• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னப்பா..... பேச்சைக் காணோம்?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (33)

|

-ராஜேஷ்குமார்

ஈஸ்வரின் பார்வை அப்படியே நிலைத்தபோக போனில் மேற்கொண்டு பேசாமல் மெளனம் காத்தார். போனின் மறுமுனையில் இருந்த தீபக் கேட்டான். குரலில் லேசாய் பதட்டம்.

” என்னப்பா..... பேச்சைக் காணோம் ? ”

” தீபக்...... போன நிமிஷம் வரைக்கும் எம் முன்னாடி நின்னுகிட்டு சுட்டுடாதே ஈஸ்வர்ன்னு உயிர் பயத்துல கத்திகிட்டு இருந்த அபுபக்கர் இப்போ தரையில் விழுந்து மல்லாந்து கிடக்கிறார். என்னாச்சுன்னு தெரியலை.. இரு போய்ப் பார்க்கிறேன் ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 33

” அ.....அப்பா...... கொஞ்சம் நிதானிங்க.... இப்ப உணர்ச்சிவசப்பட்டு பக்கத்துல போயிடாதீங்க..... அபுபக்கர் சாதாரண நபர் இல்லை..... உங்களைத் தாக்க முயற்சி செய்யலாம் ”

” தீபக்..... நீ அதைப்பற்றி கவலைப்படாதே..... நான் பார்த்துக்கிறேன். பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் நான் போன் பண்றேன் ” சொன்ன ஈஸ்வர் செல்போனை அணைத்துவிட்டு கையில் துப்பாக்கியோடு எழுந்து நின்றார். பதினைந்து அடி தூரத்தில் உடம்பில் சலனமில்லாமல் மல்லாந்து கிடக்கும் அபுபக்கரை உற்றுப் பார்த்தார். மனசுக்குள் ஒரு சின்ன பயம் எட்டிப் பார்த்தது.

” அபுபக்கர்க்கு என்னாயிற்று ஆள் நடிக்கிறாரா ?”

” பக்கத்தில் போய் பார்க்கலாமா வேண்டாமா ?” ஈஸ்வர் குழப்பமான யோசனையோடு அபுபக்கரைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே பக்கவாட்டில் குரல் கேட்டது.

” ஸார் ”

ஈஸ்வர் திரும்பிப் பார்த்தார்.

அறையின் வாசலில மாதவன் நின்றிருந்தான். ஈஸ்வரின் உடம்புக்குள் சின்னதாய் ஒரு தைரியம் பிறக்க அவனை கையசைத்துக்கூப்பிட்டார். மாதவன் கீழே விழுந்து கிடக்கும் அபுபக்கரைப் பார்த்துக் கொண்டே ஈஸ்வர்க்குப் பக்கத்தில் வந்தான். உச்சபட்ச பதட்டத்தோடு கேட்டான்.

” அபு ஸார் ஏன் இப்படி கீழே விழுந்து கிடக்கார். என்னாச்சு ஸார் ?”

” மாதவன்....நம்ம க்ரூப்புல இருக்கிறவங்க யாராயிருந்தாலும் அவங்க போலீஸ் வளையத்துக்குள்ளே மாட்டிகிட்டாங்கன்னா அவங்க உயிரோடு இருக்கக்கூடாதுங்கிற ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கா இல்லையா ?”

” இ....இ......இருக்கு ஸார் ”

” அபுபக்கரை போலீஸ் ஸ்மெல் பண்ணிட்டதால அவர் இனி உயிரோடு இருக்கக்கூடாதுன்னு நினைச்சு கையில் துப்பாக்கியை எடுத்தேன். அந்த நேரம் பார்த்து ஃபாரீனிலிருந்து தீபக் போன்ல கூப்பிட்டான். நான் தீபக் கூட போன்ல பேசிட்டு இருக்கும்போதே அபு கீழே விழுந்துட்டார். நீ பக்கத்துல போய் என்னான்னு பாரு..... கொஞ்சம் எச்சரிக்கையாய் போ ”

தலையாட்டிய மாதவன் மெதுவான நடையில் போய் அபுபக்கர்க்கு பக்கத்தில் குனிந்து அவரைப் புரட்டினான். உடல் ஒரு வேகமான அசைவுக்கு உட்பட கடைவாயில் ரத்தம் எட்டிப் பார்த்து, ஒரு நூலிழை மாதிரி வழிந்தது. நாடித் துடிப்பையும், சுவாசிப்பையும் சோதித்துப் பார்த்த மாதவன் ஈஸ்வரை ஏறிட்டான்.

” ஆள் போயிட்டார் ஸார் ”

” எப்படி ?” கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தார் ஈஸ்வர்.

” ஹார்ட் அட்டாக்ன்னு நினைக்கிறேன் ஸார். அதான் வாய்ல ப்ளட் வருது... ”

அபுபக்கரின் உடலைப் பார்த்த ஈஸ்வரின் உதட்டோரம் ஒரு கேலியான புன்னகை அரும்பியது.

” நீ சொன்னது சரியாய் இருக்கலாம் மாதவன். ஏன்னா அபுபக்கர்க்கு ஏற்கனவே ” அரித்மியா ” என்கிற பேர்ல ஒரு இதய நோய் இருக்கு. அந்த நோய்க்கு போன வருஷம் வரை அவர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருந்த விஷயமும் எனக்குத் தெரியும். நான் துப்பாக்கியை கையில் எடுத்ததும் அந்த அதிர்ச்சியில் அபுவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கலாம். எனக்கு ஒரு தோட்டா மிச்சம் ”

மாதவன் நிமிர்ந்தான். ” பாடியை எப்படி ஸார் டிஸ்போஸ் பண்றது ?”

” நீ மொதல்ல நர்மதாவைக் கொண்டு போய் பங்களாவுக்குப் பின்னாடி இருக்கிற அவுட் ஹவுஸ் அண்டர் க்ரெளண்ட் செல்லர் ரூம்ல படுக்க வெச்சுட்டு வா..... அபுவோட பாடியை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு நான் சொல்றேன் ”

மாதவன் தலையாட்டிவிட்டு சோபாவில் சலனமில்லாமல் சரிந்து கிடந்த நர்மதாவை நோக்கிப் போனான். ஈஸ்வர் அபுபக்கரைப் பார்த்தப்படியே சோபாவுக்குப் போய் சாய்ந்து கொண்டு வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மகன் தீபக்கை செல்போனில் தொடர்பு கொண்டார்.

” தீபக் ”

” என்னாச்சுப்பா ?”

” அபு என்னோட தோட்டாவுக்கு வேலை கொடுக்காமே ஹார்ட் அட்டாக்லேயே போயிட்டார்..... ஒரு பிரச்சினை முடிந்தது ”

தீபக் மறுமுனையில் ” அப்பா ” என்று குரலை இழுத்தவன் சற்றே பதட்டமான குரலில் பேசினான்.

” நானும் டாக்டர் ஜான் மில்லரும் அடுத்த வாரம் அங்கே இருப்போம். முக்கியமான சில நானோஜீன் தெரபி பரிசோதனை பண்ணிப் பார்க்க வேண்டியிருக்கு. குறைஞ்சபட்சம் பத்து மனித எலிகளாவது வேணும்.... அதுக்கான ஏற்பாட்டை பண்ண வேண்டியது உங்க பொறுப்பு ”

” மனோஜூம் மாதவனும் அதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்காங்க..... நர்மதா என்கிற ஒரு எலி இப்போ ரெடியாய் இருக்கு..... இன்னொரு எலியையும் இங்கே கொண்டுட்டு வர முயற்சியில் இருக்கேன் ”

” இன்னொரு எலியா ? ”

” ஆமா எலியோட பேர் வளர்மதி ”

” அந்த எலி பொறியில் மாட்டுமா ? ”

” மனோஜ் என்கிற ஒரு பொறிதான் நம்மகிட்டே இருக்கே ”

தீபக் தயக்கமான் குரலில் ” அப்பா ” என்று கூப்பிட்டான்

” என்ன சொல்லு ? ”

” போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருக்கிற உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் கடைசிவரைக்கும் நமக்கு லாயலா இருப்பாங்க என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கா ? ”

” அதுல உனக்கு என்ன சந்தேகம் ? ”

” சி.பி.ஐ. போலீஸ் நம்ம விஷயத்துல இன்வால்வாகியிருக்கிறதால நமக்கு ஒரு பிரச்சினைன்னு வரும்போது தமிழ்நாட்டு போலீஸ் பின்வாங்க வாய்ப்பு அதிகம் ”

” தீபக் ....... நீ அதைப்பத்தி கவலைப்படாதே டெல்லி சி.பி.ஐ.யிலும் நமக்கு வேண்டிய ஆபீஸர்ஸ் இருக்காங்க. சில்பாவை நாம கடத்தினதுக்கு உதவி பண்ணுனதே சி.பி.ஐ.யில் இருக்கிற ஆபீஸர் வைத்யாதான் ”

” அப்பா.....நாம கொடுத்த பணத்துக்கு அந்த வைத்யா வாலை ஆட்டிட்டார். ஆனா எல்லா சி.பி.ஐ. ஆபீஸர்ஸூம் அந்த வைத்யா மாதிரியே இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. நாம எதுக்குக் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கிறது நல்லது”

” இதோ பார் தீபக்..... இந்த விஷயத்தைப் பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே. இங்கே எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன். அபுபக்கர் இப்போ உயிரோடு இல்லாததினால போலீஸீக்கு நான் இருக்கிற திசை கூட தெரியாது”

” அப்பா..... ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க ?”

” என்ன ? ”

” அந்த வளர்மதி உங்க பிறந்தநாளன்னிக்கு நேர்ல வந்து ஒரு சோசியல் வொர்க்கர் மாதிரி தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு நீங்க நடத்தி வெச்ச இலவச திருமணங்களைப் பாராட்டிட்டு போயிருக்கா. எனக்கு நல்லாவே தெரியுது. அவ உங்களை பாராட்டறதுக்காக வரலை. உங்களை பேச வெச்சு பல்ஸ் பார்த்துட்டுப் போயிருக்கா ”

ஈஸ்வர் சிரித்தார்.

” அது எனக்குத் தெரியாதா என்ன.... ? நாம போற பாதையில யார் குறுக்கே வந்தாலும் அவங்க கொஞ்ச நாளைக்குத்தான் உயிரோடு இருப்பாங்க..... அந்த வளர்மதியும் இப்போ நம்ம வட்டத்துக்குள்ளே வந்துட்டா. இப்போ போலீஸோட கவனம் பூராவும் அபுபக்கர் எங்கே இருப்பார் என்கிற எண்ண ஒட்டத்துலதான் இருக்கும். போலீஸ் அவரை தேடிகிட்டு இருக்கும்போதே வளர்மதியையும் தேட வெச்சிடுவோம் ”

” அப்பா எதைச் செய்யறதாய் இருந்தாலும் அதை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசனை பண்ணி செய்யுங்க. ஏன்னா ப்ராஜக்ட்டோட இறுதிகட்டம் இது. இந்த கட்டத்தை மட்டும் நாம் வெற்றிகரமாய் க்ராஸ் பண்ணிட்டோம்ன்னா அப்புறம் நாம எதுக்கும் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை ”

”இதோ பார் தீபக் இங்கே நடக்கிற விஷயங்களைப்பத்தின கவலை உனக்கு கொஞ்சமும் வேண்டாம். நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் ” உற்சாகக் குரலில் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தார் ஈஸ்வர்.

மறுநாள் காலை பதினோரு மணி

டி.ஜி.பி.அலுவலகம் - போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி, டி.ஜி.பி.பஞ்சாபகேசன் அறையில் உட்கார்ந்து அவரை ஏறிட்டபடி தயக்கமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

”ஸார்..... அந்த அபுபக்கரை கடந்த 24 மணி நேரமாய் தேடிட்டு இருக்கோம். ஆள் அகப்படலை. அவர் வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்த வேலைக்காரியை ஸ்டேஷன் லாக்கப்புக்கு கொண்டு வந்து முறைப்படி விசாரிச்சு பார்த்துட்டோம். அவகிட்டயிருந்து எந்த ஒரு உண்மையையும் வரவழைக்க முடியலை. அபுபக்கரோட வீட்டை சி.பி.ஐ. அதிகாரிகளும், நம்ம டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த அதிகாரிகளும், தரோவா செக் பண்ணிப் பார்த்துட்டாங்க. எந்த ஒரு தடயமும் உபயோகப்படற மாதிரி கிடைக்கலை”

டி.ஜி.பி.பஞ்சாபகேசன் உதட்டில் ஒரு கேலியான புன்னகை அரும்பியது.

” மிஸஸ் திரிபுரசுந்தரி..... அந்த இலவச திருமண அஞ்சு ஜோடிகள் மரணம் சம்பந்தப்பட்ட கேஸில் இதுவரைக்கும் நீங்க உருப்படியாய் ஒரு விஷயத்தைக்கூட கண்டுபிடிக்கலை. நீங்க இங்கே வந்து என்னை சந்திக்கும் போதெல்லாம் சொல்ற வார்த்தைகள் ரெண்டே ரெண்டுதான். ஒரு வார்த்தை ஸாரி, இன்னொரு வார்த்தை எப்படியும் ஒரு வாரத்துக்குள்ளே உண்மைகளை வெளியே கொண்டு வந்துவிடுவேன். இன்னிக்கும் அதைச் சொல்லத்தான் வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன் ”

திரிபுரசுந்தரி லேசாய் முகம் கறுத்துப் போனவளாய் தலையைக்குனிந்து கொள்ள டி.ஜி.பி. தொடர்ந்து பேசினார்.

” நான் இப்படி சொன்னதால் உங்களை நான் இன்சல்ட் பண்ணிட்டதாய் நீங்க நினைக்கலாம். நிச்சயமா நான் அந்த எண்ணத்துல பேசலை. இந்த கேஸீக்குள்ளே மிகப்பெரிய ஒரு மெடிக்கல் க்ரைம் இருக்கு. அந்த க்ரைமும் பெண்களோடு சம்பந்தப்பட்ட ஒரு விபரீதமான விவகாரம். இதை சி.பி.ஐ.க்கு முன்னாடி நாம கண்டுபிடிச்சா இந்திய அளவில் தமிழ்நாட்டோட போலீஸின் திறமை கொண்டாடப்படும்ன்னு நினைச்சேன். ஆனா இந்த கேஸை நீங்க இன்வெஸ்டிகேட் பண்ணின நாளில் இருந்து எந்தவிதமான ஒரு ப்ராக்ரஸ்ஸீம் இல்லை. இனிமேலும் இந்த கேஸை உங்களால வெற்றிகரமாய் கையாள

முடியும்ன்னு நான் நினைக்கலை. ஸோ இந்த கேஸை சி.பி.சி.ஐ.டி போலீஸீக்கு மாத்தலாம்ன்னு நினைக்கிறேன் ”

திரிபுரசுந்தரி பதட்டமாய் குறுக்கிட்டாள்.

”வே....வேண்டாம் ஸார்..... எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே அபுபக்கர் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுடுவோம் ”

” எப்படி கண்டுபிடிப்பீங்க ?”

” ஒரு க்ளூ கிடைச்சிருக்கு ஸார் ”

” என்ன க்ளூ?”

” அபுபக்கர் எங்கே யார் வீட்ல தலைமறைவாய் இருக்கார்ன்னு தெரியாது ஸார். ஆனா எந்த ஏரியாவில் இருக்கார்ங்கிறதைக் கண்டுபிடிச்சுட்டோம் ”

” எந்த ஏரியா ?”

” சிறுவாணிக்கு போகிற மெயின்ரோட்டில் செம்மேடுன்னு ஒரு கிராமம் இருக்கு ஸார் ”

” ஆமா..... ஆலாந்துறையைத் தாண்டியதும் அந்த செம்மேடு கிராமம் வரும் ”

” அந்த ஏரியாவில்தான் அபுபக்கர் போலீஸீக்கு பயந்து பதுங்கியிருக்கார் ஸார் ”

- (தொடரும்)


[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X