• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அ... அதெல்லாம் ஒண்ணுமில்லை.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (36)

|

- ராஜேஷ்குமார்

வளர்மதி அந்த அறையினின்றும் வெளியேறி நீண்ட வராந்தாவில் நடந்து ரெஸ்ட் ரூமை நோக்கிப் போக, தட்சிணாமூர்த்தி மனோஜிடம் திரும்பினார்.
" நீங்க வெயிட் பண்ணுங்க .......நான் அந்த ரெஸிடென்டோட வீட்டுக்குப் போய் ப்ராப்ளம் என்னான்னு பார்த்துட்டு வந்துடறேன். அதோ டீபாய்ல பேப்பர், மேகஸீன் நிறைய இருக்கு பார்த்துட்டு இருங்க "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 36

" நோ ப்ராப்ளம் ஸார்...... நீங்க போய்ட்டு வாங்க " என்று சொன்ன மனோஜ் டீபாயின் மேல் இருந்த ஆங்கில மாத இதழ் ஒன்றை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டான். அவருடைய தலை மறையும் வரை பொறுமை காத்த மனோஜ் பின்பு அந்த இதழை டீபாயின் மேல் வைத்துவிட்டு வெளியே வந்தான்.

பார்வைக்கு யாரும் தட்டுப்படாமல் போகவே தன்னிடம் இருந்த அந்தச் சிறிய இரிடியம் செல்போனை சட்டையின் உள்பாக்கெட்டில் இருந்து எடுத்து அதை உயிர்ப்பித்துக்கொண்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

" ஸார்...... நான் மனோஜ் "

மறுமுனையில் ஈஸ்வர் குரல் கேட்டது.

" சொல்லு மனோஜ் ............. உன்னோட போனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் "

" ஸாரி ஸார் ....... இப்பத்தான் உங்களுக்கு போன் பண்ண சரியான சந்தர்ப்பம் கிடைச்சது. நானும், வளர்மதியும் பைரவி நகர்க்குள்ளே இருக்கோம்.... வளர்மதி கூடவே இருந்ததால உங்களை காண்டாக்ட் பண்ண முடியலை.....இப்ப அவ ரெஸ்ட் ரூமுக்கு போயிருக்கா...... பக்கத்துல யாரும் இல்லாததால போன் பண்ணிப் பேசிட்டிருக்கேன்...... "

மறுமுனையில் ஈஸ்வர் சிரித்தார்.

" மனோஜ்....... உயிரோடு இல்லாத அபுபக்கரை இன்னமும் தேடிகிட்டு இருக்கிற மாதிரி பாவ்லா பண்ணாமே வளர்மதிகிட்டே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நம்ம பங்களாவுக்கு கூட்டிகிட்டு வந்துடு.... இனியும் நேரத்தை வீணாக்கிட்டு இருக்க வேண்டாம் "

" சரி ஸார்..... பைரவி நகர்ல ஒரு அரை மணி நேரம் இருந்துட்டு வளர்மதியைக் கூட்டிகிட்டு அங்கே வந்துடறேன் "

" அவளுக்கு உன் பேர்ல துளியும் சந்தேகம் வந்துடக்கூடாது "

" வராது ஸார்...... அவ முழுமையா என்னை நம்பிட்டா. இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதாலத்தான் என் கூட அவ ட்ராவல் பண்றா...... நான் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் வர்றா. போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரிக்கும் சரி, வளர்மதிக்கும் சரி, என் பேர்ல அப்படியொரு அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கு ஸார் "

" சி.பி.ஐ.ஆபீஸர் சில்பாவுக்கு ஏற்பட்ட கதி வளர்மதிக்கும் ஏற்பட்டால்தான் திரிபுரசுந்தரிக்கும் ஒரு பயம் வந்து இந்த கேஸை விட்டு விலகுவா ....... "

" விலக வெச்சுடுவோம் ஸார் "

" நீ இப்ப பேசிட்டு இருக்கும்போது பக்கத்துல வேற யாரும் இல்லையே? "

" யாரும் இல்ல ஸார்...... இந்த பைரவி நகர் அஸ்ஸோசியேஷன் செக்ரட்டரியோட பேரு தட்சிணாமூர்த்தி. அவர் ஏதோ ஒரு பிரச்சினையை தீர்த்து வைக்கிறதுக்காக ஒரு ரெஸிடெண்ட் வீட்டுக்குப் போயிருக்கார், வளர்மதி ரெஸ்ட் ரூமில் இருந்து இன்னமும் திரும்பலை "

" அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே வளர்மதியோடு இங்கே வந்துடுவே?"

" கண்டிப்பா ஸார் "

" அதுக்கு முன்னாடி ஜாமரை யூஸ் பண்ணி வளர்மதியோட செல்போனை முடக்கிடு "

" முடக்கிட்டேன் ஸார். அவளோட போனை மட்டுமல்ல என்னோட வழக்கமான உபயோகத்தில் இருக்கிற போனையும் இரிடியம் போனில் இருக்கிற ஜாமர் ஆப்ஷனை யூஸ் பண்ணி அரை மணி நேரத்துக்கு முன்னாடியே முடக்கிட்டேன் "

" வளர்மதிக்கு எந்த சந்தேகமும் வரலையே ?"

" வரலை .....ஸார்..... அரை மணி நேரத்துக்கு முன்னாடியே திரிபுரசுந்தரி வளர்மதியோட செல்போனை காண்டாக்ட் பண்ணி பேசினாங்க. நானும் அதே போன்ல பேசினேன். பேசி முடிச்சதும் நான் உடனடியாய் வளர்மதிக்கு தெரியாமே என்னோட இரிடியம் செல்போனை எடுத்து ஜாமரை ஆன் பண்ணி அவளோட செல்போனையும், வழக்கமா நான் யூஸ் பண்ற செல்போனையும் முடக்கிட்டேன். அதுக்கப்புறம் வளர்மதி ஒரு தடவை தன்னோட ஹஸ்பெண்ட்டுக்கு போன் பண்ணி பேச முயற்சி செஞ்சா. ரெண்டு தடவை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு இந்த ஏரியாவில் சரியா டவர் கிடைக்காது போலிருக்கு, சொல்லி தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கிட்டா "

" ஸோ........ எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு ?"

" எஸ் ஸார் "

" டேக் கேர்..... மறுபடியும் நீ எனக்கு போன் பண்ண வேண்டாம். நானும் உனக்கு பண்ணமாட்டேன். இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே பைரவி நகரிலிருந்து கிளம்பிடுவீங்களா...... ?"

" கிளம்பிடுவோம் ஸார் "

" சரி. இங்கே உங்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்" ஈஸ்வர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரெஸ்ட் ரூம் போயிருந்த வளர்மதி வராந்தாவின் கோடியில் வந்து கொண்டிருப்பது மனோஜின் பார்வைக்குத் தட்டுப்பட்டது.

" ஸார்..... வளர்மதி ரெஸ்ட் ரூமில் இருந்து வந்துட்டிருக்கா.... போனை கட் பண்றேன் " சொன்ன மனோஜ் அந்த இரிடியம் செல்போனின் செயல்பாட்டை நிறுத்தி அதை சட்டையின் உள்பாக்கெட்டுக்கு கொண்டு போய் ஒரு விநாடி நேரத்திற்குள் பதுக்கிவிட்டு வளர்மதியைக் கவனிக்காதது போல் பார்வையை வேறு பக்கம் கொண்டு போனான்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 36

வளர்மதி பக்கத்தில் வந்து நின்று "மனோஜ்" என்று கூப்பிட்டதும் அப்போதுதான் அவளை கவனித்ததுபோல் காட்டிக்கொண்டு புன்னகைத்தான்,

" இந்த ஏரியா ரொம்பவும் நல்லாயிருக்கு வளர். அதோ தூரத்துல காம்பெளண்ட் சுவர் போட்ட மாதிரி மேற்குத்தொடர்ச்சி மலை. இந்தப்பக்கம் பார்த்தா கண்ணுக்கு எட்டின தூரம் வரை தென்னந்தோப்புகள். எல்லாத்துக்கும் மேலா சுவாசிக்கும்போதே நுரையீரல்கள் சந்தோஷப்படுகிற அளவுக்கு காத்து சுத்தமாய் இருக்கு. வேலையில் இருந்து ரிடையரானதும் இந்த ஏரியாவில் ஒரு ப்ளாட்டை வாங்கி செட்டில் ஆகிடவேண்டியதுதான். நீ என்ன சொல்றே வளர்?"

வளர்மதி ஏதும் பேசாமல் மெளனமாக இருக்கவே லேசாய் முகம் மாறி அவளை ஏறிட்டான் மனோஜ்.

" என்ன வளர்.......... ஏன் ஒரு மாதிரி இருக்கே ? உடம்புக்கு ஏதும் முடியலையா ?"

" அ....அதெல்லாம் ஒண்ணுமில்லை "

" அப்புறம் ?"

" மனோஜ்...... நான் உடனடியாய் வீட்டுக்கு கிளம்பிப் போகணும் "

மனோஜின் இருதயத்துக்குள் ஒரு பிரளயம் நிகழ்ந்த உணர்வு ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இயல்பான குரலில் கேட்டான்.

" உடனடியாய் வீட்டுக்குப் போகணுமா ?"

" ஆமா "

" ஏன்..... ஏதாவது பிரச்சினையா ?"

" ஆமா..... மாமாவுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்காராம் "

மனோஜ் அதிர்ந்தான்.

" உனக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சது ?"

" கமிஷனர் மேடம் எனக்கு போன் பண்ணியிருந்தார். மேடம்தான் சொன்னாங்க "

" எப்போ ?"

" இப்பத்தான்...... நான் ரெஸ்ட் ரூம்ல இருந்தப்ப மேடம் கிட்டயிருந்து எனக்கு போன் வந்தது "

மனோஜ் உச்சபட்ச அதிர்ச்சிக்குப் போனான்.

" உன்னோட போன்தான் ஹேங்க்காகி ரெஸ்பாண்ட் செய்யாத நிலைமையில் இருந்ததே ?"

" உண்மைதான்,..... ஆனா நான் ரெஸ்ட் ரூமுக்குள்ளே இருந்தப்ப போன் வொர்க்கிங் கண்டிஷனுக்கு வந்தது. டவரும் துல்லியமாய் கிடைச்சதாலத்தான் மேடத்தோட போன்காலை அட்டெண்ட் பண்ண முடிஞ்சது "

வளர்மதி பேசப்பேசவே மனோஜின் மூளையில் ஒரு பொறி தட்டி அவனைப் பதட்டப்பட வைத்தது. மனம் பரபரவென்று யோசித்தது.

" இரிடியம் செல்போனில் இருக்கிற ஜாமர் ஆப்ஷன் 100 அடி சுற்றளவுக்குள்தானே செயல்படும் ? ரெஸ்ட் ரூம் 100 அடிக்கும் மேல் தள்ளி இருக்கப் போய்தான் ஜாமர் செயல்படாமல் இருந்து வளர்மதியின் செல்போனுக்கு டவர் கனெக்சனை கொடுத்து இருக்க வேண்டும் "

" சே .... ஏமாந்து விட்டோம்...... "

ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்த மனோஜை வளர்மதியின் குரல் உலுக்கியது.

" மனோஜ்...... "

" அவன் சுய உணர்வுக்கு மீண்டான்.

" ம்..... சொல்லு வளர் "

" நீ இங்கேயிருந்து இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணு. நான் கிளம்பறேன் "

" என்னது ..... நீ மட்டும் கிளம்பறியா...... ? நானும் வர்றேன் "

" வேண்டாம் மனோஜ்.. அபுபக்கரை நாம அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே அவர் இருக்கிற இடத்தை ட்ரேஸ் பண்ணியாகணும்..... நீ இருந்து இன்வெஸ்டிகேஷனை முடிச்சுட்டு வா.... இந்த பைரவி நகர்ல ஏதாவது தகவல் கிடைக்கலாம் "

" சரி..... நான் இங்கே இருந்துட்டா நீ எப்படி உன் வீட்டுக்குப் போவே..... ?"

" பக்கத்துலதான் பஸ் டெர்மினல் இருக்கு. நாம கார்ல வரும்போதே பார்த்தேன். நாலைஞ்சு பஸ் நின்னுட்டு இருந்தது. நான் பஸ் ஏறிப் போயிடறேன்"
மனோஜ் வியர்த்து திகைத்து திணறிக் கொண்டு இருக்கும்போதே வளர்மதி பேச்சைத் தொடர்ந்தாள்.

" கமிஷனர் மேடம்.... என்கிட்டே போன்ல பேசும்போது மாமா ஹாஸ்பிடல்ல சேர்க்கப்பட்டிருக்கிற விஷயத்தை சொல்லிட்டு கூடவே இன்னொரு ஆறுதலான விஷயத்தையும் சொன்னாங்க மனோஜ் "

" ஆறுதலான விஷயமா ..... ?"

" ஆமா.... நான் போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிற விஷயம் என்னோட கணவர்க்குத் தெரியுமாம். தெரியாத மாதிரி நடந்துகிட்டாராம். ஆனா என்னோட மாமனார்க்கும் மாமியார்க்கும் இது தெரியாதுன்னு ஹஸ்பெண்ட் சொல்லியிருக்கார் "

வளர்மதி பேசப்பேச மனோஜின் சகல அவயங்களும் ஒரு அதிர்வுக்கு உட்பட்டிருக்க மேற்கொண்டு என்ன பேசுவது என்று அறியாமல் அப்படியே நின்றான்.

" வளர்மதி புறப்பட்டுப் போய்விட்டால் ஈஸ்வர்க்கு என்ன பதிலைச் சொல்வது ? "

வளர்மதி மனோஜை நெருங்கி அவன் முகத்துக்கு நேரே கையை அசைத்தாள்.

" என்ன மனோஜ்..... நான் பேசிட்டே இருக்கேன். நீ எதுவுமே பதில் பேசாமே இருக்கே....... ? "

உணர்வுக்கு மீண்டான் மனோஜ்.

"ஸாரி வளர்..... உன்னோட மாமனார் ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கார் என்கிற விஷயம் ஷாக்கிங்காய் இருந்தது. அதான் ஏதுவுமே பேசத் தோணலை.... உனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்ட பிறகு நான் மட்டும் தனியா இந்த இன்வெஸ்டிகேஷன் பிராஸஸை கன்டினியூ பண்ண விரும்பலை..... ரெண்டு பேருமே கிளம்பிடுவோம் "

" வேண்டாம் மனோஜ்..... நீ இருந்து பார்த்துட்டு வா... நாளைக்குப் பேசிக்கலாம் "

" நோ,,,,,, நோ,,,, நாம ரெண்டு பேரும் உடனே கிளம்பறோம். உன்னோட மாமனார் அட்மிட்டாகியிருக்கிற ஹாஸ்பிடலுக்கு நானும் வர்றேன். இப்ப அபுபக்கர் நமக்கு முக்கியம் இல்லை. நாம இங்கேயிருந்து கிளம்பிப் போறதுதான் முக்கியம் "

" தேங்க்யூ மனோஜ் "

" என்ன இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்லிட்டு... உனக்கு ஒரு பிரச்சினைன்னா அது எனக்கும் வந்த மாதிரி...... " என்று சொன்னவன் குரலை இழுத்தான்.

" பை....த....பை ஒரு சின்ன ஆப்ளிகேஷன் "

" என்ன ? "

"போற வழியில் என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன் இருக்கான். அவன்கிட்டே ஃபாரன்ஸிக் சம்பந்தப்பட்ட ஒரு ஃபைலை வாங்கணும். அவன் வீட்ல ஒரு பத்து நிமிஷத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். பரவாயில்லையா ? "

" நோ ப்ராப்ளம் " என்றாள் வளர்மதி.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X