• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஸாரி..... உங்களை காக்க வெச்சுட்டேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (37)

|

-ராஜேஷ்குமார்

மனோஜ் தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தபடி சொன்னான்.

” இந்த பைரவி நகரின் அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரி தட்சிணாமூர்த்தி ஏதோ ஒரு பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு ரெஸிடெண்ட் வீட்டுக்குப் போயிருக்கார், அவர் வந்துரட்டும். சொல்லிட்டு கிளம்பிடலாம்...... ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 37

வளர்மதி தலையாட்டினாள். ” நீ சொல்றது சரி மனோஜ்...... வெயிட் பண்ணுவோம்........... ”

இருவரும் பக்கத்து அறைக்குள்ளே போய் நாற்காலிகளில் சாய, பத்து நிமிடங்கள் கழித்து தட்சிணாமூர்த்தி வந்தார். கையில் வைத்திருந்த கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றிக்கொண்டே சொன்னார்.

” ஸாரி..... உங்களை காக்க வெச்சுட்டேன். டீ, காப்பி ஏதாவது சாப்பிடறீங்களா ? ”

மனோஜூம், வளர்மதியும் நாற்காலியினின்றும் எழுந்தார்கள்.

” அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஸார். நாங்க புறப்படறோம் ”

தட்சிணாமூர்த்தி நெற்றியில் வியப்பைக் காட்டினார். ” என்னது..... புறப்படறீங்களா ? ”

” ஆமா ஸார்.... அவசரமாய் சிட்டிக்கு போகணும். இப்பத்தான் ஒரு போன் கால் வந்தது ”

” அப்படீன்னா உங்களுக்கு அந்த அபுபக்கர் என்கிற நபரின் காரோட விபரம் தெரிய வேண்டாமா? ”

” வேணும்..... அதை போன் பண்ணிக் கேட்டுக்கிறோம். உங்க வாட்ஸ் அப்புக்கு வர்ற விபரங்களை கலெக்ட் பண்ணி வையுங்க....... ஸார் ”

” எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ளே இங்கே இருக்கிற எல்லா ரெஸிடெண்ட்ஸூம் வாட்ஸ் அப்பை பார்த்துட்டு அவங்கள்ல யாருக்காவது அபுபக்கரோட கார் நெம்பர் பரிச்சயமானதாய் இருந்தா உடனடியாய் தகவல் கொடுத்துடுவாங்க....ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணிட்டு போலாமே ? ”

மனோஜ் குறுக்கிட்டான்.

” வேண்டாம் ஸார்...... நாங்க உடனடியாய் கிளம்பணும்..... அபுபக்கர் இப்ப ரெண்டாம் பட்சம் ”

சொல்லிக்கொண்டே கிளம்ப முயன்ற மனோஜைத் தடுத்தி நிறுத்தினாள் வளர்மதி.

” ஒரு நிமிஷம் மனோஜ் ”

” என்ன ? ”

” ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கிற என்னோட மாமனார் இப்ப நல்லாவேயிருக்காராம். தட்சிணாமூர்த்தி ஸார் சொல்ற மாதிரி ஒரு பத்து பதினைந்து நிமிஷம் இருந்து பார்த்துட்டே போயிடலாம் ”

” வளர்.... நான் என்ன சொல்ல வர்றேன்னா உன்னைக்கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டுட்டு .......... ”

” வேண்டாம் மனோஜ்..... கமிஷனர் மேடம் சொன்ன கெடுவான அடுத்த பணிரெண்டு மணி நேரத்துக்குள்ளே அபுபக்கர் எங்கே எந்த இடத்துல ஒளிச்சிட்டிருக்கார் என்கிற விஷயத்தைக் கண்டு பிடிச்சாகணும்...... என்னகென்னவோ அந்த அபுபக்கர்க்கும் இந்த பைரவி நகர்க்குள்ளே இருக்கிற யாரோ ஒரு நபர்க்கும் தொடர்பு இருக்கலாம்ன்னு என்னோட மனசுக்குப்படுது. அதுவுமில்லாமே.......... ”

வளர்மதி மேற்கொண்டு பேசும் முன்பு பைரவி நகரின் காம்பெளண்ட் கேட் திறக்கப்பட்டு அந்த போலீஸ் ஜீப் நிதான வேகத்தோடு உள்ளே வந்தது. போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் முகம் வெகுவாய் மாறினார் தட்சிணாமூர்த்தி. மனோஜூம், வளர்மதியும் குழப்ப முகங்களோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

” என்ன மனோஜ்...... போலீஸ் ஜீப் வருது ? ”

” அதான் எனக்கும் புரியலை ”

போலீஸ் ஜீப் ஒர் ஒரமாய் ஒதுங்கி நிற்க, அதிலிருந்து இளவயது இன்ஸ்பெக்டர் ஒருவர் வெளிப்பட்டு மூன்று பேரையும் பார்த்தபடி வந்தார். தயக்க நடையோடு அவர்களை நெருங்கியவர் மெல்லிய குரலில் கேட்டார்.

” இங்கே மிஸ்டர் மனோஜ் அண்ட் மிஸஸ் வளர்மதிங்கிறது நீங்களா? ” மனோஜ், வளர்மதி இருவரும் முன்னால் வந்தார்கள்.

” நாங்கதான் ”

” ஸார்.... அயாம் குணசேகரன், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டராய் இருக்கேன். பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போலீஸ் கமிஷனர் மேடம் திரிபுரசுந்தரி எனக்கு போன் பண்ணி உங்க ரெண்டு பேரோட பெயர்களையும் குறிப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் இப்போ பைரவி நகர் அஸ்ஸோசியேஷன் ஆபீஸ் ரூம்ல இருக்கிறதாகவும், உங்களுக்கு உதவும்படியாகவும் சொன்னார். அதான் உடனே புறப்பட்டு வந்துட்டேன் ”

மனோஜ் குழப்பத்தோடு அவரை ஏறிட்டான்.

” கமிஷனர் மேடம் எங்களுக்கு உதவும்படி சொன்னாரா ? ”

” ஆமா..... ஸார் ”

” எதுமாதிரியான உதவி ? ”

” உங்களுக்கும் மிஸஸ் வளர்மதிக்கும் ஏதோ ஒரு இன்வெஸ்டிகேஷன் அசைன்மெண்ட் கொடுத்து இருக்கிறதாகவும், அதுக்கு என்னை உதவும்படியாகவும் சொன்னார். அது தவிர இன்னொரு விஷயத்தையும் சொன்னார் ”

” என்ன ? ”

” மிஸஸ் வளர்மதி அவசரமாய் சிட்டிக்கு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதால அவங்களை மட்டும் ஜீப்ல கூட்டிகிட்டு வரும்படியாய் சொன்னார். நீங்க இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணலாம்ன்னு சொன்னார்”

இன்ஸ்பெக்டர் குணசேகரன் பேசப்பேச மனோஜ் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தான். அவனுடைய மூளை பதட்டமாய் யோசித்தது.

” வளர்மதியை ஈஸ்வரிடம் கொண்டு போய் சேர்க்க முடியாது போலிருக்கே ”

” என்ன ஸார்...... யோசிக்கிறீங்க ? ”

” ஒண்ணுமில்லை......நாங்க ரெண்டு பேருமே இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு சிட்டிக்கு கிளம்பிப் போயிடலாம்ன்னு இருந்தோம் ”

” ஸாரி ஸார்..... கமிஷனர் மேடம் உங்களை இங்கேயே இருந்து இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணச் சொன்னாங்க..... நான் மேடத்தை மட்டும் கூட்டிட்டுப் போறேன் ”

மனோஜ் தனக்குள் எழுந்த அதிர்ச்சியலைகளைக் காட்டிக்கொள்ளாமல் வளர்மதியை ஏறிட்டான்.

” நீ என்ன சொல்றே வளர் ? ”

” கமிஷனர் மேடம் சொன்னதையே ஃபாலோ பண்ணுவோம் மனோஜ். நான் இன்ஸ்பெக்டரோடு கிளம்பறேன். நீ இன்னும் கொஞ்சம் டயம் எடுத்து இன்வெஸ்டிகேஷனை முடிச்சுட்டே வா...... ” என்று சொன்ன வளர்மதி அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரியிடம் திரும்பினாள்.

” நீங்க கொடுத்த ஒத்துழைப்புக்கு ரொம்பவும் நன்றி ஸார். மனோஜ் இங்கே இருப்பார். ப்ளீஸ் கோப்ரேடிவ் வித் ஹிம்...... ”

” நான் அவர்க்கு வேண்டிய உதவிகளைப் பண்றேன். நீங்க போய் ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கிற மாமனாரைப் போய் பாருங்கம்மா...... ”

” தேங்க் யூ ஸார்..... ” என்று சொன்ன வளர்மதி தலையசைப்பால் மனோஜிடம் விடை பெற்று கொண்டாள். பின் இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் திரும்பினாள்.

” போகலாமா இன்ஸ்பெக்டர் ? ”

” ப்ளீஸ் ” சொன்ன இன்ஸ்பெக்டர் குணசேகரன் போலீஸ் ஜீப்பை நோக்கிப் போக மனோஜ் மனதில் அடித்துக்கொண்டிருந்த புயலைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகை பூத்த முகமாய் தட்சிணாமூர்த்தியிடம் திரும்பினான்.

” ஸார்...... உங்க செல்போன் வாட்ஸ் அப்புக்கு போய் ரெஸிடெண்ட்ஸ் யாராவது அபுபக்கரோட கார் நெம்பரைப்பத்தி தகவல் கொடுத்து இருக்காங்கன்னு பாருங்க ”

தட்சிணாமூர்த்தி செல்போனை எடுத்து தன் வாட்ஸ் அப்பில் உள்ள பதிவுகளைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

” இதுவரைக்கும் எதுவும் இல்லை.... ஒரு மணி நேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம். உள்ளே போய் உட்கார்ங்க மிஸ்டர் மனோஜ்.... காபி டீ ஏதாவதுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா ? ”

” அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஸார். மிஸஸ் வளர்மதியும் கிளம்பி போயிட்டதால இனிமே இங்கே வெயிட் பண்றதுல எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அதுக்கு முன்னாடி வெளியே நிக்கற என் கார்க்குள்ளே ஒரு முக்கியமான ஃபைல் இருக்கு. அதைப்போய் எடுத்துட்டு வந்துடறேன் ”

” போய் எடுத்துட்டு வாங்க. நான் இனி ஆபீஸ்லதான் சாயந்தரம் ஏழு மணி வரைக்கும் இருப்பேன் ”

மனோஜ் வெளியே வந்தான். மனசுக்குள் ஏமாற்றமும் கோபமும் முட்டிக்கொண்டு மோதினாலும், அதை சிறிதும் வெளிப்படுத்தாமல் இயல்பாய் நடந்து போய் காம்பெளண்ட் கேட்டைக் கடந்து சாலையோரத்தில் நின்றிருந்த காரை நெருங்கினான்.

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டு கார்க்குள் ஏறி உட்கார்ந்தான். இரிடியம் செல்போனை எடுத்து ஈஸ்வரை தொடர்பு கொண்டான்.

” ஸார்..... நான் மனோஜ் ”

” என்ன சொல்லு...... நீயும் வளர்மதியும் புறப்பட்டுட்டீங்களா ? ”

” ஸாரி ஸார்..... ”

” எதுக்கு ஸாரி..... ? ”

” நாம எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துடுச்சு ஸார் ”

” எதிர்பாராத சம்பவமா....... புரியும்படி சொல்லு ”

மனோஜ் சில விநாடி நேரத்தை செலவழித்து சற்று முன்பு வரை நடந்த எல்லா விஷயங்களையும் பதட்டம் கலந்த குரலில் சொல்லி முடித்தான்.

ஒட்டு மொத்த விஷயத்தையும் நிதானமாய் கேட்டுக்கொண்ட ஈஸ்வர் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு இயல்பான குரலில் கேட்டார்.

” மனோஜ்..... நீ இப்ப எங்கிருந்து பேசிட்டு இருக்கே ? ”

” பைரவி நகர்க்கு வெளியே ரோட்டோரமாய் காரை நிறுத்தியிருந்தேன் ஸார்..... அந்த கார்க்குள்ளேயிருந்துதான் பேசிட்டு இருக்கேன் ”

” யாராவது உன்னை நோட் பண்றாங்களான்னு ஒரு தடவை செக் பண்ணிக்க ”

” ஸார்.... இந்த ஏரியாவில் ஒரு ஈ காக்கை கிடையாது. மேற்கொண்டு நான் என்ன பண்ணனும்ன்னு எனக்குத் தெரியலை. அதான் உங்களுக்கு போன் பண்ணி பேசிட்டிருக்கேன் ”

” மனோஜ்..... நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாய் செயல்பட்டாலும் ஒரு சில விஷயங்களில் நாம நம்மையும் அறியாமல் கோட்டை விட்டுடறோம் ”

” உண்மைதான் ஸார்..... என்னோட இரிடியம் செல்போனில் இருக்கிற ஜாமரை யூஸ் பண்ணி வளர்மதியோட செல்போன் இயக்கத்தை முடக்கியிருந்தேன்.

ஆனா ஜாமர் 100 அடி சுற்றளவு பரப்பைக் கொண்ட எல்லைக்குள்ளதான் செயல்படும் என்கிற விஷயத்தை வளர்மதி ரெஸ்ட் ரூமுக்குப் போகும்போது அந்த விஷயத்தை மறந்துட்டேன் ”

” நாம பண்ணிட்டு இருக்கிற இந்த ப்ராஜக்கட்டுக்குள்ளே ” ஸாரி ”

” மறந்துட்டேன் ” என்கிற வார்த்தைகளுக்கு இடமில்லை மனோஜ் ”

” அது எனக்கும் தெரியும் ஸார்...... எப்படியோ ஏமாந்துட்டேன் ”

” இப்படி ஏமாந்தது இதுவே கடைசி தடவையாய் இருக்கட்டும் மனோஜ். வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மர் என்கிற விஷயம் அவளோட கணவனுக்கும் தெரியும் என்கிற விஷயம் வளர்மதிக்கு இந்நேரம் ஒரு பெரிய பூஸ்ட்டா மாறியிருக்கும். சில்பாவுக்கும் நர்மதாவுக்கும் ஏற்பட்ட கதி அவளுக்கும் ஏற்பட்டால்தான் திரிபுரசுந்தரியோட வேகம் குறையும். நம்ம கேஸிலிருந்தும் விலகுவா..... ”

” யூ ஆர் கரெக்ட் ஸார் ”

” இந்த பதில் எனக்கு போதாது. அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே வளர்மதியோடு நீ எம் முன்னாடி நிக்கணும் ”

” முயற்சி பண்றேன் ஸார் ”

” மனோஜ்...... அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே வளர்மதியோடு இங்கே இருக்கணும்ன்னு நான் ஏன் சொல்றேன் தெரியுமா? ”

” சொல்லுங்க ஸார் ”

” யு.எஸ்.ஸிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த வாரம் புறப்பட்டு வர்றதாய் இருந்த என்னோட மகன் தீபக்கும், பயோ சயின்டிஸ்ட் ஜான் மில்லரும் மூணு நாளைக்கு முன்னாடியே புறப்பட்டு வரப் போறாங்க. சில ஃபைனல் டெஸ்ட்களை முடிச்சுகிட்டு உடனடியாய் அவங்க கிளம்பிடுவாங்க ”

மனோஜ் மெல்லச் சிரித்தான்.

” எனக்குப் புரியுது ஸார் ”

” என்ன புரியுது ? ”

” ஏற்கெனவே நம்மகிட்டே சில்பா, நர்மதா என்கிற ரெண்டு மனித எலிகள் இருக்கு. மூணாவதா வளர்மதி என்கிற எலியும் வேணும்ன்னு சொல்றீங்க...... ? ”

” அதே.... ” என்றார் ஈஸ்வர்


(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X