• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 20

By Shankar
|

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது அங்குதான் கொலையாளி இருப்பதாக விவேக் சொல்கிறான்.

இனி...

விஷ்ணுவின் விழிகளில் அலை அலையாய் வியப்பு அலைகள் பரவின.

"என்ன பாஸ் சொல்றீங்க ? கொலையாளியோட நடமாட்டம் இந்த கமிஷனர் ஆபீஸ் வளாகத்துக்குள்ளே இருக்கா?"

"ஆமா...!"

"எப்படி பாஸ் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியர் மாதிரி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க...?"

Rajeshkumars crime thriller One + One = Zero - 20

"நம்ம காரோட ஸ்டிரியங்கைப் பாரு"

விஷ்ணு பார்த்தான்

ஸ்டிரியங்கின் மேல் கருஞ்சிவப்பு நிறத்தில் துளித் துளியாய் ஏதோ ஒட்டியிருந்தது.

"என்ன பாஸ் இது....?"

"தொட்டுப்பாரு"

விஷ்ணு தன் இடது கையின் ஆட்காட்டி விரலால் தொட்டான். தொட்ட விரல் பிசுபிசுத்தது. உயர்த்திப் பார்த்தான்.

"ரத்தம் மாதிரி தெரியுது பாஸ்?"

"ரத்தம்தான்... உலராத ரத்தம். ரெண்டு மூணு நிமிஷத்துக்கு முன்னாடிதான் காருக்குள்ளே நுழைஞ்சு இந்த ரத்தத் துளிகளை ஸ்டியரிங் மேல் தெளிச்சுட்டுப் போயிருக்காங்க!"

"நம்ம கார் பூட்டியிருக்கும் போது இது எப்படி பாஸ் சாத்தியம்...?"

"ஒரு புத்திசாலி கிரிமினலுக்கு கார் டோரை ஓபன் பண்றது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லையே"

"என்ன பாஸ்! எதோ ஆயுத பூஜைக்கு காரைக் கழுவி பொட்டு வெச்சுட்டுப் போன மாதிரி வந்து வேலையை முடிச்சுட்டுப் போயிருக்கான்."

"எல்லாம் நம்மை பயமுறுத்தத்தான்.... நீ ஒரு காரியம் பண்ணு..."

"சொல்லுங்க பாஸ்..."

"நீ காரைவிட்டு இறங்கி டென்ஷன் காட்டாமே கமிஷனர் ஆபீசுக்கு உள்ளே போய் நாலாவது மாடியில் இருக்கற டாய்லட்டுக்குக்குள் நுழை. அந்த டாய்லட்டோட வெண்டிலேட்டரிலிருந்து பார்த்தா கமிஷனர் ஆபீஸோட முன்பக்க வளாகமும், ரோட்டுப் பகுதியும், கடைகளும் மக்களோட நடமாட்டமும் தெரியும். அங்கிருந்து எல்லாத்தையும் அப்ஸர்வ் பண்ணு. உன்னோட மனசுக்கு நெருடலாய் இருக்கற மாதிரி எந்த நபராவது பார்வைக்குக் கிடைச்சா உடனே எனக்கு போன் பண்ணு ...."

"ஓ.கே பாஸ்.....!" விஷ்ணு தலையசைத்துவிட்டு காரினின்றும் கீழே இறங்கினான். பதட்டம் காட்டாமல் நிதான நடை போட்டு நடந்து கமிஷனரின் ஆபீசுக்குள் நுழைய விவேக் காரில் காத்திருந்தான்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு விவேக் செல்போன் சிணுங்க மறுமுனையில் விஷ்ணு அழைப்பு தெரிந்தது. எடுத்து காதுக்கு ஒற்றினான். விஷ்ணு கிசுகிசுப்பாய் பேசினான்.

"பாஸ்..."

"சொல்லு"

"டாய்லெட் அவ்வளவு சுத்தமாய் இல்லை பாஸ்..."

"அதைப் பார்க்கவா உன்னை அனுப்பி வெச்சேன். சரி குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?"

"அ.... அது வந்து பாஸ் இந்த டாய்லட்டுக்குள்ளே மீறிப்போனா ஒரு பத்து நிமிஷம் உயிரோட இருக்கலாம். 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை செயல்படுத்தி மீத்தேன் வாயு எடுக்கற அளவுக்கு டாய்லெட்டோட நிலைமை இருக்கு. மூக்குக்கும் வாய்க்கும் சேர்ந்து கர்ச்சீப்பை கட்டியிருக்கேன் பாஸ். அதான் குரல் ரகசியம் பேசற மாதிரி இருக்கு!"

"சரி... வெண்டிலேட்டர் வழியாய் கமிஷனர் அலுவலகத்தையும் வெளியே ரோட்டோர கடைகளையும் கவனி. யாராவது சந்தேக வட்டத்துக்குள்ளே வர்றாங்களான்னு பாரு."

"பார்த்துட்டுதான் இருக்கேன் பாஸ். ரோட்ல நடமாட்டமே இல்லை... கமிஷனர் ஆபீஸுக்கு எதிரில் இருக்கற டீக்கடையில் பஜ்ஜியும் போண்டாவும் போட ஆரம்பிச்சுட்டாங்க... பக்கத்துக்கு பேக்கரியில் ஒரு கிழவி ரொட்டி வாங்கிட்டு இப்பத்தான் ரோட்டை க்ராஸ் பண்றா. பஸ் ஸ்டாப்ல ஒரு முப்பது வயசு பொண்ணு செல்போனை நோண்டிகிட்டு பஸ் வருதான்னு பத்து செக்கண்டுக்கு ஒரு தடவை பார்த்திட்டிருக்கா...."

"அப்படீன்னா.... நாம சந்தேகப்படற மாதிரி யாரும் இல்லை....?"

"இல்ல பாஸ்...!"

"பேக்கரிக்குப் பக்கத்துல ஒரு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் சென்டர் இருக்கும். அங்கே பணம் எடுக்க யாராவது வெயிட் பண்றங்களா?"

"இல்ல பாஸ்....

"ஏ.டி.எம். சென்டருக்குள்ளே யாராவது இருக்கலாம். உன்னோட பார்வை அங்கேயே இருக்கட்டும்... வெளியே வரும்போது அவங்களோட பார்வையும் எப்படி இருக்குன்னு கவனி!"

"நீங்க.... நீங்கதான் பாஸ்.... எனக்கு தோணாதது எல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படி தோணுதுன்னு தெரியலை.... ஒரு நல்ல நியூரோ ஸ்பெஷலிஸ்ட்டை போய் பார்க்கணும்...!"

"வேலையைக் கவனி . ஏ.டி.எம். சென்டர் மேலேயே பார்வை இருக்கட்டும்... உள்ளேயிருந்து வெளியே வர்றது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவங்களோட முதல் பார்வையைக் கவனி."

"சொல்லிடீங்கள்ல பாஸ்... இனி நான் பாத்துக்கிறேன்"

"சரி... போனைக் கட் பண்றேன்.... எனக்கு வெளியே இருந்து எதோ போன் வருதுன்னு நினைக்கிறேன்...!"

விவேக் செல்போனை அணைத்துவிட்டு தன்னை அழைத்தது யார் என்று தெரிந்து கொள்வதற்காக 'லாக்ஸ்' ஆப்ஷனுக்குப் போய்ப் பார்த்தான். அது பெயரையும் எண்ணையும் காட்டியது.

டி.ஜி.பி.யின் பர்சனல் செக்ரட்டரி தியோடர். விவேக் செல்போனை காதுக்கு ஒற்றி "குட்மார்னிக் ஸார்" என்றான்.

"வெரி குட்மார்னிங் மிஸ்டர் விவேக். இப்போ எங்கே இருக்கீங்க....?"

"கமிஷனரோட ஆபீஸில்"

"என்ன சுடர்கொடியோட கொலையைப் பத்தி அகழ்வாராய்ச்சி பண்றீங்களா...?"

"இன்வெஸ்டிகேஷன் எப்படி போயிட்டிருக்குன்னு கேட்டார் எல்லாவற்றையும் சொன்னேன்."

"வாட் வாஸ் ஹிஸ் ரியாக்ஷன்?"

"கமிஷனர் அப்செட்டான மூடில் இருந்தார். கொலையாளியை இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே கண்டு பிடிச்சாகணும்ன்னு சொல்றார்"

"அது சாத்தியமா மிஸ்டர் விவேக்?"

"சாத்தியம்தான் சார்... இப்போ கொலையாளியைப் பத்தின மூணு சங்கேத வார்த்தைகள் கிடைச்சிருக்கு ...!"

மறுமுனையில் தியோடர் சிரித்தார். விவேக் குறுக்கிட்டு கேட்டான்.

"ஸார்! எதுக்காக இந்த சிரிப்புன்னு எனக்குத் தெரியலை"

"விவேக்! இந்த சுடர்கொடியோட கொலைக்குப் பின்னாடி ஒரு பவர்ஃபுல் பர்சன் இருக்கறதாய் உங்ககிட்டே நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்..... இல்லையா...?"

"ஆமா.....!"

"அந்த பவர்ஃபுல் பர்சனின் கட்டளைப்படி நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்கற சில அரசு ஆதரவு போலீஸ் அதிகாரிகள் இந்த சுடர்கொடியோட கேஸுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சு ஃபைலை க்ளோஸ் பண்ற முடிவுக்கு வந்துட்டாங்க"

"ஸார்... நீங்க என்ன சொல்றீங்க?"

"ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்களுக்கு நான் போன் பண்ணி என்ன சொன்னேனோ அதைத்தான் இப்பவும் சொல்லப்போறேன்," என்று ஆரம்பித்தவர் மெல்ல குரலைத் தாழ்த்தினார். "வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் சுடர்க்கொடி வெட்டி கொலை செய்யப்பட்ட போது ஸ்டேஷனில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.காமிராக்கள் பழுதடைந்து போயிருந்ததால அந்த காமிராக்களில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பதிவாகலை. ஆனா ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த ஹோட்டலின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் ஒரு காட்சி பதிவாகியிருக்கு. அந்தப் பதிவில் இளைஞன் ஒருத்தன் சிவப்பு நிற சூட்கேசுடன் ஸ்டேஷனை விட்டு வெளியே வர்றான். அந்த நபர்தான் சுடர்கொடியை வெட்டிய கொலையாளியாய் இருக்க முடியும் என்கிற கோணத்தில் அந்த இளைஞனைத் தேடித் கண்டுபிடிக்கற முயற்சியில் நம்ம போலீஸ் படை ஒண்ணு ஈடுபட்டு இருந்தது. இப்ப அந்த இளைஞன் யார்ங்கறதை கண்டு பிடிச்சுட்டாங்க. அந்த இளைஞன் பேரு ஜெயவேல் ."

விவேக் குறுக்கிட்டு கேட்டான்.

"என்ன ஸார் இது.. ஒரு இளைஞன் ஸ்டேஷனைவிட்டு அவசர அவசரமாய் வெளியே வந்தான் என்கிற காரணத்துக்காக அவன்தான் கொலையாளியாய் இருப்பான் என்கிற முடிவுக்கு வரமுடியாதுன்னு நீங்கதான் ஸார் அன்னிக்கு சொன்னீங்க?"

"ஆமா அன்னிக்கும் சொன்னேன். இன்னிக்கும் சொல்றேன். அந்த இளைஞன் கொலையாளியாய் இருக்க வாய்ப்பேயில்லை. ஏன்னா அந்த இளைஞன் கையில் இருந்த சிவப்பு நிற சூட்கேஸ் ஒரு கனமான சூட்கேஸ். அதை அவன் தூக்கிட்டு வரும்போதே தெரியுது. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது இருபதடி நடக்கறதுக்குள்ளே அந்த சூட்கேஸை கீழே வெச்சிட்டு பத்து வினாடி ஆசுவாசப்படுத்திக்கிட்டு அதுக்கப்புறம் அதைத் தூக்கிட்டு வர்றான். ஒரு பெண்ணை கொலை செய்யப் போறவன் அப்படியொரு கனமான சூட்கேஸைத் தூக்கிட்டு வருவானா என்ன? இந்த கேஸை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து ஃபைலை க்ளோஸ் பண்ணணும்கறதுதான் அந்த பவர்ஃபுல் பர்சனோட திட்டம்"

"ஸார்.... அந்த இளைஞன் ஜெயவேலை அரஸ்ட் பண்ணலாம். ஆனா கோர்ட்ன்னு ஒண்ணு இருக்கே.... வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது ஜெயவேல்தான் கொலையாளின்னு நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டுமே ஸார்"

தியோடர் மறுமுனையில் விரக்தியாய் சிரித்தார்.

"கேஸ் கோர்ட்டுக்குப் போனால்தானே அந்தப் பிரச்னை?"

"ஸார்.... யூ...மீன்.... ?"

"அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே எல்லா டி.வி. சானல்களிலும் ஒரு பிரேக்கிங் நியூஸ் இப்படி வரும். 'ஜெயவேலுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரை போலீசார் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஜெயவேலு போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். போலீசார் அவரைப் பிடிக்க முயன்ற போது இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்க முற்படவே வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஜெயவேல் உயிரிழந்தார்."

"ஸார்... இது சரியில்லை....!"

"சரியில்லைதான்.... ஆனா அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே இதுதான் நடக்கப் போகுது மிஸ்டர் விவேக். அதைச் சொல்லத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்.....!"

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 20th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X