• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 14

By Shankar
|

முன்கதை:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள்...

இனி...

வாஷ் பேசின் முழுவதும் ரத்தப் புள்ளிகள் தெறித்து சிவப்புமயமாய் மாற ஜெபமாலைக்கு கண்கள் இருட்டி தலை சுற்றுவது போல் இருந்தது.

'என்னாயிற்று எனக்கு ?'

யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜெபமாலைக்கு மறுபடியும் வாய்க்குள் உமிழ் நீர் சுரந்து புளிப்புச் சுவை உற்பத்தியாயிற்று. வாய்க்குள் சுனாமி அலை ஒன்று சுழல்வது போன்ற உணர்வு.

Rajeshkumars One+One=Zero - 14

மறுபடியும் வாஷ்பேசினை நோக்கி குனிந்தாள். இந்த முறை ரத்த சேதம் அதிகமாக, வாஷ்பேசினை ஒட்டியிருந்த சுவர் முழுவதும் ரத்தப் புள்ளிகள் தெளித்து ஒட்டிக் கொண்டன.

விவேக்கும் விஷ்ணுவும் பதட்டமும் திகைப்புமாய் அவளை நோக்கி ஓடிவந்தார்கள். கண்கள் சோர்ந்து மயங்கி விழப் போன ஜெபமாலையை விவேக் தாங்கிப் பிடித்தான்.

"ஜெபமாலை..... உனக்கு என்ன பண்ணுது?"

"தெ.... தெ.... தெரியலை ஸார்!" அவள் திணறித் திணறி பேசிக்கொண்டு இருக்கும் போதே நிற்கமுடியாமல் துவண்டு அப்படியே ஒருபக்கம் சாய்ந்து சரிந்தாள். விவேக் அவள் அருகே மண்டியிட்டு உட்கார்ந்தான்.

"ஜெபமாலை "

அவள் பேசும் நிலையில் இல்லை கண்ணிமைகளைத் திறக்க முயன்று தோற்றாள். விவேக் அவள் கன்னப் பகுதியை லேசாய்த் தட்டினான். அடுத்த வினாடி அவளுடைய நாசியின் இடது பக்க துவாரத்தில் ரத்தத் துளி ஒன்று சட்டென்று தோன்றி ஒரு பட்டாணி சைஸுக்கு பவளம் போல் உருண்டது.

"விஷ்ணு!"

"பாஸ் ..... !"

"சம்திங் ஹேஸ் ஹப்பெண்ட்.... அந்த ஹோட்டல் மானேஜர் மணிமொழியனைக் கூப்பிடு."

விஷ்ணு வெளியே ஓடி அடுத்த சில வினாடிகளில் மணி மொழியனோடு வந்தான். மணிமொழியனின் முகம் வியர்வையிலும் பயத்திலும் நிரம்பியிருந்தது. கீழே விழுந்து கிடந்த ஜெபமாலையைப் பார்த்ததும் பதறினான்.

"என்ன ... ஸார் ஆச்சு இந்தப் பொண்ணுக்கு?"

"தெரியலை... திடீர்ன்னு பிளட் வாமிட்... இந்தப் பெண் ஹோட்டலுக்கு வந்த பின்னாடி ஏதாவது சாப்பிட்டாளா?"

மணிமொழியன் சில விநாடிகள் யோசனையாய் இருந்து விட்டு தலையாட்டினார்.

"ஆமா ஸார்... ஹோட்டலுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே என்னை இன்டர்காம்ல காண்டாக்ட் பண்ணி சாப்பிட ஃபுரூட் ஜூஸ் ஏதாவது கிடைக்குமான்னு கேட்டா. கிடைக்கும்ன்னு சொன்னேன். சாத்துக்குடி ஜூஸ் வித்தவுட் ஐஸ் சுகர் இல்லாமே ஆர்டர் பண்ணினா. நான் உடனே உள்ளே இருக்கற ரெஸ்டாரெண்டுக்கு தகவல் சொன்னேன். பேரர் கிருஷ்ணன்தான் சர்வ் பண்ணினான்.....!"

மணி மொழியன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விவேக்கின் பார்வை அதிரடியாய் அறைக்குள் அலைந்து 'ஸ்கேன்' செய்து சுவர் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடி டம்ளரின் மேல் போய் நிலைத்தது.

"விஷ்ணு....! அந்த டம்ளரை உன்னோட கர்சீப்பை எடுத்து 'பிரஸர்வ்' பண்ணு.....!"

அவசர நடையில் விஷ்ணு அலமாரியை நோக்கி நகர, விவேக் மணிமொழியனிடம் திரும்பினான்.

"இங்கே பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடல் இருக்கா?"

"இருக்கு ஸார்.... நம்ம ஹோட்டலுக்குப் பின்னாடி அடுத்தத் தெருவில் 'குறிஞ்சி ஹாஸ்பிடல் இருக்கு'."

"உடனே ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி வரவழைங்க. ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ளே ஜெபமாலைக்கு ஏதாவது ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்து நினைவை வரவழைக்க முடியுமான்னு பார்க்கலாம்..."

மணிமொழியன் கை நடுங்க தன்னுடைய செல்போனை எடுத்து ஹாஸ்பிடலின் போன் நெம்பரை தேடி எடுத்து பேசும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, ஜெபமாலை இப்போது இரண்டு நாசி துவாரங்களிலும் ரத்தம் வருவதற்கான அறிகுறியைக் காட்டினாள். கண்கள் பாதி திறந்து இருக்க தன வலது கையை உயர்த்தி விவேக்கை பக்கத்தில் வரும்படி சைகை செய்தாள். ஏதோ பேச முயற்சித்து வேகமாய் மூச்சு வாங்கினாள்.

விவேக் அவள் அருகே குனிந்தான்.

"பயப்படாதே ஜெபமாலை... உனக்கு ஒண்ணும் ஆகாது இப்ப ஹாஸ்பிடலுக்குப் போயிடலாம். இது மாதிரியான ஒரு 'பிளட் வாமிட்டிங்' எப்பவாவது உனக்கு வந்திருக்கா....?"

'இல்லை' என்பது போல் மெல்ல தலையை அசைத்தாள் ஜெபமாலை.

"நீ என்கிட்டே ஏதோ சொல்ல விரும்புற மாதிரி தெரியுது. உன்னால பேச முடியுமா?"
ஜெபமாலையின் உதடுகள் வேகமாய் அசைந்தன. ஆனால் ஒரு துளி சத்தம் கூட வெளியே வராமல் அவளுடைய தொண்டைக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. மறுபடியும் பேச முயற்சித்தவள் முடியாமல் சோர்ந்து போனாள். கடைவாயில் ரத்தம் மெலிதாய் ஒரு கோடு போட்டுக் கொண்டு வழிந்து பாதியிலேயே உறைந்து போயிருந்தது.

விஷ்ணு விவேக்கிற்குப் பக்கத்தில் வந்தான். குனிந்து குரலைத் தாழ்த்தினான்.

"பாஸ்...!"

"என்ன?"

"ஒரு நிமிஷம் இந்த டம்ளரைப் பாருங்க...!"

கர்சீப் ஒன்றால் கண்ணாடி டம்ளரைப் போர்த்திப் பிடித்திருந்த விஷ்ணு சொல்ல, விவேக் எழுந்து பார்த்தான்.

கண்ணாடி டம்ளருக்குள் நான்கைந்து ஈக்களும் எறும்புகளும் உயிரை விட்ட நிலையில் டம்ளரில் பக்கவாட்டில் ஒட்டியிருந்தது.

விவேக்கின் விழிகள் விஷ்ணுவை கலக்கமாய்ப் பார்க்க விஷ்ணு சொன்னான்.

"பாய்சன் பாஸ்... ஃப்ரூட் ஜூஸ்ல கலந்து கொடுத்து இருக்காங்க...."

மணிமொழியன் வியர்வை நிற்காத முகத்தோடு அருகில் வந்தார். "ஸார்... போன் பண்ணிட்டேன்... ஆம்புலன்ஸ் இப்ப வந்திடும்... நாம ஜெபமாலையை கீழே கொண்டு போயிடலாம்!"

விஷ்ணுவும், மணிமொழியனும் ஜெபமாலைத் தூக்கிக்கொண்டு படிகள் இறங்க விவேக் மணிமொழியனிடம் கேட்டான்.

"ஜெபமாலைக்கு ஜூஸ் கொடுத்த அந்த பேரர் பேர் என்னான்னு சொன்னிங்க....?"

"கிருஷ்ணன்"

"ஆள் எப்படி...?"

"ரொம்பவும் நல்ல டைப் ஸார்"

"நான் பார்க்கணும்"

"ரெஸ்ட்டாரெண்டில்தான் இருப்பான்"

"நான் பேசணும்... அந்த கிருஷ்ணன் கிட்டதான் ஏதோ தப்பிருக்கு"

மூன்று பேரும் மாடியினின்றும் கீழே வந்தார்கள்.

ஜெபமாலையை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தார்கள். அதே வினாடி சைரன் சத்தத்தோடு ஹோட்டலின் வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

"விஷ்ணு... நீ அம்புலன்ஸ்ல கிளம்பு. டாக்டர்கிட்டே விபரத்தைச் சொல்லி ஜெபமாலையை எப்படியாவது காப்பாத்தச் சொல்லு... அவ ஏதோ சொல்ல வந்தா. ஆனா அவளாலே பேச முடியலை.... பேசினால்தான் உண்மைகள் வெளியே வரும்....! ஜெபமாலை நமக்கு உயிரோட வேணும்"

ஆம்புலன்ஸிலிருந்து இறங்கி வந்த ஹாஸ்பிடலின் ஆர்டர்லிகள் ஒரு ஸ்ட்ரெச்சரோடு உள்ளே வந்து சோபாவில் சலனமில்லாமல் கிடந்த ஜெபமாலையை அரை நிமிட நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் வேனுக்குள் கொண்டு போனார்கள். விஷ்ணு ஓடி போய் வேனின் முன் சீட்டில் ஏறிக்கொண்டான்.

வேன் கிளம்பிப்போனதும் விவேக் மணிமொழியனிடம் திரும்பினான்.

"அந்த பேரர் கிருஷ்ணனை கூப்பிடுங்க ....!"

"நான் இங்கேதான் ஸார் இருக்கேன்..." கிரே நிற யூனிஃபார்மில் அந்த இளைஞன் பக்கவாட்டு அறையிலிருந்து வெளிப்பட்டான். நெற்றியில் விபூதி கீற்றும் அதன் மையத்தில் குங்குமத் தீற்றும் தெரிந்தது.

விவேக் கேட்டான்.

"அந்த பெண் ஜெபமாலைக்கு நீ தான் ஜூஸ் கொண்டுபோய் கொடுத்தியா...?"

"ஆமா ஸார் ...

"ஜூஸ் போட்டது யாரு?"

"நான் தான் ஸார்"

"ஜூஸ்ல சக்கரைப் போட்டியா?"

"இல்ல சார் ... ஐஸும், சுகரும் போடா வேண்டாம்ன்னு சொல்லியிருந்தாங்க "

"அப்படீன்னா ... வெறும் ஜூஸ் மட்டும் கொண்டு போய் கொடுத்தியா?"

"இல்ல ஸார் 'டார்டர் எமிடிக்' கை ரெண்டு மில்லி கிராம் போட்டு கொடுத்தேன்."

"என்ன சொன்னே ... டார்டர் எமிடிக் கா... !"

"அது என்ன...?"

"அது ஒருவகையான விஷம் ஸார்" சொல்லிவிட்டு ஒரு குரூரப் புன்னகையை தன் உதட்டில் உதிக்க வைத்தான் கிருஷ்ணன்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

 
 
 
English summary
The 14th episode of Rajeshkumar's One + One = Zero crime series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X