• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜேஷ்குமாரின் 'ஒன் + ஒன் = ஜீரோ'... - அத்தியாயம் 4

By Shankar
|

-ராஜேஷ்குமார்

முன்கதைச் சுருக்கம்: விவேக்கைப் பேட்டி எடுப்பதற்காக வரும் இளம் பெண் நிருபர் சுடர்கொடி, வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாக வெட்டிக் கொல்லப்படுகிறாள். விஷயமறிந்த விவேக், விஷ்ணுவுடன் கொலையின் பின்னணியை விசாரிக்க ஆரம்பிக்கிறான். அதே நாளில் அந்தப் பெண்ணின் வீட்டில் விசாரிக்கப் போக, பூட்டிக் கிடக்கும் வீட்டுக்குள் சுடர்கொடியின் அண்ணன் திலீபன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான்... இனி...

விவேக்கின் விழிகளில் அதிர்ச்சி மிச்சம் இருக்க, அவனுக்கு பின்னால் வந்த விஷ்ணு, திலீபன் தூக்கில் தொங்குவதைப் பார்த்துவிட்டு காதருகே மெல்ல கிசு கிசுத்தான்.

"என்ன பாஸ் இது....'ஒரு கொலை பண்ணினா இன்னொரு கொலை இலவசம்' ன்னு சொல்ற மாதிரி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் தங்கச்சி கொலை. அண்ணன் காரன் பூட்டிய வீட்டுக்குள்ளே ஒரு 'ஸ்ட்ரெயிட் லைன்' மாதிரி தூக்கில் தொங்கிட்டிருக்கான். இது தற்கொலைன்னு நினைக்கிறேன் பாஸ்"

"இல்ல விஷ்ணு.... இதுவும் கொலைதான் ! "

"எப்படி பாஸ்...? நாம இன்னமும் திலீபனோட பாடிக்குப் பக்கத்துல கூட போகலை.... பார்த்த முதல் பார்வையிலேயே கொலைன்னு சொல்றீங்க..."

" ரெண்டு காரணம்"

Rajeshkumars One + One = Zero -4

" சொல்லுங்க பாஸ்... நான் ஏற்கெனவே கெஸ் பண்ணி வச்சிருக்கற அந்த ரெண்டு காரணங்களோடு நீங்க சொல்றது ஒத்துப் போகுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துக்கிறேன். "

" முதல் காரணம் வீடு பூட்டியிருக்கு. வீட்டை வெளிப்பக்கமாய் பூட்டிவிட்டு யாரும் தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க... ரெண்டாவது காரணம் இந்த ரூம்ல ஏ.சி. ஓடிகிட்டு இருக்கு. டெம்பரேச்சர் டிகிரி எவ்வளவுன்னு பார்த்தியா...பதினாறு. "

Rajeshkumars One + One = Zero -4

"அதாவது திலீபனை தூக்கில் தொங்கவிட்டவங்க பாடி அவ்வளவு சீக்கரத்துல டீ கம்போஸ் ஆகிவிடக்கூடாதுன்னு ஏ.ஸி. யை லோயஸ்ட்
டெம்பரேச்சர்ல வச்சு ஆன் பண்ணிட்டு போயிருக்காங்க... இல்லையா பாஸ் ?"

"அதேதான்... ! பக்கத்து ரூம்ல இருக்கற ஹவுஸ் ஓனர் முத்துராஜைக் கூப்பிடு.... ! அப்பறம் ப்ரான்ஸிக் பீப்பிளுக்கு இன்ஃபார்ம் பண்ணிடு."

விஷ்ணு தலையை சற்றே வெளியே நீட்டி சுவர் ஓரமாய் நின்று கொண்டிருந்த வீட்டு ஓனரை கண் அசைவால் கூப்பிட்டான். அவர் வியர்வை மின்னும் முகத்தோடு வேக வேகமாய் வந்தார்.

"என்ன ஸார்... ?"

விவேக் ஓர் ஊடுருவிய பார்வையோடு முத்துராஜைக் கேட்டான். "சுடர்கொடியோட அண்ணன் ஒரு 'மெடிக்கல் ரெப்' ன்னு சொன்னீங்க இல்லையா ?"

"ஆமா ஸார் "

" அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவரோட வேலை விஷயமாய் ஹைதராபாத் புறப்பட்டுப் போனதாகவும் சொன்னீங்க ?"

"ஆமா ஸார் "

" அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?"

" அவர் டாக்ஸியில் ஏறி ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டுப் போகும்போது நான் என் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். என்கிட்டே சொல்லிட்டுத்தான் போனார்".

" அப்படி அவர் சொல்லிட்டுப் போகும்போது சுடர்க்கொடி வீட்ல இருந்தாளா ?"

"இல்லை... அது ஒரு சாயந்திர நேரம். சுடர்க்கொடி இன்னமும் வேலையிலிருந்து திரும்பாததினால திலீபன் வீட்டைப் பூட்டிக்கிட்டுதான் போனார்."

"அப்படீன்னா அண்ணனும் தங்கச்சியும் ஒரே பூட்டுக்கு தனித்தனி சாவி வெச்சிருந்தாங்க ?"

" ஆமா ஸார்... ரெண்டு பேரும் நினைச்ச நேரத்துல வீட்டுக்கு வருவாங்க... போவாங்க..."

"ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹைதராபாத் புறப்பட்டுப் போனவர், பூட்டின வீட்டுக்குள்ளே இப்படி தொங்கிட்டு இருக்காரே ? இது எப்படி உங்களுக்குத் தெரியாம போச்சு ?

முத்துராஜ் வெகுவாய் முகம் மாறினார்.

"என்ன ஸார்.... சொல்றீங்க? "

"வாங்க... இப்படி உள்ளே வந்து பாருங்க !"

முகம் நிறைய குழப்பத்தோடு எட்டிப் பார்த்த முத்துராஜ் விழிகளில் நிரம்பிக் கொண்ட திகிலோடு விவேக்கைப் பார்த்தார்.

"எ...எ...எப்படி ஸார்... இது...?"

"இந்த கேள்விக்கு நீங்கதான் பதில் சொல்லணும்... ஏன்னா இந்த வீட்டுக்கு நீங்கதான் ஹவுஸ் ஓனர். அதுவும் வீட்டுக்கு முன்னாடியே குடியிருக்கீங்க. உங்களுக்குத் தெரியாம இந்த வீட்டுக்குள்ள இப்படியொரு விபரீதம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை... ஹைதராபாத் போறேன்னு சொல்லிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு டாக்ஸியில் கிளம்பிப் போன திலீபன் பூட்டின வீட்டுக்குள்ளே ஏ.சியின் ஜில்லிப்போடு தூக்குல தொங்கிட்டிருக்கார். எப்படி...?"

முத்துராஜின் விழிகளில் இப்போது கூடுதல் திகில். தலையின் முன் வழுக்கையில் வெள்ளமாய் வியர்வை. நடுக்கக் குரலில் பேசினார்.

"ஸ....ஸ.... ஸார்...! இப்படியொரு சம்பவம் எப்படி நடந்ததுன்னே எனக்குத் தெரியாது ஸார். நான் ஒரு கட்சியோட மாவட்டச் செயலாளர். கட்சித் தலைவரோட பிறந்தநாள் விழாக்கான ஏற்பாடுகளை கடந்த ரெண்டு நாளாய் கவனிக்கறதுக்காக கட்சி ஆபீஸிலேயே இருந்துட்டேன்... திலீபன் நல்லவர் ஸார். அவர் ஏன் இப்படி தற்கொலை பண்ணிக்கிட்டார்ன்னு தெரியலை இந்த விஷயத்தை சுடர்கொடிக்கு தெரியப்படுத்தணும் ஸார்."

" இது தற்கொலையாய் இருக்கமுடியாது அதுவுமில்லாமே சுடர்கொடிக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தவும் முடியாது."

முத்துராஜின் விழிகள் வியப்பில் விரிந்தன.

"ஏன் ஸார் ?"

விஷ்ணு இப்போது குறுக்கிட்டு சொன்னான்.

" நீங்க மத்தியானம் ஒரு மணியிலிருந்து டி. வியையே 'ஆன்' பண்ணலை போலிருக்கு.... சுடர்க்கொடி இப்போ உயிரோட இல்லை. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் அவளை யாரோ வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க. அது சம்பந்தமான விசாரணைதான் இது. திலீபனை விசாரிக்க வந்தா அவரும் உயிரோட இல்லை. என்னான்னு இப்ப உங்களுக்குப் புரியுதா ?"

முத்துராஜ் அதிர்ச்சியில் உறைந்துப் போய் ஒன்றும் பேசாமல் நின்றிருக்க, விவேக் அவருடைய தோளைத் தொட்டான்.

" இனிமேல்தான் உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு வேணும்.. சுடர்க்கொடி, திலீபன் பற்றிய என்னோட கேள்விகளுக்கு நீங்க பொய் கலக்காம பதில் சொல்லணும் !"

"கேளுங்க ஸார்..." முத்துராஜ் தனது காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டார்.

விவேக் அந்த அறைக்குள் நுழைந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் திலீபனை அண்ணாந்து பார்த்துக் கொண்டே முத்துராஜிடம் கேட்டார்.

" திலீபனும் சுடர்கொடியும் இந்த வீட்டுக்கு எப்போ குடி வந்தாங்க... ?"

" ரெண்டு வருஷம் இருக்கும் ஸார்..."

"அவங்களுக்கு அம்மா அப்பா இல்லை ?"

"அப்படித்தான் சொன்னாங்க ஸார்"

"ரிலேட்டிவ்ஸ் யாராவது வருவார்களா ?"

" அப்படி யாரையும் நான் பார்த்தது இல்லை ஸார். அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருமே நல்ல டைப் ஸார். என்கிட்டே ரொம்பவும் மரியாதை...!" முத்துராஜுக்குப் பேசப் பேச வியர்த்துக் கொட்டியது.

விவேக் மேற்கொண்டு முத்துராஜிடம் ஏதோ பேச முயல விஷ்ணு பக்கத்தில் வந்தான்.

"பாஸ்..! இந்த பீட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கும் ஃபாரன்ஸிக் பீப்பிளுக்கும் தகவல் சொல்லிட்டேன். சீஃப் எஃப். ஓ பிரானேஷ் ஸ்பாட்டுக்கு வர்றதாய் சொன்னார்."

"சரி வீட்டை சீன் ஆஃப். க்ரைம் பார்த்தியா...?"

"பார்த்துட்டேன் பாஸ் "

"உன்னோட கருடப் பார்வைக்கு ஏதாவது தட்டுப்பட்டதா...?"

"ஃபர்ஸ்ட் ரவுண்டுல எதுவும் தட்டுப்பாடலை பாஸ். ரெண்டாவது ரவுண்ட் பார்த்துடறேன். வீட்டோட பின்பக்கமும் பூட்டியிருக்கு. வந்த கொலையாளி லேசுப்பட்ட ஆசாமியாய் இருக்கமுடியாது பாஸ். இவ்வளவு நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் வீட்டை ரெண்டு பக்கமும் பூட்டிக்கிட்டு ஒருத்தரை தூக்குல தொங்கவிட்டுட்டுப் போயிருக்கற நபர் ஒரு பழைய குற்றவாளியாய்த்தான் இருக்க முடியும். அதுவும் இல்லாமே..."

விஷ்ணு பேசிக் கொண்டு இருக்கும்போதே விவேக்கின் செல்போன் முணு முணுத்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

டி.ஜி.பி. கரிய பெருமாளின் பி.ஏ. தியோடர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சற்றே நகர்ந்து போய் ஜன்னல் அருகே நின்று கொண்டு செல்போனை காதுக்கு ஏற்றினான் விவேக்.

"ஹலோ "

"மிஸ்டர் விவேக் ?"

"ஹோல்டிங் .."

" நான் தியோடர் பேசறேன் "

"சொல்லுங்க ஸார்..."

"இப்ப நீங்க எங்க இருக்கீங்க ?"

"வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த மர்டர் சம்பந்தமாய் ராஜா அண்ணாமலைப் புரத்துல அந்தப் பொண்ணு வீட்ல இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டிருக்கேன் ஸார்.."

" அந்த பொண்ணு சுடர்கொடியோட அண்ணன் திலீபனும் கொலை செய்யப்பட்டு தூக்குல தொங்கவிடப்பட்டு இருக்கறதாய் தகவல். உண்மையா ?"

" உண்மைதான் ஸார்... நானே எதிர்பார்க்காத சம்பவம் இது... யாரோ எதோ ஒரு காரணத்துக்காக அண்ணனையும், தங்கையையும் தீர்த்துக்கட்டியிருக்காங்க...."

"சரி ... நான் இப்போ பேச வந்த விஷயத்தைச் சொல்லிடறேன்"

"சொல்லுங்க"

"சுடர்க்கொடி, திலீபன் இந்த ரெண்டு பேருமே கொலை செய்யப்பட்ட விவகாரத்தை ரொம்பவும் டீப்பாய் இன்வெஸ்டிகேட் பண்ண வேண்டாம்... விசாரணை நுனிப்புல மேயற மாதிரி இருக்கட்டும்..."

" வாட் டூ யூ மீன் ஸார்?"

"மேலிடத்திலிருந்து நெருக்கடி... வெரி பவர்ஃபுல் பர்சன்... தகவல் இப்பத்தான் வந்தது.... மேற்கொண்டு எந்த விசாரணையும் வேண்டாம்ன்னு நெருக்கடி !"

" கொலையாளி யார்ன்னு கண்டு பிடிக்க வேண்டாம்ன்னு சொல்ல வர்றிங்களா ?"

"நான் அப்படி சொல்வேனா ?"

"இப்ப நீங்க சொன்னதுக்கு வேற என்னதான் ஸார் அர்த்தம் ?"

"இதோ பாருங்க மிஸ்டர் விவேக்...! என்னைப் பத்தி உங்களுக்குத்தெரியும். உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். என்கிட்டே பேசின மேலிடம் ரொம்பவும் பவர்ஃபுல். பொலிடிக்கல் பேக் ரவுண்ட் உள்ள நபர். நாம பயப்பட்டுத்தான் ஆகணும். ஆனா உங்களுக்கும் சரி, எனக்கும் சரி யாரைப் பார்த்தும் பயம் கிடையாது. ஆனா பயப்படற மாதிரி உங்களாலேயும் சரி, என்னாலேயும் சரி நல்லா நடிக்க முடியும். அதைத்தான் நாம இப்போ பண்ணப் போறோம். இந்த ரெண்டு மர்டர்களிலேயும் உங்க விசாரணை நுனிப்புல் மேயற மாதிரி இருக்கட்டும். ஆனா கொலையாளி யார்ன்னு கண்டுபிடிக்கற ஆப்ரேஷன் இன்னொரு பக்கம் தீவிரமாய் இருக்கட்டும்."

"தேங்க்யூ ஸார் "

"கொலையாளியையும் கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க உங்களுக்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் ?"

"168 மணி நேரம் ஸார்" என்றான் விவேக்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
Here is the 4th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X