• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 13

By Shankar
|

- ராஜேஷ்குமார்

முன்கதைச் சுருக்கம்:

பத்திரிகை நிருபர் சுடர்கொடி கொலையில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். சுடர்கொடி கொலைக்கான காரணம் குறித்துப் பேசும் முன், அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள்...

அடுத்து...

ஜெபமாலையின் செல்போனில் அந்த வீடியோ காட்சி ஒரு குறும்படம் போல் ஓடிக்கொண்டிருக்க, விவேக்கும் விஷ்ணுவும் லேசர் பார்வைகளோடு அதை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீடியோ காட்சியில் அந்த பணக்கார இளைஞன் தன் கையில் வைத்து இருந்த நூறு ரூபாய் கட்டிலிருந்து ஒவ்வொரு தாளாய் உருவி கோயிலின் வாசலில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்குப் போட்டுக் கொண்டே வந்தான்.

Rajeshkumars One + One = Zero -13

விஷ்ணு ஆர்வம் தாங்க முடியாமல் ஜெபமாலையிடம் திரும்பினான். "சிஸ்டர்! யார் இந்த இளைஞன் ?"

"சொல்றேன்.... அதுக்கு முந்தி பிச்சைக்காரர்கள் வரிசையில் நான்காவது நபராய் உட்கார்ந்து ஒருத்தன் வாழைப்பழம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கானே அவனை கவனிங்க"

இருவரும் அவனை பார்த்தார்கள்.

"பதினஞ்சு வயசு பையன் மாதிரி தெரியறான்"

"அவன் பையன்தான்.... ஆனா அவன் பிச்சைக்காரன் கிடையாது. அதாவது அவன் பிச்சை எடுக்கிறதுக்காக அந்தக் கோயில் வாசலுக்கு முன்னாடி போய் உட்காரலை.!"

"அப்புறம் ...?"

"இப்ப அவன் என்ன பண்றான்னு கவனிங்க"

"வாழைப்பழத்தை சாப்பிட்டு முடிச்சிட்டு இப்போ அவன் ஒரு ஆப்பிள் பழம் எடுக்கிறான். அடேங்கப்பா..... எவ்வளவு பெரிய பழம். இப்படி ஒரு பணக்கார பிச்சைக்காரனை நான் பார்த்ததே இல்லை சிஸ்டர்"

ஜெபமாலை சின்னதாய் புன்னகை பூத்தாள். "ஆனா அந்தப் பழத்தை அவன் சாப்பிட மாட்டான்"

"பின்னே?"

"வீடியோவை உன்னிப்பாய் பாருங்க!"

குழப்பமான முகங்களோடு விவேக்கும் விஷ்ணுவும் தங்களுடைய பார்வைகளை லேசர் கதிர்களாய் மாற்றி செல்போனின் வீடியோ திரையின் மேல் போட்டார்கள்.

காட்சி இப்போது மாறியிருந்தது. சிறுவனின் வலதுகையில் அந்த பெரிய ஆப்பிள் இடம் பிடித்திருக்க, வலதுகையில் கூர்மையான கத்தி ஒன்று முளைத்திருந்தது. பழத்தை அறுப்பதைப் போல் பாவனை செய்து கொண்டே சரேலென்று எழுந்தவன் போர்த்தியிருந்த அழுக்குப் போர்வையை உதறிவிட்டு ரூபாய் நோட்டுக்களை தட்டில் போட்டுக் கொண்டு இருந்த இளைஞன் மேல் பாய்ந்தான்.

தன் கையில் வைத்து இருந்த கத்தியால் இளைஞனின் அடிவயிற்றில் ஆழமாய் சொருகிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மின்னலாய் ஓடி மறைந்தான். ரத்தம் பீறிட்டு தாறுமாறாய் சிதற இளைஞன் கீழே விழுந்து சில வினாடிகள் வேகமாய் துடித்து பிறகு மெல்ல மெல்ல அடங்கி சலனமற்ற உடலாய் மாறினான். வீடியோ திரை இருட்டுக்குப் போயிற்று.

விவேக் உறைந்து போன விழிகளோடு ஜெபமாலையைப் பார்த்தான்.

"யார் அந்த இளைஞன்?"

"பேர் அனிஷ் மெஹ்ரா. சொந்த ஊர் மும்பைக்குப் பக்கத்தில் இருக்கற கல்யாண். வயசு இருபத்தெட்டு."

"இந்த சம்பவம் எப்ப நடந்தது.....?"விவேக் கேட்க ஜெபமாலை தன்னிடம் இருந்த கைப்பையைப் பிரித்து நான்காய் மடித்து வைத்து இருந்த அந்த பழைய தமிழ் நாளிதழை எடுத்து எட்டாவது பத்தியில் சிறிய எழுத்துக்களில் பிரசுரமாகியிருந்த அந்த செய்தியைக் காட்டியபடி சொன்னாள்.

"ரெண்டு மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இது. செய்தியைப் படிச்சிப் பாருங்க ஸார்!"

விவேக் அந்த நாளிதழை வாங்கி செய்தியை வாய்விட்டுப் படித்தான்.

மும்பையில் கோயில் வாசலில் நடந்த கோரக் கொலை. சிறுவனின் வெறிச்செயல்.

இதுப்பற்றி கூறப்படுவதாவது: மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் மெஹ்ரா. வயது 28. மும்பையில் உள்ள பெரிய கோடீஸ்வர்களில் ஒருவரான ராதேஷ்யாம் மெஹ்ராவின் ஒரே மகன். கல்யாண் பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற சித்தி புத்தி விநாயகர் கோவிலுக்கு அனிஷ் மெஹ்ரா ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் செல்வது வழக்கம். நேற்று செவ்வாய்கிழமையானதால் அனிஷ் மெஹ்ரா கோயிலுக்குப் போயிருக்கிறார். கோவிலுக்கு மும்பாய் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ரூபாய் நோட்டுக்களைப் போட்டுக்கொண்டிருக்கும் போது 15 வயது சிறுவன் ஒருவன் திடீரென்று அனிஷ் மெஹ்ராவின் மேல் பாய்ந்து அவருடைய அடிவயிற்றில் ஆழமாய் கத்தியைச் சொருகிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் நாளிதழில் இருந்த அந்த செய்தியைப் படித்துவிட்டு ஜெபமாலையிடம் திரும்பினான்.

"ரெண்டு வருஷங்களுக்கு முன்னால் மும்பை கல்யாண் பகுதியில் நடந்த அந்த சம்பவத்துக்கும், சுடர்க்கொடி, திலீபன் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்?"

"அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும் ஸார்"

"எப்படி கண்டுபிடிக்க முடியும்.... மும்பையில் நடந்த அனிஷ் மெஹ்ராவின் கொலைக்கும், சுடர்கொடி திலீபன் கொலைகளுக்கும் நடுவே ஒரு நூலிழை சம்பந்தமாவது இருந்தால்தானே அதை வச்சிக்கிட்டு ஃபர்தராய் இன்வெஸ்டிகேட் பண்ணமுடியும் ?"

"ரெண்டு சம்பவங்களுக்கும் இடையில் சின்னதாய் ஒரு லிங்க் இருக்கு ஸார்"

"அது என்ன லிங்க் ?"

"அனிஷ் மெஹ்ராவை கொலை பண்ணின அந்தச் சிறுவனை வீடியோ பதிவில் பார்த்தீங்களா ஸார்?"

"ஆமா....."

"அந்த பையன் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?"

"அது எப்படி தெரியும்?"

"உங்களுக்கும் எனக்கும் தெரியாது. ஆனா சுடர்கொடிக்கு அந்த பையன் யார் என்கிற உண்மை தெரிஞ்சிருக்கு ஸார்......"

விவேக்கின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

"யார் அந்த பையன்?"

"ஸார்.... போன வாரம் ஒரு மத்தியான நேரம் இந்த வீடியோ பதிவை என்னோட வாட்ஸ் அப்புக்கு சுடர்க்கொடி அனுப்பி வெச்சா. நான் அதைப் பார்த்து அதிர்ந்து போய் அவளை போன்ல காண்டாக்ட் பண்ணி இந்த வீடியோ பதிவை உனக்கு அனுப்பி வெச்சது யாருன்னு கேட்டேன். அதுக்கு அவ மும்பையில் இருக்கற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் ஒருவர் தன்னோட 'வாட்ஸ் அப் ' குரூப்பில் இருப்பதாகவும், அவர் வடநாட்டில் நடக்கற சில சம்பவங்களின் தொகுப்பை அவ்வப்போது அனுப்பி வைத்ததில் ஒரு சம்பவம்தான் அந்தப் பதிவுன்னு சொன்னா. மேற்கொண்டு அதைப் பத்திப் பேசிட்டு இருக்கும்போதுதான் அனிஷ் மெஹ்ராவை கொலை செய்த சிறுவன் தமிழ்நாட்டை சேர்ந்தவன்னும் அவனை எங்கேயோ பார்த்ததாகவும் சொன்னா."

"ஈஸிட்"

"ஆமா ஸார்... அவ அப்படி சொன்னதும் அதுக்கு நான் 'அந்த பையன் யாருன்னு கேட்டேன்"

"சுடர்க்கொடி என்ன சொன்னா?"

"அதுதான் யோசனை பண்ணிட்டிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அந்தப் பையன் யார்ங்கறதை எப்படியும் ஸ்மெல் பண்ணிடுவேன்னு சொன்னா.... அதுக்குள்ள இப்படியொரு சம்பவம்"

"அப்படீன்னா .... மும்பையில் நடந்த கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பையன் யாருன்னு சுடர்ககொடி கண்டுபிடிக்க முயற்சி எடுத்ததுதான் அவள் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி கொலை செய்யப்பட்டதுக்கான காரணமா....?"

"ஆமா.... ஸார்...!"

"சுடர்கொடியோட அண்ணன் திலீபன் கொலை செய்யப்படவும் இதுதான் காரணமாய் இருக்கும்ன்னு நினைக்கறியா ?"

"ஆமா... ஸார்... " என்று சொல்லி ஜெபமாலை தலையசைத்துக் கொண்டிருக்கும்போதே தன் வாய்க்குள் அதிகமாய் உமிழ்நீர் சுரப்பதையும், அது புளிப்புச் சுவையோடு இருப்பதையும் உணர்ந்தாள்.

'எதனால் இப்படி....?'

அவளுடைய முகமாற்றத்தை கவனித்து விட்டு விவேக் கேட்டான்.

"என்னாச்சு ஜெபமாலை?"

"ஒரு நிமிஷம் ஸார்," சொன்னவள் அறையின் மூலையில் இருந்த வாஷ் பேசினை நோக்கி வேக வேகமாய் போய் குனிந்தாள். வாய் முழுவதும் நிரம்பிவிட்ட எச்சிலைத் துப்பினாள்.

அடுத்த வினாடி அந்த வெண்ணிற வாஷ்பேசின் முழுவதும் ரத்தமாய் மாறியது.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 13th Chapter of Rajeshkumar's One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X