• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒன் + ஒன் = ஜீரோ: அத்தியாயம் 24

By Shankar
|

- ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது ஒரு முக்கியத் தடயம் சிக்குகிறது...

Rajeshkumars crime thriller One + One = Zero - 24

இனி...

விவேக் அந்த 'ஸ்ரீ அஷ்ட வராஹி கால பைரவி மகா மந்திரம்' புத்தகத்தைப் புரட்டினான்.

முதல் இரண்டு பக்கங்களில் துர்க்கையின் திரு உருவப் படமும் கால பைரவரின் படமும் லேமினேஷன் செய்யப்பட்ட தாள்களில் பளபளத்தது. விவேக்கின் விரல்கள் மூன்றாவது பக்கத்தைப் புரட்டியது.

சிவப்பு வண்ண எழுத்துக்களில் வார்த்தைகள் வரிவரியாய் ஓடியது. விவேக் அந்த வார்த்தைகளை மெல்ல வாய்விட்டு படித்தான்.

சகல மந்திர சாப நிவர்த்தி
பிரணாம் பிரதிஷ்டா மந்திரம்
சகல யந்திரங்களுக்கும் மந்திரம்
மந்திர காயத்ரி
யந்திர காயத்ரி
சகல தேவதா வசிய மந்திரம்

இந்த ஆறு மந்திரங்களும் 21 முறை உச்சரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சர்வ தேவாதி தேவர்களும், சர்வ ஜீவராசிகளும் மந்திரத்தை உச்சரிப்பவரின் வசம் அனைத்தும் வசியப்படும்.

விவேக் புத்தகத்தின் மற்றப் பக்கங்களைப் புரட்டிவிட்டு மீனலோசனியிடம் திரும்பினான்.

"இப்படி ஒரு புத்தகம் சுடர்கொடிகிட்டே இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா மேடம்?"

மீனலோசனி அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சோடு தலையாட்டினாள்.

"தெரியாது.... ஆனா ஒரு விஷயம் எனக்கு கொஞ்சம் நெருடலாயிருக்கு...."

"என்ன?"

"சுடர்கொடிக்கு கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது. கடவுள் பெயரால் யார் எந்த மோசடியைப் பண்ணினாலும் தீப்பொறி பறக்க ஒரு கட்டுரையை எழுதிடுவா.... ஸோ அவ இப்படியொரு புத்தகத்தை வாங்கி இருக்கவே மாட்டா...."

"ஆர் யூ ஷ்யூர் மேடம்?"

"இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?"

"நோ மேடம்... நீங்க பொய் சொல்றீங்கன்னு நான் சொல்ல வரலை. ஆனா இந்தப் புத்தகத்தை சுடர்கொடிதான் வாங்கியிருக்கா என்கிற உண்மையை நீங்க நம்பியாகணும். அதுக்கான ஆதாரம் இருக்கு...."

"ஆதாரமா... என்ன ஆதாரம்....?"

"இதோ பாருங்க மேடம்... இந்த புக்கை சுடர்க்கொடி வாங்கியதற்கான பில்....!" சொன்ன விவேக் தன் கையில் வைத்து இருந்த அந்த சிறிய தாளை நீட்டினான்.

மீனலோசனி அதை வாங்கிப் பார்த்தாள். அவளுடைய வலது புருவம் மட்டும் சற்றே மேலேறியது.

மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அமராவதி பதிப்பகத்திலிருந்து சென்ற மாதம் ஏழாம் தேதி சுடர்கொடியின் பெயர்க்கு பில் போடப்பட்டு அந்தப் புத்தகம் 150 ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்தது. மீனலோசனி குழப்பத்தோடு கேட்டாள்.

"இந்த பில் உங்களுக்கு எப்படி கிடைச்சது ஸார்?"

"புக்கைப் புரட்டிப் பார்த்துட்டு இருக்கும்போது ரெண்டு பக்கங்களுக்கு நடுவே இந்த பில் இருந்தது."

"சரி..... சுடர்கொடி இந்தப் புத்தகத்தை விலை குடுத்து வாங்கினதாகவே வச்சுக்குவோம்... இந்த விஷயத்துக்கும் அவ கொலை செய்யப்பட்டதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கறீங்களா.....?"

"லேசா...."

"எனக்குப் புரியலை ஸார்.... லேசான்னா எந்த அளவுக்கு?"

"கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத சுடர்கொடி இந்த 'ஸ்ரீ அஷ்ட வராஹி கால பைரவி மகா மந்திரம்' புத்தகத்தை விலை குடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன....?"

"எனக்குத் தெரியலை. நீங்க என்ன நினைக்கறீங்க?"

"எனக்கும் தெரியாது மேடம்... ஆனா அதுக்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிச்சுட்டா கொலையாளி இருக்கிற திசையை உறுதிப்படுத்திடலாம்....!" விவேக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஷ்ணு பக்கத்தில் வந்தான்.

"பாஸ்.... இதை ஒரு செகண்ட பாருங்க" சொன்னவன் தன் கையில் வைத்து இருந்த அந்த வாழ்த்து அட்டையைக் காட்டினான். "இது ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை பாஸ். இதை யார் யார்க்கு அனுப்பி இருக்காங்கன்னு பாருங்க....!"

விவேக் வாங்கிப் பார்த்தான். ஸ்கெட்ச் பேனா வார்த்தைகளைப் பிரசவித்திருந்தது.

1991 பிறக்க ஏழு நிமிஷங்கள் இன்னமும்
உயிரோடு இருந்த போது
என்னுடைய தங்கையாய்
நீ பிறந்தாய்.
தங்கையாய் வளர்ந்தாய்.
ஆனால்
இந்த 2017 ல் நீ ஒரு வீரமங்கையாய்
உருவாகிக்கொண்டு இருக்கிறாய்.
உடம்பில் நீ ஒரு பெண். ஆனால்
உள்ளத்தால் ஆண்.
இருந்தாலும் உன்னை மணக்கோலத்தில்
பார்க்க விரும்புகிறேன்.
2018 பிறப்பதற்குள் என்னுடைய
ஆசை நிறைவேறுமா?

இனிய பிறந்த தின வாழ்த்துக்களோடு
உன்னுடைய
அண்ணன்
திலீபன்.

விவேக் லேசாய் முகம் மாறி விஷ்ணுவைப் பார்த்தான். அவனுடைய காதோரம் மெல்ல குரலைத் தாழ்த்தினான்.

"என்னடா இது?"

"அதான் பாஸ் எனக்கும் குழப்பமாய் இருக்கு. ராஜா அண்ணாமலைப்புரத்தில் இருக்கிற சுடர்கொடியோட வீட்டை நாம சோதனைப் போட்டபோது அங்கே கிடைச்ச பலான விஷயங்கள் அவங்க ரெண்டு பேரோட உறவை சந்தேகப்பட வெச்சது. ஆனா இந்த அட்டை திலீபனும் சுடர்கொடியும் அண்ணன் தங்கைத்தான்னு சத்தியம் பண்ணுதே.... இருக்கிற குழப்பமும் போதாதுன்னு இது வேற. நம்ம மீனா கிட்டே இதைப்பத்தி கேட்டுடலாமா பாஸ்?"

"யார்ரா மீனா?"

"போங்க பாஸ்... பேரைச் சுருக்கி செல்லமாய்க் கூப்பிட்டா உடனே ஆளை மறந்துடறீங்க... பக்கத்துல நிக்கிற மீனலோசனியைச் சொன்னேன் பாஸ்...."

விவேக் விஷ்ணுவை முறைத்து விட்டு மீனலோசனியிடம் திரும்பினான்.

"மேடம்.... அன்னிக்கு உங்ககிட்டே விசாரணை பண்ணும்போது சுடர்கொடிக்கு அப்பா அம்மா இல்லை. அண்ணன் ஒருத்தர் மட்டும் இருக்கிறதாய் சொன்னீங்க....?"

"ஆமா...."

"சுடர்கொடியோட அண்ணனை நீங்க பார்த்து இருக்கீங்களா?"

"இல்லை... அவரோட பேர் கூட எனக்குத் தெரியாது.... சுடர்கொடி சொல்லித்தான் அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிற விஷயம் தெரியும்"

மீனலோசனி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைவாசல் அருகே அந்தக் குரல் கேட்டது.

"ஸார்"

"விவேக் திரும்பிப் பார்த்தான்.

அந்த இளம் பெண் ஆரஞ்சு வண்ண சுடிதாரில் கருப்பு துப்பட்டாவோடு கதவோரமாய் தயக்கத்தோடு நின்றிருந்தாள். மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள்.

"ஸார்... என்னோட பேர் வானதி. இதே பத்திரிக்கை ஆபீஸில் கம்ப்யூட்டர் செக்க்ஷன்ல இருக்கேன். நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்."

மீனலோசனி பதட்டம் அடைந்தவளாய் வானதியை நோக்கிப் போய் அவளுடைய தோளின் மீது கையை வைத்தாள்.

"வானதி... நீ இப்போ எதுக்காக வந்தே... இவங்ககிட்டே என்ன சொல்லப் போறே?"

"ஸாரி மேடம்... உங்களுக்கே தெரியாத சில விஷயங்களை நான் சொல்ல வேண்டிய நேரம் இது....!"

"எனக்கே தெரியாத உண்மைகளா?" மீனலோசனி கண்களை இமைக்க மறந்து சற்றே பிளந்த வாயோடு திகைத்துக் கொண்டிருக்க வானதி விவேக்கை நெருங்கினாள். தன் கையில் வைத்திருந்த சற்றே பெரிதான ஒரு ப்ரவுன் கவரை நீட்டினாள்.

"இதைத் திறந்து பாருங்க ஸார்...!"

விவேக் குழப்பத்தோடு அந்தக் கவரை வாங்கி அதன் வாய்க்குள் இரண்டு விரலை நுழைத்து உள்ளே இருந்ததை வெளியே இழுத்தான்.

அது ஒரு போட்டோ.

பார்த்தான்.

ஒரு ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் ஒரு பெண் வெட்டப்பட்டு ரத்த சகதியில் விழுந்து கிடக்க, போட்டோவோடு இணைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாளில் அந்த வார்த்தைகள் தமிழில் டைப் செய்யப்பட்டு தெரிந்தது.

அன்புள்ள சுடர்கொடிக்கு சித்ரகுப்தன் எழுதிக் கொண்டது.

இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் போட்டோ வடநாட்டில் உள்ள போபால் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு வருஷங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இவள் யார், ஏன் எதற்காக இவ்வளவு கோரமாக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள் என்கிற விபரமெல்லாம் உனக்கு வேண்டாம். இந்த போட்டோவை மறுபடியும் ஒரு தடவை நன்றாகப் பார். இதே மாதிரியான ஒரு நிலைமை உனக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடாதே. உன்னுடைய பத்திரிக்கையில் சமையல் செய்வது எப்படி, கோலம் போடுவது எப்படி, வித விதமான ரசப் பொடிகள் செய்வது எப்படி போன்ற கட்டுரைகளை மட்டும் எழுதி பெண் குலத்துக்காக பாடு படவும்.

விவேக் படித்துவிட்டு அதிர்ந்து போனவனாய் வானதியைப் பார்த்தான். அவள் பயந்த குரலில் சொன்னாள். "ஸார்... இந்த கவர் என்னோட கைக்கு எப்படி வந்ததுன்னு உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும்"

"ஆமா"

"இதை எனக்குக் கொடுத்தது யார் தெரியுமா ஸார்?

"யாரு?"

"திலீபன்"

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
24th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X