• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ராஜேஷ்குமாரின் 'ஒன் + ஒன் = ஜீரோ' : அத்தியாயம் 35

By Shankar
|

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணை. அந்த விசாரணை ஆசீர்வாதம் மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே குற்றவாளி குறித்த முக்கிய தடயம் கிடைக்கிறது.

Rajeshkumars crime thriller One + One = Zero - 35

இனி...

விவேக் காரை வேகமாய் விரட்டிக் கொண்டிருக்க விஷ்ணு பதட்டம் தணியாத குரலில் மூன்றாவது தடவையாய் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

"பாஸ்...! மீன லோசனியோட தம்பி அந்த ரஞ்சித்குமார் ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர். அந்த டாக்டர்தான் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக வர்ற சிறுவர்களுக்கு ஏதோ ஒரு வகையான மருந்தைப் பயன்படுத்தி மூளைச் சலவை பண்ணியிருக்கணும். இப்ப அந்த ரஞ்சித்குமார் வீட்டுக்குப் போய் அவனை மடக்கினா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும். ஆனா அந்த ஆள் வீட்டுக்குப் போகாமே நீங்க வேற யாரையோ பார்க்க போய்ட்டு இருக்கீங்க...?"

விவேக் விஷ்ணுவைப் பார்க்காமல் சாலையில் கவனமாய் இருந்தபடி சொன்னான்.

"விஷ்ணு... அந்த ரஞ்சித்குமார் வீட்டுக்கு நம்ம டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த நெப்போலியன் போயிருக்கார். ரஞ்சித்குமாரை அவர் ஹேண்டில் பண்ணிக்குவார்."

"சரி... இப்ப நாம எங்கே போயிட்டிருக்கோம் பாஸ்"

"மீனலோசனியின் வீட்டுக்கு"

"அவங்க தப்பானவங்களாய் இருப்பாங்கன்னு நினைக்கறீங்களா பாஸ்?"

"அக்காவும் தம்பியும் இந்த விவகாரத்துல ஏன் பார்ட்னர்களாய் இருக்கக் கூடாது...?"

"நீங்க என்ன சொல்றீங்க பாஸ்...?" விஷ்ணு விழிகள் விரித்து திகைத்துக் கொண்டிருக்கும் போதே விவேக்கின் செல்போன் டயல் டோனை வெளியிட்டது.

விவேக் செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். செல்போனின் மறுமுனையில் டி.ஜி.பி.யின் பர்சனல் செக்ரட்ரி தியோடர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.

"ஸாரி ஸார்.... நானே உங்களுக்கு போன் பண்ணி பேசலாம்ன்னு இருந்தேன்"

"ஸாரி இருக்கட்டும்... இன்வெஸ்டிகேஷன் எந்த அளவில் இருக்கு...?"

"ஸார்... கிட்டத்தட்ட குற்றவாளியை நெருங்கிட்டோம். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே ஆளை மடக்கிடுவோம் ஸார்"

"ஆர் யூ ஷ்யூர் விவேக்?"

"ஷ்யூர் ஸார்.... அங்கே நிலைமை எப்படியிருக்கு ஸார்...?"

"ஸீம்ஸ்... டு... பி...வொர்ஸ்ட். சுடர்கொடியோட கொலைக்கு காரணம் அந்த ஜெயவேல்தான்னு செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு பிரிவு மும்முரமாய் இயங்கிட்டிருக்கு. அதே நேரத்துல ஜெயவேலை கோர்ட்டுக்குக் கொண்டு போய் ஆஜர்படுத்த வேண்டிய சமயத்துல அவன் தப்பிக்க முயற்சி செஞ்சான்னு என்கவுண்டர்ல போட்டுத் தள்ளவும் ஒரு டீம் தயாராயிட்டிருக்கு. எனக்குக் கிடைத்த தகவல்படி என்கவுண்டர் பண்ணி ஜெயவேலுவோட கதையை முடிச்சு சுடர்கொடியோட கொலை வழக்கை 'ஜீரோ'வாய் மாத்துறதுதான். நம்ம டிபார்ட்மெண்ட்க்கு மேலிடம் கொடுத்துள்ள வாய்மொழி உத்தரவு."

"அப்படி நடக்கக் கூடாது ஸார்... சுடர் கொடியும் அவளுடைய அண்ணணையும் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய விபரீதம் இருக்கு. அதுக்குக் காரணமான நபர்கள் யாராக இருக்கும்ன்னு ஓரளவு யூகம் பண்ணிட்டோம். அவங்களை நோக்கித்தான் இப்போ ட்ராவல் பண்ணிட்டிருக்கோம்...."

"மிஸ்டர் விவேக்....! அந்த ஜெயவேல் எந்த நிமிஷமும் கோர்ட்டுக்கு கொண்டு போகப்படலாம். வழியில் என்கவுண்டர் செய்யப்படலாம். அதுக்கு முன்னாடி நீங்க கொலையாளிகளைக் கண்டுபிடிச்சு கோர்ட்ல கொண்டு வந்து நிறுத்த முடியுமா ?"

"முடியும் ஸார்... இன்னும் ஒரு மணி நேரத்துல நானே உங்களுக்கு போன் பண்றேன்"

"ப்ளீஸ் டூ இட் வித்வுட் எனி ஃபர்தர் டிலே"

"வீ வில் டூ இட் ஸார்"

"ஆல் த பெஸ்ட்"

விவேக் செல்போனை அணைத்துவிட்டு அனலாய் பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

"விஷ்ணு !"

"பாஸ்"

"அந்த அப்பாவி ஜெயவேலுவோட என்கவுண்டர் பண்றதுக்கு முந்தி நாம அந்த சைக்யாட்ரிஸ்ட் ரஞ்சித்குமாரை மடக்கியாகனும். நெப்போலியன் ஸ்பாட்டுக்குப் போயிருக்கார். அங்கே நிலவரம் என்னான்னு தெரியலை....!"

"நான் வேணும்ன்னா 'நெப்ஸ்'க்குப் போன் பண்ணிப் பார்க்கட்டுமா பாஸ்"

"ம்... பண்ணு.... ஸ்பீக்கர் 'ஆன்'ல இருக்கட்டும்."

விஷ்ணு தன் செல்போனைத் தேய்த்து நெப்போலியனை தொடர்பு கொண்டான். "என்ன நெப்ஸ்.... ரஞ்சித்குமார் வீட்டுக்குப் போய் சேர்ந்தாச்சா...?"

"ம்.... அஞ்சு நிமிஷமாச்சு...."

"என்ன டாக்டர் ரஞ்சித்குமார் வீட்ல இருக்காரா ?"

"இல்லை... வீடு பூட்டியிருக்கு.... பக்கத்து வீட்ல விசாரிச்சுப் பார்த்தேன். டாக்டரோட வீடு ஒரு வாரமாய் பூட்டிக் கிடக்கிறதாய் சொன்னாங்க"

"எங்கே போயிருப்பார்ன்னு அவங்ககிட்டே கேட்டுப் பார்த்தீங்களா?"

"ம்... கேட்டுப் பார்த்தேன்...அவர் அடிக்கடி இது மாதிரி வீட்டைப் பூட்டிக்கிட்டு வாரக் கணக்குல வெளியூர் போயிடுவார்ன்னு பக்கத்து வீட்ல இருக்கிற ஒருத்தர் சொன்னார்."

"அவர்க்கு மனைவி குழந்தைங்கன்னு யாரும் கிடையாதா ....?"

"அவர் ஒருத்தர் மட்டும்தான் வீட்ல இருந்து இருக்கார். வேற யாரும் வீட்டுக்குள்ளே இருந்த மாதிரி தெரியலைன்னு சொல்றார்."

"போர்டிகோவில் கார் இருக்கா ?"

"வெளியே இருந்து பார்த்தா எதுவும் தெரியலை"

"வீட்டுக்குள்ளே போய் பார்க்க ஒரு வழி ஏதாவது இருக்கா....?"

"இல்லை.... கேட் பூட்டியிருக்கு. ஆனா சுவர் ஏறி குதிக்கிற அளவுக்குத்தான் காப்பெளண்ட் சுவரோட உயரம் இருக்கு. நான் சுவர் ஏறி குதிச்சு உள்ளே போய்ப் பார்த்துடறேன். பின்பக்கக் கதவு ஏதாவது திறந்திருந்தாலும் திறந்து இருக்கும்.... ஒருவேளை பூட்டியிருந்தால் மாஸ்டர் 'கீ பன்ச்'சை யூஸ் பண்ணி பூட்டை திறந்துகிட்டு உள்ளே போயிட வேண்டியதுதான்."

"ஓ.கே. நெப்ஸ்... நீங்க வீட்டோட லாக்கை பிரேக் பண்ணி உள்ளே புகுந்து பார்த்துடுங்க.... உள்ளே நமக்குத் தேவையான தகவல்களோ, தடயங்களோ இருந்தா உடனடியாக என்னை போன்ல காண்டக்ட் பண்ணுங்க....!"

"இதோ... அரம்பிச்சுட்டேன் என்னோட வேலையை"

நெப்போலியன் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தான். விஷ்ணு பெருமூச்சுவிட்டான்.

"பாஸ்.... இந்த சுடர்கொடி, திலீபன் கேஸ்ல எல்லா குழப்பமும் விலகி ஒரு தெளிவான நிலைமைக்கு வந்த மாதிரி இருந்தது. ஆனா இப்போ மறுபடியும் குழப்பம்."

"இந்த குழப்பங்கள் தெரிய ஒரு நிவாரணி மீனலோசனிதான்...," சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை அதிகரித்தான் விவேக்.

***************

அழைப்பு மணியின் 'ம்யூஸிக் ட்யூன்' கேட்டு கதவைத் திறந்த மீனலோசனி வெளியே நின்றிருந்த விவேக்கையும், விஷ்ணுவையும் பார்த்ததும் ஒரு மைக்ரோ விநாடி முகம் மாறி இயல்புக்குத் திரும்பி செயற்கை புன்னகை ஒன்றை தன் உதடுகளுக்குக் கொடுத்தாள்.

"வ.... வாங்க.... வாங்க மிஸ்டர் விவேக்"

"ஸாரி மேடம்... ஒரு சின்ன என்கொய்ரிக்காக உங்க வீட்டுக்கே வர வேண்டியதாயிடுச்சு."

"நோ... ப்ராப்ளம்... ப்ளீஸ் கம்..."

விவேக் விஷ்ணு உள்ளே வர மீனலோசணி கதவைச் சாத்தினாள். உட்பக்கமாய் தாழிட்டாள்.

விவேக்கின் கண்கள் ஒரு சி.சி.டி.வி காமிரா யூனிட்டாய் மாறி வீட்டின் எல்லாத் திசைகளையும் நோக்கிப் பயணித்தன.

பெரிய வீடு. சீலிங்கிலிருந்து ஏதோ திராட்சை குலைகள் போல் லஸ்தர் விளக்குகள் சரம் சரமாய் நிறம் நிறமாய் தொங்கிக் கொண்டிருந்தன. ஹாலின் இரண்டு பக்கங்களிலிருந்து மாடிப்படிகள் பாலீஷ் செய்யப்பட்ட தேக்கு மர கைப்பிடிகளின் உதவியோடு லாவகமாய் வளைந்து தெரிந்தது. உயர்தர லெதர்களை தைத்துப் போட்டுக் கொண்ட சோபாக்கள் ஹாலின் மையத்தில் சிவப்பு வண்ணத்தில் கண்களைப் பறித்தன.

"உட்கார்ங்க மிஸ்டர் விவேக்..."

விவேக்கும் விஷ்ணுவும் சோபாவுக்குள் புதைய எதிரே இருந்த சோபாவில் மீனலோசனி உட்கார்ந்தாள். முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.

"சுடர்கொடி விவகாரத்தில் ஏதாவது க்ளு கிடைத்ததா..?'

"இனிமேல்தான் கிடைக்கப் போகுது மேடம்"

"எனக்குப் புரியலை..."

"மேடம்.... நான் இப்போ கேட்கப் போகிற கேள்விகளுக்கு மட்டும் பதில்களைச் சொல்லுங்க.... அதுல எந்த பொய்க் கலப்பும் வேண்டாம்".

மீனலோசனி லேசாய் முகம் சிவந்தாள்.

"எனக்கு பொய் பழக்கமில்லை.... என்கிட்டே என்ன கேட்கப் போறீங்க...?"

இவ்வளவு பெரிய வீட்ல நீங்கதான் இருக்கீங்களா?'

"ஆமா..."

"உங்க கணவர்...?"

"அதோ அந்த போட்டோவில்....." பக்கவாட்டு சுவரில் மாட்டிருந்த போட்டோவைக் காட்டினான். ஒரு வாடிய மாலைக்குள் அந்த வழுக்கைத் தலை மனிதரின் முகம் குங்குமப் பொட்டோடு தெரிந்தது.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே போயிட்டார். இப்ப நான் மட்டும்தான் இந்த வீட்ல தனியாய்."

மீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியில் அந்த சத்தம் கேட்டது.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 35th Chapter of Rajeshkumar's Crime Series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X