• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்ன மேடம்.... பேச்சையே காணோம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (35)

|

- ராஜேஷ்குமார்


திரிபுரசுந்தரியின் கையில் இருந்த செல்போன் ஒரு பூகம்ப அதிர்ச்சிக்கு உட்பட்டதுபோல் விரல்களுக்கிடையில் அதிர்ந்தது. மறுமுனையில் பேசிக்கொண்டு இருப்பது வளர்மதியின் கணவன் ஹரி என்பதை உணர்ந்த விநாடியே வாய் உலர்ந்து போயிற்று.

ஹரிக்கு என்ன பதில் சொல்வது யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவனுடைய குரல் மறுபடியும் கேட்டது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 35

” என்ன மேடம்.... பேச்சையே காணோம். சைலண்ட் ஆயிட்டீங்க. என்னோட ஒய்ஃப் வளர்மதியை உங்களுக்குத் தெரியுமா தெரியாதா.....? தெரியாதுன்னு பொய் சொல்லிடாதீங்க. ஏன்னா வளர்மதி உங்களுக்கு உதவியாய் ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் செயல்பட்டுகிட்டு இருக்கிற விஷயம் எனக்குத் தெரியும். ஸோ நீங்க எந்த ஒரு விஷயத்தையும் மூடி மறைக்காமே என்கிட்ட பேசலாம் ”

திரிபுரசுந்தரிக்கு ஒரு தற்கால நிம்மதி உணர்வு ஏற்பட, சற்றே துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

” ஸாரி மிஸ்டர் ஹரி ........... வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் என்கிட்டே பணிபுரிகிற விஷயம் எனக்கே கொஞ்சம் உறுத்தலாய்தான் இருந்தது. வளர்மதிகிட்டே நான் எத்தனையோ தடவை நீ ஒரு குடும்ப் பெண்ணாய் இருந்துகிட்டு இப்படியொரு ரிஸ்கியான வேலை பார்க்கிறது சரியில்லைன்னு சொல்லியிருக்கேன். ஆனா வளர்மதி அதைப் பொருட்படுத்தாமே பிடிவாதமாய்.......... ”

” உங்களுக்கு அதுல இஷ்டமில்லைன்னு எனக்கும் தெரியும் மேடம்......இந்த விஷயத்துல நான் உங்களை குற்றம் சொல்ல விரும்பலை.... கடந்த ஆறுமாசத்துக்கு முன்னாடியே வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் இருந்து இந்த சமூகத்துல நடந்துட்டிருக்கிற குறிப்பா பெண்களுக்கு எதிராய் நிகழ்கிற பாலியல் கொடுமைகளை உங்க கவனத்துக்கு கொண்டு வந்து சட்டரீதியான நடவடிக்கைகளை உங்க மூலமா எடுத்து அவங்களைத் தண்டிக்கிற விஷயம் எனக்குத் தெரியும் ”

” எப்படித் தெரியும் ? ”

” உங்க கமிஷனர் ஆபீஸ்ல எத்தனை பேர் வேலை செய்யறாங்க மேடம்? ”

” அம்பதுக்கு மேற்பட்டவங்க ”

” அதுல ஒருத்தர்..... அவர் யார்ன்னு சொல்ல நான் விரும்பலை..... ”

” இட்ஸ் ஒ.கே. மிஸ்டர் ஹரி...... ஆனா இப்ப எனக்கு இருக்கிற சந்தேகம் எல்லாம் இதுதான். வளர்மதி ஒரு ஆபீஸீக்கு வேலைக்கு போய்கிட்டே போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிற விஷயம் தெரிஞ்சிருந்தும் நீங்க ஏன் அவளைக் கண்டிக்கலை...... ? ”

” வளர்மதியோட அந்த ஆக்டிவிட்டீஸ் எனக்குப் பிடிச்சிருந்தது மேடம்... ஆனா வெளிப்படையா அதை தெரிஞ்ச மாதிரி காட்டிகிட்டா வளர்மதிக்கு அடியோடு பயம் விட்டுடும். அதனாலதான் கண்டும் காணாத மாதிரி இருந்துட்டேன் ”

” உங்க ஃபாதர் மதர்க்கு இந்த விஷயம் தெரியுமா ? ”

” தெரியாது மேடம்...தெரிஞ்சா வளர்மதியை ஒரு போலீஸ் இன்ஃபார்மரா சர்வ் பண்ண சம்மதிக்க மாட்டாங்க..... விஷயம் தெரியும்போது பார்த்துக்கலாம்ன்னு நானும் விட்டுட்டேன் ”

” இப்படி நீங்க வளர்மதிக்கு ஆதரவா பேசறது என்னோட மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கு மிஸ்டர் ஹரி. பை...த....பை இப்ப நீங்க எதுக்காக எனக்கு போன் பண்ணீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? ”

” ஷ்யூர்.... வளர்மதி இன்னிக்கு ஆபீஸீக்குப் போகலைன்னு எனக்குத் தெரியும். அவளுக்கு நீங்க ஏதாவது ஒரு அசைன்மெண்ட்டைக் கொடுத்து எங்கேயாவது அனுப்பி வெச்சிருக்கீங்களா ? ”

” ஆமா.... செம்மேடு கிராமம் வரைக்கும் அனுப்பியிருக்கேன். ஒரு இம்பார்ட்டண்ட் என்கொயரி. எனிதிங் இம்பார்ட்டண்ட்........ வளர்மதிகிட்டே ஏதாவது சொல்லணுமா ? ”

” எஸ் மேடம் ”

” என்ன ? ”

” இன்னிக்கு காலையில் என்னோட அப்பாவுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லை. பி.பி.அதிகமாயிடுச்சு.... ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கேன். டாக்டர் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு பயப்படறதுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டார். இருந்தாலும் வளர்மதிக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தி உடனடியாய் வீட்டுக்கு வரச் சொல்லணும். வளர்மதி வீட்டுக்கு வந்துட்டா அம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். நான் கடந்த ஒரு மணி நேரமாய் போன் பண்றேன். வளர்மதி அவெய்லபிளா இல்லை.... நாட் ரீச்சபிள்ன்னு வருது. அதனால்தான் உங்களுக்கு போன் பண்ணினேன் ”

” ஆச்சர்யமாயிருக்கு மிஸ்டர் ஹரி..... ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி கூட நான் வளர்மதிகிட்டே பேசினேனே.. அந்த போன்கால் முடிஞ்ச கொஞ்ச நேரத்துலதான் உங்க போன்கால் வந்தது ”

” தென் நோ ப்ராப்ளம் மேடம்..... நீங்களே வளர்மதிக்கு போன் பண்ணி மெஸேஜை கன்வே பண்ணி உடனடியாய் புறப்பட்டு வீட்டுக்கு வரச் சொல்லிடுங்க ...... ”

” உங்களுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சதுன்னு கேட்டா நான் வளர்மதிக்கு என்ன பதிலைச் சொல்றது மிஸ்டர் ஹரி ”

” உண்மையைச் சொல்லிடுங்க மேடம்..... ஷி வில் பி ஹேப்பி..... இனிமே எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை ”

” நீங்களே போன் பண்ணலாமே ? ”

” என்னோட போன்ல என்ன பிரச்சினைன்னு தெரியலை மேடம்..... அவுட் கோயிங் கால் சரியா போறதில்லை. நீங்க உங்க போன்ல பேசிடுங்க.... விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே வளர்மதியே எனக்கு போன் பண்ணுவா”

” ஒ.கே. நான் உடனே போன் பண்ணி வளர்மதிகிட்டே பேசிடறேன். நான் ரொம்ப நாளா பயந்துட்டிருந்த ஒரு பிரச்சினைக்கு இன்னிக்குத்தான் ஒரு சந்தோஷமான தீர்வு கிடைச்சிருக்கு...... அந்த சந்தோஷத்தோடவே அவகிட்டே பேசறேன். நான் பேசி முடிச்ச அடுத்த நிமிஷமே வளர்மதி உங்களுக்கு போன் பண்ணுவா ”

சொன்ன திரிபுரசுந்தரி ஹரியின் செல்போன் தொடர்பை துண்டித்துவிட்டு வளர்மதியின் செல்போன் எண்ணை காலிங் ஆப்ஷனுக்கு கொண்டு வந்து தேய்த்தாள்.

உடனடியாய் ஒரு ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டது. ” நீங்கள் டயல் செய்த சந்தாதாரின் எண்ணை தற்சமயம் தொடர்பு கொள்ள முடியாது. சர்வீஸ் ஈஸ் அவுட் ஆஃப் கவரேஜ் ”

அந்த ரெக்கார்டட் வாய்ஸைக் கேட்டதும் திரிபுரசுந்தரிக்கு திகைப்பாய் இருந்தது.

” சில நிமிஷங்களுக்கு முன்னாடிதானே பேசினோம். அதுக்குள்ளே டவர் கிடைக்காத இடத்துக்கு போயிருக்க வாய்ப்பில்லையே ? ”

குழப்பத்தோடு மறுபடியும் எண்ணைத் தட்டினாள். அதே ரெக்கார்டட் வாய்ஸ் ஒலித்தது.

சற்றே பதட்டமானாள் திரிபுரசுந்தரி. மனோஜின் செல்போன் எண்ணை சர்ச் ஆப்ஷனில் தேடிப் பிடித்து தேய்த்தாள். ஒரு பெண்ணின் ரெக்கார்டட் வாய்ஸ்

கேட்டது.

” நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபரின் எண்ணானது தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ”

திரிபுரசுந்தரியின் நெற்றி வியர்த்து, இதயத்தின் துடிப்பும் அதிகமாயிற்று.

” இரண்டு பேருமே செல்போனின் டவர் சிக்னல் கிடைக்காத ஏரியா பக்கம் போயிருக்கலாம். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போன் பண்ணிப் பார்ப்போம் ”

மனதை தற்காலிகமாய் தேற்றிக்கொண்டு கட்டிட வாசலில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை நோக்கிப் போனாள் திரிபுரசுந்தரி.

*********************

செம்மேடு பைரவி நகர்....... பெரிய பெரிய பங்களாக்களோடு செழிப்பாய் பார்வைக்குக் கிடைத்தது. காரை ஓரு மரத்துக்கு கீழே நிறுத்திவிட்டு வளர்மதியும், மனோஜூம் முகப்பில் இருந்த அந்தப் பெரிய கேட்டை நெருங்கினார்கள். கேட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு செக்யூர்டி செல் தெரிய செக்யூர்டி ஒருவர் உட்கார்ந்து நாளிதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு தலையை உயர்த்தியவர் எழுந்து வெளியே வந்தார். என்ன வேணும் என்பது

போல் அலட்சியமாய் பார்த்தார்.

மனோஜ் அவரை நெருங்கினான். கையில் வைத்து இருந்த சிறிய தாளைக் காட்டினான்.

” இதுல எழுதி இருக்கிறது ஒரு காரோட நெம்பர். இந்தக் கார்க்கு சொந்தமான நபர் இந்த பைரவி நகர்க்குள்ளே இருக்காரான்னு எங்களுக்குத் தெரியணும் ”

” நீங்க யாரு ? ”

” போலீஸ் ”

” ஸ.....ஸ.....ஸார் ” செக்யூர்டி உடம்பில் பதட்டம்.

” காக்கி யூனிஃபார்ம் போட்டுட்டு வந்தாதான் போலீஸ்ன்னு நம்புவியா.... ? ஒரு கேஸ் சம்பந்தமாய் விசாரணை பண்றதுக்காகத்தான் மஃப்டி ட்ரஸ்ல வந்திருக்கோம். நீ எங்களை போலீஸ்ன்னு நம்பலைன்னா வா..... போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் பேசிக்கலாம் ”

செக்யூர்டி பயந்து போனவராய் அந்த எண்ணைப் பார்த்துவிட்டு தலையாட்டினார். ” இந்த நெம்பர் யாரோடதுன்னு தெரியலை ஸார் ”

” நல்லா பார்த்துச் சொல்லு ”

” ஸார்..... நான் இந்த பைரவி நகர்க்கு கடந்த பத்து வருஷ காலமாய் செக்யூர்டியாய் இருக்கேன். உள்ளே நூத்தி சொச்சம் வீடு இருக்கு. கார் ஒனர்ஸ் அறுபது பேர் இருப்பாங்க. எனக்கு அவங்க காரோட நெம்பர் எல்லாம் மனசுக்குள்ளே நல்லாவே பதிவாகியிருக்கு. ஏன்னா ஒவ்வொரு கார் வெளியே போகும்போதும் திரும்பி வரும்போதுதான் நோட்ல குறிச்சு வெக்கணும்ன்னு அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரி சொல்லியிருக்கார். அவர் சொன்னது மாதிரியே நானும் இத்தனை வருஷமா காரோட நெம்பர்களையெல்லாம் எழுதி எழுதி எல்லாருடைய நெம்பரும் மனப்பாடமா எனக்குத் தெரியும்”

” அப்படீன்னா இந்த நெம்பர் உள்ள கார் பைரவி நகர்க்குள்ளே இல்லைன்னு சொல்றே? ”

” ஆமா ஸார் ”

”இந்த நகரோட அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரியை நாங்க பார்க்கணும்...... ”

” உள்ளே போங்க ஸார்....... முன்னாடியே அஸ்ஸோசியேஷனோட ஆபீஸ் ரூம் இருக்கும். அந்த ரூம்லதான் அவர் இருப்பார். பேரு தட்சிணாமூர்த்தி ”

சொல்லிக்கொண்டே அந்த காம்பெளண்ட் கேட்டை சற்றே திறந்து வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

மஞ்சளாய் பூத்துக்கொட்டிய சரக்கொன்றை மரத்துக்குக் கீழே அந்த ஆபீஸ் கட்டிடம் தெரிந்தது. படியேறி அறைக்குள் போக ஒரு கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்திருந்த அந்த நரைத்த தலை மனிதர் எழுந்த நின்றார். புன்னகைத்து கை நீட்டினார்.

” செக்யூர்டி இப்பத்தான் நீங்க உள்ளே வந்துட்டு இருக்கிறதாய் தகவல் கொடுத்தார். நீங்க போலீஸ் பீப்பிள் ? ”

” எஸ் ”

” உட்கார்ங்க ”

அவர்கள் இருவரும் உட்கார்ந்ததும் கேட்டார். ” சொல்லுங்க என்ன விஷயம்...... நான் தட்சிணாமூர்த்தி, அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரி ”

மனோஜ் தன் கையில் வைத்து இருந்த சிறிய தாளை காட்டியபடி கேட்டான்.

”நேத்து இந்த ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர்க்குரிய கார் இந்த ஏரியாவுக்குள்ளே வந்திருக்கு. காரை ஒட்டிட்டு வந்தவரோட பேர் அபுபக்கர். இந்த நெம்பர் யாரோடதுன்னு உங்களுக்கு தெரியுமா ? ”

அவர் பார்த்துவிட்டு தலையாட்டினார்.

” ஸாரி தெரியலை..... ”

” ஆர் யூ ஷ்யூர் ”

” இதுல பொய் சொல்ல என்ன இருக்கு ? ”

” இங்கே குடியிருக்கிற வேற யார்க்காவது இந்த நெம்பரும், அபுபக்கர் என்கிற பெயரும் பரிச்சயமாக வாய்ப்பு இருக்கா ? ”

தட்சிணாமூர்த்தி புன்னகைத்தார்.

” இந்த நெம்பரை நான் நோட் பண்ணி இங்கே குடியிருக்கிற எல்லார்க்கும் வாட்ஸ் அப் பண்றேன். ஒரு அரைமணி நேரம் இங்கே வெயிட் பண்ண முடியுமா ? ”

” நோ இஷ்யூஸ்........ ஒரு மணி நேரம் வேணும்ன்னாலும் வெயிட் பண்றோம்”

” பை....த......பை........ ஒரு விஷயம் க்ளாரிஃபை பண்ண முடியுமா ? ”

” என்ன ? ”

” யார் இந்த அபுபக்கர்......... எதுக்காக இந்த என்கொயரி ? ”

” ஸாரி..... இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. மொதல்ல அபுபக்கர் இந்த ஏரியாவுக்குள்ளே இருக்காரான்னு தெரியணும் ”

” இட்ஸ் ஆல்ரைட் ” என்று சொன்ன தட்சிணாமூர்த்தி அபுபக்கரின் கார் ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரை பைரவி நகரின் ரெஸிடென்ட்ஸ் வாட்ஸ்அப் க்ரூப்புக்கு அடுத்த சில விநாடிகளுக்குள் அனுப்பி வைத்தார். பிறகு மனோஜ், வளர்மதி இருவரையும் ஏறிட்டார்.

” ஒரு அரைமணி நேரத்துக்குள்ளே அந்த கார் ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரைப்பற்றி யார்க்காவது தெரிஞ்சிருந்தா உடனடியாய் தகவல் வந்துடும். நீங்க வெயிட் பண்ணுங்க..... நான் அதுக்குள்ளே ஒரு ரெஸிடெண்ட்டோட வீட்ல இருக்கிற ஒரு பிரச்சினையை சால்வ் பண்ணிட்டு வந்துடறேன்” சொல்லிக் கொண்டே அவர் நகர முயன்ற விநாடி வளர்மதி தயக்கமாய் குரல் கொடுத்தாள்.

” ஸார்..... ”

” என்னம்மா ? ”

” ரெஸ்ட் ரூம் போகணும்..... இங்கே அதுக்கு இடம் இருக்கா ? ”

தட்சிணாமூர்த்தி திரும்பி நின்று ஒரு இடத்தைக் காட்டினார். ” அதோ பாரம்மா...... அந்த வராந்தா கோடியில் ரெஸ்ட் ரூம் ஒண்ணு இருக்கு..... ”

” தேங்க்யூ ஸார் ” சொல்லிக்கொண்டே வளர்மதி எழுந்தாள். மனோஜைப் பார்த்தாள்.

அவன் புன்னகைத்தான்.

” நிதானமா போய்ட்டு வா..... வளர் ”


(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X