• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன பேச்சையே காணோம் ?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (34)

|

-ராஜேஷ்குமார்


திரிபுரசுந்தரி சொன்னதைக்கேட்டு டி.ஜி.பி.பஞ்சாபகேசன் வியப்பு பரவிக்கொண்ட முகத்தோடு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

” என்னது அபுபக்கர் செம்மேடு கிராமத்து ஏரியாவில் போலீஸீக்குப் பயந்து போய் பதுங்கியிருக்காரா ? ”

” ஆமா..... ஸார் ”

” அந்த ஏரியாவில்தான் பதுங்கியிருக்கார்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ? ”

” ஸார்...... அபுபக்கர் வீட்ல இல்லைன்னு தெரிஞ்ச பிறகு நான் ட்ராஃபிக் போலீஸ் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த அஸிஸ்ட்ண்ட் கமிஷனர் சந்திரசேகர்க்கு போன் பண்ணி அபுபக்கரின் கார், ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரை கொடுத்து சிட்டியோட ஏரியாவில் இந்தக் கார் எங்கே இருக்குன்னு மானிட்டரிங் பண்ணச் சொன்னேன். அவர் உடனடியாய் செயல்பட்டார். அதுக்கான பலன் சில மணி நேரத்துக்குப் பின்னாடிதான் எனக்குக் கிடைச்சுது. அதுவும் அத்தாட்சியோடு ”

” அத்தாட்சியோடுன்னா எனக்குப்புரியலை....... என்ன அத்தாட்சி ? ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 34

”என்ஃபோர்ஸ்மெண்ட் விங் ஆஃப் ட்ரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த ஆபீஸர் ருத்ரபதியோட தலைமையில் ட்ராஃபிக் ரூல்ஸை வயலேட் பண்றவங்களைக் கண்டு பிடிச்சு ஃபைன் பண்றதுக்காக சிறுவாணி மெயின் ரோட்டில் அஸிஸ்ட்ண்ட் கமிஷனர் சந்திரசேகர் ஒரு ஸ்க்வாட் போலீஸோடு மானிட்டரிங் பண்ணிட்டு இருந்தார். அந்த வழியாத்தான் அபுபக்கர் காரை ஒட்டிகிட்டு போயிருக்கார். ட்ரைவிங் சீட்ல இருந்த அவர் சீட் பெல்ட் போடாமே இருந்ததால காரை நிறுத்தி அவருக்கு ஃபைன் போட்டு இருக்காங்க. ஆனா நான் கொடுத்த தகவல் சந்திரசேகர்க்கு லேட்டாய் போய் சேர்ந்ததால அபுபக்கரோட காரை ஃபைன் பண்ணிட்டு விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு சந்திரசேகர் ஃபைன் பண்ணினவங்களோட லிஸ்ட்டை சரி பார்க்கும்போதுதான் அபுபக்கரோட நேமை நோட் பண்ணியிருக்கார். நான் கொடுத்த காரோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் அந்தப் பெயரோடு பொருந்திப் போகவே, எனக்கு உடனடியாய் தகவல் கொடுத்துட்டார். செம்மேடுப்பக்கம் போன அந்தக் கார் எப்படியும் திரும்பவும் சிட்டிக்குள்ளே ஏதாவது ஒரு வழியில் வந்தாகணும். அந்த சமயத்துல அதை மடக்கிடலாம்ன்னு சந்திரசேகர் சொல்லியிருக்கார் ” திரிபுரசுந்தரி சொல்ல சொல்லவே டி.ஜி.பி. குறுக்கிட்டு கேட்டார்.

” ஆனா இதுவரைக்கும் கார் சிட்டிக்குள்ளே வரலை ? ”

” வரலை ஸார்.... சந்திரசேகர் என்ஃபோர்ஸ்மெண்ட் விங் ஆஃப் ட்ரான்ஸ்போர்ட் ஆட்களை வெச்சு மானிட்டரிங் பண்ணிட்டிருக்கார். அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை எனக்குத் தகவல் கொடுத்துட்டு இருக்கார் ”

” இந்த மானிட்டரிங் நடந்துகிட்டு இருக்கும் போதே அந்த செம்மேடு ஏரியாவுக்குள்ளே போய் கார் எங்கேயிருக்குன்னு ஒரு தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கலாமே ? ”

” அந்த தேடுதல் வேட்டையை ஆல் ரெடி ஆரம்பிச்சுட்டேன் ஸார் ”

” எப்படி........ ? ”

” எனக்கு உதவியாய் இருக்கிற போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியும் ஃபாரன்ஸிக் ஆபீஸர் மனோஜூம் அந்த ஏரியாவுக்குள்ளே போய் அங்கே பொது இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கிற சி.சி.டி.வி.காமிராக்களின் ஃபுட்டேஜ்களை வாங்கிப் பார்த்து அபுபக்கரின் கார் எந்த திசையில் யார் வீட்டுக்குப் போயிருக்கும் என்கிற விபரத்தை தெரிஞ்சுக்கிற முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்க ”

” செம்மேடு கிராமத்தையொட்டி வேற ஏதாவது கிராமங்கள் அந்த ஏரியாவில் இருக்கா ? ”

” அது ஒரு காட்டுப்பகுதி ஸார்..... அதையொட்டி பல கிராமங்கள் இருக்கு. அஞ்சு கிலோ மீட்டர் தூரம் தள்ளி வெள்ளியங்கிரி மலை. மேற்கொண்டு போக அந்தப்பக்கம் வழியில்லாத்தால காட்டுப்பக்கமாய் போன அபுபக்கர் எப்படியும் நகர் பக்கம் திரும்பி வந்துதான் ஆகணும் ஸார்”

” ஸோ அபுபக்கர் உங்க மானிட்டரிங் ப்ராஸ்ஸிங்கில் இருந்து தப்பிக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்க ? ”

” எஸ் ஸார் ”

” சரி எவ்வளவு நாள்ல இந்தக் கேஸை முடிக்க முடியும்ன்னு நினைக்கிறீங்க ? ”

” அபுபக்கர் கைக்கு கிடைச்சதுமே அந்த ஆள்கிட்டயிருந்து எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வந்துடுவேன் ஸார் ”

” ஒருவேளை அபுபக்கர் கைக்கு கிடைக்கலைன்னா ? ”

திரிபுரசுந்தரி மெளனித்தாள். டி.ஜி.பி. ஒரு கேலிப்புன்னகையுடன் கேட்டார்.

” என்ன பேச்சையே காணோம் ? ”

” ஸார் நான் இப்போ பாஸிட்டீவ் ஆட்டிட்யூட்ல இருக்கேன். ப்ளீஸ் டோண்ட் டிஸ்கரேஜ் மீ....... அபுபக்கர் இப்போ தலைமறைவாய் இருக்கார். இந்த காரணம் ஒண்ணே போதும். அவர் ஒரு தப்பான நபர்ன்னு தெரிஞ்சுக்க..... அவர் ரொம்ப நாளைக்கு தலைமறைவு வாழ்க்கையை நடத்த முடியாது. எப்படியாவது வெளியே வந்துதான் ஆகணும்...... ”

” ஒ.கே..... மிஸஸ் திரிபுரசுந்தரி..... திஸ் ஈஸ் த லாஸ்ட் சான்ஸ் ஃபார் யூ....... நீங்க எப்பவும் வழக்கமாய் கேட்கிற அந்த ஒரு வார அவகாசத்தை இப்பவும் தர்றேன். அயாம் இன் வான்ட் ஆப் ஒன் ஃப்ரூட்புல் ரிசல்ட் ஃப்ரம் யூ ரிலேட்டட் வித் திஸ் ப்ரோப் ”

” எஸ்..... ஸார் ”

டி.ஜி.பி. கை கொடுத்தார். ” விஷ்..... யூ....... ஆல் த பெஸ்ட்”

” தேங்க்யூ ஸார் ”

திரிபுரசுந்தரி எழுந்து கொண்டாள். டி.ஜி.பி.க்கு உத்யோகபூர்வமான சல்யூட்டை கொடுத்துவிட்டு அறையினின்றும் வெளிப்பட்டு வராந்தாவில் நடந்தாள். நடக்க நடக்கவே அவளுக்கு வளர்மதி, மனோஜ் நினைவு வர தன்னுடைய செல்போனை எடுத்து வளர்மதியின் எண்ணை தொடர்பு கொண்டாள்.

” வளர் ”

” மேடம் ”

” நீயும் மனோஜூம் இப்ப எங்கே இருக்கீங்க ? ”

” செம்மேடு ஏரியாவில் பைரவி நகர்ன்னு ஒரு காலனி இருக்கு மேடம். அந்த காலனியில் ஃபாரினிலியிருந்து வந்த நிறைய என்.ஆர்.ஐ. பீப்பிள் புதுசா பெரிய பெரிய பங்களாவைக் கட்டிகிட்டு குடியிருக்காங்க..... அந்த பங்களாக்களில் குடியிருக்கிற யாராவது ஒருத்தர் வீட்டுக்கு அபுபக்கர் போயிருக்கலாம்ன்னு மனோஜ் கெஸ் பண்ணிச் சொன்னார். அந்த பைரவி நகரை நோக்கித்தான் போய்கிட்டு இருக்கோம்....... ”

இதுவரைக்கும் நமக்கு உபயோகப்படற மாதிரி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா ? ”

” நாட் யெட் மேடம் ”

” அந்த ஏரியாவில் இருக்கிற சி.சி.டி.வி.காமிரா ஃபுட்டேஜ் எல்லாத்தையும் பார்த்துட்டீங்களா ? ”

” ஏறக்குறைய பார்த்துட்டோம் மேடம். ஆனா பல இடங்களில் இருக்கிற சி.சி.டி.வி.காமிராக்கள் சரியா ஃபங்க்சன் ஆகாத காரணத்தால பதிவான

காட்சிகள் அவ்வளவு தெளிவா தெரியலை..... ”

” வளர்..... நான் இப்ப டி,ஜி.பி.கிட்டே பேசிட்டு வர்றேன். நாம இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்றதுல அவர்க்கு நிறைய டிஸ்சாட்டிஸ்பேக்சன்...... கடினமான வார்த்தைகளை யூஸ் பண்றார்..... அவர் கேட்கிற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியலை.... எனக்கு ஒரு வாரம் டயம் கொடுத்திருக்கார். அதுக்குள்ளே இந்த கேஸில் இருக்கிற எல்லா குழப்பங்களுக்கும் தெளிவான பதில் கிடைக்கணும்ன்னு சொல்லிட்டார். இல்லேன்னா இந்த கேஸை சி.பி.சி.ஐ.டிக்கு ஷிஃப்ட் பண்ணிடப் போறதா சொல்றார். இந்த கேஸ் எனக்கு இப்ப ஒரு ப்ரஸ்டீஜ் இஷ்யூவாயிருச்சு. அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே அந்த அபுபக்கர் இருக்கிற இடத்தை நீயும் மனோஜூம் ஸ்மெல் பண்ணியே ஆகணும் ”

” ஷ்யூர் மேடம் ”

” மனோஜ்கிட்டே நான் ஒரு நிமிஷம் பேசணும். போனை அவர்கிட்ட குடு ”

திரிபுரசுந்தரி லைனில் காத்திருக்க மறுமுனையில் மனோஜின் குரல் கேட்டது.

” சொல்லுங்க மேடம்.,...... ”

” மனோஜ்........ அந்த அபுபக்கரை அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே நாம கண்டுபிடிச்சாத்தான் நாம விசாரணையோட அடுத்த கட்டடத்துக்குப் போய் குற்றவாளிகளை நெருங்க முடியும்

” புரியுது மேடம் ”

” புரிஞ்சு என்ன பிரயோஜனம் மனோஜ் ? நாம எல்லாருமே நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்துட்டு இருக்கோமே தவிர அதை முறையா ஃபாலோ அப் பண்ணி இதுவரைக்கும் எந்த ஒரு உண்மையும் கண்டுபிடிக்க முடியலை..... இனிமேலும் அப்படி இருக்க முடியாது..... நாம ஏதாவது பண்ணியாகணும் ”

” யூ டோண்ட் வொர்ரி மேடம்..... அபுபக்கர் இந்த ஏரியாவில்தான் பதுங்கியிருக்கார்ன்னு தெளிவா தெரிஞ்சுடுச்சு. அந்த ஆளை எப்படியும் மடக்கிடலாம். நானும் வளர்மதியும் அதுக்கான முழு முயற்சிகளை எடுத்துகிட்டு ஒவ்வொரு பகுதியாய் போய் பார்த்துட்டு வர்றோம்..... இப்ப கூட நாங்க போயிட்டு இருக்கிற ஏரியாவோட பேர் பைரவி நகர். அந்த நகர்ல அபுபக்கரைப்பற்றி விசாரிச்சா தகவல் ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்கு மேடம் ”

” தட்ஸ் குட்..... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்....... ”

” சொல்லுங்க மேடம் ”

” வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிற விஷயம் அவ வீட்ல இருக்கிற ஃபேமிலி மெம்பர்ஸ்க்குத் தெரியாது..... ஸோ..... சாயந்தரம் அஞ்சுமணிக்கு மேல் வளர்மதியை எந்த இடத்துக்கு கூட்டிகிட்டு போக வேண்டாம். அவளை அனுப்பிடுங்க ”

” அது எனக்குத் தெரியாதா மேடம்..... நாலு மணியானதுமே வளர்மதியை வீட்டுக்கு அனுப்பிட்டு நான் மட்டும் இந்த ஏரியாவில் இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணலாம்ன்னு இருக்கேன் ”

” மனோஜ் இந்த விஷயத்துல நீங்களும் எச்சரிக்கையோடு இருக்கிறது நல்லது. ஜெனிக்டிஸ்ட் ஸ்டீபன்ராஜ் கொலை செய்யப்பட்ட விவாகரத்தில் ஏதோ ஜீன் சம்பந்தப்பட்ட க்ரைம் இருக்கலாம்ன்னு டி.ஜி.பி.சொன்னார். இட் ஸீம்ஸ் டு பி இன்டர்நேஷனல் க்ரைம் அக்கரன்ஸ். இதுக்குப்பின்னாடி அரசியல் ரீதியாகவும், அந்தஸ்து ரீதியாகவும் சில பவர்ஃபுல் பர்சன்ஸ் இருக்க வாய்ப்பு அதிகம்...... ”

” மேடம்...... இது ஒரு பெரிய விவகாரம்ன்னு எனக்கும் தெரியும். நானும் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாய்தான் எடுத்து வெச்சிட்டிருக்கேன். அபுபக்கரையும் எப்படியும் அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே மடக்கிடலாம் மேடம் ”

திரிபுரசுந்தரியின் உதடுகளில் சின்னதாய் ஒரு சந்தோஷப் புன்னகை அரும்பியது.

” திஸ்... ஈஸ் மனோஜ். உங்க மேலேயும், வளர்மதி மேலேயும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அடுத்த சில மணி நேரத்துக்குள்ளே உங்ககிட்டயிருந்து ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன் ”

” சர்ட்டன்லி மேடம் ”

திரிபுரசுந்தரி அதே சந்தோஷப் புன்னகையுடன் செல்போனை அணைத்த அடுத்த சில விநாடிகளில் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். ஒரு புது எண்.

குழப்பத்தோடு செல்போனை இடது காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தாள்.

” எஸ் ”

” கமிஷனர் மேடமா ? ” ஒரு ஆண் குரல் கேட்டது.

” ஆமா...... நீங்க யாரு .... ? ”

” மேடம்....என் பேரு ஹரி..... வளர்மதியோட ஹஸ்பெண்ட்...... ”


[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X