For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் 'ஒன் + ஒன் = ஜீரோ': அத்தியாயம் 18

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வராந்தாவின் கோடியில் இருந்து அந்த நர்ஸ் பதட்டமாக ஒடி வருவதைப் பார்த்ததும் விஷ்ணு "அட நம்ம கல்பனா'' என்றான்.

"கல்பனாவா?'' விவேக்கின் வியப்பைப் பொருட்படுத்தாமல் விஷ்ணு பேசினான்.

"ஆமா பாஸ்... அந்த நர்ஸ் பேரு கல்பனா. சொந்த ஊர் கேரளா பக்கம் நெம்மாரா. அப்பா இல்ல... அம்மா மட்டும். ஒரே தங்கச்சி''

"டேய்... அந்த நர்ஸ் ஓடி வர்றதை பார்த்தா ஏதோ பிரச்னை போலிருக்கு...''

Rajeshkumars crime thriller One + One = Zero - 18

"என்னன்னு இப்ப கேட்டுடலாம் பாஸ்...,'' விஷ்ணு சொல்லிக்கொண்டே வேகமாய்ப் போய் அவளை மறித்தான்.

"கல்பனா... என்னாச்சு? ஏன் இப்படி டென்ஷனா ஓடி வர்றே...?''

''சார்...உங்களைப் பார்க்கத்தான் ஓடி வந்துட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி இந்தப் பக்கமாய் வேகமாய் நடந்து எந்த நர்ஸாவது போனாளா...?''

"நர்ஸா...?''

"ஆமா... கொஞ்சம் உயரமா கறுப்பா''

"இல்லயே... ஏன் என்ன விஷயம்?''

"ஸார்... அந்த நர்ஸ் இங்கே வேலை பார்க்கிற நர்ஸ் இல்லை. ஆனா ஜெபமாலை இருந்த ரூமுக்குள்ள அவ நுழைஞ்சதைப் பார்த்துட்டு வேக வேகமாய் போய் அவளை மறிச்சு யார்னு கேட்டேன். புதுசா வந்துருக்கற நர்ஸ் கோர்ஸில் ட்ரெய்னிங் ஸ்டூடண்ட்னு சொன்னா...எனக்கு அவ அப்படி சொன்னது ஆச்சர்யமா இருந்தது. பொதுவா நர்ஸிங் கோர்ஸில் ட்ரெய்னிங் ஸ்டூடண்ட்ஸ் ஜனவரி இல்லை ஃபிப்ரவரி மாசம்தான் வருவாங்க...இந்த நவம்பர் மாசம் வர வாய்ப்பே இல்லை...''

"ஸோ அவ ஒரு ஃபேக் பெர்சன்...?''

"ஆமா ஸார்... அவளை நான் மேற்கொண்டு விசாரிக்கும்போதே என்னோட வீட்டில் இருந்து ஒரு போன் கால் வந்தது. அம்மா பேசினாங்க... அந்த ஃபோனை அட்டெண்ட் பண்ணிட்டு திரும்பிப் பார்க்கிறேன். அந்த நர்ஸ் ஐசியூ யூனிட்டை விட்டு வேக வேகமா வெளியேறிப் போய்க்கிட்டு இருந்தா... நான் உடனே அவளை ஃபாலோ பண்ணி துரத்த ஆரம்பிச்சேன். ஐசி யூனிட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். பார்வைக்கு தட்டுப்படவே இல்லை. எப்படியும் அவ ஹாஸ்பிடலை விட்டு வெளியே போகணும்னா இந்த ரிசப்ஷன் வழியாத்தான் போயாகணும்னு ஓட்டமா வந்தேன். உங்ககிட்டயும் விஷயத்தை சொல்லலாம்னு நினைச்சேன்.''

விஷ்ணு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சொன்னான். "நான் கடந்த பதினஞ்சு நிமிஷமா ரிசப்ஷன்லதான் இருந்தேன். இப்பதான் இந்த ரூமுக்கு வந்தேன். என்னோட பாஸ்கிட்ட பேசிகிட்டு இருந்தப்பதான் வராந்தாவுல வேகவேகமாய் வர்றதை ஜன்னல் வழியாய் பார்த்துட்டு வெளியே வந்தேன்...''

"அப்படின்னா நீங்க ரூமுக்குள்ள இருக்கும்போதுதான் அந்த நர்ஸ் இந்த வராந்தாவை கிராஸ் பண்ணி வெளியே போயிருக்கணும்...''

"மே பீ... வா... கல்பனா... நாம ரெண்டு பேரும் வெளில போய் அந்த நர்ஸ் நம்ம கண்ணுல தட்டுப்படறாளான்னு பார்ப்போம்... அவ ரொம்ப தூரம் போயிருக்க முடியாது,'' சொன்ன விஷ்ணு விவேக்கிடம் திரும்பினான்.

"பாஸ்...''

"போய்ட்டு வா... நான் இதே இடத்துல நின்னுட்டுருக்கேன். அந்த நர்ஸ் எப்படி இருப்பான்னு சொன்னீங்க சிஸ்டர்?''

"கொஞ்சம் கறுப்பாய் உயரமாய்...''

"அப்படி யாராவது தட்டுப்படறாங்களான்னு நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்கு வெளியே போய் பார்த்துட்டு வாங்க... அவ ஏதாவது வாகனத்துல வந்துருக்கலாம். செக்யூரிட்டிகிட்ட சின்னதா ஒரு என்கொயரி பண்ணுங்க...''

விஷ்ணுவும் நர்ஸ் கல்பனாவும் ரிசப்ஷன் அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு புயல் வேகத்தில் வெளியேற விவேக் சில வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அரை வட்ட மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ரிசப்ஷனிஸ்டை நோக்கிப் போனான்.

செல்போனில் யாருடனோ பேசி சிரித்துக்கொண்டிருந்தவள் விவேக்கை பார்த்ததும் லேசாய் முகம் மாறி எழுந்து நின்றாள்.

"ஸார்...''

விவேக் அவளிடம் குரலைத் தாழ்த்தி ஏதோ கேட்க மாடிப்படிகளுக்கு கீழே இருந்த ஒரு அறையைக் காட்டினாள்.

"அதுதான் ஸார்...''

"தேங்ஸ். இனிமே உன்னோட சிரிப்பை செல்போன்ல கண்டினியூ பண்ணும்மா...!''
விவேக் சொல்லிவிட்டு மாடிப்படிகளுக்கு கீழே இருந்த அறையை நோக்கிப் போனான்.

வெறுமனே சாத்தியிருந்த கதவை மெல்லத் தள்ளிப் பார்க்க உள்ளே நடுத்தர வயது நபர் பெரிய கம்ப்யூட்டர் மானிட்டர் திரைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். விவேக்கைப் பார்த்ததும் எழுந்தார். பவ்யமாக விஷ் செய்தார்.

"ஸ ஸார்...!''

"உட்காருங்க... இந்த ஹாஸ்பிடல்ல பொருத்தப்பட்டிருக்கற எல்லா ஸி.ஸி டிவி கேமராக்களோட இணைப்பு இந்த அறையில மட்டும் தான் இருக்கா... இல்ல... வேற எங்கயாவதும் இருக்கா...?''

"இந்த அறையில மட்டும் தான் ஸார்...!''

"ஐ ஸி யூனிட்டுக்குள்ளும் கேமரா பொருத்தப்பட்டிருக்கா...?''

"க்ரிடிகல் கேர் ஐஸியூனிட்டுக்குள்ள மட்டும் ஸிஸிடிவி கேமரா இருக்காது. மத்தபடி எல்லா இடத்துலயும் பொருத்தப்பட்டுருக்கும்.''

"நேத்து இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆன ஜெபமாலையோட யூனிட்டுக்குள்ல கேமரா இருக்கா?''

"இருக்கு ஸார்...''

"ஜெபமாலை அட்மிட் பண்ணப்பட்டிருக்கற யூனிட்டுக்குள்ள பத்து நிமிஷத்துக்கு முன்னாடி யார் யார் போயிருக்கான்னு போட்டுக் காட்ட முடியுமா?''

"இப்ப பார்த்துடலாம் ஸார்...'' சொன்ன அந்த ஆபரேட்டர் கம்ப்யூட்டர் திரையை வெளிச்சமாக்கி பத்து நிமிஷத்துக்கு முன்பு பதிவான காட்சிகளை 'க்ளோஸ் அப்'புக்கு கொண்டு வந்துக் காட்டினார்.

விவேக்கின் பார்வை உன்னிப்பாயிற்று. சற்றே உயர்த்திப்போட்ட கட்டிலில் ஜெபமாலை படுத்து இருக்க உடம்பில் துளி சலனமில்லை. க்ளுகோஸ் பாட்டில் மட்டும் சிரசாசனம் செய்து மெல்லிய ட்யூப் வழியே மஞ்சள் நிற திரவத்தை சொட்டு சொட்டுகளாய் உடம்புக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தது. நர்ஸ் கல்பனா சுவரோரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு எதிர்ச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த 'கார்டியோகிராஃப்'பில் ஜெபமாலையின் இதயத்துடிப்பு பச்சை நிறக் கோடுகளில் எகிறி எகிறிக் குதிப்பதை உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவ்வப்போது எழுந்துப்போய் க்ளுகோஸ் மட்டத்தை சரிபார்த்துவிட்டு மறுபடியும் வந்து அமர்ந்தாள். சார்ட்டை எடுத்து ஏதோ எழுதினாள். காட்சிகள் மௌனமாக பதிவாகிக்கொண்டிருக்க ஆபரேட்டர் சன்னமான குரலில் கேட்டார்.

"ஏதாவது பிரச்னையா ஸார்...?''

"ஆமா... ஜெபமாலை இருந்த அறைக்குள்ள நர்ஸ் கல்பனா எதற்காகவோ வெளியே போயிருந்தபோது வேற யாரோ ஒரு பெண் நர்ஸ் யூனிஃபார்ம்ல வந்துருக்கா. நல்ல வேளையாய் கல்பனா அந்தப் பொண்ணை நோட் பண்ணி யார் என்னன்னு விசாரிச்சிருக்கா... அப்படி விசாரிச்சுட்டு இருக்கும்போதே கல்பனாவுக்கு போன் வரவே அதைப்பயன்படுத்தி அந்த பொண்ணு தப்பிச்சு ஓடிட்டா...''
இப்போது பதட்டம் ஆபரேட்டரையும் தொற்றிக்கொண்டது.

"அந்தப்பொண்ணு யார்ன்னு இப்ப பார்த்துடலாம் ஸார்...''
இருவருடைய பார்வையும் கம்ப்யூட்டர் திரையில் பதிந்திருக்க, அடுத்த சில நொடிகளில் நர்ஸ் கல்பனா அறையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.
விவேக் சொன்னான்.

"இந்த நேரத்துல தான் அந்தப் பொண்ணு அறைக்குள்ள வந்துருக்கணும்''

"மே பீ ஸார்...''

இருவருடைய பார்வைகளும் லேசர் கதிர்களாய் மாறின. அறையில் இப்போது ஜெபமாலை மட்டும் சலனமில்லாமல் படுத்திருக்க அறைக்குள் வரும் பெண்ணைக் காட்டுவதற்காக ஸிஸி டிவி கேமரா காத்திருந்தது.

விவேக் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அறையின் சூழ்நிலை சற்றே மாறியது. ஓர் உருவம் உள்ளே நுழைந்தது. ஆனால் அது யார் என்றே தெரியாத அளவுக்கு உருவம் பளபளப்பான எக்ஸ் கோடுகளாய் மாறி ஏதோ புகை போல அலைந்தது.

ஜெபமாலையை நோக்கி எக்ஸ் கோடுகள் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கும்போதே கல்பனா வேகமாய் அறைக்குள் நுழைவது தெரிந்தது. கல்பனாவின் உருவம் தெளிவாய் தெரிய, வந்த பெண்ணின் உருவம் மட்டும் கோடுகளாய் மாறி மினுமினுத்தது.

விவேக்கின் கண்களில் பிரமிப்பு பரவியது. ஆபரேட்டரை பயத்தோடு பார்த்தான்.

"என்ன அந்தப் பொண்ணோட உருவம் மட்டும் தெளிவாய் இல்லாம 'ப்ளர்' அடிக்குது?''
ஆபரேட்டரின் கண்களில் ஒருவித கலவரம் தெரிய அவருடைய குரலும் குழறியது

"ஸ ஸார்...!''

"என்ன?''

"இது ஒரு விபரீத விஷயம் ஸார்...!"

"விபரீதம்னா...?"

"யூ. வி. 30 ஸார்...!"

"எனக்குப் புரியலை...!"

"சிசி டிவி கேமரா இயக்கத்தையும் அதனோட செயல்பாடுகளையும் முடக்குற ஒருவகை ஜாமர் ஸார்...!" என்று சொன்ன ஆபரேட்டர் தனக்கு பக்கத்தில் இருந்த மேஜையின் இழுப்பறையை திறந்து ஒரு கையடக்க புத்தகத்தை எடுத்தார்.

புத்தகத்தின் தலைப்பு சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ் என்று இருந்தது.
அதனுடைய சில பக்கங்களை புரட்டியவர் ஒரு பக்கத்தில் பார்வையை நிறுத்தி

"இதைப் படிச்சுப் பாருங்க ஸார்...!" என்றார்.

"யூவி 30 யூ எச் எஃப் அண்ட் வி எச் எஃப் ஜாமர்ஸ் பிளாக்கர்ஸ் டூ ஜாம் ஸி ஸி டிவி கேமராஸ் அண்ட் ஆர் எஃப் ஐ டி மைக்ரோசிப்ஸ்( UV 30 UHF AND VHF JAMMERS AND BLOCKERS TO JAM CCTV CAMERAS AND RFID MICROCHIPS)

விவேக்கின் விழிகள் வியப்பில் விரிய ஆபரேட்டர் சொன்னார். "நர்ஸ் யூனிஃபார்ம் போட்ட அந்த பெண் தன்னோட உருவம் சிசி டிவி கேமராக்களுக்கு சிக்காம ப்ளர்ரா தெரியறா மாதிரி இந்த ஜமாரை தன்னோட உடம்போட ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டு வந்துருக்கலாம் ஸார்...!''

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 18th episode of Rajeshkumar's crime thriller One + One = Zero
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X