• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 27

By Shankar
|

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள்... அதை நோக்கி விசாரணையைத் தொடர்கிறார்கள். கிட்டத்தட்ட கொலையாளியை நெருங்குகிறார்கள்...

Rajeshkumars crime thriller One + One = Zero - 27

இனி...

விவேக் அந்த மண் ரோட்டுக்குள் காரைச் செலுத்தினான்.

அது ஒரு புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் குடியிருப்பு என்பதால் சரியாய் முழுமையான அளவில் கட்டி முடிக்கப்படாத வீடுகள் எக்ஸ்ரே ஃபிலிமில் தெரியும் எலும்புகள் போல் காட்சியளித்தன.

விஷ்ணு கேட்டான்.

"இங்கே யாரைப் பார்க்கிறதுக்காக சுடர்கொடி வந்திருப்பான்னு நினைக்கறீங்க பாஸ்.....?"

"நீயே கெஸ் ஒர்க் பண்ணி சொல்லு பார்க்கலாம்"

"உங்க மாதிரி எனக்கு இன்னொரு மூளையெல்லாம் கிடையாது பாஸ்....."

"விஷ்ணு.... இந்த சுடர்கொடியோட கேசைப்பொருத்தவரைக்கும் என்னோட அனுமானங்களே தப்பான திசையில் பயணம் பண்ணியிருக்கு... இப்ப நாம வந்து இருக்கிற இடம்தான் நமக்கு கிடைத்து இருக்கிற கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம பயன்படுத்திக்கிட்டு ஒரு உருப்படியான உண்மையை இங்கிருந்து கொண்டு போகணும். அந்த உண்மையை வெச்சு கொலையாளியைக் கண்டுபிடிக்கணும். இல்லேன்னா இந்த கேஸ்ல நிரபராதியான ஜெயவேலை குற்றவாளின்னு தீர்மானம் பண்ணி 'என்கவுன்டர்' மூலமாய் அவனோட உயிரை எடுத்துட்டு கேஸோட ஃபைலை க்ளோஸ் பண்ணிருவாங்க நம்ப டிபார்ட்மெண்ட்ன்னு மனசுக்குள்ளே சின்னதாய் ஒரு பயம் விஷ்ணு"

"பாஸ்.... அந்த கங்கை நதியே கலங்கி நின்னா கர்நாடகத்துக்கிட்டே கையேந்திட்டு இருக்கிற இந்த காவேரி என்ன பண்ணும்?"

விவேக் விஷ்ணுவை லேசாய் முறைத்துக் கொண்டே அந்த மண் ரோட்டின் 'இரண்டாவது கட்'டில் காரைத் திருப்பினான்.

முழுமையாய் கட்டப்பட்ட சில வீடுகள் நிறம் நிறமாய் பெயிண்ட் பூச்சுக்களோடு பார்வைக்குக் கிடைத்தன. சாலையில் மக்கள் நடமாட்டம் வரவேயில்லை. குண்டும் குழிகளுமாய் இருந்த மண் ரோட்டில் கார் 'பல்லாங்குழி' விளையாட்டை விளையாடிக்கொண்டே முன்னேறியது.

"விஷ்ணு.... யாராவது கண்ணுக்குத் தட்டுப்படறாங்களான்னு பாரு..."

"நான் பார்த்துட்டுதான் வர்றேன் பாஸ். அந்த வேப்ப மரத்துல ரெண்டு காக்கா மட்டும் உட்கார்ந்துட்டு ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கு"

"உனக்கு இடதுகைப் பக்கமாய் ஒரு கடை தெரியுது. அது என்ன கடைன்னு பாரு!"

விஷ்ணு குனிந்து பார்த்தான்.

சிம்ரன் பேக்கரி அண்ட் டீ ஸ்டால் என்கிற பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.

"ஆஹா.... பேக்கரி பாஸ்..."

"உள்ளே ஆட்கள் இருக்காங்களான்னு பாரு?"

"கல்லாவில் ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு செல்போனை நோண்டிகிட்டு இருக்கான் பாஸ். அவன்தான் அந்த சிம்ரன் பேக்கரிக்கு எம்.டியாய் இருப்பான்னு நினைக்கிறேன்..."

கார் கடைக்கு முன்பாய் போய் நின்றது.

"என்ன பாஸ்?"

"டீ... சாப்பிடலாம்..."

காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.

அந்தச் சிறிய பேக்கரியின் கல்லாவில் உட்கார்ந்திருந்தவன் விவேக்கையும் விஷ்ணுவையும் பார்த்ததும் எழுந்தான். தூக்கிக் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து வீட்டுக் கொண்டவன் பவ்யமாய் வந்து நின்றான்.

"என்ன சார் வேணும்?"

"ரெண்டு டீ"

"உட்காருங்க சார்" நாற்காலிகளைக் காட்டிய அவன் பக்கத்தில் இருந்த தடுப்புக்குப் போய் அடுத்த சில நிமிடங்களில் நுரை தள்ளும் டீயை கண்ணாடி டம்ளர்களில் நிரப்பிக் கொண்டு வந்தான். அவற்றை மேசை மீது வைத்தவன், "சால்ட் பிஸ்கெட் இருக்கு... கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான்.

"வேண்டாம்... டீயே போதும்"

ஒரு டீ டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு விவேக் கேட்டான்.

"உம பேர் என்ன?"

"முரளி ஸார்"

விஷ்ணு குறுக்கிட்டான்.

"இங்கே தயாரிப்பு கதை, திரைக்கதை, வசனம், இசை, டைரக்ஷன் எல்லாமே நீதான் போலிருக்கு"

"புரியலை சார்"

"இந்தக் கடைக்கு ஓனர் நீதானே....?"

"ஆமா.... ஸார்..."

"கல்லாவில் உட்கார்ந்திருந்த நீ டீ மாஸ்டராகவும் மாறி டீ போட்டுக்கிட்டு வந்து கொடுத்ததால அப்படிக் கேட்டேன்"

"டீ மாஸ்டர் ஒருத்தர் இருந்தார் ஸார். போன வாரம்தான் வேலையைவிட்டு நின்னுட்டார். முன்ன மாதிரி கடையில் வியாபாரம் இல்லை ஸார். ஆறு மாசத்துக்கு முந்தி வரை இந்த ஏரியாவில் நிறைய கட்டிட வேலை நடந்துட்டு இருந்தது. லேபர்ஸ் நிறைய பேர் வந்து வேலைப் பார்த்ததால வியாபாரம் நல்லாயிருந்தது. இப்ப கட்டிட வேலையெல்லாம் முடிஞ்சுட்டதால கால்வாசி வியாபாரம் கூட இல்லை ஸார்."

"ரோட்ல ஆளுங்களை யாரையுமே பார்க்க முடியலையே....?"

"ஸார்.... இது ஒரு என்.ஜி.ஓ. ஆபீஸர்ஸ் காலனி. சுத்தியும் நூத்தம்பது வீடு இருக்கும். காலையில் பத்து மணிக்குள்ளே எல்லாரும் வேலைக்கு கிளம்பிப் போயிடுவாங்க. சாயந்திரம் ஆறுமணிக்கு மேல்தான் திரும்பி வருவாங்க."

"இந்த ஏரியாவில் எல்லாமே வீடுகள்தானா?"

"ஆமா ஸார்.... ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு கான்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி இந்த இடத்தை வாங்கி ஒரே மாதிரியான வீடுகளைக் கட்டி சேல் பண்ணினாங்க...."

"இங்கே குடியிருக்கற ஆட்களில் யாராவது வி.ஐ.பி இருக்காங்களா....?"

"அப்படி யாரும் இருக்கிறமாதிரி தெரியலை ஸார்"

"நல்லா யோசனை பண்ணிச் சொல்லு. அந்த நபர் அரசியலிலோ வேறு ஏதாவது துறையிலியோ பெரிய ஆளாய் இருக்கலாம்....."

அந்த முரளி இப்போது இரண்டு பேரையும் மிரட்சியோடு பார்க்க விஷ்ணு டீயைக் குடித்து முடித்து காலி டம்ளரை மேஜையில் வைத்துக் கொண்டே குரலைத் தாழ்த்தினான்.

"நாங்க போலீஸ். ஒரு கொலை விஷயமாய் முக்கியமான நபர் ஒருத்தரை தேடிக்கிட்டு இங்கே வந்து இருக்கோம். அந்த நபர் இந்த ஏரியாவில் இருக்கிறதாய் தகவல்."

முரளியின் நெற்றியில் இப்போது வியர்வை.

"ஸார்! நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எனக்கு இந்த ஏரியாவில் யாரையும் தெரியாது!"

"இது பார் முரளி..... உனக்கு அந்த நபரை தெரியும்ன்னு நாங்க சொல்லல வரலை.... இங்கே இருக்கிற முக்கியமான நபர்கள் யார் யாருன்னு சொல்லு போதும். அதிலிருந்து எங்களுக்கு வேண்டிய நபரை நாங்க ஃபில்டர் பண்ணிடுவோம்"

முரளி இருண்ட முகத்தோடு சில வினாடிகள் யோசித்துவிட்டு பிறகு தயக்கமான குரலில் சொன்னான்.

"ஸார்.... நாலு மாசத்துக்கு முன்னாடி இந்த நகரோட ஒன்பதாவது குறுக்குத் தெருவில் குடியிருந்த ஜோதிமாணிக்கம் என்கிற ஒரு பெரிய பணக்காரரோட வீட்ல வருமானவரி ரெய்டு நடந்தது."

"அந்த ஜோதிமாணிக்கம் என்ன தொழில் பண்றார் ?"

"அவர்க்கு தாம்பரத்துல ஒரு பெரிய நகைக்கடை இருக்கிறதாய் பேசிக்கிட்டாங்க"

"அந்த ரெய்டு விவகாரம் என்னாச்சு?"

"தெரியலை சார்...."

"சரி, வேறு எதுமாதிரியான எல்லாம் இந்த ஏரியாவில் நடந்தது?"

"அதுக்கப்பறம் வேறு எதுவும் நடக்கலை ஸார்"

விவேக் விஷ்ணுவுக்கு கண்ணைக் காட்ட அவன் தன் சட்டைப் பாக்கட்டில் வைத்து இருந்த சுடர்கொடியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து முரளியின் முகத்துக்கு நேராய் நீட்டினான்.

"இந்தப் பொண்ணை இதுக்கு முன்னாடி வேற எங்கேயாவது எப்பவாவது பார்த்து இருக்கியா?"

பார்த்துவிட்டு முரளி முகம் மாறினான்.

"ஸார்.... இந்தப் பெண்ணைத்தான் கடந்த ரெண்டு நாளாய் டி.வி.யில் காட்டிகிட்டு இருக்காங்க... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒரு நபரால கொடூரமாய் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண். பேர் கூட சுடர்கொடி."

"இந்தப் பெண்ணை இந்த ஏரியாவில் எப்பவாவது பார்த்து இருக்கியா?"

"இல்ல ஸார்"

"பொய் சொல்லாதே! பின்னாடி நீ சொன்னது பொய்ன்னு தெரிஞ்சா போலீஸ் லாக்கப்புக்குள்ளே நீ உட்கார வேண்டியிருக்கும்!"

"நான் எதுக்காக ஸார் பொய் சொல்லணும்? டி.வி.யில் இந்தப் பொண்ணோட போட்டோவைப் போட்டு போட்டுக் காட்டினதுலதான் நீங்க போட்டோவைக் காட்டினதுமே என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது..."

"சரி.... அந்த நகைக் கடைக்காரரோட பேர் என்னான்னு சொன்னே?"

"ஜோதிமாணிக்கம் ஸார்"

"இந்த நகரோட ஒன்பதாவது குறுக்குத் தெருவில் அவரோட வீடு இருக்கா?"

"ஆமா ஸார்"

விவேக் எழுந்தான்.

"விஷ்ணு கிளம்பு...!"

விஷ்ணு "டீ எவ்வளவு " என்று கேட்டு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்ட அவன் "பரவாயில்லை ஸார்" என்று பின் வாங்கினான்.

"ஓசியில் டீ குடிக்கறதில்லைன்னு இருபது வருட சபதம். அந்த சபதத்தை நாசம் பண்ணிடாதே... பணத்தை வாங்கிக்க..."

முரளி பணத்தை வாங்கிக்கொள்ள இருவரும் பேக்கரியை விட்டு வெளியே காரில் ஏறினார்கள்.

கார் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நகர்ந்தது.

"பாஸ்"

"சொல்லு"

"இப்ப நாம அந்த நகைக்கடைக்காரர் ஜோதிமாணிக்கத்தைப் பார்த்து என்ன பேச போறோம்?"

"நாம இப்ப அவரைப் பார்க்க போகலை?"

"அப்புறம்....?"

"கொஞ்சம் இடது புறம் திரும்பி அந்த மரத்துக்குக் கீழே தெரியற ஒரு இண்டெக்ஸ் போர்ட்டைப் பாரு"

விஷ்ணு திரும்பிப் பார்த்தான்.

இந்த இண்டெக்ஸ் போர்டில் புழுதி அப்பியிருந்தாலும் அதில் எழுதப்பட்டு இருந்த சிவப்பு பெயிண்ட் ஆங்கில எழுத்துக்கள் பார்வைக்குத் தட்டுப்பட்டது.

'WAY TO OBSERVATION HOME'

" 'வே டூ அப்சர்வேஷன் ஹோம்' ன்னு போட்டிருக்கு பாஸ். அது ஏதோ அநாதை விடுதி போலிருக்கு. அங்கே எதுக்கு போறோம்?"

"அது அநாதை விடுதியில்லை விஷ்ணு?"

"பின்னே?"

"அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு கீழே தமிழில் என்ன எழுதியிருக்குன்னு பாரு?"

விஷ்ணு பார்த்தான்

"கூர்நோக்கு இல்லத்துக்கு செல்லும் வழி"

"ஏதாவது புரியுதா விஷ்ணு?"

"புரியலை பாஸ்"

"சரி... கூர்நோக்கு இல்லம் என்கிற தமிழ் வார்தையைப் படிக்கும் போது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வார்த்தை ஞாபகத்துக்கு வருதா...?"

விஷ்ணு யோசித்துவிட்டு "வரலையே பாஸ்" என்றான்.

"ஜெபமாலை மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி திணறித் திணறி பேசின மூணு வார்த்தைகள் என்னான்னு ஞாபகத்துக்கு வருதா பாரு"

"வருது பாஸ் "

"என்னென்ன ?"

"குர்நோக்கம், ஜெ.சி.ஹெச் ஹாசிர்வதம்"

"இந்த மூணுவார்த்தைகளில் முதல் வார்த்தையான 'குர்நோக்கம்' ஏன் கூர்நோக்கு இல்லமாய் இருக்கக்கூடாது?"

"பாஸ்" வியப்பில் வாயைப் பிளந்தான் விஷ்ணு.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
27th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X