For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேங்க்யூ இன்ஸ்பெக்டர் .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (38)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஆர்.எஸ்.புரத்தின் மையப்பகுதியில் இருந்த ஹெல்த்தி டேஸ் ஹாஸ்பிடலுக்கு முன்பாய் போய் போலீஸ் ஜீப் நிற்க, வளர்மதி இறங்கிக் கொண்டு குணசேகரனுக்கு நன்றி சொன்னாள்.

" தேங்க்யூ இன்ஸ்பெக்டர் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் "

ஜீப்பில் அமர்ந்தபடியே இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிரித்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 37

" மிஸஸ் வளர்மதி......! நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்லை கமிஷனர் மேடத்துக்குத்தான். அவர் எனக்கு போன் பண்ணி விஷயத்தை கன்வே பண்ணினதாலத்தான் நான் பைரவி நகருக்கு வந்து உங்களை " பிக் அப் " பண்ணி இங்கே கொண்டு வந்து " ட்ராப் " செய்ய முடிஞ்சுது. நீங்க மொதல்ல உங்க ஃபாதர் இன் லாவைப் போய்ப் பாருங்க........ "

ஜீப் நகர்ந்துவிட வளர்மதி அகலமான மார்பிள் படிகளில் ஏறி ஹாஸ்பிடலின் வரவேற்பறைக்குள் நுழைய எதிரில் அவளுடைய கணவன் ஹரி எதிர்பட்டான். கலைந்த தலை. களைப்படைந்த முகம். மெல்ல சிரித்தபடி சொன்னான்.

" உனக்கு போன் பண்ணலாம்ன்னு இருந்தேன். நீயே வந்துட்டே. போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி இப்பத்தான் என்கிட்டே பேசினாங்க "
வளர்மதி தலையைக் குனிந்து மெல்லிய குரலில் " ஸாரி " என்றாள்.

" எதுக்கு இப்போ ஸாரி ? "

" ஒரு கணவன் மனைவிகிட்டே எந்தவிதமான ஒளிவுமறைவும் இருக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நான் உங்ககிட்டே மட்டும் இல்லை. அத்தை மாமாகிட்டேயும் நிறைய விஷயங்களை மறைச்சுட்டேன். பொய் நிறைய பேசிட்டேன் "

ஹரி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்லக்குரலில் தாழ்த்தினான்.

" இதோ பார் வளர்..... ஒரு நல்ல விஷயத்துக்காக பேசப்படுகிற பொய்கள் உண்மையைக் காட்டிலும் உன்னதமானவைன்னு சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கார். நீ ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிற விஷயம் என்னோட அம்மா, அப்பாவுக்கு வேணும்ன்னா கொஞ்சம் அதிர்ச்சியாய் இருக்கலாம். ஆனா எனக்கு அது ஆனந்த அதிர்ச்சி. அம்மா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வரும்போது அவங்களை எப்படி கன்வின்ஸ் பண்ணி சமாதானப்படுத்தறதுன்னு எனக்குத் தெரியும். நீ மனசைப் போட்டுக் குழப்பிக்க வேண்டாம் "

" நீங்க இப்படி பேசறது எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கு தெரியுங்களா ...... "

" வளர்......எனக்கும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சாகசங்கள் செய்யப் பிடிக்கும். ஆனா எனக்கு இருக்கிற பிசியான வேலை ஷெட்யூலில் அதெல்லாம் சாத்தியமில்லை. அது உனக்கு சாத்தியப்பட்டிருக்கு. அதை என்கரேஜ் பண்ண வேண்டியது என்னோட கடமை. போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. உன்னோட உயிர் பாதுகாப்புக்கும் அவங்க தேவையான முறையான ஏற்பாடுகளை பண்ணுவாங்கங்கிற விபரமும் எனக்குத் தெரியும். அதனாலதான் உன்னோட விஷயத்துல நான் ரொம்பவும் தைரியமாய் இருந்தேன் "

" சரி.... மாமாவுக்கு இப்போ எப்படியிருக்கு ? " லிஃப்ட்டுக்குள் நுழைந்து கொண்டே வளர்மதி கேட்டாள்.

" அவர் இப்போ நார்மலுக்கு வந்து பெட்ல ஹாய்யா உட்கார்ந்து டி.வியில் படம் பார்த்துட்டிருக்கார் "

" மாமாவுக்கு திடீர்ன்னு பி.பி.எப்படி அதிகமாச்சு ? "

" இன்னமும் சின்னப்பையன் மாதிரி தினமும் நொறுக்குத்தீனி சாப்பிட்டா பி.பி.ஏறாமே இருக்குமா ? "

அத்தை கண்டிக்க மாட்டாங்களா ? "

" சரியாப் போச்சு...... ரெண்டு பேரும் சேர்ந்துதானே சாப்பிடறாங்க "

" மாமாவையும் அத்தையையும் நான் பேசிக்கிறேன் "

லிஃப்ட் மூன்றாவது மாடியில் நின்று கதவுகளைத் திறந்துவிட வளர்மதியும், ஹரியும் வெளியே நின்று வராந்தாவில் நடை போட்டார்கள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 37

" ஹாஸ்பிடல் சுத்தமாய் மருந்து வாசனையில்லாமே இருக்கு....... " வளர்மதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கைப்பைக்குள் இருந்த செல்போன் டயல்டோனை வெளியிட்டது. நடந்து கொண்டே செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

மறுமுனையில் மனோஜ் அழைத்துக் கொண்டிருந்தான். எடுத்து காதுக்கு ஒற்றினாள்.

" என்ன மனோஜ் ? "

" ஹாஸ்பிடல் போய் சேர்ந்துட்டியா ? "

" இப்பத்தான் வந்து சேர்ந்தேன். இன்னமும் மாமனாரைக்கூட பார்க்கலை. நான் அப்புறமா பேசட்டுமா ? "

ஹரி வளர்மதியின் தோளைத் தொட்டான்.

" வளர்..... ஒண்ணும் பிரச்சினையில்லை. விஷயம் என்னான்னு கேளு. ஏதாவது முக்கியமான விஷயமாயிருக்கப் போகுது "

வளர்மதி வராந்தா ஒரமாய் நின்று மெதுவான குரலில் செல்போனில் பேச ஆரம்பித்தாள்.

" சொல்லு மனோஜ் ..... நீ இன்னும் பைரவி நகர்லதான் இருக்கியா ? "

" இல்ல வளர்..... அங்கேயிருந்து கிளம்பிட்டேன். இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தும் நமக்கு உபயோகப்படற மாதிரி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை "

" அதாவது அபுபக்கரோட கார் ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் அந்த பைரவி நகர்ல இருக்கிற யார்க்கும் தெரியலை ? "

" ஆமா...... "

" ஒரு வேளை அபுபக்கர் அந்த ஏரியாவில் இருந்து தப்பிச்சு போயிருப்பாரா? "

" செம்மேடு ஏரியாவுக்குள் போனவர் பக்கம் தப்பிச்சு போக வழியே இல்லை. எப்படியும் அவர் மறுபடியும் சிறுவாணி மெயின் ரோட்டுக்கு வந்தேயாகணும். ஆனா இதுவரைக்கும் வரலை. ட்ராஃபிக் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் "ஸ்க்வாட்" உன்னிப்பாய் மானிட்டரிங் பண்ணிட்டு இருக்காங்க. அந்த மானிட்டரிங்கிலிருந்து அவர் தப்பவே முடியாது"

" கமிஷனர்கிட்டே பேசினியா ? "

" இனிமேத்தான் பேசணும் "

" ஒ.கே.மனோஜ்...... இன்னும் ஒரு ரெண்டு முணு நாளைக்கு உன்கூட சேர்ந்து கோ இன்வெஸ்டிகேஷன் பண்ண முடியாது. நீயே எல்லாத்தையும் பார்த்துக்க. மாமனார் டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு போகிறவரை நோ சோஷியல் சர்வீஸ் ஒன்லி ஹோம் சர்வீஸ் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 37

மனோஜ் மெல்லச் சிரித்தான். " அதை நீ சொல்லணுமா என்ன ..... ? மொதல்ல மாமனாரை கவனி. ஹி வில் பி ஆல்ரைட் வித்தின் டூ டேஸ்.... நானும் முடிஞ்சா ஹாஸ்பிடலுக்கு வர்றேன். எந்த ஹாஸ்பிடல் ? "

" ஆர்.எஸ்.புரம் சம்பந்தம் ரோட்டில் இருக்கிற ஹெல்த்தி டேஸ் ஹாஸ்பிடல் ? "

" நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு வர்றேன் "

" வா "

வளர்மதி செல்போனில் பேச்சை முடித்துக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவன் ஹரியை ஏறிட்டாள்.

" போலாமா ? "

" ம் " என்று சொல்லி நடக்க ஆரம்பித்து விட்ட ஹரி கேட்டான்.

" யார் அந்த மனோஜ் ? "

" அவர் ஒரு ஃபாரன்ஸிக் ஆபீஸர் "

" ஒரு ஆபீஸரை மரியாதை இல்லாமே வா, போன்னு பேசறே ? "

" மனோஜ் இப்பத்தான் ஃபாரன்ஸிக் ஆபீஸர். ஆனா எனக்கு அவன் காலேஜ்மேட். காலேஜ் டேஸ்லயே ரெண்டு பேர்க்கும் சோசியல் சர்வீஸ் ஆக்டிவிடிஸ்ல நிறைய ஆர்வம் இருந்தது. அந்த காலத்திலேயே அஞ்சாயிரம் பத்தாயிரம் என்கிற எண்ணிக்கையில் மரங்களை நட்டிருக்கோம். பத்து நாளைக்கு முன்னாடி ஒரு கேஸ் சம்பந்தப்பட்ட தடயவியல் தகவலைத் தெரிஞ்சுக்கிறதுக்காக ஃபாரன்ஸிக் ஆபீஸ் போயிருந்தபோதுதான் மனோஜைப் பார்த்தேன். இந்த கேஸ்ல அவரும் இண்ட்ரஸ்ட் காட்டவே கமிஷனர் மேடம் எங்க ரெண்டு பேர்க்குமே அஸைன்மெண்ட் குடுத்து இன்வெஸ்டிகேட் பண்ணச் சொல்லிட்டார். மனோஜ் காலேஜ் டேஸ்லிருந்தே நல்ல திறமைசாலி. எப்படியும் அடுத்த சில நாட்களுக்குள்ளே இந்த அஸைன்மெண்ட்டை வெற்றிகரமாய் முடிச்சு குற்றவாளிகளை அடையாளம் காட்டிடுவோம் "

ஹரி மெல்லச் சிரித்தான்.

" சரி..... சரி.... ஒரு ரெண்டு நாளைக்கு எல்லாத்தையும் மறந்துடு. அப்பாவை அட்மிட் பண்ணியிருக்கிற ரூமுக்கு வந்தாச்சு " சொன்ன ஹரி வராந்தாவில் இருந்த அந்த கடைசி அறையின் கதவுக்கு முன்பாய் நின்று வெறுமனே சாத்தப்பட்டு இருந்த கதவைத் தள்ளினான்.

உள்ளே மாமனார் ராமபத்ரன் ஒய்வாய் கட்டிலுக்கு சாய்ந்தபடி எதிர்புறச் சுவரில் பொருந்தியிருந்த டி.வி.யைப் பார்த்துக்கொண்டிருக்க, மாமியார் சிவகாமி சாத்துக்குடியைப் பிழிந்து கொண்டிருந்தாள். அறை ஏ.சியின் குளிர்ச்சியில் இருந்ததால் சாத்துக்குடியின் மணம் மூக்கை அடைத்தது.

வளர்மதியைப் பார்த்ததும் ராமபத்ரன் கையில் வைத்திருந்த ரிமோட்டால் டி.வி. திரையை இருட்டாக்கி விட்டு மெலிதாய் புன்னகைத்தார்.

" வாம்மா ...... "

" என்ன மாமா இப்படி பயமுறுத்திட்டீங்க. நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கீங்கன்னு கேள்விப்பட்டதும் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் " பதட்டமான குரலில் கேட்டுக்கொண்டே கட்டிலின் முனையில் வந்து உட்கார்ந்தாள்.

" நான் என்னம்மா பண்ணட்டும் ? எப்பவும் போல மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு என்னோட ரூமுக்குப் போனேன். திடீர்ன்னு தலைச்சுத்தல். டேபிளை பிடிச்சுகிட்டு அப்படியே விழுந்துட்டேன். பி.பி.சூட் அப் ஆகியிருக்கு. நல்லவேளை வீட்ல ஹரி இருந்ததால ஹாஸ்பிடலுக்கு வர முடிஞ்சுது..... "

" மத்தியானம் என்ன சாப்பிட்டீங்க மாமா? "

" வழக்கமான வெஜிடேரியன் சாப்பாடுதான்ம்மா. முள்ளங்கி சாம்பார், பீட்ரூட் பொரியல், ரசம், மோர் அப்பளம் "

மாமியார் ஜீஸ் பிழிந்து கொண்டே கோபமாய் நிமிர்ந்தாள். " அம்மா வளர்..... லஞ்ச் சாப்பிடறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உன்னோட மாமனார் என்னென்ன சாப்பிட்டார்ன்னு கேளு "

" என்ன சாப்பிட்டீங்க மாமா? "

ராமபத்ரன் மெளனமாய் இருக்க சிவகாமி கோபத்தில் வெடித்தாள்.

" அவர் பேச மாட்டார் வளர்.... நான் சொல்றேன். காலையில் பதினோரு மணியிலிருந்தே ஸ்நாக்ஸை நொறுக்க ஆரம்பிச்சுட்டார். வெஜிடபிள் போண்டா, பொட்டடோ சிப்ஸ், மிக்சர், முறுக்குன்னு எல்லாத்தையும் ஒரு கை பார்த்துட்டார். சாப்பிட்டது பூராமே எண்ணெய் பண்டம். பி.பி. ரெய்ஸாகி தலை சுத்தாம என்ன பண்ணும் ? "

" என்ன மாமா இது ? "

" உன்னோட அத்தை பொய் சொல்றாம்மா..... அவ சொன்ன அயிட்டமெல்லாம் உண்மைதான். எல்லாத்திலேயும் ஒரு வாய் டேஸ்ட் பண்ணிப் பார்த்தேன் அவ்வளவுதான்...... "

" பொய் சொல்லாதீங்க "

" நான் எதுக்கம்மா பொய் சொல்றேன் ? "

ராமபத்ரன் வளர்மதியிடம் ஏறிட்டு பேசிக்கொண்டிருக்கும்போதே ஹரியின் சட்டைப்பையில் இருந்த செல்போன் வைபரேஷனில் அதிர்ந்தது.
எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தான்.

ஒரு புது எண்.

அறையை விட்டு வெளியே சென்று வராந்தா சுவர் ஒரமாய் நின்று கொண்டு செல்போனை காதுக்கு ஒற்றினான்.

" ஹலோ "

" ஹரியா ? " ஒரு ஆண் குரல் கேட்டது.

" எஸ்.... நீங்க யாரு..... ? "

" காலகண்டர் என்கிற ஜோதிடரோட பேரைக் கேள்விப்பட்டு இருக்கீங்களா? "

" இன்னிக்குத்தான் கேள்விப்படறேன் "

" அது நான்தான் "

" சரி.... உங்களுக்கு என்ன வேணும்..... இப்ப எதுக்காக போன் பண்ணியிருக்கீங்க ....... ? "

" நான் கேட்கப்போற கேள்விக்கு நீங்க பதில் சொல்லணும் ....... ? "

" கேள்வியா..... என்ன கேள்வி ? "

" உங்களைப் பெத்த அப்பா, இல்லேன்னா உங்களைக் கட்டி கிட்ட ஒய்ஃப் இந்த ரெண்டு பேர்ல யார் உங்களுக்கு உயிரோடு வேணும் ? "

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X