• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 28

By Shankar
|

-ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது.

இனி...

விஷ்ணு இன்னமும் வியப்பில் இருந்தான்.

"பாஸ்! எல்லாருக்கும் ரெண்டு கண்ணு, ரெண்டு காது, ரெண்டு கை, ரெண்டு கால், ஒரு மூளைன்னு இருக்கும். உங்களுக்கு மட்டும் ரெண்டு மூளை, பதினாறு கண்ணு... அது எப்படி பாஸ், என்னோட பார்வைக்குப் படாதது எல்லாமே உங்க பார்வைக்கு ஸ்பஷ்டமாய் கிடைக்குது..? அந்த WAY TO ABSERVATION HOME போர்டு ரோடு ஓரத்துல புழுதி அப்பிக் கிடக்குது. அதைப் போய் அல்ட்ராசோனிக் ஸ்கேன் பண்ணி, அதுக்குக் கீழே பொடி எழுத்தில் இருக்கிற கூர்நோக்கு இல்லம் என்கிற தமிழ் மொழிப் பெயர்ப்பையும் படிச்சிட்டீங்க.. கிரேட். நீங்க வாழற காலத்துலதான் நானும் வாழறேன்னு நினைக்கும்போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பாஸ். யார் யாரையோ 'பிக் பாஸ்'னு சொல்றாங்க. உண்மையிலேயே நீங்கதான் 'பிக் பாஸ்'.

"டேய் போதுண்டா... இப்பதான் சுடர்கொடி கொலை கேசுல ஒரு ஹோல்டிங் கிடைச்சிருக்கு. இதைக் கெட்டியாய் பிடிச்சுக்கிட்டுதான் கொலையாளியை நோக்கி அங்குலம் அங்குலமா நகரணும்."

 Rajeshkumars crime thriller One + One = Zero - 28

"அப்படி நகர்ந்தா ரொம்ப லேட்டாகும் பாஸ். ஒவ்வொரு அங்குலத்துக்கும் பதிலாய் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கணும்".

"விஷ்ணு... கூர்நோக்கு இல்லம் எது மாதிரியான இல்லம்ன்னு தெரியுமா...?"

"என்ன பாஸ்...! க்ரைம் ப்ராஞ்சில் அதுவும் உங்க கூட சேர்ந்து அல்லும் பகலும் உழைச்சுட்டிருக்கிற என்கிட்ட இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா...?"

"எனக்கும் வேண்டியது பதில்"

"நோட் பண்ணிக்குங்க பாஸ். கூர்நோக்கு இல்லத்துக்கு இன்னொரு பேரு கண்காணிப்பு இல்லம். பதினெட்டு வயசுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்பாம ஒரு விடுதியில் தங்க வெச்சு அவங்களோட நடவடிக்கைகளைக் கண்காணித்து நல்வழிப்படுத்துகிற ஓர் இல்லம். நான் சொன்னது சரியா பாஸ் ?'

"ரொம்பச் சரி...."

"ஆனா பாஸ்.... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒரு நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சுடர்கொடிக்கும் இந்த கூர்நோக்கு இல்லத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"

"சுடர் கொடிக்கும் கூர் நோக்கு இல்லத்துக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை."

"அப்புறம் ?"

'ஹாஸ்பிடலில் இப்போ சுய உணர்வு இல்லாமல் படுத்துட்டிருக்கிற ஜெபமாலைக்கும் கூர்நோக்கு இல்லத்துக்கும்தான் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கு.... அதனால்தான் ஜெபமாலை சுய உணர்வை இழக்கும் தன்னோட கடைசி விநாடிகளில் தான் சொல்ல விரும்பியதை அவசர அவசரமாய் சொல்ல முயற்சி பண்ணி கூர்நோக்கு இல்லத்தை குர்நோக்கும்ன்னு சொல்லியிருக்கணும்....!"

"பாஸ்....! உங்க 'கெஸ் ஒர்க்' படி பார்த்தா சுடர்கொடி கொலை செய்யப்படுவதற்கான முழு காரணமும் ஜெபமாலைக்குத் தெரியும் போலிருக்கே ?'

'"கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்"

"அப்படி தெரிஞ்சிருந்தா ஜெபமாலை நேரிடையாவே உங்களை சந்திச்சி எல்லா உண்மைகளையும் சொல்லிருக்கலாமே... பாஸ்..."

"சொல்லிருக்கலாம்தான்.... ஆனா ஜெபமாலை சில விஷயங்களை மட்டும் நம்ம கிட்டே சொல்லி வேற யாரோ ஒரு நபரை இந்த சுடர்கொடி மர்டர் கேஸிலிருந்து காப்பாற்ற நினைச்சிருக்கலாம். இதெல்லாம் இப்போதைக்கு வெறும் கெஸ் வொர்க்தான். இது பொய்யாகவோ உண்மையாகவோ மாற வாய்ப்பு இருக்கு.... அதோ அந்தக் கட்டிடம்தான் கூர்நோக்கு இல்லமாய் இருக்கணும்னு நினைக்கிறேன்."

காரின் வேகத்தை ரோட்டின் குறுக்கே வந்த ஒரு ஸ்பீட் ப்ரேக்கருக்காகக் குறைத்துக் கொண்டே சொன்னான் விவேக். விஷ்ணு குனிந்து பார்த்துவிட்டு சிரித்தான்.

"நிச்சயமாய் அந்த கட்டிடமாய்தான் இருக்கணும் பாஸ் ஏன்னா 1950 களில் அடிச்ச காவி நிற சுண்ணாம்பு பூச்சு இப்படித்தான் இருக்கும்..."

அடுத்த ஒரு நிமிட பயணத்தில் ஓடுகளால் வேயப்பட்ட அந்தச் சிறிய காவி நிற கட்டிடத்தை கார் நெருங்கி ஒரு மரத்தின் கீழ் தன் இயக்கங்களை நிறுத்திக் கொண்டது.

விவேக்கும் விஷ்ணுவும் இறங்கினார்கள்.

கட்டிடத்தின் முகப்பில் காம்பெளண்ட் கேட் என்றம்பெயரில் பெயிண்ட் உதிர்ந்து துருவேறிய தகரத்தாலான கதவு ஒன்று தெரிய அதற்கு பக்கத்திலேயே 45 டிகிரி சாய்ப்பான கோணத்தில் அறிவிப்பு போர்டு ஒன்று பார்வைக்குத் தட்டுப்பட்டது.

தமிழில் வரிவரியாய் எழுதப்பட்டிருந்த அந்த வாசகங்களை விவேக்கும் விஷ்ணுவும் பார்வைகளால் மேய்ந்தார்கள்.

குற்றச் சிறுவர் கூர்நோக்கு இல்லம்

(JUVENILE CARE HOME)

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செய்யும்

பல்வேறு வகையான குற்றச் செயல்களுக்காக

மாவட்ட சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தங்க

வைக்கப்பட்டு வரும் காலங்களில் தீயவழிகளில்

மனதைச் செலுத்தாமல் நல்வழியில் மனதைச் செலுத்த

பயிற்சி தரப்படுகிறது. அந்த வகையில் இந்த

கூர்நோக்கு இல்லத்தில் இங்கே

தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு உணவு

உடை, இருப்பிடம் தந்து கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

இந்த சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட சிறுவர்

கூர்நோக்கு இல்லங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின்

நிதிகள் மூலம் மாநில அரசுகளின் சமூகப் பாதுகாப்புத்

துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு

(DISTRICT CHILD PROTECTION UNIT) மற்றும் இளைஞர்

நீதிக் குழுமத்தின் (JUVENILE JUSTICE BOARD)

வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

விஷ்ணு படித்து விட்டு சின்னதாய் கொட்டாவி ஒன்றை வெளியேற்றியபடி விவேக்கிடம் திரும்பினான். "ஏதோ பரீட்சைக்குப் படிக்கிற பாடம் மாதிரி இருக்கு பாஸ்"

"விஷ்ணு....! இந்த அறிவிப்புப் பலகையில் நாம தேடிகிட்டு இருக்கிற இன்னொரு விஷயம் தெளிவாய் ஒளிஞ்சிட்டிருக்கு"

"என்ன பாஸ் சொல்றீங்க ?"

"ஜெபமாலை சொன்ன மூணு வாஅர்த்தைகளில் ரெண்டாவது வார்த்தை என்ன ?"

"ஜே சி எச்"

"அந்த ஜே சி எச் எழுத்துக்களோட விரிவாக்கம் இதே அறிவிப்புப் பலகையில் இருக்கு...."

"எங்கே பாஸ் ?"

"அறிவிப்புப் பலகையில் இருக்கிற ஆரம்ப வரியைப் படி....!"

விஷ்ணு படித்தான். "குற்றச் சிறுவர் கூர்நோக்கு இல்லம்"

"அதுக்குக் கீழே இங்கிலீஷ்ல என்ன போட்டிருக்கு ?"

"JUVENILE CARE HOME"

"ஜே சி எச்...."

"ஜெபமாலை சொன்ன ஜே சி எச் இதுதான்"

"பாஸ்.... கேஸ்ல வெளிச்சம் அடிக்குது... இந்த கூர்நோக்கு இல்லத்தில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பமாகியிருக்கணும். இனி நமக்கு தெரிய வேண்டியது மூணாவது வார்த்தைக்கான அர்த்தம்."

"அதாவது ஹாசீர்வதம்...?"

"ஆமா பாஸ்... இந்த கூர் நோக்கு இல்லத்துக்குள்ள போய் ஒரு சின்ன என்கொயரியை நடத்தினா அந்த மூணாவது வார்த்தைக்கான அர்த்தம் என்னான்னு தெரிஞ்சுடும்..!"

விவேக்கும் விஷ்ணுவும் அந்த அரதப் பழசான காவி பெயிண்ட் கேட்டை நோக்கிப் போனார்கள். அது உட்பக்கமாய் பூட்டப்பட்டு இருக்கவே விஷ்ணு கேட்டை ஆட்டினான்.

"யாரது ?" என்ற சத்தத்தோடு காம்பெளண்ட் கேட்டின் வலது பக்கமாய் இருந்து ஒரு சின்ன சதுரக் கதவு திறந்து ஒரு நரைத்த தலை எட்டி பார்த்தது.

விஷ்ணு, "போலீஸ் க்ரைம் ப்ராஞ்ச். ஒரு என்கொய்ரி விஷயமாய் வந்திருக்கோம்," என்றான்.

அடுத்த சில விநாடிகளில் அந்த தகரத்தாலான காம்பெளண்ட் கதவு ஒரு பேய் திரைப்படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக்கோடு திறந்தது.

தொள தொளப்பான காக்கி பேண்ட் காக்கி சட்டையில் அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வாட்ச்மேன் சற்றே பதட்டத்தோடு பார்வைக்குத் தட்டுப்பட்டார்.

விவேக் அவரை நெருங்கி கேட்டான்.

"அப்ஸர்வேட்டிவ் ஆபீஸர் உள்ளே இருக்காரா?"

"இ....இ... இருக்கார் ஸார்"

"அவர் பேர் என்ன ?"

"சச்சிதானந்தம் ஸார்"

"அவரோட ரூம் எது...?"

"அதோ... அந்த வேப்பமரத்தை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் கூரை தெரியுதே அதான் ஸார்"

"நீங்க இங்கே வாட்ச் மேனா...?"

"ஆமா ... ஸார்"

"பேரு..?"

"அய்யப்பன் ஸார்..."

"இந்த கூர்நோக்கு இல்லத்துல எத்தனை இளம் குற்றவாளிகள் இருக்காங்க?"

"ஸார்... அந்த விபரம் எல்லாம் எனக்கு தெரியாது. பசங்க வெளியே போகாதபடி பார்த்துக்க வேண்டியது மட்டுமே என்னோட வேலை. மத்த விபரம் ஆபீஸர்க்குத்தான் தெரியும்..."

"விவேக்கும் விஷ்ணுவும் சற்று தூரத்தில் தெரிந்த அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அறையை நோக்கிப் போனார்கள்."

"விஷ்ணு !"

"பாஸ்"

"அந்த வாட்ச்மேன் அய்யப்பனை நோட் பண்ணியா ?"

"பண்ணாமே இருப்பேனா பாஸ்... அவன்கிட்டே ஒரு பதட்டம் தெரியுது... இந்த கூர்நோக்கு இல்லத்தை பத்தி யாராவது ஏதாவது கேள்வி கேட்டா நேரிடையாய் பதில் சொல்லக்க்கூடாதுன்னு ஏற்கன்வே யாரோ உத்தரவு போட்டு இருக்கிற மாதிரி என்னோட மனசுக்குப் படுது"

"அந்த அப்சர்வேடிவ் ஆபீஸர் சச்சிதானதம் எப்படிப்பட்டவர்ன்னு இப்பப் பார்த்துடலாம்"

விவேக்கும் விஷ்ணுவும் அந்த ஆஸ்பெஸ்டாஸ் அறையை நெருங்கினார்கள்.

அதே விநாடி -

எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று விவேக் விஷ்ணுவுக்கு முன்பாய் வந்து விழுந்தது.

காகிதம் சுற்றப்பட்ட கல்.

"விஷ்ணு... அதை எடு...."

விஷ்ணு எடுத்து பிரித்துக் கொண்டிருக்க விவேக் சுற்றும் முற்றும் பார்த்தான்.

"கல் எறிந்தது யார் ?"

'எந்த திசையில் இருந்து வீசியிருப்பார்கள் ?'

விவேக் யோசிப்பில் இருக்க விஷ்ணு ரகசியம் பேசுகிற தினுசில் கூப்பிட்டான்.

"பாஸ் ! இதைக் கொஞ்சம் பாருங்க "

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
26th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more