர்கிட்டே கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கிடுங்க."

"எஸ்.ஸார்...!"

"நான் கிளம்பறேன். ஃபாரன்சிக் சீஃப் ஆபிஸர் மிஸ்டர் ப்ராணேஷ் இங்கே இருப்பார். அவர் உதவியோடு நீங்க ஃபார்மாலிடீஸைக் கண்டினியூ பண்ணுங்க."

"எஸ்.ஸார்..." இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மறுபடியும் நேர்கோடாக மாறி சல்யூட் அடிக்க, விவேக் ப்ராணேஷிடம் விடைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தான். விஷ்ணு பின் தொடர்ந்தான்.

................................................................

விவேக் க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்தை நோக்கி மௌனமாய் காரை ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் உட்கார்ந்திருந்த விஷ்ணு பத்து நிமிஷம் வரை பொறுமை காத்துவிட்டு பொங்கினான்.

"இந்த ஊமைச் சித்தர் கெட் அப் உங்களுக்கு நல்லாயில்லை பாஸ். உங்க உதட்டோரம் எப்பவுமே ஒரு சின்ன சிரிப்பு சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும். அந்தச் சிரிப்பை இன்னைக்குக் காணோம்..."

விவேக் தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்ஸை ஓவர்டேக் செய்துக் கொண்டே சொன்னான்.

"விஷ்ணு...! எனக்கு அதிர்ச்சியாய் இருக்கு "

"எனக்கும் அதிர்ச்சிதான் பாஸ். அண்ணனும், தங்கையும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருக்காங்க. ஆனா இதை விட அதிர்ச்சியான கொலைகளையெல்லாம் நாம் பார்த்து இருக்கோமே பாஸ்."

"நான் அதிர்ச்சி அடைஞ்சது இந்த கொலைகளுக்காக இல்லை."

"பின்னே எதுக்காக பாஸ்?"

"தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட திலீபனும் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுடர்கொடியும் அண்ணன் தங்கையாக நடிக்க வேண்டிய அவசியம் என்ன?"

விஷ்ணு விழிகளை விரித்தான்.

"எ...எ...என்ன பாஸ் சொல்றீங்க...?"

"திலீபனும் சுடர்கொடியும் கணவன் மனைவியாய் வாழ்ந்திருக்காங்க"

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
Here is the 5th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X